இரண்டு விதமான விசித்திர மனிதர்கள்!

  1. முதலாவது மனிதர்:
    குடும்பத்தில் கொடுக்கல்வாங்கல், அழகாக பேசுதல், கலந்துரையாடுதல், தர்மம் செய்தல், உதவுதல் என்பன போன்றவற்றில் பூச்சிய விகிதமாக நடந்து கொள்வார்.
    ஆனால் வெளி வட்டாரத்தில், சமூகத்தில் இவரை விட சமூகப்பணி, சமூக அக்கறை, பொது வேலைகள், மக்களுக்கு அள்ளியள்ளி தர்மம் வழங்குவதில் ஆளில்லை என்று மக்கள் கூறுமளவு செயற்படுபவர்.
  2. இரண்டாவது மனிதர்:
    தனது குடும்பத்திற்கும் தனக்கும் பொதுச்சொத்துக்களை சூறையாடி சேமிப்பதில் மும்முரமாக செயற்படுவதுடன் சமூக அக்கறை, சகவாழ்வின் முன்னோடி போன்று தன்னை காட்டிக்கொண்டு மிகவும் சிறிய சேவையொன்றை செய்துவிட்டு பாரிய வேலை செய்துவிட்டதாக சித்தரித்து சமூக ஆதரவைத் திரட்டுவதில் மும்முரமாக ஈடுபடுவார்.
    ஆனால் வெளியில் தன்னை இவ்வாறு காண்பிக்கும் இவர், தனக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள், உத்தியோகத்தரது வயிற்றில் அடித்து சம்பளத்தைக் குறைத்துக் கொடுத்து, அநியாயம் இழைத்து அவர்களது சம்பள மிகுதியை கொள்ளையடித்து வயிறு நிரப்புவார். (உ+ம்: சில தனியார் பாடசாலை, மத்ரஸாக்களது அதிபர்கள், சில தொழிற்சாலை, கடைகளது உரிமையாளர்கள்)

இவ்விருவரும் சமூகப்பணி, பொதுவேலைகளில் தம்மை நல்லவராக காண்பிக்கும் அதேநேரம் தமக்கு கீழுள்ளவர்களுக்கு (முதலாமவர் குடும்பம், உறவுகளுக்கு, இரண்டாமவர் தொழிலாளர்களுக்கு) அநியாயம் இழைத்து, அவர்களை ஒரு பொருட்டாகவும் கருதாது நடந்து கொள்ளும் உத்தமர்கள்.

இவர்கள் எவ்வளவு தான் சமூகப்பணிகள் செய்கின்ற போதும் தர்மத்திலும் கவனிப்பிலும் இஸ்லாம் வலியுறுத்திக் கூறும் முதன்மையானவர்களை முன்னுரிமைப்படுத்தாது செயற்படுமிடத்து பலனொன்றுமில்லை. குடும்பம், உறவுகள், கீழுள்ள தொழிலாளர்களை சிரமத்திற்குள்ளாக்கி, வறுமையில் வாட விட்டுவிட்டு சமூகப்பணி செய்து பெயரும் புகழும் ஈட்டுவதில் பண்டமொன்றுமில்லை என்பதை எப்பொழுது தான் இத்தகைய ரகத்தினர் உணர்வார்களோ தெரியவில்லை.

இவ்விருவரும் நயவஞ்சகர்கள் மட்டுமல்லாது தமக்கான நியாயங்களை கற்பிப்பதில் வல்லர்களாக திகழ்வர். அல்லாஹ் இத்தகைய தீய குணமுள்ள நிலையிலிருந்து எம்மைப் பாதுகாப்பானாக!

Azhan Haneefa


Author: admin