படிப்பினை பெற்று இறைவனின் பால் அதிகம் மீள்வோம்!

[cov2019]

கொரோனாவினால் வீட்டிலிருக்கும் நாம் அனைவரும் நபியவர்களும் அவர்களது கோத்திரங்களும் குரைஷி காபிர்களால் மக்காவின் அபூ தாலிப் பள்ளத்தாக்கில் 3 வருடங்கள் ஒதுக்கப்பட்டு தடுக்கப்பட்டிருந்த போது முகம் கொடுத்த சொல்லொனா இன்னல்கள், கஷ்டங்களை வாசித்து விளங்குவது நன்று.

விரல்விட்டு எண்ணுமளவிலான சில காலங்கள் வீட்டிலிருக்கும் எம்மில் சிலர் கஷ்டங்களின் வெளிப்பாட்டால் பொறுமையிழந்து இறைவனுக்கு ஏசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நபியவர்களும், உறவுகளும், சகாக்களும் சாப்பிட வழியில்லாது மரங்களின் இலை குழைகளை பறித்து சாப்பிட்டு காலத்தை கடத்திய போதும் இறைவனின் பக்கம் நெருங்குவதில் மும்முரமாக ஈடுபட்டனரே தவிர பொறுமையிழந்து படைத்த இறைவனை ஏசவில்லை.

மூன்று வருடங்கள் அனல் பறக்கும் வெயிலில், தங்குவதற்கு வீடில்லை, பசியைப் போக்குமளவு உணவில்லை, உணவகமில்லை, வைத்தியசாலை இல்லை, மருந்தகம் இல்லை, இளைப்பாறி காற்று வாங்க மின்விசிறி இல்லை, சமைப்பதற்கு எரிவாயு இல்லை, சிறு குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பால்மா இல்லை, ஆழமான பள்ளத்தாக்கு என்பதால் பசியால் சிறுவர்களும் பெண்களும் அழும் அழுகுரல்கள் வெளியே கேட்கும் நிலை வர்ணிக்கப்படுகின்றளவு வசதிகளின்றி சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு நபியவர்களுக்கு ஒரு கஷ்டமும் கொடுக்காது பக்குவப்பட்ட சமூகமாக குறிப்பிட்ட காலத்தை கழித்தனர். இறுதியில் அல்லாஹ்வே அவன் புறத்திலிருந்து விடிவைக் கொடுத்தான்.

தனக்கு நெருக்கமான நபியவர்களையும் அல்லாஹ் சோதித்துள்ளான் என்பதை விளங்கிய நாம் ஈமானிய பக்குவம், உறுதியை எம்மிடம் அதிகரிக்கும் தருணமாக இக்காலத்தை பயன்படுத்துவதுடன், அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொடிய கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெறவும் மக்களது இயல்பு நிலமை வழமைக்கு திரும்புவதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவோம்.

வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கு முன்னுதாரணப் புருஷர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நட்புடன்
அஸ்ஹான் ஹனீபா


Author: admin