பராஅத் இரவு

  • 11

[cov2019]

ஷஃபான் மாதம் 15ம் நாள் இரவு ‘பராஅத் இரவு’ என அழைக்கப்படுகிறது. அது பொது மக்கள் மத்தியில் அதிவிசேட நாள். பல்வகை அமல்கள் கொண்டு அந்த நாள் அலங்கரிக்கப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருநாளாகவே மாறியுள்ளது. அந்த நாளில் விசேட துஆ பிராத்தனைகள், தொழுகைகள், மூன்று யாஸீன்கள், பராத் நோன்பு என பல்வகை அமல்கள் நாடலாவிய ரீதியில் தொண்டு தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் மிகுந்த ஈடுபாடோடு நிறைவேற்றும் இந்த அமல்களின் உண்மை நிலை என்ன? ஷரீஆ சட்டப் பரப்பில் இதன் அந்தஸ்து யாது? பராத் இரவுக் கொண்டாட்டம் பொது மக்கள் அறியாமையின் காரணமாக செய்து வரும் தவறுகாளக இருந்தால் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் யாது? பொது மக்கள் மத்தியில் வியாபித்துக் காணப்படும் இது போன்ற தவறுகளை களைவதற்காக களமிறங்கும் அழைப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சீர்திருத்த வழிமுறைகள் யாது? இந்த பின்ணணயில் பராஅத் இரவு நிகழ்வுகள் குறித்த பின்வரும்; விடயங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

1) பராத் இரவின் சிறப்புக்கள் பற்றி வந்துள்ள ஹதீஸ்கள்.
2) பராத் இரவு பற்றி பொது மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கைகளும், அமல்களும்.
3) பராஅத் இரவில் ஓதப்படும் விசேட துஆ.

பராஅத் இரவின் சிறப்புக்கள்

1) ஸுரதுத் துகானின் ஆரம்ப வசனங்கள் பராஅத் இரவின் சிறப்புக்கான ஆதராரமாக முன்வைக்கப்படுகிறது.

‘ஹாமீம், தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக! இதனை நாம் பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் இறக்கிவைத்தோம். ஏனெனில் நாம் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய நாடியிருந்தோம். அந்த நாளில் ஒவ்வொரு விவகாரத்துக்குமான விவேகமிக்க தீர்ப்பு பிரித்துக் கொடுக்கப்படுகின்றது. (44:1-4)

இந்த வசனத்தில் வந்துள் உள்ள ‘பாக்கியம் நிறைந்த ஓர் இரவு’ என்ற வார்த்தையை சிலர் ரமழான் மாதத்தில் வரும் லைதுல் கத்ர் இரவு என்றும் வேறு சிலர் ஷஃபான் மாதம 15ம் நாள் இரவு என்றும் குறிப்பிடுவர். தப்ஸீர் கலை இமாம்களான இப்னு அப்பாஸ், கதாதா, இப்னு ஜுபைர், முஜாஹித், இப்னு ஸைத், ஹஸன் ஆகிய அனைவரும் இந்த இரவு லைலதுல் கத்ர் இரவே என அறிவித்துள்ளனர். இதுவே சரியான கூற்று என இமாம் தபரியும் தனது தப்ஸீரில் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை இமாம் நைஸாபூரியும் தனது தப்ஸீரில் வலியுறுத்திக் கூறிவிட்டு, இது ஷஃபான் 15ம் நாள் இரவு எனக் கருதுவோருக்கு எந்த அடிப்படையும் கிடையாது எனவும் விமர்சித்துள்ளார்.

கருத்துவேறுபாட்டிற்குரிய இந்த வசனத்தின் பலமான கருத்து அது ரமழான் மாதத்தில் உள்ள லைலதுல் கத்ர் இரவு என்பதே. அதனை பராஅத் இரவிற்கான சிறப்பை கூறும் அல்குர்ஆன் வசனம் என்று ஆதராம் காட்ட முடியாது.

2) ‘ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து ‘என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்க மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கி றேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள். பராத் இரவின் சிறப்பு பற்றி கூறும் இந்தச் ஹதீஸ் இப்னு மாஜா மற்றும் பைஹகீ ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

இது ஒரு பலவீனமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்ட ஹதீஸ். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரும் ‘இப்னு அபீ புஸ்;ரா’ என்பவர் பலவீனமாவர். இவர் பொய்யான ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடியவர் என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களும், இமாம் இப்னு முயீன் (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றனர்.

3) ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்: ‘நான் நபி (ஸல்) அவர்களை இரவில் படுக்கையில் காணாததால் அவர்களைத் தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் மதீனா மையவாடியான ‘பகீயில்’ வானத்தை நோக்கி தலையை உயர்த்தியவர்களாக பிராத்தனையில் இருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்களைக் கண்டதும் ஆயிஷாவே! அல்லாஹ்வும், அவனது தூதரும் உனது விவகாரத்தில் அநீதி இழைத்துவிடுவர் என நீ பயப்படுகின்றீரா? அதற்கு ஆயிஷா (ரழி) ஒருபோதும் இல்லை. அவ்வாறு நான் எண்ணவுமில்லைல. ஆனால் நீங்கள் என்னை விட்டு விட்டு வேறு மனைவியரிடம் வந்து விட்டதாக நினைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள்;: ‘ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியான 15ம் இரவில் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து ‘கல்ப்’ கோத்திரத்திரத்திற்கு சொந்தமான ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கை அளவை விட அதிகமாக பாவமன்னிப்பு வழங்குகிறான் என்று கூறினார்கள்’ ஆதாரம் திர்மிதீ, இப்னுமாஜா.

இதுவும் ஒரு பலவீனமான ஹதீஸ். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ‘ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத்’ என்பவர் இடம்பெறுகிறார். இவர் தான் ஹதீஸை பெற்றதாக குறிப்பிடும் அறிவிப்பாளரான யஹ்யா இப்னு அபூ கஸீல் என்பவரிடம் எந்த செய்தியையும் செவியுற்றதில்லை. இது பலஹீனமான ஹதீஸ் என்று இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

4) ‘ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் பாவ மன்னிப்பு வழங்குகிறான். இணைவைப்பவனையும், (இன்னொரு அறிவிப்பில் கொலைகாரானையும்) பரஸ்பரம் குரோதம் பாரட்டுபவனையும் தவிர என நபி (ஸல்) கூறினார்கள். (இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலஹீனமானவர் என்றும் வலீத் இப்னு முஸ்லிம் என்பவர் செய்திகளை இருட்டடிப்பு செய்பவர் என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சனம் செய்கிறார்கள். இருப்பினும் இந்த ஹதீஸின் ஏனைய அறிவிப்பாளர் வரிசையை கருத்திற் கொண்டு இது ஹஸனான ஹதீஸ் என அல்லாமா அல்பானி (ரஹ்) கூறியுள்ளார்கள்.

எனவே சுருக்கமாக கூறுவதாயின் பராத் இரவு குறித்து வந்தள்ள ஹதீஸ்கள் அனைத்தும் குறைபாடுகள் கொண்டதாகவும் ஹதீஸ் கலை வல்லுனர்களின் விமர்சனத்துக்கு உட்பட்டதாகவுமே காணப்படுகிறது.

இந்த ஹதீஸ்கள் பலவீனமானது, விமர்சனங்களுக்கு உட்பட்டது என்பதை முழுமையாக ஏற்பதுடன், குறித்த அந்த இரவுக்கு ஏனைய இரவுகளைவிட ஒரு சிறப்பு இருக்கிறது என்பதனை காட்டுவதற்கு அது போதுமானதே என்ற முடிவுக்கு வரமுடியும். இது இமாம்கள் பலவீனமான ஹதீஸ்களை அணுகும் ஒரு வழிமுறiயாகும். ஆனால் அமல்களின் சிறப்புக்களை கூறும் பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக கொண்டு ஒரு புதிய இபாதத்தை உருவாக்க முடியாது. நோன்பு, கியாமுல்லைல் போன்ற அமல்களை ஷரீஅத்தில் உள்ளபடி ஒருவர் அந்த இரவில் செய்கிறார் என்றால் அது ஆகுமானதே. அதை தடுக்கவேண்டிய அவசியம் கிடையாது. அமல்களின் சிறப்புக்களை கூறும் பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக கொண்டு ஷரீஆ அங்கீகாரம் வழங்கியுள்ள அமல்களை செய்வது தவறல்ல. ஆனால் ஆதாரமே இல்லாத ஒன்றை வணக்க வழிபாடாக எடுப்பதற்கு இந்த விதியை பயன்படுத்த முடியாது.

பொது மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையும், அமல்களும்

1) ஷஃபான் 15ம் நாள் இரவு ஒவ்வொரு விவகாரத்துக்குமான விவேகமிக்க தீர்ப்பு பிரித்துக் கொடுக்கப்படுகின்றது என்ற நம்பிக்கை. இது ஸுரா துகான் கூறும் பாக்கியம் நிறைந்த இரவு என்பதை ஷஃபான் பதினைந்தாம் நாள் என தவாறாக புரிந்து கொண்;டதினால் வந்த விளiவு என்பதை ஏலவே குறிப்பிட்டுள்ளோம்.

2) பராத் இரவில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு பள்ளிவாசலில் ஓதப்படும் துஆப் பிராத்தனைக்கும் விசேட தொழுகைக்கும் யார் சமூகம் தருகின்றாறோ அவர் இந்த வருடத்தில் மரணிக்க மாட்டார். அவருடைய காலக்கெடு திருத்தப்படுகிறது. அவ்வாறு சமூகம்தர தவறும் போது அவர்கள் துர்ப்பாக்கியசாலிகளாக கருதப்படுவர். இது வடிகட்டிய மூட நம்பிக்கை. இதற்கு மார்க்கத்தில் எந்த அடிப்படையும் கிடையாது.

3) அன்றைய இரவில் மஃரிப் தொழுகைக்குப் பின் மூன்று யாசீன் ஓதப்படும். ஒன்று உணவு விஸ்திரணத்திற்கு, இரண்டாவது ஆயுள் நீடிப்புக்கு, மூன்றாவது பலாய் முஸீபத் நீங்குவதற்கு. இதற்கு ஷரீஅத்தில் எந்த ஆதராமும் இல்லை. அல்குர்ஆனை எப்போதும் ஓத முடியும் என்பது உண்மைதான். ஆனால் குறிப்பிட்ட ஒரு ஸுராவை குறித்த ஒரு நாளில் விசேட அமைப்பில் ஓதுவதற்கு ஸஹீஹான ஆதாரம் தேவை. இந்த விடயத்தில் எந்த ஸஹீஹான ஆதராமும் கிடையாது.

4) பராஅத் இரவில் ஸலாதுல் கைர் என்ற பெயரில் விசேட தொழுகை இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். அது நூறு ரக்அத் கொண்ட தொழுகை. ஒவ்வொரு ரக்அத்திலும் பாதிஹா ஸுராவிற்குப் பிறது ஸுரதுல் இக்லாஸ் பதினொரு தடைவ ஓதவேண்டும். இதனை சுருக்கித் தொழும் சோட்-கட் முறைகளும் இருக்கின்றன. இமாம் கஸ்ஸாலி அவர்கள் இந்த விடயத்ததை இஹ்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த தொழுகை குறித்தும் பாதிலான இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளன. எனவே இதுவும் எந்த ஆதாரமும் அற்ற ஷரீஆ அங்கீகரிக்காக ஒரு நூதன தொழுகை முறையாகும்.

மேற்கூறிய விடயங்களும் இன்னும் இது போன்ற புராணங்களுடன் கூடடிய பல நிகழ்ச்சிகளும் மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதன வணக்கங்களாகும். வணக்க வழிபாடுகில் மிகுந்த கவணமாக இருக்க வேண்டும். எந்தவொரு அமலையும் நன்மை கருதி சுயமாக் உருவாக்கவே முடியாது. இதனால் தான் புகஹாக்கள் ‘வணக்க வழிபாடுகளில் அடிப்படை கொள்கை தடையாகும்’ என்ற விதியை வகுத்துள்ளனர். ஆதாரமின்றி ஒன்றை செய்ய முற்படுவது தடை செய்யப்படும். மனிதன் வணங்குவதற்கான கடமைகளையும், வணக்கங்களையும் வகுத்துத் தருவது இறைவன் ஒவன் மட்டுமே. அடிபணிந்து வணங்குவதுதான் அடியானாகிய மனிதனின் கடமை.

பராஅத் இரவில் ஓதும் விசேட பிராத்தனை

இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப் பின் துன்பம், துயரங்கள் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும் நிலையான செல்வத்தைப் பெறவும் மூன்று ‘யாசீன்’ ஒதி துஆ செய்வது ஊர் வழக்கத்தில் இருந்து வருகின்றது. அந்த துஆவில் யா அல்லாஹ்! நீ எங்களை மூதேவிகளாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை சீதேவிகளாக எழுது. நீ எங்களைப் சீதேவிகளாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய், நாடுவதை அழிக்காமல் உறுதிப்படுத்துவாய் உன்னிடம் தான் மூலநூல் எனும் ‘உம்முல் கிதாப்’ உள்ளது என்று பிரார்த்திப்பர்.

உம்முல் கிதாபில் உள்ளவை அழிப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்குமானவையல்ல. அல்லாஹ்வின் அறிவில் உள்ளவை, லவ்ஹூல் மஹ்பூழில் உள்ளவை மாற்றங்கள் நிகழாதவை என்று நம்புவதே ஒரு முஸ்லிமின் மிகச்சரியான நம்பிக்கையாகும். எனவே இந்த துஆவில் வரும் வாசகம் அகீதாவிற்கு முராணான மனித வார்த்தைகளாகும். அவை சிந்தனை சிக்கல்களுக்கு வழிவகுக்கும் வார்த்தை பிரயோகங்கள். இந்த துஆ ஒரு ஹதீஸுமல்ல. அதற்கு ஆதாரமும் இல்லை. மாறாக கருத்துச் சிக்கல் நிறைந்த ஒரு துஆ. இறைவனிடம் கேட்பதென்றால் உறுதியான வார்த்தைகளில் கேட்கவேண்டும். நீ நாடினால் தருவாயாக என்று கேட்பது நபி வழிக்கு முரணான பிரார்த்தனை வழிமுறையாகும்.

இதுவரை பார்த்த விடயங்களின் சுருக்கம்:

1) ஷஃபான் பதினைந்தாம் நாள் இரவு ஏனைய சாதாரன இரவகளை விட சிறப்புக்குரிய இரவு எனக் கருத முடியும். அந்த இரவில் ஷரீஅத் அங்கீகரித்துள்ள முறைப்படி எந்த அமல்கள் வேண்டுமானாலும் செய்யலாம். அந்த நாள் பகல் பொழுதில் நோன்பும் வைக்கலாம். இவை விரும்பத்தக்கவையே.

2) அந்த நாளுக்கென்று விசேட யாஸீன், விசேட தொழுகை, விசேட நோன்பு, விசேட துஆக்கள் என எதுவுமே ஆதாரமில்லாத வையாகும். எனவே அவற்றை வணக்க வழிபாடாக கொண்டாடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

3) அந்த நாளில் மூன்று யாஸீனுக்கு பிறகு ஓதும் விசேட துஆ நபி வழியில் வராதவை. அதில் கருத்துச் சிக்கள் மலிந்து காணப்படுகின்றன. எனவே அது தவிர்க்கப்பட வேண்டியதே.

பராஅத் இரவை பொருத்தமட்டில் மக்கள் நிலைப்பாடு இரண்டு வகைப்படுகிறது.

ஒரு சாரார் மரபு வழி வந்த பாரம்பரிய பராஅத் இரவு வழிபாடுகளுக்கு தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். அவற்றை கடமை என நம்பி விட்டுக் கொடுக்காமல் பாதுகாத்து வருகின்றனர். அதற்கான நியாயங்களையும், ஆதாரங்களையும் வலிந்து தேடுகின்றனர். இவர்களுள் பள்ளிவாசல் இமாம்களும் மௌலிவி ஆலிம்களும் அடங்குவர். எனவே அவர்கள் காய்தல் உவத்தல் இன்றி சமநிலை மனதோடு இந்த விடயத்தை ஷரீஆவின் பின்ணணியில் கூர்ந்து கவனிக்கவேண்டும், படிக்க வேண்டும். அப்போது இந்த தீவிரத்தன்மையை கைவிட்டு விட்டு மிதவாத்தை கடைப்பிடிப்பார்கள் என நம்புகிறோம்.

இதனை எதிர்க்கும் குழுவினரும் அதி தீவிரமான வெறியுடனே செயற்படுகின்றனர். இந்நிகழ்வுகளை கடுமையாக இழிவு படுத்தி அதில் ஈடுபடுவோரை கடுமையாக திட்டித் தீர்த்து விடுகின்றனர். அதுவே கைகலப்பாக மாறி சமூகத்திற்குள்ளே பிளவும் பிரிவினையும் குரோத மனப்பாங்கும் தோன்றிவிடுகிறது. எனவே இதனை எதிர்ப்பவர்கள் ஒரு விடயத்தை கருத்திற் கொள்ள வேண்டும். பராத் இரவை கொண்டாடும் பொது மக்கள் ஏன் அதனை செய்கிறார்கள். அது மார்க்கத்தில் உள்ளது என்ற நல்லெண்ணத்துடனேயே இந்த தவறை செய்கிறார்கள். மார்க்கத்தின் மீது அவர்களுக்குள்ள ஆர்வமும் பற்றும் அதனால் வெளிப்படுகிறது. இந்த நிலையில் கரடுமுரடான போக்கை கையாண்டு, இழிவு படுத்தி, ஓரங்கட்டும் வகையில் அவர்களை எதிர்ப்பதானது, அவர்களது மார்க்க ஆர்வத்தை சிதைத்து விடும். தீனுக்கு வழங்கும் கண்ணியத்தை இழக்கச் செய்யும். தீமையை தடுப்பதில் உள்ள இந்த வெறி நன்மையை விட பாரிய தீய விளைவை கொண்டுவரும். அவர்கள் தீனை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.

எனவே எதிர்க்கும் போது மென்மையை கடைபிடிக்கவேண்டும். இது இஸ்லாமிய பிரசாரத்தில் தீமையை தடுக்கும் உக்திகளில் ஒன்று. குறிப்பாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ள இது போன்ற நிகழ்ச்சிகளை களைவிதில் மிகுந்த கவனம் வேண்டும். மஸ்ஜிதுடன் தொடர்புள்ள மக்களை எதிர்கொள்ளும் தாயீக்கள் நுட்பமான வழிமுறைகளையும் சிறந்த அணுகுமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அடுத்தவர்களது உணர்வுகளை மதித்து உள்ளத்தை காயப்படுத்தாமல் அன்பு ததும்பும் வழிமுறையை பின்பற்றினால் காலப்போக்கி;ல் பொதுமக்கள் உண்மைகளை உள்வாங்கி அதன் பால் திரும்பிவிடுவர். சரியான பாதைக்கு வழிகாட்டுபவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. அல்லாஹ் யாவும் அறிந்தவன்.

முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி)


[cov2019] ஷஃபான் மாதம் 15ம் நாள் இரவு ‘பராஅத் இரவு’ என அழைக்கப்படுகிறது. அது பொது மக்கள் மத்தியில் அதிவிசேட நாள். பல்வகை அமல்கள் கொண்டு அந்த நாள் அலங்கரிக்கப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்…

[cov2019] ஷஃபான் மாதம் 15ம் நாள் இரவு ‘பராஅத் இரவு’ என அழைக்கப்படுகிறது. அது பொது மக்கள் மத்தியில் அதிவிசேட நாள். பல்வகை அமல்கள் கொண்டு அந்த நாள் அலங்கரிக்கப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *