கொரோனாவும் கூலிவேலையாட்களும்

  • 20

கம்பீரமாய் காட்சி தந்த கதிரவன், மதி மங்கையவளின் வருகை கண்டு நாணி மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருக்கும் மங்கிய மாலைப் பொழுதினிலே, தன் வீட்டு முற்றத்திலுள்ள பூங்கன்றுகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார் பாத்திமா தாத்தா.

“அஸ்ஸலாமு அலைக்கும் பாத்திமா தாத்தா”

சுவனத்தின் காணிக்கைகளை மொழிந்தவளாய் வந்து கொண்டிருந்தாள் கதீஜா.

“வஅலைக்கும்முஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ… ஆ கதீஜாவா??? வாங்க மகள். சொகமா இருக்கீங்களா?”

“அல்ஹம்துலில்லாஹ் ஈக்கிறோம் தாத்தா. ஆனா, நாட்டு நடப்புகள் தான் ரொம்ப மோஷமா ஈக்கிது”

“ஓ மகள். எல்லாம் முடிஞ்சி இப்ப கொரோனா வைரஸாம். புதிசா ஒண்டு வந்திருக்கு…” கவலை தோய்ந்த வதனத்துடன் பதிலுரைத்தார்.

“ஓ அல்லாஹ் தான் எல்லாரயும் பாதுகாக்கோனம்”

“கதீஜா அந்தா ரேடியோல முக்கிய செய்தி எண்டு என்னமோ சொல்றாங்க”

முக்கிய செய்தி:

கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் ஒரு வாரத்திற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்களை மூடி வீடுகளிலிருந்தே தமது பணிகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 

“என்னது ஒரு வாரத்துக்கு எல்லாத்தயும் மூடப் போறாங்களாமா?” மின்சாரம் தாக்கியது போல் தன் நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சியுடன் கேட்டார் பாத்திமா தாத்தா.

“ஓ தாத்தா அப்பிடித் தான் செய்யனும். அப்ப தான் நோய் பரவுறத்த கட்டுப்படுத்தேலும்” என்று பதிலுரைத்தவாறு அரசாங்கத்தை புகழ்ந்து கொண்டிருந்தாள் கதீஜா.

“மகள் அப்பிடின்னா சில்லற கடகளெல்லாம் மூடுவாங்களே?”

“ஓ தாத்தா எல்லாத்தயும் தான் மூடுவாங்க. இண்டக்கே எல்லா சாமனயும் வாங்கி வெச்சா தான் சரி. இப்பவே டௌன்ல ஜனமாய்க்கும். சாமானெல்லாம் முடிஞ்சிடுமோ தெரிய. நான் போறேன் தாத்தா”

பாத்திமா தாத்தாவின் பதிலை எதிர்பார்க்காது சட்டென விரைந்தாள் கதீஜா. பாத்திமா தாத்தா அடியற்ற மரம் போல் நின்று கொண்டிருந்தார். அவரது கண்கள் குளமாகின. அவர் நெஞ்சத் திரையிலே இனம் புரியாத கவலைகள் படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

“பாத்திமா… பாத்திமா… இவளவு நேரம் வெளில என்ன செய்றீங்க? இருட்டிட்டு உள்ளுக்கு வாங்க”

தன் பதியின் அழைப்பொலி கேட்டு நிஜவுலகுக்கு வந்த பாத்திமா வீட்டினுள் விரைந்தாள்.

“ஏய்…. இன்னம் ஒரு கெழமக்கி கடகள் எல்லாத்தயும் மூடப்போறாங்களாமே. வீட்டுல கறி சாமான் ஒண்டுமில்ல. புள்ளகள்கு தின்ன குடுக்கோனமே. என்ன செய்யுறது? எங்கள போல ஏழகள் எங்க போறது?”

“அது தான் நானும் யோசிக்கிற பாத்திமா. ரெண்டு நாளா வேலயும் இல்லாதத்தால கையில ஒருவா காசி கூட இல்ல. இன்னம் ஒரு கெழமக்கி வேலயும் ஈக்காது…” சிறிது நேரம் ஆழமாக யோசித்தார் பாஹிம் நானா.

“சரி அல்லாஹ் ஏதாவது ஒரு வழி வெச்சிருப்பான். நான் ரெண்டு நாளக்கி தேவயான கொஞ்சம் சாமானுகள கடே முதலாளிகிட்ட கடனுக்கு வாங்கிட்டு வாரன்.” மேற்சட்டையை அணிந்து கொண்டு கடைத்தெருவை நோக்கி நடைபோட்டார் பாஹிம் நானா.

கடைத்தெரு முழுதும் மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டு கொண்டிருந்தது. அனைவரும் எதிர்வரும் ஒரு வார காலத்தை சிறப்பாகக் கடத்தும் நோக்கில் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், பாஹிம் நானா போன்ற ஏழைகள் அன்றன்றைக்கு உண்ண வழியின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பாஹிம் நானாவின் உள்ளம் துயர் மிகுதியால் கனத்தது. சம்பலும் சோறுமானாலும் உண்டு விட்டு கடனின்றிய நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த அவர் இப்போது கடனுக்கு சாமான் வாங்கவென கடையை நோக்கிச் செல்கிறார். அல்லாஹ்வின் நாட்டம் எதுவோ அது நடந்தே தீரும்.

ஆழ்ந்த யோசனையுடன் தாவூத் முதலாளியின் கடையை அடைந்தார்.

“முதலாளி எனக்கு……” என்று பாஹிம் நானா வாய் திறக்கும் போதே,

“முதலாளி… எனக்கு எல்லா சாமான்லயும் இருவது இருவது கிலோ வேற வேறயா போட்டுத் தாங்க” என்றவாறு காசிம் ஹாஜியார் கடையடியில் பிரசன்னமானார்.

பாஹிம் நானாவுக்கு சங்கடமாகிப் போய் விட்டது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பிறரிடம் அதை முறையிட்டு கை நீட்டாது அல்லாஹ்விடம் மாத்திரமே தனது துயரங்களை முறையிடுபவர் அவர். காசிம் ஹாஜியாரின் முன் கடனுக்கு சாமான் வாங்க அவரது தன்மானம் தடுத்தது. எனவே, அவர் சாமான் மூட்டைகளை தன் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வரை ஓர் ஓரமாய் பொறுமையுடன் காத்திருந்தார். அவர் சென்றதும்,

“என்ன பாஹிம் நானா…? வந்து மிச்ச நேரம். ஒங்களுக்கு என்ன வேணும்னு சொல்லவே இல்லயே…” முதலாளி புன்முறுவலுடன் வினவினார்.

“முதலாளி எனக்கு கொஞ்ச சாமான் வாங்க வேணும். கடனுக்கு தாங்க. இன்ஷா அல்லாஹ் நான் கூடிய சீக்கிரம் சல்லிய திருப்பித் தாரன்” தயங்கித் தயங்கி கேட்டார் பாஹிம் நானா.

கருணையுள்ளம் கொண்ட தாவூத் முதலாளி, “சரி ஒங்களுக்கு தேவயான சாமான சொல்லுங்களே. நான் போட்டுத் தாரன்.” என்று பதிலுரைத்தார்.

நன்றியுணர்வுடன் ஒரு பக்தனைப் போல் தேவையான சாமான்கள் கொஞ்சத்தை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியேறினார். பெருநாளைக்கு முன் தினம் போல் இயங்கிக் கொண்டிருந்த கடைத்தெரு முழுவதையும் ஒரே பார்வையில் நோக்கி பெரு மூச்சு விட்டார் அவர்.

“என்ன படச்ச ரப்பு எப்பவும் எங்கள கை விடமாட்டான். எங்களுக்கு அளந்த ரிஸ்க்க எப்பிடியும் தருவான்” பாஹிம் நானாவின் உள்ளம் தீர்க்கமாய் உரைத்துக் கொண்டிருந்தது. மனதில் பாரம் குறைந்தது போன்ற உணர்வுடன் வீட்டினை நோக்கி நடைபயின்றார்.

முற்றும்

குறிப்பு: நீங்கள் உங்கள் தேவைகளுக்காய் தயாராவது போல் ஏழைகளின் நிலைமையையும் கருத்திற் கொண்டு செயற்படுங்கள். அவர்களுக்கான உதவிகளை வழங்குங்கள். அதிகமதிகம் ஸதகா செய்யுங்கள்.

ILMA ANEES
SEUSL

கம்பீரமாய் காட்சி தந்த கதிரவன், மதி மங்கையவளின் வருகை கண்டு நாணி மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருக்கும் மங்கிய மாலைப் பொழுதினிலே, தன் வீட்டு முற்றத்திலுள்ள பூங்கன்றுகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார் பாத்திமா தாத்தா.…

கம்பீரமாய் காட்சி தந்த கதிரவன், மதி மங்கையவளின் வருகை கண்டு நாணி மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருக்கும் மங்கிய மாலைப் பொழுதினிலே, தன் வீட்டு முற்றத்திலுள்ள பூங்கன்றுகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார் பாத்திமா தாத்தா.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *