அருள்மிக்க ரமழானில் அருள்பெற்ற மனிதர்களாகுவோம் – தொடர் 02
இரவு நேரத் தொழுகைக்கான சிறந்த நேரம்
இஷாத்தொழுகை முடிந்த பின் தொழப்படும் எல்லாத் தொழுகைகளும் இரவு நேரத்தொழுகைககளாகக் கொள்ளப்படும். அது இரவின் ஆரம்பத்திலாக இருக்கலாம், நடுப் பகுதியிலாக இருக்கலாம் அல்லது இரவின் கடைசிப் பகுதியாகவும் இருக்கலாம். அவை அனைத்தும் இரவு நேரத்தொழுகைகளாகவே கணிக்கப்படும்.
ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு நபி (ஸல்) அவர்களது இரவு நேரத்தொழுகையைப் பற்றிக் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகைக்கு ஒரு குறிப்பிட்ட கால நேரம் இருக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தர்ப்பத்தைப் பொறுத்து தொழுதுள்ளார்கள்.
அனஸ் (ரழி) அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள். “இரவில் தொழுபவராக நபி (ஸல்) அவர்களை நாங்கள் காண நாடினால் அவ்வாறே காண்போம். இரவில் தூங்குபவராக நபி (ஸல்) அவர்களை காண நாடினால் அவ்வாறே காண்போம்.” (புகாரி, அஹ்மத்)
மேலும், இரவு நேரத் தொழுகைக்கென ஒரு குறிப்பிட்ட நேரம் இல்லை என்றாலும், இரவின் மூன்றில் இரண்டு பாகம் நேரம் சென்றபின் தொழுவதே சிறப்பு வாய்ந்ததாகும்.
- தினந்தோரும் இரவின் கடைசிப் பகுதியிலேதான் இறைவன் அடிவானத்துக்கு வந்து, என்னிடம் கேட்பவர்கள் எவரேனும் உண்டா?கேட்பவருக்கெல்லாம் கொடுப்பதற்கு இதோ நான் தயாராக இருக்கிறேன் என்று தொழுகையாளிகையும், பிரார்த்திப்பவர்களையும் இறைவன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறான்.
“கண்ணியமும் மேன்மையும் மிக்க நமது இறைவன் எல்லா இரவிலும் அதன் கடைசி மூன்றில் ஒரு பகுதி மீதி இருக்கும் போது கீழ்வானில் இறங்கி வந்து, என்னை அழைப்பவர்கள் உண்டா? பதிலளிக்க இதோ நான் இருக்கிறேன். என்னிடம் கேட்பவர்கள் உண்டா? கொடுப்பதற்கு இதோ நான் இருக்கிறேன். என்னிடம் பிழை பொறுக்கத் தேடுபவர்கள் உண்டா? மன்னிப்பதற்கு இதோ நான் இருக்கிறேன்” (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)
- தனது இறைவனோடு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் இரவின் கடைசிப் பகுதியாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று அம்ர் இப்னு அபஸா (ரழி) அறிவிக்கின்றார்கள். “அடியான் தனது இறைவனோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரம் இரவின் கடைசிப் பகுதியாகும். ஆகவே, அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூறக்கூடியவர்களின் கூட்டத்தில் சேர முடியும் என்றால் நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். (திர்மிதி, நஸாஈ)
- இரவின் கடைசிப் பகுதியில் தொழும் இரவுத் தொழுகை சிறப்பு வாய்ந்தது.
எந்த நேரத்தில் தொழும் இரவுத்தொழுகையில் அதிகச் சிறப்பு உள்ளது என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது அதற்கு நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “இரவின் கடைசிப் பகுதியில் தொழும் தொழுகையில், ஆனால் அந்நேரம் தொழுபவர்கள் மிகக் குறைவு.” (அஹ்மத்)
மேலும், நாம் இரவின் ஆரம்ப நேரங்களில் தொழுகையில் ஈடுபடுவது போன்றே இரவின் கடைசிப் பகுதியையும் தொழுகைகளாளும், துஆக்களாலும் உயிரோட்டமாக்குவோம். அந்த நேரம் அதிமாக துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற நேரம்.
- அந்த நேரம் எமது தனிப்பட்ட பிரச்சினைகளை, சிக்கல்களை அமைதியாக இறைவனிடம் எத்திவைக்கக் கிடைத்த அமைதியான நேரம்.
- அந்த நேரம் எமது குடும்பப் பிரச்சினைகளை, எதிர்ப்பார்ப்புகளை, பொருளாதார நிலமையை இறைவனிடம் கண்ணீர் விட்டுச் சொல்ல ஏற்ற சந்தர்ப்பம்.
- அந்த நேரம் எமது சமூக விடயங்களை, ஊரின் முன்னேற்றத்துக்கான வழிமுறைகளை, நாட்டின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை, இந்த நோயிலிருந்த விடுபடுவதற்கான அவகாசத்தை மனம் திறந்து கேட்கப் பொறுத்தமான நேரம்.
எனவே, இரவின் கடைசிப் பகுதியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோம். அந்த துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நேரத்தை முழுமையாக பிரயோசனப்படுத்துகின்ற மனிதர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக. ஆமீன்.