வாழ்தலெனும் நீழ்தல்.

ஊரடங்குச் சட்டமாச்சி…
ஊரோ அடங்கிப் போச்சி…
தெருவோ வெறிச்சிப் போச்சி…
அவள் மனதோ ஒடஞ்சி போச்சி!

அவள்
சாலையோரப் பூவாய்
சாய்ந்து கொண்டு கிடக்க
சாரம் போட்ட நாநா
சாசகசமாய் மணமுடிக்க
சகஜமாய் ஆனது வாழ்க்கையும்!

இரண்டே வருடங்களில்
இரட்டை இரட்டைக் குழந்தைகள்
இரட்டிப்பாய் இயைந்துவிட்டு
இறையடியில் இரையாகிட்டான்
இரைந்து வந்த லாறிக்காரனின்
இரக்கமற்ற போதையாட்டத்தில்…

பிஞ்சி போன மனதினில்
பிரிவின் நுனி தனில்
பிரயத்தனமாய் ஒட்டிக் கொண்டது
பிரிவொலியும் பிரி(வு)வலியும்
வலுவானதோர் துயரமாய்…

நாற் குழந்தைகளையும்
நல்லா வளர்க்க
நாளுக்கு நாள்
அவளெங்கே மண்டியிட…?!

நச்சரிக்கும் நாழிகைகளை
நொந்து நொந்து நகர்த்தினாள்
நாலு வீட்டில்
நல்லாய்ப் பாத்திரங் கழுவி….

உண்டி சுருங்குதல்
பெண்டிர்க்கழகாம்…
இவள் உண்டி வற்றி
கங்கணம் கட்டி
அரியாசனம் அமர்ந்துவிட்டான்
காழகேயப் பரம்பரையின வாரிசு
ஏழ்மையெனும் வறுமை…

ஊரடங்குச் சட்டமாச்சி…
ஊரோ அடங்கிப் போச்சி…
தெருவோ வெறிச்சிப் போச்சி…
அவள் மனதோ ஒடஞ்சி போச்சி…

நாற்சுவருள் பேதையடங்கிற்றாள்
நாலா பக்கமும்
நாற்பிள்ளைகளின் பசியோலங்கள்
சுருங்கி முனங்கலாயிற்று
நாலு காசுக்கும் வழியற்று
நசுங்கித்தான் போயிற்றாள்…

எலும்பும் தோலும் காதல் கொள்ள…
நாவும் தொண்டையும் காமம் கொள்ள…
வரண்டு வெடித்த உதடுகளும் பற்களும்
உறவுகொள்ள…
கண்களும் கன்னக்குழிகளும் உள்ளே தள்ள…
ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு
சுருங்கிப் போனது முழு உருவமுமே
வறுமையின் வக்கிர வரைவிலக்கணமாய்!

புன்னகையில்லாப் பூந்தோட்டத்தில்
ஓயாத அலைகளாய் ஆர்பரிக்கிறாள்…
சுதந்திரத்தின் பின்பும்
கொண்டாட இயலாதவொரு
வாழ்வு சுமந்து!
வாழ்க்கையோ இவளுக்குச் சுமை…
இவளோ வாழ்க்கைக்குச் சுமை…
வாழ்தலெனும் நீழ்தலில்
என்னதை போராட்டங்கள்…

Sheefa Ibraheem (Hudhaaiyyah)
BA(Hons) (R)
South eastern university of srilanka