இச்சை என்பதும் தெய்வமாகலாம்

  • 10

கொரோனா வைரஸ் ஒரு கொடிய தொற்று நோய். அது ஒரு சோதனையா? அல்லது வேதனையா? அல்லது அது ஒரு தண்டனையா? அல்லது அது ஓர் அருளாக வந்ததுவா? உண்மையில் கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைக்கும் ஓர் இறை அத்தாட்சியாகும். அதில் படிப்பினை உள்ளது. நாம் படிப்பினை பெற்றோமா என்பதே கேள்வி.

ஈமான் பற்றிய எமது புரிதல் சரிதானா? தீன் பற்றிய எமது அறிவு சரிதானா? தலைமை பற்றிய எமது நிலைப்பாடு சரிதானா? கொரோனா எமது சிந்தனைக் கிளர்ச்சியை தூண்டுகிறது. நாம் சிந்திக்கின்றோமா?

தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது பள்ளிவாசலில் தொழுகை நடத்த வேண்டாம் என அறிஞர்கள் வழிகாட்டியது “இஸ்லாமிய மார்க்கம்” ஆகும். அப்போது அதுதான் தீன். மக்கள் குழம்பிப் போயுள்ள தருணங்களில் தகுதிவாய்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் எடுக்கும் தீர்மானம் இறைவழிகாட்டலாகவே பார்க்கப்படும்.

ஆனால் மக்களில் சிலர் பின்பற்றியது மனோ இச்சையை மட்டும்தான். ஜும்மாவை விட்டு விட்டு ளுஹர் தொழுமாறு உலமாக்கள் வழிகாட்டினர். உண்மையில் அது தான் மார்க்கம். ஆனால் மக்களில் சிலர் மார்க்கத்தை விட்டு விட்டு மனட்சாட்சியை வணங்கினர்.

கொரோனா ஓர் ரப்பானிய அத்தாட்சி. ஒரு நூற்றாண்டின் முடிவில் பல பாடங்களை சொல்லித் தருவதற்காக வந்துள்ளது. மார்க்கம், ஈமான் பற்றிய எமது புரிதலை மாற்ற வேண்டும் என அது கற்றுத் தருகிறது. நாம் படிப்பினை பெற்றோமா?

தனது மனோ இச்சையை கடவுளாக கொண்டவனை நீர் அவதானிக்க வில்லையா? அல்லாஹ் அவனை அறிவோடு வழிகேட்டில் விட்டுவிட்டான். அவனுடைய செவிப்புலன் மீதும் உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டான். அவனது பார்வையில் ஒரு திரையும் விழுந்து விட்டது. இனி அவனுக்கு எப்படி நேர் வழி பெற முடியும்? நீங்கள் இது பற்றி உணர்வு பூர்வமாக சிந்திக்க மாட்டீர்களா சூரா ஜாஸியாவின் 23ம் வசனம்.

மனிதன் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு வாழும் போது அவனது அறிவு பயன் தராது. அதனால் தான் அவன் அறிவோடு வழிகெட்டான் என அல்-குர்ஆன் கூறுகிறது. கேட்டல், பார்த்தல் என்பது மனிதன் அறிவு பெறும் முக்கிய புலன்கள். அவற்றுக்கும் திரை விழுகிறது. ஆராய்ந்து பார்க்கும் உள்ளம் முத்திரையிடப்படுகிறது. ஏன்? அறிவு பெறும் ஊடகங்களை அல்லாஹ் ஏன் மூடுகின்றான்? காரணம் மனிதன் கட்புலனாகாத அவனது ஆசகைகளுக்கு முதலிடம் கொடுக்கின்றான். மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு படைத்தவனின் வழிகாட்டலை மறுக்கின்றான். இச்சையை தீனாக எடுக்கின்றான். ஆம் அவன் அறிவிருந்தும் ஒரு குருடன். படித்திருந்தும் ஒரு முட்டாள். தெரிந்தே கெட்டவன் படிப்பினை பெறாமைக்கு காரணம் இச்சையை வணங்கியதே.

வீட்டில் தொழுமாறு மார்க்கம் பணிக்கிறது. பள்ளியில் தொழுதால் தான் ஒரு இது இருக்கும் என்று சொல்லிக் கொண்டு மார்க்க சட்டத்தை மீறுவதே இச்சை. இச்சையை கடவுளாக எடுத்துக்க கொண்டவனை அவதானித்தீரா? அவன் தான் வேண்டாம் என்று சொல்லி பள்ளிக்கு பூட்டு போட்டாலும் மதிலேறி தொழுகைக்காக வருவான். காரணம் அவனது மனோ இச்சையே இங்கு மார்க்கமாகிறது. மார்க்கம் இரண்டாம் தரமாகிறது. அப்படி என்றால் அவன் படித்த முட்டாள் என குர்ஆன் அவனை வர்ணிக்கின்றது. மனிதன் இன்னும் படிப்பினை பெறும் நேரம் வரவில்லையா?

ஒரு சிலையை தொப்பியணிந்து குணிந்து பணிந்து கும்பிட்டு வந்தால் சமூகம் அவனைப் பார்த்து என்ன சொல்லும்? சந்தேக மின்றி அவனை ஒரு இணைவைப்பாளன் என்றே கூறும். காரணம் சிலை கண்ணுக்கு தெரிபடுகிறது. குற்றம் தெளிவாக புரிகிறது. அப்போது அறிஞர்களின் பத்வாவை சமூம் எதிர்பார்ப்பதில்லை. அடுத்த நொடி கும்பிட்டவன் பிறர் பார்க்க புகைப்படமாக உலா வருவான். பத்வாவுக்கு மேல் பத்வா வலைதளங்களில் சுடச்சுட சுட்டுத் தள்ளப்படும்.

ஆனால் இச்சைக்கு வணங்கும் ஆசாமிகள் குறித்து யாரும் பேசுவதில்லை. காரணம் இச்சைக்கு வடிவமில்லை. அது கண்ணுக்கு தெரிவதுமில்லை. அது சிந்தனையாக, மத்ஹபாக, தனிநபர் வணக்கமாக, கொள்கைகளாக, காதலாக இப்படி பல பயித்தியங்களாக காணப்படும். ஆனால் அதனை மனிதன் குனிந்து பணிந்து சிரம் தாழ்த்தி தொழுவான். அதற்காக உயிரையும் விடத் தாயாராக இருப்பான். அவனுடைய அந்த வணக்கம் இச்கைக்கு என்பது அவனுக்கும் புரிவதில்லை. பக்கத்தில் உள்ளவர்களுக்கும் புரிவதில்லை. எனவே தான் அல்லாஹ் அதனை கோடிட்டு காட்டி எச்சரிக்கையாக இருக்குமாறு கூறுகிறான்.

சிலர் நான் எனது மட்சாட்சிக்கு கட்டுப்படுகிறேன் என்பார்கள். மர்க்கம் புறக்கணிக்கப்பட்டு மனட்சாட்சி முதன்மைப்படுத்தப்படும் போது அவன் மனட்சாட்சியை கடவுளாக எடுக்கின்றான். கட்புலனாகாத அந்த கடவுளை வணங்குவதையே அல்லாஹ் இங்கு கடுமையாக சாடுகின்றான். இதனால் அவனுடைய அறிவைத் தேடும் சகல வழிகளும் மூடப்படும் பரிதாப நிலை உருவாகிறது. பாவம் அவர்கள் அறிவோடு கெட்டுப் போகும் புத்திஜீவிகள் என சூரா ஜாஸியாவின் 23ம் வசனம் உணர்த்துகின்றது.

சொத்தின் மீது அளவு கடந்த ஆசை வைப்பதும் அது தான் எல்லாம் என்ற நினைப்பும் ஷிர்க் என சூரா கஹ்பின் ‘இரண்டு தோட்டத்திற்கு சொந்தக்காரன்’ என்ற கதை கற்றுத் தருகிறது.

சிலர் தனது அறிவின் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்து செயல்படுவர். அவன் தனது அறிவுக்கு அடிமையாகும் போது அதனை அவன் வணங்கும் ஒரு கடவுளாகவே எடுத்துக் கொள்கின்றான். இந்தப் புரிதலையே சூரா ஜாஸியாவின் 23ம் வசனம் கற்றுத் தருகிறது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனின் மீது அளவு கடந்த பாசம் கொண்டபோது அல்லாஹ் அவர்களை சோதித்தான். தவமாய் தவம் கிடந்து இல்லையே ஒரு குழந்தை என ஏக்கத்துடன் வாழ்ந்த இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஒரு குழந்தை கிடைத்தது. அதன் மீது அன்பு வைப்பது இயல்பு. அந்த அன்பு இறைவன் மீதுள்ள அன்பை விட மிஞ்ச முடியாது. எனவே அல்லாஹ் அவரை சோதித்தான். பெற்ற குழந்தையை அறுக்குமாறு தகப்பனுக்கே கட்டளையிடப்படுகிறது. அதில் அவர் வெற்றி பெற்றுவிட்டார்கள். அவர் ஒரு முஷ்ரிக் அல்ல என அல்லாஹ் சான்று பகர்ந்தான். அன்பு அளவுக்கு மீறும் போது வணங்கப்படும் கடவுளாகலாம். குழந்தை மீதான பாசம் அல்லாஹ் மீதான நேசத்தை ஒரு போதும் மிகைத்து விட முடியாது என்பதை அல்லாஹ் தனது நண்பரான இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான்.

காதல் எல்லை மீறும் போது அதுவும் இதயத்தில் வாழும் ஒரு சிலையாகலாம். கோத்திர வெறி வணங்கப்படும் சிலையாகலாம். அபூஜஹ்ல் இறைதூதரை எதிர்த்ததற்கு பிரதான காரணம் தனது கோத்திரத்தின் மீது இருந்த தீவிரமான வெறியாகும். அதுவே அவனது கடவுளாக இருந்தது. எனவே இறை தூதரை தலைவராக ஏற்க மறுத்து விட்டான். அது அவன் தெரிந்தே செய்த ஒரு குற்றம். எனவே அவனுக்கு போதனைகளை உள்வாங்கும் அருள் கிட்டவில்லை.

ஐசிஸ் தீவிரவாதம் ஒரு சிந்தனைச் சிலையே. எனவே அதனை பின்பற்றியோர் கண் இருந்தும் குருடர்களாகினர். இனத்தின் மீது தீவிர பயித்தியம் கொண்டோர் இனவெறியை கடவுளகாக எடுக்கின்றனர். ஒரு மத்ஹபின் மீதுள்ள பற்று அதன் எல்லையை தாண்டி பித்து என்ற நிலைக்கு வந்தால் அது அவன் வணங்கும் மனோ இச்சையே. ஒரு அமைப்பின் ஒழுங்கு விதிகள் தெய்வீக அந்தஸ்துக்கு வந்து, எது வந்தாலும் இதில் மாற்றம் கொண்டுவர முடியாது என்ற பயித்தியம் பிடித்தால் அது ஒரு வணங்கப்படும் இச்சையாகும். இச்சைக்கு அடிமைப்படல் என்பது இச்சையை கடவுளாக கொள்வதே என மேலே கூறிய வசனம் தெளிவுபடுத்துகிறது. ஒரு சிந்தனையை அதுதான் வாழ்கைப்பாதை என தீவிர பற்று கொள்ளும் போது அதுவும் ஒரு கடவுள் தான்.

ஒன்றின் மீது மனிதனுக்கு விருப்பம் இருக்கலாம். ஆசை பிறக்கலாம். அதன் மீது பற்று வைக்கலாம். அது சிந்தனையாக அல்லது கொள்கையாக இருக்கலாம். ஆனால் மார்க்க வரம்புகளை மீறிய நிலையில் அந்த பற்று வெறியாக மாறி அதில் பித்துப் பிடித்து அதற்காவே அவன் தனது உயிரையும் கொடுக்க தயார் என்று கூறும் நிலை வரும் போது அவன் அந்த கட்புலனாகாத கொள்கையை, சிந்தனையை, வீர வழிபாட்டை கடவுளாக கொண்டவனே.

எனவே இத்தகைய கட்புலனாகத இணைவைத்தல் நடக்காமல் ஈமானை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அல்குர்ஆன் வழிகாட்டுகிறது. சூரா ஜாஸியாவின் 23ம் வசனம் படர்க்கையில் பேசி வந்து, வசனத்தை முடிக்கும் போது முன்னிலையில் ‘நீங்கள் உணர்வு கொள்வதில்லையா’ என்ற கேள்வியை எழுப்புகிறது. இது நாம் கவனமாக சிந்தித்து இந்த அபாயத்தில் இருந்து தற்காப்பு பெற வேண்டும் என்பதற்கே. காரணம் மனோ இச்சையும் தெய்வமாகலாம். அதன் பாதிப்பு சொல்வதை கேட்க மாட்டார்கள்.

இறைவா நாம் அறிந்தோ, அறியாமலோ உனக்கு இணை வைக்கும் பாவத்தை விட்டும் பாதுகாவல் தேடுகிறோம்.

முஹம்மத் பகீஹுத்தீன்





yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

கொரோனா வைரஸ் ஒரு கொடிய தொற்று நோய். அது ஒரு சோதனையா? அல்லது வேதனையா? அல்லது அது ஒரு தண்டனையா? அல்லது அது ஓர் அருளாக வந்ததுவா? உண்மையில் கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைக்கும்…

கொரோனா வைரஸ் ஒரு கொடிய தொற்று நோய். அது ஒரு சோதனையா? அல்லது வேதனையா? அல்லது அது ஒரு தண்டனையா? அல்லது அது ஓர் அருளாக வந்ததுவா? உண்மையில் கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *