கொரொனாவும் வியாபாரிகளும் பாகம் 02

இது தான் வியாபாரம்

உண்மை…

வியாபாரி தனது சரக்குகளை விற்று ஆதாயம் பெற்று தனது வியாபாரத்தை இன்னுமின்னும் வளப்படுத்திக்கொள்ள விரும்புகின்றான். இதற்காக விற்பனையின் போது வாடிக்கையாளரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அருமையாய் உபசரித்து அழகாகப் பேசுகின்றான். இயன்ற மட்டும் தனது பொருட்களை அவருக்கு விற்று காசாக்கிக் கொள்வதில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றான். இத்தருணத்தில் வியாபாரி உண்மையாய் நடந்து கொள்வது அவசியத்திலும் அவசியமாகும். வியாபாரப் பொருள் பற்றி முற்றிலும் உண்மையான வர்ணனையை அவர் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். பொய் அதில் அறவே கலந்திடலாகாது. முழுக்க முழுக்க அல்லாஹ்வைப் பயந்த நிலையில் வியாபாரம் நடைபெற வேண்டும். உண்மைக்குப் புறம்பான எதுவும் வியாபாரத்தின் போது அனுமதிக்கப்படவில்லை.

அல்லாஹ்வை அஞ்சி நன்முறையில் உண்மையுடன் வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை சிலாகித்தும் மாற்றமாக நடப்பவர்களை எச்சரித்தும் நாயக வாக்கியங்கள் வந்துள்ளன. பின்வரும் ஹதீஸ் இவ்விடயத்தில் கவனத்திற்குரியதாகும்:

“நிச்சயமாக வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவர் அல்லாஹ்வைப் பயந்து நன்முறையில் உண்மையுடன் நடந்து கொண்டோரைத் தவிர.” (அறிவிப்பவர்: ரிபாஅஹ் இப்னு ராபிஃ (ரழியல்லாஹு அன்ஹு), நூல்: முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)

எனவே உண்மையைக் கைக்கொள்வது ஏனைய சந்தர்ப்பங்களில் போலவே விற்றலின் போதும் ஒரு முக்கிய பண்பாக விதந்துரைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை…

ஒரு முஸ்லிம் நம்பிக்கையின் பிரதிபிம்பமாக இருப்பான். ஏமாற்றல் அவனுக்கு வெறுப்பிலும் வெறுப்பாக இருக்கும். சொல், செயல் எல்லாவற்றிலும் நம்பிக்கை அவசியம் தேவையென இஸ்லாம் வற்புறுத்தி நிற்கின்றது. அல்லாஹு தஆலா தனது தூதர்களிடம் கட்டாயப்படுத்திய பண்புகளுள் ஒன்று நம்பிக்கை.

நம்பிக்கையாக நடப்பவனை எல்லோரும் நம்புவர், அவனுடன் நம்பிக்கையுடன் பழகுவர், உறவாடுவர். ஏமாற்றுபவனுடன் எவரும் உறவு வைத்துக்கொள்ள அஞ்சுவர்.

வியாபாரத்தில் நம்பிக்கை இன்றியமையாதது. அதன் அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை அவசியம். நம்பிக்கையான வர்த்தகரின் வர்த்தகம் பெயர், புகழுடன் நிலைத்து நிற்கும். சந்தையில் அதற்குள்ள நன்மதிப்பு வாடிக்கையாளர்களை அதனை நோக்கி இழுத்தழைத்துச் செல்லும்.

நம்பிக்கையான வியாபாரி பற்றி புகழ்ந்து பேசினார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்):

“உண்மையான நம்பிக்கையான வியாபாரி நபிமார்கள், உண்மையாளர்கள், ‘ஷஹீத்களுடன் இருப்பார்.” (அறிவிப்பவர்: அபூ சஈத் (ரழியல்லாஹு அன்ஹு), நூல்: ஸுனன் அல்-திர்மிதி)

ஏமாற்றி வியாபாரம் செய்வது முற்றிலும் தடுக்கப்பட்டது. ஒன்றிருக்க வேறொன்றைச் சொல்லி, ஒன்றைக் காட்டி மற்றொன்றைக் கொடுத்து வியாபாரம் பண்ணுவது ஏமாற்று வியாபாரமாகும்.

உணவுக் குவியலில் நனைந்த பகுதியை அடியிலும் உலர்ந்த பகுதியை மேலாகவும் வைத்து விற்றுக்கொண்டிருந்த மனிதரை தடுத்து வழிப்படுத்தி “எம்மை ஏமாற்றுபவன் எம்மைச் சேர்ந்தவனல்லன்” என்று செப்பினார்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு), நூல்: சஹீஹ் இப்னி ஹிப்பான்)

முஸ்லிம் சமூகம் நம்பிக்கைக்குரிய சமூகம். அதன் ஒவ்வோர் அங்கத்தவனும் நம்பிக்கையாளனாக இருப்பது கட்டாயம். ஏமாற்றுப் பேர்வழிகள் முஸ்லிம் சமூகத்தில் சேர்ந்திருக்க அருகதையற்றோர் என்பதே ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது மேற்படி கூற்றின் கருத்தாகும். வியாபாரத்தின் போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதனைக் கூறியிருப்பது இன்னும் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டும்.

இதனையெல்லாம் பார்க்கும் போது வியாபாரத்தில் நம்பிக்கை ஒரு முக்கிய பண்பாக காணப்படுகின்றது.

பதுக்கல்

இது வியாபாரம் அல்ல இறை சாபத்தைப் பெற்றுத் தரும் பதுக்கல் இது தவிர்க்கப்பட வேண்டும். மக்களுக்கு அத்தியவசியமாகத் தேவைப்படும் பொருள்களை தடுத்து வைப்பதும், பதுக்கிவைப்பதும் பாவமான குற்றச்செயல் என இஸ்லாம் கூறுகிறது.

பொதுவாக வியாபாரிகளிடம் ஒரு பழக்கம் உண்டு. அத்தியாவசியமான பொருள்களைப் பதுக்கி வைத்து, விலை ஏறுவதை எதிர்பார்த்து, விலை ஏறும் போது கொண்டு வந்து அதிக விலையில் விற்பது.

இந்த மனநிலை வந்து விட்டால் அந்த வியாபாரியிடம் இரக்க குணம் இல்லாமல் ஆகி, வன்னெஞ்சம் அதிகரித்து விடும் அபாயம் உண்டு என இஸ்லாம் எச்சரிக்கின்றது.

عن معمر بن عبد الله- رضي الله عنه- عن رسول الله صلّى الله عليه وسلّم قال: «لا يحتكر إلّا خاطىء» مسلم

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பதுக்கல் செய்பவன் பாவியாவான்” இன்னொரு அறிவிப்பில் “பாவியைத் தவிர வேறெவனும் பதுக்கமாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

عن عمر- رضي الله عنه- قال
الجالب مرزوق، والمحتكر محروم،

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தேவையான பொருட்களைப் பதுக்கி வைக்காமல் அவற்றை கடைவீதிக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், தேவையான பொருட்களைப் பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்: மிஷ்காத்)

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தேவையான பொருட்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கின்றான்! அல்லாஹ் பொருள்களின் விலையை மலிவாக்கி விட்டாலோ இவன் துக்கப்படுகின்றான். விலை ஏறிவிட்டாலோ ஆனந்தம் அடைகின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்: மிஷ்காத்)

முன் மாதிரி வியாபாரிகள்.

مظفر بن سهل قال: سمعت غيلان الخياط يقول: اشترى سري السقطي كرّ لوز بستين ديناراً وكتب في رونامجه ثلاثة دنانير ربحه، فصار اللوز بتسعين ديناراً، فأتاه الدلاّل فقال له: إنّ ذلك اللوز أريده، فقال: خذه، فقال: بكم؟ قال: بثلاثة وستين ديناراً، قال له الدلاّل: إنّ اللوز قد صار الكرّ بسبعين ديناراً، قال له السري: قد عقدت بيني وبين الله عقداً لا أحله لست أبيعه إلاّ بثلاث وستين ديناراً، قال له الدلاّل: وأنا قد عقدت بيني وبين الله عقداً لا أحله، أن لا أغشّ مسلماً، لست آخذ منك إلاّ بسبعين ديناراً، قال: فلا الدلاّل اشترى منه ولا سري باعه

ஸிர்ரீ ஸிக்தீ (ரஹ்) அவர்கள் மாபெரும் வணிகராகத் திகழ்ந்தார்கள். ஒரு சமயம் 60 தீனார் கொடுத்து ஒரு கூஜாவை விலைக்கு வாங்கி தங்களது கடையில் விற்பனைக்காக வைத்தார்கள். மேலும், ”அன்றைய நாட்குறிப்பில் 60 தீனாருக்கு விற்பனை செய்வதற்காக வாங்கிய கூஜாவிற்கு 10 தீனாருக்கு அரை தீனார் வீதம் மூன்று தீனார் இலாபமாக வைத்து 63 தீனாருக்கு அதை விற்க வேண்டும்” என்று எழுதி வைத்தார்கள்.

கொஞ்ச நாட்கள் கழித்து கூஜாவின் விலை ஏறியது. இந்த நிலையில், ஒரு கிராமவாசி கடைக்கு பொருள் வாங்க வந்தார். வந்தவரை கூஜாவின் அழகு ஈர்த்தது. ஸிர்ரீ (ரஹ்) அவர்களிடம் தனக்கு அந்த கூஜா வேண்டும். எவ்வளவு விலை? என்று கேட்டார். ஸிர்ரீ (ரஹ்) அவர்கள், கிராமவாசியிடம் 63 தீனார் அதன் விலை, அதில் 3 தீனார் எனக்கான லாபம் என்றார்கள்.

அதற்கு அந்த கிராமவாசி சிரித்தவராக, பிழைக்கத் தெரியாதவராக இருக்கின்றீர்களே! இதன் விலை மற்ற கடைகளில் எவ்வளவு தெரியுமா? 90 தீனார்.

இருந்து விட்டு போகட்டும்! நான் வாங்கும் போது 60 தீனார் தான், எனக்கான லாபம் 3 தீனார் தான் நான் இதை வாங்கும் போதே இன்ன விலைக்குத் தான் விற்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன். மற்ற கடைகளின் விலை விபரமோ, விலையேற்றமோ எனக்கு அவசியமில்லை.

அதற்கு, அந்த கிராமவாசி வெளியில் 70 தீனாருக்கு விற்பனையாகும் ஒரு பொருளை 63 தீனாருக்கு வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் சக முஸ்லிம் ஒருவரிடம் இப்படி குறைந்த விலைக்கு வாங்குவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. எனவே, 70 தீனாருக்கு தர முடியும் என்றால் அந்த கூஜாவை வாங்கிச் செல்கின்றேன் என்று உறுதியாகக் கூறினார்.

அதைக் கேட்ட ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் “63 தீனாரை விட கால் தீனார் கூட கூட்டி வாங்கமாட்டேன், வேண்டுமானால் 70 தீனார் கொடுத்து மற்ற கடைகளில் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்! என்றார்கள். அந்தக்கிராமவாசியும் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஸிர்ரீ (ரஹ்) அவர்களும் விட்டுக் கொடுக்கவில்லை. இறுதியில் கிராமவாசி வாங்கவும் இல்லை, ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் விற்கவும் இல்லை. (நூல்: இஹ்யா உலூமுத்தீன், கிதாபுல் பைஉ)

قال يونس بن عبيد: ويقال: إنه كانت عنده حلل على ضربين أثمان ضرب منها أربعمائة كل حلة، وأثمان الآخر مائتان، فذهب إلى الصلاة وخلف ابن أخيه ليبيع فجاءه أعرابي يطلب حلة بأربعمائة فعرض عليه من حلل المائتين فاستحسنها ورضيها فاشتراها منه ومشى بها هي على يده ينظر إليها خارجاً من السوق فاستقبله يونس بن عبيد خارجاً من المسجد فعرف حلته فقال بكم أخذت هذه الحلة؟ فقال: بأربعمائة، فقال: لا تسوي إنما قيمتها مائتان فقال: يا ذا الرجل إنّ هذه تساوي ببلدنا خمسمائة درهم، فقال له يونس: إنّ النصح في الدين خير من الدنيا كلها ثم أخذ بيده فرده إلى ابن أخيه فجعل يخاصمه ويقول: أما اتقيت الله؟ أما أستحيت أن تربح مثل الثمن وتترك النصح لعامة المسلمين؟ فقال: والله ما أخذه إلاّ عن تراضي، فقال: وإن رضي ألا رضيت له ما رضيت لنفسك، ثم ردّ على الأعرابي مائتي درهم،

யூனுஸ் இப்னு உபைத் (ரஹ்) அவர்கள் தங்க ஆபரண வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் கடையில் இருக்கும் போது தொழுகைக்கான நேரம் வந்தவுடன் தனது சகோதரர் மகனைக் கடையில் வைத்து விட்டு தொழுவதற்காக பள்ளிக்குச் சென்றார். தொழுது முடித்து திரும்பி வரும் வழியில் ஒரு கிராமவாசியைக் கண்டார். அவர் கையில் தங்க ஆபரணம் ஒன்று இருந்தது. அதைப் பார்த்த யூனுஸ் அது தமது கடையில் வாங்கப்பட்டது தான் என்பதை விளங்கிக் கொண்டார்.

அருகில் சென்று இதை என்ன விலை கொடுத்து வாங்கினீர்? என்று கேட்டார்கள். அதற்கவர் இது எனக்கு பிடித்துப் போனமையால் 400 திர்ஹம் கொடுத்து இதோ இந்த கடையில் தான் வாங்கினேன் என்றார். அவரை கையோடு அழைத்துச் சென்ற யூனுஸ் அவர்கள் இதன் விலை வெறும் 200 திர்ஹம் தான் ஆகவே உங்கள் 200 திர்ஹத்தைப் பெற்றுச் செல்லுங்கள் என்று பரிவுடன் கூறினார்.

அது கேட்ட கிராமவாசி, உலகம் தெரியாத ஆளாய் இருக்கின்றீர்களே? எங்கள் ஊரில் இதன் விலை 500 திர்ஹம், நான் முழு மன திருப்தியோடு தான் 400 திர்ஹம் கொடுத்தேன் என்று சாதாரணமாக பதில் கூறினார்.

இருந்து விட்டு போகட்டும்! உங்கள் ஊரில் எவ்வவு விலைக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, இந்தாருங்கள் உங்களின் அதிகப்படியான பணம் 200 திர்ஹம் என்று திருப்பிக் கொடுத்தார்கள் யூனுஸ் (ரஹ்) அவர்கள்.

அவர் அதைப் பெற்றுக் கொண்டு இன்முகத்தோடு திரும்பிச்சென்றார். அவரின் உடல் கடைவீதியை விட்டு மறைந்ததும் தனது சகோதரன் மகனை கண்டித்து விட்டு, அல்லாஹ்விற்கு பயப்படவேண்டாமா? இனிமேல் இப்படி நடந்து கொள்ளாதே! உனக்கு எதை நீ விரும்புவாயோ, அதையே பிறரின் விஷயத்திலும் விரும்பு என்று கூறினார்கள். (நூல்: இஹ்யா)

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைச் சந்தித்த தாபியீ ஒருவர் “உங்களுக்கு எப்படி இவ்வளவு செல்வம் வந்தது? என்று கேட்டார்.

அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் “எனக்கு மூன்று காரணங்களால் செல்வம் கிடைத்தது. 1. எப்போதுமே நான் குறைவான லாபத்தையே பொருளுக்கு வைப்பேன். 2. மக்களுக்கு தேவையான சாமான்களை பதுக்கி வைக்க மாட்டேன். 3. தூய்மையான பொருளையே விற்பேன்” என்று பதில் கூறினார்களாம்.

وحدثونا عن بعض السلف أنه كان بواسط فجهز سفينة حنطة إلى البصرة وكتب إلى وكيله: مع هذا الطعام في يوم تدخل البصرة فلا تؤخره إلى غد، قال: فوافق السعر فيه سعة، قال له التجار: إن أخرته جمعة ربحت فيه أضعافاً فأخره جمعة فربح فيه أمثاله، وكتب إلى صاحبه بذلك فكتب إليه صاحب الطعام: يا هذا قد كنا قنعنا أن نربح الثلث مع سلامة ديننا وإنك قد خالفت أمرنا وقد جنيت علينا جناية، فإذا أتاك كتابي فخذ المال كله فتصدّق به على فقراء أهل البصرة وليتني أنجو من الاحتكار كفافاً لا عليّ ولا لي

ஒரு சமயம் பஸ்ராவுக்கு விற்பனைக்காக மூட்டை மூட்டையாகக் கோதுமை கொண்டு செல்லப்பட்டது. அதன் உரிமையாளர் பஸ்ராவில் உள்ள தங்களது ஊழியர்களுக்கு சரக்குகளோடு ஒரு கடிதமும் எழுதி இருந்தார். அதில்..”சரக்கு கைக்கு வந்ததும் விற்பனையை துரிதப் படுத்தி விடுங்கள்! அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் தாமதப்படுத்த வேண்டாம்” என்று எழுதி இருந்தார்.

ஒரு நாள் வெள்ளிக்கிழமையன்று பஸ்ராவிற்கு சரக்கு வந்து சேர்ந்தது. ஊழியர்கள் கடிதத்தைப் படித்து விற்பதற்கு தயாரானார். அருகில் இருந்த ஒரு வியாபாரி இன்னும் ஒரு வாரம் கழித்து விற்றால் பன்மடங்கு லாபம் ஈட்டலாம். இன்னும் ஓரிரு நாட்களில் கோதுமை விலையேற்றம் பெறும் என்றார்.

அது போன்றே கோதுமையின் விலை கிடுகிடுவெனெ எகிறியது. இவர்களுக்கும் பன்மடங்கு லாபம் கிடைத்தது. நடந்த சம்பவத்தை ஊழியர்கள் கடிதத்தில் மகிழ்ச்சியோடு எழுதி அனுப்பினார்கள். அதை பார்த்து விட்டு, உரிமையாளர் பதில் கடிதம் எழுதினார்.

அதில்… “உங்கள் கடிதம் கிடைத்தது. உங்களின் தவறான நடவடிக்கைகளுக்காக முதலில் நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், நீர் விற்றது கோதுமையை மாத்திரம் அல்ல, மார்க்கத்தையும், மார்க்கத்தின் பொன்னான சட்டங்களையும் தான். நீர் குற்றம் செய்ததோடு நின்று விடாமல் என்னையும் குற்றவாளியாக ஆக்கிவிட்டீர். ஏனெனில், சரக்கு என்னுடையது தானே? நீங்கள் மக்களுக்குத் தேவையான ஒன்றை பதுக்கி விற்று இலாபம் ஈட்டியிருக்கின்றீர்கள். ஆகவே, இந்தக் கடிதம் கிடைத்ததும் இலாபத்தொகை அனைத்தையும் பஸராவின் ஏழைகளுக்கு தர்மம் செய்து விடுங்கள்! இந்த தர்மத்தின் மூலமாவது பதுக்கல் செய்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்கு அல்லாஹ் என்னை தண்டிக்காமல் இருக்க வேண்டும் என ஆதரவு வைக்கின்றேன்” என்று எழுதப்பட்டிருந்தது. (நூல்: இஹ்யா உலூமுத்தீன், கிதாபுல் பைஉ)

ஆகவே, இஸ்லாம் வழிகாட்டும் நெறிகளைப் பேணி பொருளாதாரத்தை ஈட்டுவோம்.

குறுக்கிட்டு வியாபாரம்

இவைகளும் வியாபாரம் அல்ல. உங்களில் ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம்; தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டுப் பெண் பேசவேண்டாம். அந்தச் சகோதரர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர! இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் (முஸ்லிம்) சகோதரர் விலை பேசும்போது, அதே பொருளைத் தாமும் விலை பேச வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் விலைபேசும் அதே பொருளைத் தாமும் விலை பேசுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (சரக்குகளை ஏற்றிக்கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து சரக்குகளை) வாங்கலாகாது. ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிட வேண்டாம். கிராமத்திலிருந்து சரக்குகளைக் கொண்டுவருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம். ஒட்டகங்கள் மற்றும் ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியை கனக்கச் செய்ய வேண்டாம். அவ்வாறு ஒருவர் அவற்றை வாங்கிப் பால் கறந்து திருப்தியடைந்தால் தம்மிடமே வைத்துக் கொள்ளலாம். திருப்தியடையாவிட்டால் அவற்றை ஒரு “ஸாஉ” பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்து விடலாம். இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமை உண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வாங்கும் நோக்கமின்றி (ஒரு பொருளை அதிக விலைக்குக் கேட்டு) விலையை ஏற்றிவிடுவதற்குத் தடை விதித்தார்கள். வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரியை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து அப்பொருட்களை) வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதற்குத் தடை விதித்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளைச் சந்தித்து சரக்குகள் வாங்கப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டு வரும் வியாபாரிகளைச் சந்தித்து, சரக்குகளை வாங்காதீர்கள். அவ்வாறு எவரேனும் அவர்களைச் சந்தித்து, சரக்குகளை விலைக்கு வாங்கிய பின் அந்தச் சரக்குகளின் உரிமையாளர் சந்தைக்கு வந்தால், அவருக்கு (அந்த பேரத்திலிருந்து விலகிக்கொள்ள) உரிமை உண்டு.

எனவே இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட அனைத்து வியாபார முறைகளையும் தவிர்த்து இக்கால பகுதியில் இஸ்லாம் காட்டிய வழி முறையில் தமது வியாபார நடவடிக்களை மேற்கொண்டு ஈறுலகிலும் வெற்றி பெற வல்ல இறைவன் எம் அனைவருக்கும் தவ்பீக் செய்வானாக.ஆமின்.

NAFEES NALEER (IRFANI) BA (R) SEUSL,
Diploma in counseling (R) NISD,
Editor of veyooham media center.


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

One Reply to “கொரொனாவும் வியாபாரிகளும் பாகம் 02”

 1. One thing I would like to say is thawt often car insurance cancellation iss a horrible experience so if you’re doing tthe
  proper things bewing a driver you won’t geet one. Some people do get tthe notice that they are officially dropped by their insurance company
  and several have to fight tto get more insurance from a cancellation. Low-priced auto insurance rates are usually ard to get after having a
  cancellation. Understanding tthe main reasons for
  auto insurance canceling can help people preventt getting rid off in onne of the most significant privileges
  out there. Thanks for the ideas shared by means of your blog.

Leave a Reply

Your email address will not be published.