கொரோனா முடிவுத் தேதிக்கு சட்ட ஆதாரம் கிடையாது

  • 64

அண்மைக்காலமாக சமூக ஊடகத்தில் சுரையா நட்சத்திரத்தின் வருகை சம்பந்தமாக பரபரப்பான செய்தியொன்று உலா வருகிறது.

கேட்டதெல்லாம் சொல்பவர் ஒரு பொய்யனாக மாறலாம். எனவே வட்ஸப்பில் வருவதெல்லாம் பகிரும் அன்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம் கேட்டதெல்லாம் சொல்பவன் பொய்யனாக இருப்பான் என்ற ஹதீஸ் மிகவும் ஆதராபூர்வமானதாகும். (முஸ்லிம்)

தொற்று நோய்களின் ஆரம்பம் அல்லது அதன் முடிவு தேதியை நிர்ணயிக்கக் கூடிய சட்ட ஆதாரங்கள் ஷரீஆவில் காணமுடியாது.

உலகத்தில் சோதனைகள் வருவது இறை நியதியாகும். அல்லாஹ் நாடியது நடக்கும் என்பது எமது விசுவாசம். எது, எப்போது, எங்கே, எப்படி நடக்கும் என்பது படைத்தவனுக்கு சொந்தமான விடயங்களாகும். இன்பமோ துன்பமோ அது இறை விதி என்ற வகையில் அதனை திருப்தியோடு ஏற்பது தான் இறை விசுவாசியின் மனோ நிலையாகும்.

சோதனையில் பாடம் பெறுவது தான் அடியார்களின் தேடலாக அமைய வேண்டும்.

உலகளவில் பெரும் தாக்கம் செலுத்தும் கொரோனா தொற்று நோய் நீங்க வேண்டும் என்றே எல்லோரும் பிராத்திக்க வேண்டும்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்ட ஹதீஸை அதன் பின்னணி தெரியாமல் கொரோனா வைரஸுடன் சம்பந்தப்படுத்தி பேசுவது அறிவீனமாகும்.

உறுதிப்படுத்தப்படாத, பலவீனமான, அல்லது உறுதியானது என்று வைத்துக் கொண்டாலும் வித்தியாசமான கருத்துக்களை கொடுக்க கூடிய ஒரு ஹதீஸை கொரோனா கோவிட் 19 வைரஸ் நீங்கும் காலத்தை குறிப்பதற்கு சிலர் பயன்படுத்தியுள்ளனர். அதன் உண்மைகள் தெரியாமல் பலரும் அந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.

பல அறிவுப்புகள் வழியாக வந்துள்ள சுரையா நட்சட்திரம் பற்றிய ஹதீஸ் பலவீனமானதாகும். ஆனால் சில ஸஹீஹான ஹதீஸ்களும் உள்ளன. அது தொற்று நோய்களின் முடிவுத் தேதிகளை குறிப்பிட வந்தவை அல்ல. இதன் பின்னணி யாது என்பதை புரிந்து கொண்டால் உண்மை தெளிவாகும்.

‘ஒரு காலைப் பொழுதில் சுரையா நட்சத்திரம் உதித்தால் பீடைகள் நீங்கும்’

என்ற செய்தி நிராகரிக்கப்பட்ட ஹதீஸாகும். அது ரஸுல் ஸல் கூறினார்கள் என்பதற்கு ஆதராம் கிடையாது.

‘பீடைகள் நீங்கும் வரை பழங்களை விற்பனை செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். பீடைகள் எப்போது நீங்கும் என்ற வினவிய போது சுரையா உதயம் தரும்போது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி 2193)

முஸ்லிமில் வரும் இன்னொரு ஹதீஸில் பழங்கள் முற்றி பழுக்கும் வரை விற்காதீர்கள் என தடுத்துள்ளார்கள்.

பொதுவாக இது குறித்து வந்த ஸஹீஹான ஹதீஸ்கள் அனைத்துமே பழங்களின் அறுவடைக் காலம் தெடர்பானது. குறிப்பாக பேரீச்சம் பழங்களை அறுவடை செய்யும் காலத்தில் விவசாயிகள் கவனத்தில் எடுக்க வேண்டிய வழிகாட்டல்களாகும்.

சுரையா நட்சத்திரம் உதித்தாலும் பழங்கள் உரிய பருவத்துக்கு வராவிட்டல் விற்பனை செய்ய வேண்டாம் என்ற வழிகாட்டலே இங்கு வழங்கப்பட்டுள்ளது.

அன்று மதீனாவில் வாழ்ந்த விவசாயிகள் தரப்பில் இருந்து நபிகளாருக்கு பல முறைப்பாடுகள் வந்தன. பழங்களை அதன் பருவம் வர முன்பு விற்பனை செய்வதன் காரணமாக வாங்கியவர் அறுவடை செய்ய முன்பு பழங்களுக்கு பல வகையான நோய்கள் பீடித்தன. இதனால் கொடுக்கல் வாங்களில் இரு சாராருக்கும் மத்தியல் பிணக்குள் உருவாகி பெரும் தொல்லையாக மாறிவிட்டது.

எனவே பழங்கள் கணிந்து உரிய பருவம் வரை காத்திருந்து தான் அதனை விற்க வேண்டும் என்ற முடிவுக்கு இறை தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள்.

சுரையா நட்சத்திரம் உதயமாகும் காலம் கோடை காலமாகும். அப்போது பழங்கள் கனிந்து வரக்கூடிய பருவமாகிவிடும். சுரையா நட்சத்திரத்தின் உதயத்தோடு பேரீச்சம் பழங்களுக்கு வரும் பீடைகள் முடிந்து விடும். அதனால் பிணக்குகளும், சபைக்கு வரும் வழக்குகளும் குறையும். இதுதான் குறிப்பிட்ட அந்த ஹதீஸின் பின்னணியாகும்.

மேற்கூறிய ஹதீஸில் குறிப்பிடப்படும் பீடைகள் என்பது பழங்களுக்கு ஏற்படும் இயற்கை ஆபத்தை குறிப்பதாகும். அதனை தொற்று நோய்களுடன் மூடிச்சுப் போது அறியாமையாகும்.

அனர்த்தங்களை அல்லது கொரோனா போன்ற தொற்று நோய்களை நட்சத்திரங்களுடன் தொடர்பு படுத்துவது இணைவைக்கும் குற்றத்திற்கு ஒப்பானது என்றே அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர்.

நபிகளாரின் மகன் இப்ராஹீம் மரணித்த போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது யாருடைய மரணத்திற்காகவோ அல்லது பிறப்பிற்காகவோ இது நடைபெறுவதில்லை. இது அல்லாஹ்வின் அத்தாட்சியாகும் என்று மக்களை நெறிப்படுத்தினார்கள்.

கொரோனா தொற்று இறைவன் விதி வழியே வந்த ஒன்று என்று நாம் ஈமான் கொள்வோம். அல்லாஹ் ஒரு போதும் தீமையை நாடுவதில்லை. இறை புறத்தால் வரும் சோதனைகள், உலகில் மறந்து வாழும் மனிதர்களை திசை திருப்ப வந்த இறையருளாகும். அதனூடாக மக்கள் அழுது தொழுது மன்றாடி இறைவன் பால் திரும்புவதையே அல்லாஹ் விரும்புகின்றான்.

கொரோன ஒரு இறை அத்தாட்சி. அதன் முடிவுத் தேதியை கண்டறிய சட்ட ஆதராங்களை தேடுவதல்ல இறைவன் எதிர்பார்ப்பு. இறைவன் பால் திரும்புவதற்கான உழைப்பில் ஈடுபடுவதே எமது வேலையாக இருக்க வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

முஹம்மத் பகீஹுத்தீன்

அண்மைக்காலமாக சமூக ஊடகத்தில் சுரையா நட்சத்திரத்தின் வருகை சம்பந்தமாக பரபரப்பான செய்தியொன்று உலா வருகிறது. கேட்டதெல்லாம் சொல்பவர் ஒரு பொய்யனாக மாறலாம். எனவே வட்ஸப்பில் வருவதெல்லாம் பகிரும் அன்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம்…

அண்மைக்காலமாக சமூக ஊடகத்தில் சுரையா நட்சத்திரத்தின் வருகை சம்பந்தமாக பரபரப்பான செய்தியொன்று உலா வருகிறது. கேட்டதெல்லாம் சொல்பவர் ஒரு பொய்யனாக மாறலாம். எனவே வட்ஸப்பில் வருவதெல்லாம் பகிரும் அன்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *