புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல் நல்லுறவுக்கான ஓர் உபசாரம்

  • 34

பிற மதத்தவர்களின் பண்டிகை வாழ்த்துகள் கூடாது என சில அறிஞர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். கூடாது என்பதற்கான நியாயங்களை முன்வைக்கும் போது மத ரீதியான பண்டிகைத் தினங்களில் வாழ்த்துப் பரிமாறுவது அவர்களின் மார்க்க விவகாரங்களில் ஒப்பாகுவதற்குச் சமனாகும் என்றும, பிற சமூகத்திற்கு ஒப்பாகுவதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளனர். அவ்வாறே வாழ்த்துத் தெரிவிப்பதன் மூலம் அவர்களின் பண்டிகையில் நாம் பங்கேற்கின்றோம் என்றே அர்த்தம் எனவும் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவ புது வருட வாழ்த்துக்களைப் பரிமாறுவது அல்லது பிற மதத்தவர்களின் விஷேட தினங்களில் அல்லது வேறு வகையான தேசிய தினங்களை முன்னிட்டு வாழ்த்துப் பரிமாறுவது மனித நேயம் என்ற வகையில் கௌரவ உபசாரமாகவே நோக்க வேண்டும் என நவீன கால அறிஞர்கள் பலர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையான நவீனகால சட்டத்துறை அறிஞர்கள் இதுபோன்ற வாழ்த்துத் தெரிவிப்பதில் தவறில்லை என்றே கருதுகின்றனர்.

இன்று முஸ்லிம்கள் பல நாடுகளில் பன்மைத்துவ சமூகத்தில் சமரசமாக வாழுகின்றனர். ஒரே தேசத்தில் வாழும் சம உரிமை-கடமைகள் கொண்ட குடிமக்களாகவே வாழ்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் திருமண பந்தங்களும் காணப்படுகின்றன. அதனால் ஏற்படும் சொந்தங்கள், குடும்ப உறவுகள் வளர்ந்துள்ளன.

முஸ்லிம்களை அண்டி வாழும் அயலவர்கள், பள்ளித் தோழர்கள், அலுவலக சகபாடிகள் என பலமான உறவுகளும் தொடர்புகளும் வளர்ந்துள்ளன. எனவே இத்தகைய சமாதான சகவாழ்வு சூழல் நிலவும் போது நல்வாழ்த்துக்களைப் பரிமாறுவது தவறல்ல.

இஸ்லாம் இத்தகைய கௌரவ உபசாரங்களை வரவேற்பது மாத்திரமின்றி அதனைத் தூண்டியுமுள்ளது. அல்குர் ஆன் சூரா மும்தஹினாவின் ஏழாவது வசனத்தில் சமாதானமாக வாழும் அந்நியர்களுடன் நல்ல முறையில் உபகாரம் செய்யுமாறும் நீதியுடன் நடந்துகொள்ளு மாறும் முஸ்லிம்களைப் பணிக்கிறது.

போராடாத சூழலில் ஒரு முஸ்லிம் தனிநபர் அல்லது இஸ்லாமிய நிறுவனங்கள், அமைப்புக்கள் வாழ்த்துக்களைப் பரிமாறுவது அல்லது வாழ்த்து அட்டைகளைப் பகிர்வது ஆகுமானதே. இஸ்லாம் அனுமதிக்காத மத அடையாளச் சின்னங்கள், சுலோகங்கள் பொறிக்கப்படுவதையும் வாழ்த்து அட்டைகளில் அகீதாவிற்கு முரணான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்ந்து கொள்வதையுமே இங்கு கவனத்தில் எடுக்க வேண்டிய விடயமாகும்.

கிறிஸ்தவ புதுவருடத்தை அல்லது தமிழில் சிங்கள புத்தாண்டை அல்லது அதுபோன்ற விசேட தினங்களை முன்னிட்டு வாழ்த்துப் பரிமாறும் போது பயன்படுத்தப்படும் பதப்பிரயோகங்கள் பிற மதத்தினரின் நம்பிக்கை கோட்பாட்டை வெளிப்படையாகவே அங்கீகரிக்கும் சுலோகங்களாக அமையாமல் இருக்க வேண்டும் என்பதையே நாம் மனங்கொள்ள வேண்டும்.

இந்நிபந்தனைகளுடன் இன, மத பேதமின்றி சாதாரணமாக சம்பிரதாய அடிப்படையில் மக்கள் மத்தியில் காணப்படும் வழக்கமான பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், அன்பளிப்புக்கள் என்பன கௌரவ உபசாரமாகும். நல்லுறவைப் பேணும் உபசரிப்பாகவே இஸ்லாம் இதனைப் பார்க்கிறது.

எனவே அந்த வகையில் அன்பளிப்புக்களைப் பெறுவதோ அல்லது அதற்குப் பதிலீடாக அன்பளிப்பு வழங்குவதோ ஆகுமானதே. நபி (ஸல்) அவர்கள் எகிப்து நாட்டின் கிறிஸ்தவ மன்னன் முகவ்கிஸிடமிருந்து அன்பளிப்புக்களை மனமுவந்து ஏற்றுள்ளார்கள். (ஸாதுல் மஆத் 3/61)

அயலவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ற வகையில் பிற மதத்தவர்களின் பண்டிகை வாழ்த்துக்கள் ஆகுமானதே என கட்டார் பல்கலைக்கழகப் போராசிரியர் முஹம்மத் தஸூக்கி அவர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளார். ((islamonline.net))

புரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள்:

  1. வாழ்த்துக்களைப் பரிமாறுவது என்பது பிற மதத்தவர்களின் தீனை ஏற்று அங்கீகரித்ததாக அமையாது. ‘உங்க ளுக்கு புதுவருட வாழ்த்துக்கள்’ என்று கூறுவதன் மூலம் அவர்களது கொள்கை யைத் திருப்தியோடு ஏற்று அகீதாவைப் பின்பற்றியொழுகியதாக அர்த்தம் கிடையாது. முஸ்லிம்களுடன் போராடாத, அவர்களது இருப்பிடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றாத சமாதான மாக வாழும் பிற இன, மதத்தவர்களுடனான உறவுகள் பற்றிய கொள்கையை அல்குர்ஆன் விளக்கும் போது அவர்களுடன் நற்பண்புகளோடு நடந்துகொள்ளுமாறே பணிக்கிறது.
  2. அந்நியர்களுடனான உறவுக்கு அடிப்படையாக அமைவது சமாதானம் என்பதே பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். சமாதான சமரசம் என்பது ஷரீஆ வேண்டி நிற்கின்ற ஒரு பெறு மானமாகும். மனிதனை மனிதனாகப் பார்ப்பதற்குக் கற்றுத் தந்த இஸ்லாம் இந்த அடிப்படையைத் தவிர வேறு எதனைத்தான் குறிப்பிட முடியும். எனவே பிற மத சகோதரர்களுடனான உறவுகள் குறித்த எமது பார்வை சீராக உள்ளதா எனப் பார்த்துக் கொள்வதே இன்றைய முதன்மைத் தேவையாகும்.
  3. அந்நியர்களுடனான உறவு எப்படி அமைய வேண்டும் என்று கூறும் போது ‘நல்ல முறையில் உபகாரம் செய்து நடந்து கொள்ளுமாறும் நீதியாக நடந்து கொள்ளுமாறும்’ அல்குர்ஆன் முஸ்லிம்களை பணிக்கிறது.
    இங்கு சம நீதிக்கு அப்பால் நற்கருமங்கள் செய்யுமாறும் உபகாரம் புரியுமாறும் ஏவப்பட்டுள்ளமை கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும். சமாதான சூழலில் வாழும் அந்நியர்களுடன் மிகுந்த பண்பாடாக நடக்கும் முஸ்லிம்களை அல்லாஹ் விரும்புகிறான் என்றே அந்த வசனம் முடிகிறது. நாம் அல்லாஹ்வின் விருப்பத்தையும் திருப்தியையும் பெற்றுக் கொள்ளவே எமது வாழ்வை அர்ப்பணம் செய்கிறோம்.
    இந்த வசனம் மிகவும் பொதுவான வழிகாட்டலாகும். இதில் கிறிஸ்தவர்கள், யூதர்கள், மக்கா காபிர்கள், ஏனைய பிற மத சகோதரர்கள் அனைவரையும் உள்வாங்கியே அவர்களுடன் மேற்கூறிய நிபந்தனைகளுடன் மிக நல்லமுறையில் உறவைப் பேணுமாறு அல்-குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.
  4. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அறுத்ததை முஸ்லிம்கள் சாப்பிடுவதற்கும் அவர்களுடைய பெண்களை திருமணம் முடிப்பதற்கும் ஷரீஆ அனுமதித்துள்ளது. திருமணம் என்பது அன்பு, மனஅமைதி, இரக்கம் என்ற அடிப்படைகள் மீது எழுந்த பந்தமாகும். அதனடியாக வரும் சொந்த பந்தங்கள், குடும்ப உறவுகள் என்பன இயற்கையானது. அந்த உறவுகளின் கொண்டாட்டங்களில் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி கலந்து கொள்வது, வாழ்த்துப் பரிமாறு வது, ஸலாம் சொல்வது போன்ற நல் லுறவு பேணுவதை இஸ்லாம் எப்படித் தடுக்க முடியும்? திருணம் முடித்து வாழ்வது ஆகுமானது என்று கூறும் ஷரீஆ, நல்லுறவு பேணுவதை ஒரு போதும் தடைசெய்யாது. எனவேதான் சமாதான சூழலில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் சிநேகபூர்வமாக நடந்துகொள்வதை இஸ்லாம் விதியாக்கியுள்ளது.

எனவே மேற்கூறிய நியாயங்களையும் ஷரீஆ நிலைப்பாடுகளையும் கருத்திற் கொண்டு பெரும் பான்மையான நவீன கால இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ் மஸ் பண்டிகை அல்லது புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறுவது அல்லது விசேட தினங்களில் வாழ்த்துப் பரிமாறுவது ஆகும் என்றே தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

நாம் இலங்கை தாய்த் திருநாட்டில் பல்லின சமூகமாக வாழ்கின்றோம். எனவே இங்கு மனித நேய உறவுகளைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ள முடியாது. எனினும் தேவையில்லாமல் வலுக்கட்டாயமாக எம்மை நாமே புதிய சம்பிரதாயங்களில் உட்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையுமில்லை. நல்லுறவு பேணுவதே இங்கு முக்கியமாகும். நற்குணங்கள் மனமாற்றத்திற்கான அழிக வழிமுறையாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

முஹம்மத் பகீஹுத்தீன்


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

பிற மதத்தவர்களின் பண்டிகை வாழ்த்துகள் கூடாது என சில அறிஞர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். கூடாது என்பதற்கான நியாயங்களை முன்வைக்கும் போது மத ரீதியான பண்டிகைத் தினங்களில் வாழ்த்துப் பரிமாறுவது அவர்களின் மார்க்க விவகாரங்களில் ஒப்பாகுவதற்குச்…

பிற மதத்தவர்களின் பண்டிகை வாழ்த்துகள் கூடாது என சில அறிஞர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். கூடாது என்பதற்கான நியாயங்களை முன்வைக்கும் போது மத ரீதியான பண்டிகைத் தினங்களில் வாழ்த்துப் பரிமாறுவது அவர்களின் மார்க்க விவகாரங்களில் ஒப்பாகுவதற்குச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *