இயந்திரத் தாய்மை

  • 11

இன்றைய அன்னையர்
தினத்திற்காகவல்ல
இன்றைய தினத்தில்
அன்னைக்காக

தாய் பற்றியோ
தாய்மை பற்றியோ
தயாள குணம் பற்றியோ
திரும்பத் திரும்பக்
கவிபாட நான் வரவில்லை!
தாய்மைக்கு அது ஈடுமில்லை!

புத்தம் புதியதொரு
புதுமை தாங்கிய
புன்னிய உறவொன்று
புகழ் பாடப்படாது
புதைந்து கிடக்கும்
புனித கருப்பொருளே இவ்
இயந்திரத் தாய்மை!

சூரியனே அசதியில் அயர்ந்திடும்
சுகமான பின்னிரவில்
சுமைபாராது தன்னவன்
சுவைத்து ருசித்திட
சமைத்துக் கழுவி
வீட்டையும் சீர் செய்து
விடியலோடு வேலைக்குப் போகிறது
உழைப்பாளித் தாயின்
இயந்திரத் தாய்மை!

பத்துமாசம் சுமந்தவள்
பத்தியமாய் உண்ணவோ
பக்குவமாய் நடக்கவோ
பாதியேனும் நேரமில்லை!
உழைப்பாளித் தாயின்
இயந்திரத் தாய்மை!

பதறித் திணறிச் சுமந்த
பசுமையான சுமைதனை
பார்த்துப் பகிர்ந்திட
இறக்கி வைத்திட
இறைஞ்சிக் கேட்கனும்
இரண்டு மாத விடுமுறையேனும்!
உழைப்பாளித் தாயின்
இயந்திரத் தாய்மை!

படபடவெனக் கண்விழித்து
தடதடவெனச் சமைத்து முடித்து
கடபுபவென தயாராகிடுகையில்
குபீரெனக் கத்தி அழும்
குழந்தையை அணைத்த பாதி
அணைக்காத பாதியென
ஆசுவாசப்படுத்தி
அயலவர் கையில்
அயர்ந்திடச் செய்து
வேலைக்கு நகர்கிறது
உழைப்பாளித் தாயின்
இயந்திரத் தாய்மை!

விடுமுறையே
விறைத்து அழுது
விண்ணகம் புரட்டிடும்
சிசுவின் பசிக்குச்
சவால் விடும் முறையான
போதிலும்
பால்குடி மறவாது
பக்கத்து வீட்டாரிடம் மனசு
பதறப் பதற
பிஞ்சு மண்ணைப்
பிள்ளை வாசனையுடன்
அள்ளிக் கொடுத்துவிட்டு
நெஞ்சைக் கல்லாக்கிப்
போலிப் புன்னகை பூண்டு
புறப்படுகிறது
உழைப்பாளித் தாயின்
இயந்திரத் தாய்மை!

பள்ளி விட்டு
பறந்து வருகையில்
களைப்புக் கழையவோ
அயர்ந்து துயிலவோ
நிமிர்ந்து இடுப்பைத்தான்
நிமிர்த்தவோ நேரம்தான்
உண்டோ??
உண்டியோ பசியால்
உழல அதிலே
சுமந்த சிசுவின்
பசியாற்றிட
வாஞ்சையுடன் வாரியணைப்பாள்
நெஞ்சோடு
உழைப்பாளித் தாயின்
இயந்திரத் தாய்மை!

சிசுவின் பசியாற்றலில்
இவள் பசி மறக்க,
சிசுவின் கண்ணயர்தலில்
இவள் களை துறக்க,
எண்ணிக்கையில்
அடங்கா தியாகங்கள்
எண்ணிக் கொண்டே
ஏகாந்தம் பாடலாம் இவ்
ஆத்மார்த்தமான
உழைப்பாளித் தாயின்
இயந்திரத் தாய்மை பற்றி!

தினம் தினம்
தினமெடுத்துக்
கொண்டாடப்பட வேண்டியதும்
திகட்டாமல் சுவைக்கப்பட
வேண்டியதுமே இதுபோல்
தியாகம் போராட்டம்
தாங்கி
வேலைக்குச் செல்லும்
உழைப்பாளித் தாயின்
இயந்திரத் தாய்மை!

தினம் திண்டாடி
மனம் மண்றாடி
உளம் திணறி
இயலாமையிலும்
நாளும் பொழுதும்
இயந்திரமாய்ச் சுழலும்
இயந்திரத் தாய்மைக்கு
வரிகளின் ஆசிகள்
சமர்ப்பணம்.

அவனுடைய தாய்
பலஹீனத்தின் மேல் பலவீனம்
கொண்டவளாக (கர்ப்பத்தில்)
அவனை சுமந்தாள்;
இன்னும் அவனுக்குப்
பால் குடி மறத்த(லி)ல்
இரண்டு வருடங்கள் ஆகின்றன;
ஆகவே
“நீ எனக்கும்
உன் பெற்றோர்க்கும்
நன்றி செலுத்துவாயாக;
என்னிடமே உன்னுடைய
மீளுதல் இருக்கிறது.”
(அல்குர்ஆன் : 31:14)

Sheefa Ibraheem (Hudhaaiyyah)
B.A (Hons) Ⓡ SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.

இன்றைய அன்னையர் தினத்திற்காகவல்ல இன்றைய தினத்தில் அன்னைக்காக தாய் பற்றியோ தாய்மை பற்றியோ தயாள குணம் பற்றியோ திரும்பத் திரும்பக் கவிபாட நான் வரவில்லை! தாய்மைக்கு அது ஈடுமில்லை! புத்தம் புதியதொரு புதுமை தாங்கிய…

இன்றைய அன்னையர் தினத்திற்காகவல்ல இன்றைய தினத்தில் அன்னைக்காக தாய் பற்றியோ தாய்மை பற்றியோ தயாள குணம் பற்றியோ திரும்பத் திரும்பக் கவிபாட நான் வரவில்லை! தாய்மைக்கு அது ஈடுமில்லை! புத்தம் புதியதொரு புதுமை தாங்கிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *