சோதனைகள் நிறைந்த இன்றைய சூழலில் எமது கடமை

  • 12

சகோதரர்களே,சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும்…
இது ஓர் அழுத்த வேண்டுகோள்!

பயங்கர கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு அரசாங்கமும் அதிகாரிகளும் சுகாதார துறை சார்ந்தோரும் காத்திரமான பல நடவடிக்கைகளை பெரும் அர்ப்பணத்தோடும் தியாகத்தோடும் முன்னெடுத்து வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்களாகிய நாம் எமது ஒத்துழைப்பை பூரணமாகவும் முழுமையாகவும் வழங்கவேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கின்றோம். மிகவும் பொறுப்பணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். எந்த நிலையிலும் பொடுபோக்காக, கவனயீனமாக நடந்துகொள்வது என்பது நமக்கும் சமூகத்துக்கும் நாட்டு மக்களுக்கும் நாம் செய்கின்ற பெரும் துரோகமாகவே கொள்ளப்படும். மாத்திரமன்றி மார்க்க கண்ணோட்டத்தில் மிகப்பெரிய பாவமாகவும் அது அமைந்து விடும்.

குறிப்பாக வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்டு வருக்கின்ற நடவடிக்கைகளில் முக்கியமானது மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதை முடியுமானவரை தவிர்க்க வேண்டும் என்பதாகும். தவிர்க்க முடியாத காரணங்களால் சந்திக்கும் நிலை ஏற்படுகின்றபோது குறைந்தபட்சம் ஒவ்வோர் இருவருக்குமிடையில் இரண்டு மீட்டர் தூரம் இடைவெளி பேணப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே விதிவிலக்கு இல்லாமல் எல்லா சந்தர்ப்பங்களிலும் குறிப்பாக சந்தை, கடைத்தெரு முதலான மக்கள் கூடுமிடங்களில் இந்த இடைவெளி கண்டிப்பாக பேணப்பட வேண்டும். மேலும் வெளியே செல்லவேண்டிய சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம் ஏதோ ஒரு அமைப்பில் மூக்கு சார்ந்த பகுதியை மூடிக் கொள்ள மறக்கக்கூடாது. இவற்றோடு கைகளை சுகாதாரத் துறை சார்ந்தவர்கள் தந்திருக்கின்ற அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப எப்போதும் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்கின்ற கடப்பாடும் நமக்கு உண்டு என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

இவற்றோடு நோய் தொற்றை கட்டுபடுத்தவதற்காக நமக்கு தரப்பட்டுள்ள எல்லா அறிவுறுத்தல்களையும் அச்சொட்டாக நாம் ஏற்று கடைபிடிக்க வேண்டும். நோய்பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகவே உரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஒழுங்கை நாம் மிகக் கவனமாக பேண கடமைப்பட்டுள்ளோம்.

குறிப்பாக இளைஞர்கள், சிறார்கள் முதலானோர் ஆங்காங்கே கூடி கதைத்துக் கொண்டு இருப்பது அல்லது கூட்டாக சேர்ந்து விளையாடுவது முதலான விடயங்களை முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். முடியுமானவரை இத்தகைய ஒரு கொள்ளை நோய் பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொருவரும் தத்தமது இடங்களில் – வீடுகளில் தனித்து ஒதுங்கி இருப்பதுவே மிகச்சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இதனை மருத்துவத்துறை வலியுறுத்துவது போலவே மார்க்கமும் வலியுறுத்துகிறது என்பதை இங்கு அழுத்தமாக சொல்லிவைக்க விரும்புகின்றோம்.

“கொள்ளை நோய் பரவும் நிலையில் ஒருவர் பொறுமையாகவும் நன்மையை எதிர்பார்த்தும் அல்லாஹ் விதித்ததே தனக்கு நடக்கும் என்பதை விளங்கி தனது வீட்டில் அடங்கி இருக்கின்றாரோ அவருக்கு ஷஹீதுடைய நன்மை கிடைக்கும்.”

அன்னை ஆயிஷா றழி அவர்கள் கொள்ளை நோயைப்பற்றி றஸூலுல்லாஹி ஸல் அவர்களிடம் வினவிய போது அன்னார் கூறிய விளக்கமே இது. இது ஒரு ஆதார பூர்வமான,நம்பகமான ஹதீஸ்.
இந்த ஹதீஸுக்கு இப்னு ஹஜர் அல் அஸ்கலானி விளக்கம் சொல்லும் போது குறிபிட்டவாறு ஒருவர் அல்லாஹ்வில் நம்பிக்கை வைத்து பௌதீகக் காரணிகளை கவனத்திற் கொண்டு தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் போது அவர் குறித்த நோயினால் மரணிக்காத போதும் அவருக்கு ஷஹீதுடைய நன்மை கிடைக்கும் என்று குறிபிடுகின்றார்கள். சகோதர,சகோதரிகளே, இன்றைய நிலையிலாவது, படைப்புகளுடனான உறவை குறைத்துக் கொண்டு படைப்பாளனுடனான தொடர்வை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டுவோம்!

அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்

சகோதரர்களே,சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும்… இது ஓர் அழுத்த வேண்டுகோள்! பயங்கர கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு அரசாங்கமும் அதிகாரிகளும் சுகாதார துறை சார்ந்தோரும் காத்திரமான பல நடவடிக்கைகளை பெரும் அர்ப்பணத்தோடும் தியாகத்தோடும் முன்னெடுத்து…

சகோதரர்களே,சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும்… இது ஓர் அழுத்த வேண்டுகோள்! பயங்கர கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு அரசாங்கமும் அதிகாரிகளும் சுகாதார துறை சார்ந்தோரும் காத்திரமான பல நடவடிக்கைகளை பெரும் அர்ப்பணத்தோடும் தியாகத்தோடும் முன்னெடுத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *