அருள்மிகு ரமழானை பயனுள்ளதாக மாற்றுவோம்

இறைவனின் அருளால் வருடாந்தம் ரமழானை அடைந்து வருகிறோம். ஈமானிய உள்ளம் இம்மாதத்தை எதிர்பார்த்து நிற்கும். ஏனெனில், இந்த மாதம் பல நன்மாராயங்களை தன்னகத்தே கொண்ட இனிய மாதமாகும்.

வாழ்வில் பல ரமழான்களை சந்தித்திருக்கிறோம். அந்த ரமழான்கள் எம்மை விட்டும் நகர்ந்து விட்டன. அந்த ரமழான்களை உரிய முறையில் பயன்படுத்தினோமா இல்லையா என்பது எமக்குத்தான் தெரியும். ஆனால், இந்த ரமழானை சென்ற வருடங்களில் போன்றல்லாது, மிகத் திட்டமிட்டு, இறைவனின் நற்கூலிகளை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த ரமழான் இறை பக்தியுள்ள அடியார்களாக எம்மை மாற்றிவிட்டு எமது பாவங்களை அழித்துவிட்டு வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு விடைபெற வேண்டும்.

நோன்பின் இலக்கை பின்வருமாறு அல்குர்ஆன் வசனம் பேசுகிறது.

2:183 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏

2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.

ரமழான் காலத்தில் பல நல்ல அமல்களை நாம் ஆரம்பித்து விடுவது எமது வழமையாகும். அந்தவகையில் இறைவேதம் அதிகமாக ஓதப்படுகிறது. பரோபகாரிகள் அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்குகின்றனர். இரவுகளில் நின்று வணங்க ஆரம்பித்துவிடுகின்றனர் இது போல பல அமல்களில் நாம் ஈடுபடுகிறோம். இந்த அமல்களின் போது மனத் தூய்மை பேணப்பட வேண்டும் அப்போதுதான் இறைவனிடம் அவ் வணக்கங்களுக்கு பூரணமான கூலி கொடுக்கப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மனத்தூய்மையை கடைபிடிப்போம்.

மனத்தூய்மை என்றால் எந்த ஒரு செயலை செய்தாலும் அது வணக்கமாக இருந்தாலும் சரி, அல்லது நற்கருமங்களாக இருந்தாலும் சரி, அதை உலக ஆதாயத்திற்காகவும், மக்களின் வரவேற்பிற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும், பெருமைக்காகவும் செய்யாமல் இறைவனுக்காக மட்டுமே செய்வதுதான் மனத்தூய்மை ஆகும்.

நாம் எங்கு போனாலும், கலப்படம் இல்லாத பொருட்களையே கேட்டு வாங்குகிறோம். தங்கம் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்த நாம் தங்கத்தில் கலப்படம் உள்ளதை அறிந்தால் அல்லது கேள்விப்பட்டால் ஒருபோதும் நாம் அதை வாங்கப் போவதில்லை. அவ்வாறு வேறு எந்த பொருட்களாக இருந்தால் கலப்படம் உள்ளது என ஒதுக்கி விடுவோம். தூய்மையான சுத்தமான பொருட்களை கொள்வனவு செய்வதே எமது பண்பாகும். ஆனால், இறைவழிபாட்டில் மனத்தூய்மையின்றி நடந்து கொள்கின்றோம். எமது வணக்கங்களை எடுத்துக்கொண்டால், அவைகளில் இஹ்லாஸ் பேணப் படுவதில்லை.

இவ்வாறு இருக்கும் பொழுது இறைவன் எவ்வாறு எமது வணக்கங்களை, அமல்களை ஏற்றுக்கொள்வான்? இவற்றுக்கான கூலி இவ்வுலகிலே கொடுக்கப்பட்டுவிடும். இறைவன் இறை வேதத்தில் இவ்வாறு கூறுகின்றான்.

98:5 وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ  ۙ حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ ؕ‏

98:5. “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஸகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”

96:14 اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ‏

96:14. நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

‘எவர் பிறருக்கு காட்டவேண்டும் என்பதற்காக தொழுகிறாரோ, நோன்பு நோற்கிறாரோ, தர்மம் வழங்குகிறாரோ அவர் இறைவனுக்கு இணைவைத்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி), நூல்: அஹ்மது)

ஹதீஸ் ஜிப்ரீல் என்றழைக்கப்படுகின்ற பின்வரும் நபிமொழியில் இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதற்கான பதிலை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை பார்க்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து ‘ஈமான் என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு ‘ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது’ எனக் கூறினார்கள். அடுத்து ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமழான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்’ என்று கூறினார்கள்.

அடுத்து ‘இஹ்ஸான் என்றால் என்ன?’ என்று அவர் கேட்டதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்’ அடுத்து ‘மறுமை நாள் எப்போது?’ என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்’ என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ‘மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.’ (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். ‘அவரை அழைத்து வாருங்கள்’ என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, ‘இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அனைத்து வணக்கங்களிலும் மனத் தூய்மை பேணப்பட வேண்டும்! இல்லாவிட்டால், அவை செல்லாக்காசாக மாறிவிடும் என்பதையே மேற்படி நபி மொழி எடுத்துக் காட்டுகிறது.

58:7 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰى مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْاۚ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا يَوْمَ الْقِيٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

58:7. நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை; இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை; இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை – அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.

எங்கிருந்த போதிலும் அவன் எம்மை பார்க்கின்றான். கேட்கின்றான். எமது செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து கொண்டிருக்கின்றான். எமது வணக்கங்களில் ஆரம்பத்திலும் செய்து கொண்டிருக்கும் வேளையிலும் இறுதியிலும் உளப்பரிசுத்தம் இருக்க வேண்டும்! அந்த உளப் பரிசுத்தத்தை எம்மில் ஏற்புடுத்திக் கொள்ள இந்த மாதத்தை நன்கு பயன்படுத்துவோம்.

உறவுகளை நிறைவாக அரவணைப்போம்.

இனிய மார்க்கமான இஸ்லாம் குடும்ப வாழ்க்கையை மேம்படுத்த அலாதியான அணுகுமுறைகளை கொண்டு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது. அத்தகைய வழிமுறைகளை, நெறிமுறைகளை நபிகளாரின் வாழ்வினிலும், உத்தம ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றிலும் பார்க்கலாம்.

யூசுப் (அலை) அவர்களின் வரலாற்றை படித்துப் பாருங்கள்! தனது சகோதரர்கள் அனைவரும் ஆலோசனை செய்து யூசுப் நபியை பால் கிணற்றில் தள்ளிவிட்டார்கள். முப்பது வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் தனது சகோதரர்களை சந்திக்கின்றார். இச் சம்பவம் சூரா யூசுஃபில் இடம்பெறும் நீண்ட வரலாறாகும். இதை அல்லாஹ் அழகிய வரலாறு என்பதாகவும் அல் குர்ஆனில் குறிப்பிடுகின்றான். இந்த அத்தியாயம் கூறுபவைகளில், மிக முக்கியமான ஒன்றுதான் அல்லாஹ்வின் தூதர் யஃகூப் அலை அவர்களின் பிள்ளைகளாக இருந்தாலும், போட்டி பொறாமை இருக்கத்தான் செய்யும். இருந்தும் பல வருடங்கள் சென்றும் தனக்குத் துரோகம் இழைத்த தனது சகோதரர்களை அவர்கள் மன்னித்தார்கள்.

ரமழான் உறவுகளை இணைக்கின்ற மாதமாகும். கோபதாபங்களை மறந்து மன்னித்து உடைந்துபோன இரத்த உறவுகளை அரவணைத்துக் கொள்ளுங்கள்.

பெற்றெடுத்த பெற்றோர்களுடன் கூட உறவை பேணாதிருப்பவர்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள். அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக! நாம் அல்லாஹ்விடத்தில் அவனது திருப்பொருத்தத்தை கேட்கின்றோம். ஆனால், திருப்பொருத்தம் தாயின் பொருத்தத்தில் மறைந்திருப்பதை மறந்து விட்டோம்.

وعنْ عبدِ اللَّهِ بنِ عمرٍو رَضِيَ اللَّهُ عَنْهُما، عن النبيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قالَ: ((رِضَا اللَّهِ فِي رِضَا الْوَالِدَيْنِ، وَسَخَطُ اللَّهِ فِي
سَخَطِ الْوَالِدَيْنِ)). أَخْرَجَهُ التِّرمذيُّ، وصَحَّحَهُ ابنُ حِبَّانَ والحاكِمُ.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது; அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோர்களின் திருப்பொருத்தத்திலும், அவனது கோபம் பெற்றோர்களின் கோபத்திலும் உள்ளது.

சகோதரர்களே! ரமழானில் உறவுமுறைகளை அனுசரிக்காது, நாம் நோன்பு பிடித்து என்ன பலன்? எம்மை பெற்றெடுத்து, ஆளாக்கி, சீராக்கி வளர்த்த பெற்றோர்களுடன் பேசாது கோபித்துக்கொண்டு இரவு முழுக்க நின்று வணங்கினாலும் பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பு நோற்றாலும், ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை ஞாபகதத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதேபோன்று வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இரக்கம் காட்டாது மனைவியருடன் கடுகடுப்பாக நடந்து கொண்டு ஸஹர் செய்வதிலும் இஃப்தார் செய்வதிலும் என்ன நன்மை கிடைக்கப் போகிறது?

ஆகவே, உடன்பிறப்புகளுக்கு இறக்கம் காட்டுங்கள்! அவர்களது சுக துக்கங்களை அறிந்து அவர்களதுதேவைகளை நிறைவேற்ற உதவுவதோடு அவர்களை சேர்ந்து வாழுங்கள். நண்பர்களே!

பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்வோம்.

உலகில் முதலாவது இடம்பெற்ற வணக்கம் தவ்பா, பாவமன்னிப்பாகும். முதல் மனிதர் ஆதம் அலை அவர்கள் இம் மண்ணிற்கு வந்து அல்லாஹ்விடம் பின்வருமாறு பாவமன்னிப்புக் கேட்டார்கள்.

7:23 قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

7:23. அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.

நாம் ஒவ்வொருவரும் எமது பாவத்திற்காக உளம் வருந்தி மன்னிப்புக் கேட்க கடமைப்பட்டுள்ளோம். உதாரணமாக, பின்வரும் பிரார்த்தனைகளை கொண்டு இறைவனை அழைக்கலாம்.

يا واسع الفضل اغفر لي

பொருள்: அருள் கிருபையில் விசாலமானவனே! எனது பாவத்தை மன்னித்து விடுவாயாக!

اللهم إنك عفو تحب العفو فاعف عنا

பொருள், யாஅல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புபவன் எங்களை மன்னித்து விடுவாயாக!

இறுதியாக, இந்த நாட்டில் நாம் 10% வீதம் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்னும் நாம் பிடிக்கின்ற நோன்பை பற்றியோ அல்லது விழித்து நின்று வணங்கும் வணக்கங்களை பற்றியோ ஸஹர் உணவை பற்றியோ இஃப்தாரைப் பற்றியோ பிற மதத்தவர்களுக்கு நாம் புரிய வைக்கவில்லை! பிறமத சகோதரர்களிடம் சென்று ரமழானை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டால் நோன்பு என்றால் பசித்து இருப்பதையும், கஞ்சி விநியோகம் செய்வதையுமே கூறுகின்றனர்.

எனவே ரமழானை பற்றிய அதன் தாத்பரியங்கள் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஹராமானவைகளை தவிர்ந்து கொள்வோம்.

அதிகமானவர்கள் வழமை போன்று ஹலால் ஹராத்தில் பேணுதல் காட்ட மறந்துவிடுகின்றனர். பகல் முழுக்க எப்படியோ பசித்து இருந்தால் போதும் என எமது சமூகத்தில் சிலர் எண்ணுகின்றனர். மார்க்கம் அனுமதிக்காத முறையில் சம்பாதித்துவிட்டு பிள்ளைகளையும் பாவத்திற்குள் தள்ளி விடுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தன்னையறியாமல் வீழ்ந்து விடுகின்றனர்.

ரமழானில் விசேடமாக பரோபகாரம் செய்வோம்.

மலர்ந்திருக்கும் இந்த ரமழான் மாதம் ஏழைகளின் பசியை உணர வைக்கின்ற மாதமாகும். இத்தருணத்தில் நாம் ஏனைய காலங்களை விட, தான தர்மங்களை வாரி வழங்குவது மாபெரும் நபிவழியாகும். இதற்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரியை பின்வருமாறு காணலாம்.

قال العلّامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-

[ وكان العطاء والصدقة أحبّ شيئ إليه صلّى الله عليه وسلم، وكان سروره وفرحه بما يعطيه أعظم من سرور الآخذ بما يأخذه. وكان أجود الناس بالخير؛ يمينه كالرّيح المرسلة؛ وكان إذا عرض له محتاج آثره على نفسه؛ تارة بطعامه، وتارة بلباسه.

وكان صلّى الله عليه وسلّم يأمر بالصّدقة ويحثّ عليها ويدعو إليها. ولذلك كان صلّى الله عليه وسلّم أشرح الخلق صدرا، وأطيبهم نفسا، وأنعمهم قلبا؛ فإن للصّدقة وفعل المعروف تأثيرا عجيبا في شرح الصدر! ]

(زاد المعاد ، ٢/ ٢٢،٢٣ بتصرف)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமழான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால், (வானவர்) ஜிப்ரீல் ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை – நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். (அவ்வாறு) ஜிப்ரீல் தம்மைச் சந்திக்கும்போது தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட நபி (ஸல்) அவர்கள் அதிகமாக நல்லவற்றை வாரி வழங்குவார்கள்!”. (நூல்: புகாரி – 4997)

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-

“கொடுத்துதவுவதும், தர்மம் செய்வதும் நபி (ஸல்) அவர்களுக்கு அதிக விருப்புக்குரியதாக இருந்தது. தான் கொடுக்கும் பொருள் மூலம் நபியவர்கள் அடையும் சந்தோசமும் மகிழ்ச்சியும், அதை எடுப்பது கொண்டு ஒருவர் அடையும் மகிழ்ச்சியை விட மிகப் பிரமாண்டமானதாக இருந்தது. மக்களுக்கு நல்லவற்றை வாரி வழங்கும் மிகப்பெரும் வள்ளலாக அவர்கள் இருந்தார்கள்; வேகமாகத் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்று போன்று அவர்களது வலக்கரம் இருந்தது; தேவையுள்ள ஒருவர் தன் தேவையை அவர்களிடம் எடுத்துக் காட்டினால் தன்னை விட, தேவையுடையவரின் தேவையையே அவர்கள் முதன்மைப்படுத்துபவர்களாக இருந்தார்கள். சிலபோது தனது உணவைக்கொண்டும், இன்னும் சிலபோது தனது உடையைக்கொண்டும் அவர்கள் உதவுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி ஏவுபவர்களாகவும், அதைத் தூண்டுபவர்களாகவும், அதற்காக அழைப்பு விடுப்பவர்களாகவும் காணப்பட்டார்கள். இதனால்தான் நபியவர்கள் மனிதர்களிலேயே மிக விரிந்த நெஞ்சுடையவர்களாகவும், மிக நல்ல மனமுடையவர்களாகவும், அவர்களிலேயே மிக்க மகிழ்வுடைய உள்ளமுடையவர்களாகவும் இருந்தார்கள். உள்ளத்தை விரிவாக்கும் விடயத்தில் தர்மம் புரிவதற்கும், நன்மையானவற்றைச் செய்வதற்கும் ஆச்சரியப்படத்தக்க தாக்கம் நிச்சயமாக இருந்து கொண்டிருக்கிறது!” (நூல்: ‘zஸாதுல் மஆத்’, 02/ 22,23)

எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காண்பித்த தர்மத்தை போன்று சமூகத்தில் தனது நிலைமையை சொல்ல முடியாது மறைத்துக் கொண்டிருக்கும் மக்களை தேடி உதவி செய்யுங்கள். வலக்கரம் கொடுப்பது இடத்துக்கு தெரியாமல் நன்கொடை வழங்குங்கள் எவ்வாறென்றால் இரகசியமாக யாருக்கும் தெரியாது தான தர்மங்கள் செய்யுங்கள்!

வல்லவன் அல்லாஹ் நலவுகள் நிறைந்த ரமழானாக இந்த ரமழானை மாற்றுவாயாக! எமது பாவங்களை மன்னித்து, மனத்தூய்மை உள்ளவர்களாக மாற்றுவாயாக! எங்களுக்கு அருள் செய்வாயாக! கருணை காட்டுவாயாக! நாங்கள் உன்னையே நம்பி வாழுகின்றோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எம்மை பொருத்தருள்வாயாக!

முப்தி யூஸுப் ஹனீபா
தொகுப்பு – அஷ்ஷெய்க் அப்துல் வாஜித்(இன்ஆமி)
Majma Ul Khairahth Jumuah Masjid – Nimal Road, Colombo 04

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *