மனிதனிடம் நற்பண்பாடுகள் கட்டாயம் காணப்படவேண்டும். ஒருவனிடத்தில் நற்பண்பாடுகள் இல்லையேல் அவன் ஒரு முழுமையான மனிதனே ஆகமாட்டான்.

அறிஞர் மிஸ்கவைஹி பண்பாடு என்பதை பின்வருமாறு கூறுகின்றார்.

“பண்பாட்டு என்பது உள்ளத்தின் ஒரு நிலை. சிந்தனையோ, உந்துதலோ இன்றி செயற்பாடுகளை நோக்கி அந்தநிலை உள்ளத்தை வழி நடத்தும்.”

அவர் இந்நிலையை இரண்டாக வகுக்கின்றார்.

  1. மனித மன நிலையில் இருந்து ஊற்றெடுக்கின்ற இயல்பான நிலை.
  2. பழக்க வழக்கங்களாலும் பயிற்சிகளாலும் ஊற்றெடுக்கின்ற இயல்பான நிலை.

வெறுமனே மனித நடத்தைகள் பண்பாடுகள் என்ற வட்டத்திற்குள் உள்ளடங்காது. மாறாக உள்ளத்தில் உறுதியாக நிலைப்பெற்று அதன் விளைவாக இயல்பாகவும் எந்தவித சிரமங்கள் இன்றியும் உருவெடுக்கின்ற நடத்தைகள் தான் பண்பாடுகள்.

நபியவர்கள் தான் அனுப்பப்பட்ட அடிப்படை நோக்கத்தை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

إنما بعثت لأتمم مكارم الأخلاق

(நிச்சயமாக நான் நற்பண்பாடுகளை பூரணப்படுத்துவதற்காகவே அனுப்பப்பட்டுள்ளேன்)

ஈமான் கொண்ட ஒவ்வொருவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ள வணங்க வழிபாடுகள் அனைத்தும் பண்பாடுகளை சீரமைப்பதையே நோக்கமாக கொண்டிருப்பதை அல்குர்ஆனும் ஸுன்னாவும் வலியுறுத்துகின்றன.

ஆகவே நாங்கள் கண்ணியம் பொருந்திய ரமழான் மாதத்தை இன்ஷா அல்லாஹ் நாளை அடைய இருக்கின்றோம். இவ்வருள் நிறைந்த மாதத்தை எவ்வாறு கையாளப்போகின்றோம்?

நோன்பின் நோக்கத்தை பற்றி அல்குர்ஆன் பின்வறுமாறு குறிப்பிடுகின்றது.

ஈமான் கொண்ட விசுவாசிகளே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள் மீதும் கடமையாக்கப் பட்டிருக்கின்றது

வெறுமனே பசித்தும் தாகித்திருந்தும்
நோன்பை நோற்பதால் அதன் பூரண நன்மையை அடையலாம் என்பது அறிவுடைமையான ஒன்றல்ல.
ஏனைய நாட்களைப் போன்று இவ் அருள் மிகுந்த மாதத்தையும் வீணான விளையாட்டுக்களிலும் கேளிக்கைகளிலும் கழிக்காமல் நல்லமல்களை அதிகப்படுத்துவதினூடாகவும் நற்பண்புகளைக் கடைபிடிப்பதின் மூலமும் அருள் நிறைந்த மாதத்தை அலங்கரிக்க முயற்சிக்க வேண்டும்.

இதனை நபியவர்கள் பின்வருமாறு கூறியிருக்கின்றார்கள்,

“யார் பொய் பேசுவதையும் அதன் படி நடப்பதையும் விட்டு விடவில்லையோ அவர் உணவையும் குடிபாணத்தையும் தவிர்ந்திருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை” (بخاري)

ஆகவே நாம் இந்த ரமழான் மாதத்தை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்வோம். அல்குர்ஆன் மனித வரலாற்றில் ஏற்படுத்திய புரட்சியை பண்பாட்டுப் புரட்சி என்று கூறுவதில் எந்தப்பிழைகளும் இல்லை. ஆகவே அல்குர்ஆன் அருளப்பட்ட இம்மாதத்தில் அதிகம் அதிகமாக அல்குர்ஆன் ஓதவும், அதனை விளங்கவும் முயற்சிப்பதோடு அதன்படி நடக்கவும் எத்தனிக்க வேண்டும்.

ஒரு மனிதர் ஆயிஷா (ரழி) அவர்களிடம்வந்து நபியவர்களின் பண்பாடுகளை பற்றி வினவிய போது ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறினார். அவரது பண்பாடுகள் அல்குர்ஆன் ஆகவே காணப்பட்டது.

குர்ஆனை ஓதுவதைப் போன்றே பர்ளான, ஸுன்னத்தான தொழுகைகளையும் பேணுதலாக தொழுவோம். நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் பள்ளி வாசல்களுக்கு சென்று தொழுவதை முற்று முழுதாக தவிர்க்க வேண்டும்.

எனவே வீடுகளில் உரிய நேரத்தில் முடியுமான அளவு பர்ளான தொழுகைகளையும் தராவிஹ் போன்ற ஸுன்னத்தான தொழுகைகளையும் ஜமாத்தாக நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். வீடுகளையே மஸ்ஜிதாக மாற்றுவோம்.

தொழுகையை நிலைநாட்டுவதன் பின்னணி நோக்கத்தை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது,

“நிச்சயமாக தொழுகை மானக்கேடான, பாவமான (வெறுக்கத்தக்க) விடயங்களிலிருந்து தடுக்கின்றது.”

அதே போன்று வசதிவாய்ப்புக்கள் உள்ளோர் அதிகம் ஸதகா, ஸகாத்களை செய்ய வேண்டும். இவ் அசாதாரண சூழ்நிலையினால் பலர் தமது அத்தியாவசியத் தேவகளை நிறைவேற்றுவதில் கூட அதிக சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். தினக்கூலியாட்களின் நிலமை எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

ஸகாத் என்பது செல்வந்தர்களிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்படுகின்ற வரி அல்ல மாறாக அன்பையும் பாசத்தையும் விதைத்து சமூகத்தில் பல்வேறு தரப்பினருக்கு இடையில் புரிந்துணர்வையும் ஒருங்கினைப்பையும் வலுப்படுத்துவதே ஸகாத்தின் நோக்கமாகும்.

எனவே அதிக அதிகமாக அல்குர்ஆனை ஓதுவோம். அதிகம் தொழுகையுடனான தொடர்பில் இருப்போம். ஏழைகளுக்கு அதிகம் உதவுவோம். இந்த ஆபத்தான நிலமை எம்மை விட்டுப்பிரிய அதிகம் துஆ, இஸ்திஹ்பாரில் ஈடுபடுவோம்.

இவ்வருட ரமழானை அமல்களால் அலங்கரித்து அதன் பூரண பயனையடைய வல்ல நாயன் எமக்கு அருள் புரிவானாக.

Sajith Majeed

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help