ரமழானும் நாமும்

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறும்போது,

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:185)

அல்லாஹ்வும், தூதரும் நோன்பாளிக்கு வழங்கி உள்ள சலுகைக்கான ஆதாரங்களை பார்ப்போம். எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்) (அல்குர்ஆன் 2:184)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை கலாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கலாச் செய்யுமாறு கட்டளை இடமாட்டார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறினார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத்)

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க கூடியவர்களாக இருந்தார்கள் அவரது மரணத்திற்கு பின் அவரது மனைவிகள் அந்நாட்களில் இஃதிகாஃப் இருப்பதை தொடர்ந்து நிறைவேற்றினர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) (நூல் : அபூதாவுத், முஸ்லிம்)

நோன்பின் சிறப்புக்கள்

நோன்பாளிகளுக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று: நோன்பு திறக்கும் பொழுது அடையும் மகிழ்ச்சி, இரண்டாவது: தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி!.

முஸ்லிமில் உள்ள மற்றோர் அறிவிப்பில் – மனிதனின் ஒவ்வொரு கடைபிடிப்பிற்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குவரை கூலி வழங்கப்படுகிறது. இறைவன் கூறுகின்றான் : நோன்பைத் தவிர! ஏனெனில் அது எனக்குரியது. நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்! காரணம் ஆசையையும் உணவையும் அவன் எனக்காக விட்டு விடுகின்றான். இந்த மகத்தான நபிமொழி நோன்பின் சிறப்புக்களைப் பல்வேறு வகையில் எடுத்துரைக்கிறது.

நோன்பில் அதன் நன்மைகளை இவ்வளவு தான் என ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்த முடியாது. மாறாக நோன்பு நோற்றவருக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படுகின்றது! மேலும், இறைவன் கூறுகின்றான்: மனிதனின் எல்லா நடைமறைகளும் அவனுக்குரியனவாகவே உள்ளன. ஆனால் நோன்பைத் தவிர! நிச்சயமாக! அது எனக்குரியது. உங்களில் யாரும் நோன்பு வேளையில் பாலியல் தொடர்பான பேச்சுக்கள் பேச வேண்டாம். கூ‌ச்சலிட்டுப் பேச வேண்டாம். யாராவது அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால், நான் நோன்பு நோற்றிருக்கின்றேன் என்று கூறி விடட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயில் இருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட அதிக வாசனை கொண்டதாகும்.

மனிதனின் ஒவ்வொரு கடைபிடிப்பிற்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குவரை கூலி வழங்கப்படுகிறது. இறைவன் கூறுகின்றான் : நோன்பைத் தவிர! ஏனெனில் அது எனக்குரியது. நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்! காரணம் ஆசையையும் உணவையும் அவன் எனக்காக விட்டு விடுகின்றான். இந்த மகத்தான நபிமொழி நோன்பின் சிறப்புக்களைப் பல்வேறு வகையில் எடுத்துரைக்கிறது.

அல்லாஹ் ஒவ்வொரு நாளும் சுவனத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றான். மேலும், கூறுகின்றான்: (சுவனமே) என் நல்லடியார்கள் கஷ்டத்தையும் சிரமத்தையும், பொருட்படுத்தாமல் உன் பக்கம் வருவதற்கு மிகவும் நெருங்கி விட்டார்கள். ஒவ்வொரு நாளும் அல்லாஹ் தனது சுவனத்தை அலங்கரிப்பதன் நோக்கம், அவனுடைய நல்லடியார்களை உற்சாகப்படத்துவதும் சுவனம் புகவதில் அவர்களுக்கு ஆர்வமூட்டுவதுமாகும்.

மலக்குகள் நோன்பாளிகளுக்காக – நோன்பு திறக்கும் வரை பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருக்கின்றார்கள். மலக்குகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யாத, இணை வைக்காதவர்களாக இருக்கின்றார்கள். இவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான். அவர்கள் பிரார்த்தனை செய்தவதன் நோக்கம் அல்லாஹ் அவர்களுக்கு அனுமதி வழங்கியிருப்பதும், அதன் மூலம் நோன்பாளிகளின் அந்தஸ்த்தைப் பிரகடனப்படுத்துவதும், அவர்களின் புகழை உயர்த்துவதும் அவர்கள் நோற்ற நோன்பின் சிறப்பை விளக்குவதுமாகும்.

நோன்பாளியின் வாயிலிருந்து எழும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையை விடச் சிறந்ததாகும். நோன்பின் பொழுது சிறுகுடல் இரப்பை உணவின்றிக் காலியாகக் கிடக்கும் பொழுது, வாயில் எழும் இயல்பான வாடை, மனிதர்களிடத்தில் மிகவும் வெறுப்புக்குரிய ஒன்று. ஆனால் இறைவனிடத்திலோ இது கஸ்தூரியின் வாசனையை விடச் சிறந்ததாகும்.

நோன்பை முறிக்கும் விஷயங்கள்:

உடலுறவில் ஈடுபடுதல், சாப்பிடுவது, குடிப்பது, மாதவிடாய் ஏற்படுதல், பிரசவ கால இரத்தம் வெளியேறுதல், வேண்டுமென்றே வாந்தியெடுப்பது, முத்தமிடுதல், சுய இன்பம் போன்றவற்றின் மூலம் இந்திரியம் வெளிப்படுத்துவது, நரம்பு வழியாக சத்தூசி போன்றவற்றை உட்கொள்ளுதல், இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்.

நோன்பை முறிக்காத செயல்கள் யாவை?

நோன்பை முறிக்காத செயல்கள்: வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, கனவின் மூலம் விந்துவெளிப்படுதல், இரத்தப் பரிசோதனைக்காக குறைவான இரத்தம் எடுத்தல், சுயவிருப்பமின்றி காயம், பல் பிடுங்குதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் தானாக வெளியாகுதல் (மேற்கண்டவைகளை மறதியானால் அல்லாமல் வேண்டுமென்றே செய்தால் நோன்பு முறிந்துவிடும்.)

குளித்தல், நீந்துதல் வெப்பத்தைத் தனித்துக்கொள்வதற்காக தண்ணீரை உடலில் தெளித்துக்கொள்வது, பல் துலக்குதல் (விரும்பத்தக்கது) வாய் வழியாக உட்கொள்ளாத வகையில் வைத்தியம் செய்துகொள்வது (உ.ம். ஊசி போடுவது, கண், மூக்கு, காது ஆகியவற்றிக்கு சொட்டு மருந்து இடுதல்), வயிற்றுக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்ப்பது, வாய்கொப்பளிப்பது, வயிற்றினுள் தண்ணீர் சென்றுவிடாத வகையில் பக்குவமாக நாசிக்கு தண்ணீர் செலுத்துவது.

வாசனைப் பொருட்களை உபயோகிப்பது, அவற்றை நுகர்வது, நேரம் தெரியாது, சூரியன் மறைந்துவிட்டதாக எண்ணி, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று எண்ணி, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ, சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரத்தை தெரிந்து விட்டால், உடனே உணவை நிறுத்திக் கொள்ள வேண்டும். கண்ணுக்கு சுருமா இடுதல்

நோன்பின் சுன்னத்துக்கள் யாவை?

  1. ஸஹர் செய்தல்
  2. விரைந்து நோன்பு துறத்தல்
  3. துஆச் செய்தல்

ஸஹர் செய்வதன் சிறப்பு யாது?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஸஹர் செய்யுங்கள்; ஏனெனில் ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது’ (புகாரி, முஸ்லிம்)

இரவின் கடைசி வரை ஸஹர் செய்வதை பிற்படுத்துவது சுன்னத்தாகும்.

நோன்பின் நிய்யத்தை எப்போது வைக்க வேண்டும்?

பர்ளான நோன்பு நோற்கும் விசயத்தில் பஜ்ர் உதயமாவதற்கு முன் நோன்பிற்குரிய நிய்யத்தை வைத்துக்கொள்வது கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘யார் நோன்பு நோற்க பஜ்ருக்கு முன்னால் நிய்யத்தை சேர்த்து வைக்கவில்லையோ அவரது நோன்பு கூடாது’ (அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி), ஆதாரம் : அபூதாவுது, திர்மிதி, நஸயீ)

நோன்பின் நிய்யத்தை எவ்வாறு வைக்க வேண்டும்?

நிய்யத் (எண்ணம்) வைப்பது உள்ளத்தில் தான்! வாயால் அல்ல!

நோன்பாளிகள் தவிர்ந்துக்கொள்ள வேண்டியவைகள் யாவை?

யார் கெட்ட, பொய் பேச்சுக்களையும், அதை செயல்படுத்துவதையும் விட்டுவிடவில்லையோ அவன் நோன்பு நோற்று அவனது சாப்பாட்டையும் குடிப்பையும் விட்டு பசியில் இருப்பதனால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை!’ (புகாரி)

நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுமா?

“நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ” (பைஹகி)

நோன்பு திறந்தவுடன் கூறவேண்டிய துஆ எது?

இதற்கான ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் ஏதும் கிடையாது. வழமையான துஆவை ஓதவும்

எதைக்கொண்டு நோன்பு திறக்க வேண்டும்?

கனிந்த பேரித்தம் பழம் மூலம் நோன்பு திறப்பது சுன்னத் ஆகும். அது கிடைக்காவிடில் காய்ந்த பேரீத்தம் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் கிடைப்பதைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

ரமழான் இரவுத் தொழுகையின் (தராவீஹ்) சிறப்பு என்ன?

எவர் ரமழான் இரவில் ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ?

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான் அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான் எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள் இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும் அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள் இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 2:187

ஊசி போடலாமா?

உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.

வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா? தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா?

எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : அஹ்மத், அபூதாவூத்

நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா?

நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும். (அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

எனவே இவைகளை தெளிவான முறையில் அறிந்து எமது நோன்புகளை சிறந்த முறையில் நோற்று சுவர் சோலையை அடைய எல்லாம் வல்ல இறைவன் எமக்கு அருள் புரிவானாக. ஆமின்.

NAFEES NALEER (IRFANI)
ரம்புக்கலயான்

Leave a Reply

Your email address will not be published.