இறந்த உடலிலும் பற்றி எரிகிறது கேடுகெட்ட இனவாதத் தீ!

  • 8

கொரோனா அவலத்தின் இன்னொரு கசப்பான பக்கம்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி, இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி ஒரு முஸ்லிம். பொதுவாக முஸ்லிம்கள் இறந்த உடலை (மையித்தை) எரிப்பதில்லை. புதைப்பதுதான் வழக்கம்.

இதையெல்லாம் மீறி, குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொள்ளாத நிலையில், இரவோடிரவாக அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்த வரை இது சாதாரணமான விடயம் அல்ல. அவர்களது ஆன்மாவைக் காயப்படுத்துகிற விடயம். குடும்பத்தாரின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இந்த வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல். சுகாதார அமைச்சு மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆகியவற்றின் (எரிப்பதை மட்டுமே அனுமதிக்கும்) ஆரம்ப நிலைப்பாட்டை மாற்றியமைப்பதற்காக முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் முஸ்லிம் வைத்தியர்களும் கடும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் பெற்றனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்த நியமங்களின் அடிப்படையில் கூட, 6 அடிக்கு கூடிய ஆழத்தில் கொரோனாவால் இறந்தோரின் உடலைப் புதைக்க முடியும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களின்படியும், நம் நாட்டு சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்தின்படியும் அனுமதிக்கப்பட்ட ஒரு விடயத்தை ஏன் வெண்டுமென்றே மீறினார்கள்?

குடும்ப அங்கத்தினர் இதைத் தெளிவாக சுட்டிக் காட்டிய பின்னரும், இதை அலட்சியப்படுத்தியது யார்? புதைப்பதற்கான மாற்று இடங்கள் (உ-ம்: மாளிகாவத்தை மையவாடி) பரிசீலிக்கப்பட்டிருந்த நிலையில், அதை அவசரமாக மீறியது யார்? எந்த சுற்று நிருபம் இருந்தாலும், சட்ட வைத்திய அதிகாரியும் ( Judicial Medical Officer – JMO) சுகாதார வைத்திய அதிகாரியும் (Medical Officer of Health- MOH) இறுதித் தீர்மானம் எடுத்து அதை மீற முடியும் என்றால், இது தொடர்கதையாகி விடும்.

இதை ஏற்றுக் கொள்ள முடியாது. தொடர அனுமதிக்கவும் கூடாது. சம்பந்தப்பட்ட சக்திகளை சட்டத்தின் முன் நிறுத்தினால்தான் இந்த இனவாதத் தீயை ஓரளவேனும் தணிக்க முடியும்.

எனக்குத் தெரிந்து, முஸ்லிம் சமூக சக்திகள் மற்றும் அரசியல் தரப்பினர், இறந்த இந்த மனிதரது விடயத்தில் கடுமையாக முயற்சி செய்தார்கள். கடைசி வரைக்கும் குடும்ப அங்கத்தவர்கள் போராடி களைத்துப் போனார்கள். அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு இறந்த உடலை எரித்து விட்டார்கள். எல்லா முயற்சியும் கடைசியில் தோற்றுப் போய் விட்டன.

இது தொடரக் கூடாது. இந்த விடயத்தை முஸ்லிம் சமூகத் தலைமைகள் சீரியஸாக எடுத்து செயற்படுகின்றன. அரச தரப்பினரோடு முக்கியமான சில கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாக அறிகிறேன். இனியாவது நீதி கிடைக்கட்டும்.

இல்லாவிட்டால் தமக்கும் இதே கதிதான் ஏற்படும் என ஒரு முஸ்லிம் நோயாளி எண்ணி, தனது நோயை வெளிப்படுத்தாமல் இருந்து விடலாம். பின்விளைவுகளை அது அதிகரித்து விடவும் கூடும்.

இது நம்பிக்கையுடன் தொடர்புபட்ட ஒரு பிரச்சினை. சிலருக்கு சாதாரணமாகத் தெரிவது, பலருக்கும் அப்படியல்ல என்பதை நாம் எல்லோரும் புரிந்துகொண்டு நடக்க வேண்டியுள்ளது.

சக மனிதனை – அதுவும் இறந்த உடலை- மதிக்கத் தெரியாவிட்டால், இங்கிருக்கும் மனநிலையை என்னவென்பது? பொது நலனுக்கு/ அவசரகால நிலமைக்கு எந்தத் தீங்கும் ஏற்படாவிட்டால், அவரவது சமய நம்பிக்கைககளை மதித்தே ஆக வேண்டும். இது அரசியலமைப்பு உத்தரவாதப்படுத்தும் அடிப்படை உரிமை.

இறந்த உடலில் கூட இனவாதம் தன் கைவரிசையைக் காட்டி விடுகிறது. நம்நாட்டில் இனவாதத் தீ எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது பாருங்கள். அதுதான் மிகப்பெரும் வேதனையைத் திருகிறது. மிகப்பெரும் ஏமாற்றமாக இருக்கிறது.

Siraj Mashoor

கொரோனா அவலத்தின் இன்னொரு கசப்பான பக்கம். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி, இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி ஒரு முஸ்லிம். பொதுவாக முஸ்லிம்கள் இறந்த உடலை (மையித்தை) எரிப்பதில்லை. புதைப்பதுதான் வழக்கம். இதையெல்லாம் மீறி,…

கொரோனா அவலத்தின் இன்னொரு கசப்பான பக்கம். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி, இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி ஒரு முஸ்லிம். பொதுவாக முஸ்லிம்கள் இறந்த உடலை (மையித்தை) எரிப்பதில்லை. புதைப்பதுதான் வழக்கம். இதையெல்லாம் மீறி,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *