செல்வந்தர்களுக்கு அல் குர்ஆன் கூறும் உபதேசங்கள்
இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடைகளில் செல்வச் செழிப்பும் ஒன்றாகும். சிலபோது இந்த செல்வம் ஒரு சோதனையாகவும் இருக்கலாம். ஒருவேளை செல்வம் எமது அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடலாம். பொதுவாக செல்வத்தை திரட்டுவதில் சகல மட்டத்தில் இருப்பவர்களுக்கும் பேராசை இருக்கத்தான் செய்கிறது. யாரை எடுத்துக்கொண்டாலும் சொத்து செல்வத்துடனான ஈர்ப்பு நெருக்கமானதாகவே இருக்கிறது. அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ்களை படித்துப் பார்க்கும்போது, சொத்து செல்வம் அல்லாஹ்வின் அருள் என்ற கருத்துக்களையே தரக்கூடியதாக உள்ளன. நபித்தோழர்களில் அதிகமானோர் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துள்ளனர். ஆனால் செல்வத்தை கண்டு அவர்கள் ஏமாந்து விட வில்லை! ஆனால் அல்லாஹ்வை ஞாபகம் செய்ய மறந்துவிடவில்லை! அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்கத் தவறவில்லை! இறைத்தூதரின் “தர்பியா” வில் வாழ்ந்த ஸஹாபாக்களின் வரலாறு இதற்கு மிகப்பெரும் சான்றாகும்.
செல்வச் செழிப்பிலும் இறைச் சிந்தனைகே முன்னுரிமை
வசதி படைத்தவர்கள் எப்போதும் இறை சிந்தனையுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். இறைவன் கொடுத்த செல்வத்தை அடியார்கள் எவ்வாறு அனுபவிக்கின்றனர் என்பதை அவன் அவதானிக்கின்றான். இறைவன் அல் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
: يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (4:01)
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு கூறுகின்றான்.
اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ
நிச்சயமாக அல்லாஹ் (மனிதனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? (96:14)
என்னையும், உங்களையும் அவன் படைப்பதற்கு முன்பே, எமது தன்மைகளைப் பற்றி நன்கறிந்தவன். இந்த வசதி வாய்ப்பை வைத்து அடியார்கள் இரவிலும், பகலிலும், தனிமையிலும், கூட்டத்திலும், உள்ளூரிலும், வெளியூரிலும் என்ன செய்யபோகின்றான் யாருக்காக செலவழிக்கப் போகின்றான் என அவதானித்துக் கொண்டிருக்கின்றான். எமக்குத் தெரியும் சஹாபா தோழர்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் கஃபாவில் விக்ரகங்களை வைத்து வணங்கியவர்கள். இஸ்லாம் அவர்களுக்கு புதிய அறிமுகம் ஆனாலும், எச்சந்தர்ப்பத்திலும் இறை சிந்தனையுடன் காலங்கள் கடந்தன. ஆடு மேய்த்த அடிமைப் பெண்ணிடமும் அல்லாஹ்வின் அச்சம் இருந்தது அதையே பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
நபி(ஸல்) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணிடத்தில் அல்லாஹ் எங்கே இருக்கிறான்? எனக் கேட்டபோது, அந்தப் பெண் வானில் இருக்கிறான் எனக் கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இந்தப் பெண்ணை விடுதலை செய்து விடுங்கள். இவள் முஃமினான பெண்தான் எனக்கூறினார்கள். (முஸ்லிம்)
பாவம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்து விட்டால், அல்லாஹ் எங்கே சென்று விட்டான்..? என்பதுதான் அவர்களின் கேள்வியாகும் .
யூசுப் (அலை) அவர்களுக்கு பாவம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், அவரை இறைபக்தியும், நன்றியுணர்வும் பாவத்திலிருந்து தடுத்துவிட்டது. செல்வச் செழிப்பும் அழகும் நிறைந்த அப்பெண் பாவத்திற்கு யூசுப் (அலை) அவர்களை அழைக்கிறாள். அப்போது, அவர்கள் கூறிய முதல் பதில் அல்லாஹ் இத்தீய செயலில் இருந்து என்னை பாதுகாப்பானாக! இரண்டாவது பதில் உனது கணவர் எனக்கு எஜமானாக இருக்கிறார். அவருக்கு துரோகம் செய்ய மாட்டேன். சந்தையில் விற்கப்பட்ட என்னை புகலிடம் தந்து, என்னை அரண்மனையில் பாதுகாப்பு தந்தவருக்கு நான் மாறு செய்யவா..? இங்கே யூசுப் (அலை) அவர்களுக்கு பாவத்திற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. எங்களில் அநேகர் பக்குவமாகவே வாழ்கின்றனர். பாவத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை! சந்தர்ப்பம் கிடைத்தால் பாவத்தில் விழுந்து விடுவார்கள். அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக!
எனவே செல்வந்தர்கள் தனக்கு கிடைத்துள்ள செல்வத்தை அல்லாஹ் விரும்பிய வழியில் செலவு செய்ய வேண்டும்! அவனுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்! எனது வகுப்பில் ஒரே சம காலத்தில் படித்த நண்பர்கள் சாதாரண தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் போது, என்னை இறைவன் பிறருக்கு உதவி செய்கின்ற அளவிற்கு உயர்த்திய அல்லாஹ்வுக்கு நான் ஏன் நன்றி செலுத்தக் கூடாது..? எனது உடன் பிறப்புக்களை விட, எனக்கு உயர்ந்த அந்தஸ்தை தந்த இறைவனுக்கு நான் மாறு செய்வதா..? இறைவன் எனக்கு கொடுத்த அறிவு, சொத்து, செல்வம் வீடு வாசல் போன்றவைகளை வைத்து நான் பெருமையடிப்பதா..?
செல்வந்தர்களே! சிந்தியுங்கள்! அல்லாஹ் ஏவியதை எடுத்து நடவுங்கள்! அவன் தடுத்ததை தவிர்ந்து கொள்ளுங்கள்! இவைதான் அவனுக்கு செய்யவேண்டிய நன்றியாகும். எனவே, செல்வ செழிப்பிலும் இறைவனை மறக்கக்கூடாது ! உலகில் வாழ்ந்து மறைந்த பெரும் செல்வந்தர்களின் வரலாறு நல்ல பல பாடங்களை எமக்கு புகட்டுகின்றன.
கருமித்தனம் கொண்ட காரூனின் செல்வமும், அவனுக்கு அல்லாஹ் கூறும் அறிவுரைகளும், நாம் படிக்க வேண்டிய பாடங்களும்.
செல்வம் இறைவன் புறத்திலிருந்து அடியார்களுக்கு வழங்கும் அருளாகும். அந்த அருளை முறையாக பயன்படுத்தி அவனுக்கு நன்றிக்கடனாக நடந்துகொள்வது அடியார்களின் கடமையாகும். அதற்கு மாறாக நன்றி கெட்ட முறையில் நடந்து, அவனது பேரருளை மறந்து, மறைத்து, மறுத்து நடப்பது அல்லாஹ்வின் தண்டனையை ஈட்டுத் தரக்கூடியதாகும். இதற்கு நபி மூஸா அலை அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஆணவம் கொண்ட காரூனின் வாழ்க்கை வரலாறு சிறந்த எடுத்துக்காட்டாகும். அவன் பற்றியே பின்வரும் குர்ஆனிய வசனங்கள் பேசுகின்றன.
اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰى فَبَغٰى عَلَيْهِمْ وَاٰتَيْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَـتَـنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள். (28:76)
وَابْتَغِ فِيْمَاۤ اٰتٰٮكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِيْبَكَ مِنَ الدُّنْيَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَيْكَ وَلَا تَبْغِ الْـفَسَادَ فِى الْاَرْضِؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்). (28:77)
قَالَ اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ عِنْدِىْؕ اَوَلَمْ يَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًاؕ وَلَا يُسْـٴَــلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ
(அதற்கு அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். (28:78)
فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ فِىْ زِيْنَتِهٖؕ قَالَ الَّذِيْنَ يُرِيْدُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا يٰلَيْتَ لَـنَا مِثْلَ مَاۤ اُوْتِىَ قَارُوْنُۙ اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِيْمٍ
அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள். (28:79)
وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَيْلَـكُمْ ثَوَابُ اللّٰهِ خَيْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًـا ۚ وَلَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الصّٰبِرُوْنَ
கல்வி ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள். (28:80)
فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ يَّـنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِيْنَ
ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. (28:81)
وَاَصْبَحَ الَّذِيْنَ تَمَـنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ يَقُوْلُوْنَ وَيْكَاَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُۚ لَوْلَاۤ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا ؕ وَيْكَاَنَّهٗ لَا يُفْلِحُ الْكٰفِرُوْنَ
முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள். (28:82)
மேற்கூறிய வசனங்களில் கர்வம் கொண்ட காரூனுக்கு, தன் சமூகம் கூறிய அறிவுரைகளை, இறைவன் தீர்ப்பு நாள் வரும் வரை வாழ்கின்ற வசதி படைத்தவர்களுக்கு, வாழ்க்கையில் பாடமாகக் படித்துத் தருகிறான்.
அல்லாஹ் காரூனுக்கு கூறும் முதல் அறிவுரை.
காரூனுக்கு அவன் கொடுத்த சொத்து செல்வங்களை பற்றி கூறிவிட்டு, பின்வருமாறு கூறுகின்றான். அவைகளை சற்று விரிவாகப் பார்போம்.
لا تفرح إن الله لا يحب الفرحين
“நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள். (28:76)
உண்மையில் இறைநேசர்கள் அல்லாஹ் கொடுத்த செல்வத்தை கொண்டு சந்தோஷம் அடைய மாட்டார்கள்! பெருமை அடிக்க மாட்டார்கள்! ஏன் அனுபவித்த அருட்கொடைகளுக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமல்லவா…?
ثُمَّ لَـتُسْــٴَــلُنَّ يَوْمَٮِٕذٍ عَنِ النَّعِيْمِ
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (102:8)
எவ்வாறு அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லப்போகிறோம்…? அவன் எம்மிடம் வினா எழுப்பக்காத்துக் கொண்டிருக்கின்றான். அல்லாஹ்வின் தூதர்)ஸல் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்؛
“لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ ”
(رواه الترمذي )
ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொல்லாத வரை ஒரு மனிதன் தான் நிற்கும் இடத்தை விட்டும் நகர முடியாது.
- உன்ஆயுளை எவ்வாறு கழித்தாய்?
- உன் இளமையை எவ்வழியில் பயன்படுத்தினாய்?
- செல்வத்தை எவ்வழியில் ஈட்டினாய்?
- செல்வத்தை எவ்வழியில் செலவு செய்தாய்?
- கொடுக்கப்பட்ட அறிவை எவ்வழியில் பயன்படுத்தினாய்?
என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ:2399)
மேற்கூறிய நபி மொழியின் பிரகாரம், இக்கேள்விகளுக்கு பதில் கூற, நானும் நீங்களும் தயாரா என, ஒரு கணம் சிந்தித்துப் பார்போம்.
எனவே உலகம் கிடைத்ததை நினைத்து மகிழ்சி அடையக்கூடாது! உலகத்தையே ஆண்ட சுலைமான் (அலை) அவர்கள் அவர்களின் வரலாறு அனைவருக்கும் தெரியும் அல்லாஹ் பெரும் செல்வத்தை மாத்திரமல்ல ஆட்சியையும் கொடுத்தான். அவன் அருளால் அகிலத்தையே நிர்வகிக்கும் ஆற்றலை கொடுத்தான். இதுபோன்ற ஒரு சக்தியை உலகில் யாருக்கும் அவன் கொடுக்கவில்லை! அல்லாஹ்விடம் அவர்கள் ஒரு பிரார்த்தனை செய்தார்கள்.
قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِىْۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
“என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார். (38:35)
فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِىْ بِاَمْرِهٖ رُخَآءً حَيْثُ اَصَابَۙ
ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது. (38:36)
وَالشَّيٰطِيْنَ كُلَّ بَنَّآءٍ وَّغَوَّاصٍۙ
மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்; (38:37)
وَّاٰخَرِيْنَ مُقَرَّنِيْنَ فِىْ الْاَصْفَادِ
சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம். (38:38)
هٰذَا عَطَآؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ
“இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக்) கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் – கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்) (38:39)
சுலைமான் அலை அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றான். இவ் அழைப்பின் விளைவாக, உலகத்தையே ஆட்சிக்குள் கொண்டு வந்தார்கள். எந்தளவில் என்றால் பளிங்குகளிலான மாளிகை கட்டி வாழ்ந்தார்கள். அவர்கள் மனிதர்களை மாத்திரமல்ல ஜின்களையும், பறவைகளையும் கட்டுப்படுத்தினார்கள். பறவைகள், எறும்புகள் போன்றவற்றின் மொழியையும் அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் காற்றையும் அவன் வசப்படுத்திக் கொடுத்தான். அவர் நாடுகின்ற இடத்திற்கு அக்காற்று அவரை எடுத்துச் செல்லும் அவ்வாறு இன்னும் பல அருட்கொடைகளை அவர்களுக்கு அல்லாஹ் அறிந்தான் இவ்வாறு அருட்கொடைகளையும் உள்வாங்கிக் கொண்டு அல்லாஹ்வை மறுக்கவில்லை, மறக்கவில்லை! உண்மையில் அவர்கள் கூறிய வார்த்தை என்னவெனில்,
قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْۖ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார். (27:40.)
இது சூரா அந் நம்லில் இடம் பெறும் சம்பவத்தின் ஒரு பகுதியாகும்.
சுலைமான் அலை அவர்கள் அல்லாஹ் கொடுத்த அருளை நினைத்து பெருமை அடிக்கவில்லை! நன்றி மறக்க வில்லை! எனவே, செல்வந்தர்களே! அல்லாஹ் தந்த வளத்தை வைத்து அவன் பொருத்தத்தை அடைய முயலுங்கள்!
இங்கே இன்னும் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ளுங்கள்! என்னவென்றால் எமது வாகனங்கள், வீடுகள், வியாபாரஸ்தலங்களில் هذا من فضل ربي. என்ற வாசகம் பொறிக்கப்பட ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளோம். ஆனால், அதற்குப் பின்னால் வருகின்ற வார்த்தையை மறந்து விடுகின்றோம். அவ் வாசகங்களை முழுமையாகவே ஒட்டிக்கொண்டால் செல்வத்தை எதற்காக வேண்டி இறைவன் தந்தான் என்பது பற்றி அடிக்கடி ஞாபகத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை.
நண்பர்களே! எமக்குக் கொடுத்த அருள் சாதாரணமானதல்ல! எத்தனை நபர்களுக்கு சொந்த வீடு இல்லாமல் இருக்கும்போது, எனக்கு அவன் கொடுத்த வீட்டை நினைத்து ஏன் அல்லாஹ்வை நன்றி செலுத்தக்கூடாது! இலங்கையில் 40% சதவீதமாணவர்கள் வீடு வசதியின்றி வாழ்கின்றனர். இவ்வாறு அவர்களின் நிலைமை இருக்கும் போது, அல்லாஹ் பிறருக்கு இடைஞ்சல் இல்லாமல் சொந்தமாக வாழ வைத்துள்ளான். அவனுக்கு அல்ஹம்துலில்லாஹ் ஏன் சொல்லக்கூடாது….?
அல்லாஹ் காரூனுக்கு கூறும் இரண்டாவது அறிவுரை.
وَابْتَغِ فِيْمَاۤ اٰتٰٮكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ
“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; (28:77)
அறிஞர்களே! ஆசிரியர்களே! அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அறிவை வைத்து ஆகிராவை சம்பாதித்துக் கொள்ளுங்கள்! செல்வந்தர்களே! இறைவன் உங்களுக்கு கொடுத்த செல்வத்தை வைத்து மறு உலகத்திற்கு தேடிக்கொள்ளுங்கள்.!
செல்வந்தர்கள் உருவாகுவதற்கும் அறிஞர்கள், ஆசான்கள் ஒரு நிலைக்கு, வருவதற்கு அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய திறமைகளே காரணமாகும். அவர்கள் மரணிக்கும் போது அவர்களுடைய அறிவு ,ஆற்றல் திறமைகள் திறன்கள் யாவுமே சேர்த்து, வெள்ளைத் துணியில் வைத்து சுற்றப்படுகிறது. பின்பு மண்ணறைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கப்படுகிறது. உண்மையில் நாம் சமூகத்தோடு இணைந்து செயல்பட்டால்தான், சேவை செய்தால்தான் அவர்களும் பயன் பெறுவார்கள் நாம் மரணித்த பிறகு மண்ணில் புதைக்கப் பட்டாலும் உண்மை என்னவெனில் விதைக்கப்படுகின்றோம். என்னை கொண்டு இன்னொரு சமூகம் வாழ்கின்றது. அறிவு, அனுபவம், ஆற்றல் சார்ந்த பரிமாற்றங்கள் சமூகத்தில் குறைந்து போய் விட்டது. இவைகள் அருளாளனின் அருளாகும். அறிவுச்செல்வமாகும் எனவே அவனிடம் இருந்து கிடைத்த செல்வங்களை வைத்து மறுமையை சம்பாதித்துக் கொள்வோம்.
அல்லாஹ் காரூனுக்குக் கூறிய மூன்றாது அறிவுரை.
ولا تنس نصيبك من الدنيا
இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! (28:77)
எனக்கு இறைவன் கொடுத்துள்ள உலகப் பங்கினை தாராளமாக அனுபவிக்க முடியும். ஆனால், அதில் ஹராம் ஹலால் பேணப்பட வேண்டும்! இது அல்லாஹ் விரும்பியவர்களுக்கு வழங்கிய அருட்கொடையாகும். அவன் தந்த வளங்களை மறைக்கத் தேவையில்லை! இறைவனின் அருளை அடுத்தவர்களுக எடுத்துக் காட்டுவதில் எக் குற்றமும் கிடையாது!.
அவனது அருளை மக்களுக்கு தெரியப்படுத்துவதை கண்டு அவன் மகிழ்ச்சியடைகிறான். அதேபோன்று செல்வந்தர்கள் ஏழைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்! ஏழைகளுக்கு முன்னாள் தனது செல்வத்தை வைத்து பெருமை அடிக்கக் கூடாது!
அல்லாஹ் காரூனுக்குக் கூறிய நான்காவது அறிவுரை.
وأحسن كما أحسن الله إليك
அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! (28:77)
வசதி வாய்ப்பில் வாழ்கின்ற அன்பர்களே! உங்கள் வகுப்பில் உங்களுடன் சேர்ந்து கற்றவர்கள் இப்போது கூலித் தொழிலில் ஈடுபடும் போது, உங்களை முதலாளியாக அந்தஸ்தில் உயர்த்தி இருப்பது அல்லாஹ்வின் உபகாரமல்லவா? மற்ற நண்பர்களை விடவும் வீடு வாசல், வாகன வசதி, தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்த நிலையில் வாழ்வு கடக்கிறது. இது இறைவனின் உபகாரம் என உணர்ந்தோமோ..?
எம்மத்தியில் உண்ண உணவின்றி, வாழ வசிப்பிடமின்றி எத்தனையோ போர் மறைந்திருக்கின்றனர். அவர்களைத் தேடி தர்மம் செய்வது எமது கடமையாகும். இரகசியமாக தர்மம் செய்யுங்கள்! வலக்கரத்தால் கொடுப்பது இடக்கரத்தில் தெரியக்கூடாது! என்றால் அர்த்தம் அந்தளவு இரகசியம் பேணப்பட வேண்டும்.
உங்களது தர்மத்தில் மனத்தூய்மை பேணப்பட்டால், அதைக் கொண்டு சமூகத்தில் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் உருவாக்க காரணமாகிவிடும். இதற்கு சான்றாக பின்வரும் நபிமொழியை படித்துப்பாருங்கள்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அலைஹிவசல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒரு செல்வந்தர், கொடைவள்ளல் தங்களது தர்மத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் வழங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் முதல் நாள் இரவு வெளியேறி தான் முதலில் எதிர்கொண்ட ஒருவருக்கு வழங்கி விடுகிறார். அடுத்த நாள் ஊரார் மத்தியில், அவர் தர்மமாக கொடுத்தது, ஒரு திருடனுக்கு கிடைத்தாக பேசிக் கொண்டதை அறிந்த, செல்வந்தர் வேதனை கொண்டார்.
அடுத்த நாளும் அதே போன்றே இரவு நேரத்தில் வெளிப்பட்டு, தான் எதிர்கொண்ட, முதல் பெண்ணிடம் தனது தர்மத்தை கையளித்து விட்டு, வீடு திரும்பினார். மறுநாட் காலையில் அவர் கொடுத்த தர்மம் விபச்சாரம் செய்கின்ற பெண்ணுக்கு கையளிக்கப்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டதை, அறிந்த செல்வந்தர் சலிப்படைந்து, மூன்றாவது நாள் இரவும் வெளிப்பட்டு தனது தர்மத்தை முதலில் சந்திக்கின்ற ஒருவருக்கு வழங்குகிறார், வழமை போல் அடுத்த நாள் காலையில் தான் கொடுத்த தர்மம் ஒரு செல்வந்தருக்கு சென்று அடைந்துள்ளதாக பேசிக்கொண்டனர். இதனை அறிந்த, கொடைவள்ளல் பெரும் வேதனை அடைந்தார். இறுதியாக வேதனையில் வாடிய அப்பரோபகாரியான செல்வந்தருக்கு அவர் செய்த தர்மங்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டதாக, கூறப்பட்டது. அதாவது நீங்கள் தர்மம் செய்த மூன்று நபர்களும் தௌபா செய்து, நல்வழி பெற்று விட்டனர் என்று அவருக்குக் கூறப்பட்டது. (புஹாரி, முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட இந்த நபிமொழியில், மனத்தூய்மையுள்ள செல்வந்தரின் தான தர்மம் வீணாகி விடவில்லை! முதலில் திருடனின் கரத்தில் ஒப்படைக்கப்பட்ட தர்மத்தால் நான் இவ்வளவு திருட்டு செயலில் ஈடுபட்டும் கூட, இறைவன் என்னுடன் இறக்கமாக இருக்கின்றானா? என பாவத்தை விட்டு ஒதுங்கி சிறந்தவராக மாறி விடுகின்றார். இரண்டாவதாக, கொடுக்கப்பட்ட அத்தர்மம் தன் உடலை விற்று சம்பாதிக்கும் விபச்சாரிக்கு கிடைக்கப்பெற்றது. அவள் நான் இவ்வளவு பாவத்தில் காலம் கழித்தும் என் இறைவன் கருணையுள்ளவன் என எண்ணி தனது வாழ்வை மாற்றி கொள்கிறாள். அவ்வாறே, மூன்றாவது நபர் ஒரு செல்வந்தர் ஆனால், அவர் உலோபியாவார். அவர் எனக்கு பெரும் செல்வம் இருந்தும் நான் மக்களுக்கு கொடுக்காமல் தடுத்தும் கூட, இரகசியமாக என்னை அது வந்தடைந்தது, என எண்ணி இரவு பகலாக தர்மம் செய்ய முற்படுகிறார். எனவே அல்லாஹ் தந்ததில் இருந்து செலவழிப்போம்.
அல்லாஹ் காரூனுக்கு கூறும் ஐந்தாவது அறிவுரை.
وَلَا تَبْغِ الْـفَسَادَ فِى الْاَرْضِؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (28:77)
எமது சமூகத்திலும் பணம் படைத்தவர்கள் இறைவழியில் செலவு செய்யாமல் வீணாக விரயம் செய்வதை பார்க்கிறோம். தனக்குள்ள பண பலத்தை, வளத்தை வைத்து, பாவத்திற்கு துணைபோகின்றனர். நிச்சயமாக இறைவன் உற்றுநோக்கிக் கொண்ட வண்ணம் இருக்கின்றான். எமது செல்வம் குறித்து வினவுவான். ஏழை சமூகம் ஒரு பக்கத்தில், வாழ வழியின்றி காலம் கடக்கும் போது இன்னும் ஒரு பக்கத்தில் செலவு செய்யத் தெரியாத தனவந்தர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
பரோபகாரிகளே! உங்கள் பணத்தை செலவு செய்யும் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! எமது ஊர்களில் எத்தனை குமரிப் பெண்கள் முடங்கிக் கிடக்கின்றனர். பெற்றோர்கள், அவர்களை திருமணம் செய்துவைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, சில வசதி படைத்தவர்கள் தனது வீட்டுக் கல்யாணங்களுக்கு கோடிக்கணக்கணக்கில் இறைக்கின்றனர். அதன் பிறகு வீணான பல சந்திப்புகள், ஆடம்பரமான நிகழ்ச்சிகள் என்று பல விடயங்கள். இதுபோன்ற வீனர்களை பார்த்தே அல்குர்ஆன் பேசுகின்றது.
اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا
நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (17:27)
மேற்கூறிய திருவசனத்தை போல ஷைத்தானின் சகோதரர்களாக மாறி விடாதீர்கள் ஏழைகளின் கண்களிலிருந்து கொட்டும் கண்ணீரை துடைக்க முன்வாருங்கள்! வாய் திறந்து கேட்க முடியாத ஏழைகளைத், தேடிச்சென்று உபகாரம் செய்யுங்கள்! உதவி ஒத்தாசை செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டி போடுங்கள்! அல்லாஹ் எமது செல்வத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்! அதே போன்று செல்வத்திலிருந்து வாரி வழங்க நல் உள்ளங்களை தருவானாக!
சஹாபாக்களின் கரம் கொடுக்கும் கரங்களே வாங்கும் கரங்கள் அல்ல!
சஹாபா சமூகம் நபிகளாரின் பராமரிப்பில் வளர்ந்த சீலர்கள். அனைத்துத் துறைகளிலும் அவர்கள் எமக்கு முன்மாதிரி மிக்கவர்கள். அவர்கள் யாருக்கும் சுமையாக வாழவில்லை! அப் புனிதர்களின் கரங்கள் உயர்ந்த கரங்களாகவே இருந்தன. வாங்கும் கரங்களாக (தாழ்ந்த கரங்களாக) இருக்கவில்லை! நாங்கள் தேவைக்கு கேட்பதாக இருந்தால் இறைவனிடம் மாத்திரம் கேட்போம்; அவனுடைய அடியார்களிடத்தில் கேட்க மாட்டோம் என ஒன்றாக இணைந்து பைஅத் செய்தார்கள்.
நபித்தோழர்களில் அதிகமானோர் வணிகர்களாக இருந்தனர். ஆனால் அவர்களுடைய வணக்க வழிபாடுகளில் மார்க்கப் பணிகளில் எந்த விதத்திலும் குறைபாடுகள் செய்யவில்லை!
வரலாற்றில் முன்மாதிரிமிக்க வணிகராக போற்றப்படுபவர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களாவர். மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த நபித் தோழர்களில் இவரும் ஒருவராவார். ஏனைய முஹாஜிர் தோழர்களை போலவே தமது சொத்து செல்வங்களையெல்லாம் விட்டுவிட்டு, வெறும் கைகளுடன் அகதியாக மதினாவிற்கு வந்தடைந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களை மதீனாவில் அவர்களுக்கு உற்ற தோழராக சகோதரராக சஅத் (ரழி) அவர்கை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இணைத்து வைத்தார்கள். உள விரிவின் சொந்தக்காரர் சஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் முழு சொத்து செல்வத்தில் சரிபாதியைத் தனது புதிய நண்பருக்கு வாரி வழங்க முன்வந்தார். அதைக்கேட்ட சுய கௌரவக்காரர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் முற்றாக அதை மறுத்து, கடைத் தெருக்களை காட்டுமாறு வேண்டிக்கொண்டார். காலப்போக்கில் அவரின் எதிர்பார்ப்பை போன்று செல்வங்களை இறைவன் மீட்டுக் கொடுத்தான் உண்மையில் செல்வம் இறைவனின் அருளாகும அதை வைத்து அவர்களின் அன்பை பெற முயற்சிக்க வேண்டும்! சிலபோது செல்வம் அச்செல்வம் சோதனையாகவும், வேதனையாகவும் மாறிவிடலாம்.
எனவே அல்லாஹ் அல்குர்ஆனில் கூறிய அறிவுரைகளை பின்பற்றி நடக்க எனக்கும் உங்களுக்கும் இறைவன் அருன் புரிவானாக!