நீங்களே உங்களை தனிமைப்படுத்துங்கள், இல்லையேல் தனிமைப்படுத்தப்படுவீர்கள்!

[cov2019]

அன்பு இஸ்லாமியர்களே! உங்களை நோக்கிய சில அன்பான சில மனம் திறந்த வேண்டுகோள்கள். சர்வதேசத்தைப் போன்று இலங்கையின் பல பாகங்களில் நிலவி வரும் கொடிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை (143 )அதிகரித்து வரும் இத்தருணத்தில் மக்களாகிய நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சு, ஜனாதிபதி செயலகம், ஊடகங்கள், வைத்தியர்கள், துறைசார் அறிஞர்கள், சமூக வலைத்தள பிரபலங்கள், பொறுப்புவாய்ந்தவர்கள் என பல்வேறுபட்ட தரப்பினராலும் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய நாம் பொறுப்புடன் செயற்படுகிறோமா?

“வெளியில் செல்லாது வீடுகளில் இருங்கள்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தும் எருமை மாட்டுக்கு மேல் மழை பெய்தாற் போல் எமது வாலிபர்கள், பொறுப்பற்ற சில முதியவர்கள், வெளிநாடுகளுக்கு சென்றுவந்தவர்கள், நோய் அறிகுறியுள்ளவர்கள் வெளியில் சுற்றித்திரிவதானது தன்னைத்தானே தற்கொலை செய்வதுடன் மற்றவர்களையும் கொலை செய்த குற்றத்திற்கு உள்ளாக வேண்டி வரும். அத்துடன் இத்தையோர் நாட்டின் சட்டதிட்டங்டளை மதிக்காத தேசத் துரோகி என்றாலும் மிகையாது.

இவ்வாறு பொறுப்பற்று நடப்பதால் பெரும்பான்மை சமூகத்தின் எண்ணங்களில் “முஸ்லிம்கள் நாட்டு சட்டத்தை மதிக்காதவர்கள் மட்டுமல்லாது கட்டுக்கடங்காதவர்கள், ஆதலால் தான் சுற்றித்திரிந்து நோயைத் தொற்றித்தொற்றி மக்களை சிரமத்திற்குள்ளாக்குகின்றனர்” என்று பதிந்திருப்பதையடுத்து எமது சமூகத்திற்கு சென்ற வருடம் போன்று இவ்வருடமும் அவப்பெயர் ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் நிலவுகிறது!

எமது பொறுப்புகள் யாவை?
  1. அண்மையில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் சுகாதாரப் பிரிவு மற்றும் பொலிஸாரிடம் தம்மைப் பதிவுசெய்து கொள்ளல்
  2. மேற்குறித்தவர்கள் பதிவுசெய்யாத போது ஊரில் வாழும் ஏனையோர் அவர்களை பதிவுசெய்வதை வலியுறுத்துதல்
  3. அவ்வாறும் பதிவுசெய்வதில் அலட்சியமாக இருப்பவர்களை மக்களாகிய நாமே முன்வந்து பொலிஸாரிடமும் சுகாதாரப் பிரிவிடமும் (MOH) முறையிட்டு ஆளை காட்டிக்கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வது நாம் எமது நாட்டு மக்களுக்கு செய்யும் பெரிய உதவியும், கடமையுமாகும்.
  4. கொரோனா நோய் அறிகுறிகள் இருப்போர் உடனே வைத்தியசாலை மற்றும் வைத்தியர்களை அனுகி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  5. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், கொரோனா நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் ஆகிய இருசாராரும் அரசு தரப்பு தனிமைப்படுத்தலை மேற்கொள்ள முன் இயன்றளவு தம்மைத் தாமே தனி வீட்டில் அல்லது தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும்.
  6. மேற்குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட யாரும் இந்நோயை வெளிப்படுத்தினால் தமக்கு இழிவு, கேவலம் வரும் என்று நினைக்காது, உத்தியோகபூர்வ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் போது ஏனைய மக்களை பாதுகாக்க தாமே காரணிகளாக அமைவதை எண்ணி பொறுப்புடன் செயற்படுதல் வேண்டும்
  7. ஏனைய சாதாரணமாகவுள்ள அனைவரும் வீட்டில் இருந்து சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டு நாட்டுக்கு கட்டுப்பட்டு நடத்தல்

அல்லாஹ் கூறுகிறான்: “யார் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் முழு மக்களையும் வாழ வைத்தவர் போன்றாவார்” எனும் இறைவனது அழகிய திருவசனத்தை சிரமேற்கொண்டு வீட்டிலிருந்து எம்மை நாமே தனிமைப்படுத்தி இக்கொடிய தொற்றுநோய் ஏனையோருக்கு தொற்றாமல் பாதுகாக்கும் முயற்சியில் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவோம்.

வல்ல அல்லாஹ் அனைவரையும் இக்கொடிய நோயிலிருந்து பாதுகாத்து, நிம்மதியான இயல்பு வாழ்க்கைக்கு இட்டுச்செல்வதுடன், இந்நோயை முற்றாக அழித்து விடிவை ஏற்படுத்துவாயாக!

நட்புடன்
அஸ்(z)ஹான் ஹனீபா
Author: admin