ரமழானும் பாவமன்னிப்பும்

  • 110

குர்ஆன்

பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் நேசிக்கிறான். அவன் கூறுகிறான்:

நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தைவிட்டு) வருந்தி மீளுகிறவர்களை விரும்புகின்றான்; சுத்தமாக இருப்பவர்களையும் விரும்புகின்றான்.(2.222)

பாவமன்னிப்புக் கேட்பது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் மீதும் கடமையாக உள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கையாளர்களே, கலப்பற்ற மனதோடு அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கேட்டுத் திரும்புங்கள். (66.8)

பாவமன்னிப்புக் கேட்பது ஈடேற்றத்திற்கும் வெற்றிக்கும் வழியாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கையாளர்களே! (இதில் எந்த விசயத்திலேனும் உங்களால் தவறு ஏற்பட்டுவிட்டால்) நீங்கள் வெற்றி பெறும்பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்புக் கோரித் திரும்புங்கள்.(24.31)

வெற்றி என்றால் ஒருவர் எதை எதிர்பார்க்கிறாரோ அதை அடைந்து, எதிலிருந்து தப்பிக்க நினைக்கிறாரோ அதைவிட்டு ஓடிவிடுவதாகும்.

மனத்தூய்மையுடன் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் எந்தப் பாவத்தையும் மன்னித்துவிடுகிறான். அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எத்தனை எண்ணிக்கையில் இருந்தாலும் மன்னித்துவிடுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நீர் கூறும்: என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கருணை உடையவனுமாக இருக்கின்றான். (39.53)

மேலும் நீங்கள் அனைவருமே அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புத் தேடி திரும்புங்கள். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! இதன் மூலம் நீங்கள் வெற்றி பெறக்கூடும். (24:31)

அல்லாஹ் தனது அடியார்கள் மீது அன்பும் இரக்கமும் கொண்டவனாக இருக்கிறான். அவனது கருணை அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. யாரெல்லாம் தங்களின் பாவத்திற்கு மன்னிப்புத் தேடுகிறார்களோ, அவர்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்கிறான். அவன் மிகவும் மன்னிப்பவனாகவும் கருணை உள்ளவனாகவும் இருக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: எவரேனும் தம்முடைய பாவச் செயலுக்குப் பின்பு வருத்தப்பட்டு (‘இனி ஒரு போதும் அதன் பக்கம் செல்ல மாட்டேன்’ என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் மன்னிப்பைத் தேடி, அதைவிட்டு விலகிச்) சீர்திருத்திக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்துவிடுவான். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.(5:39)

தவறுகளோ, பாவங்களோ, குற்றங்களோ மன்னிக்கத் தகுதியற்றவையாகவும் தெரியலாம். ஆனால் யார் அல்லாஹ்வின் கருணை மீது நம்பிக்கை வைத்துள்ளார்களோ அவர்கள் நிச்சயம் அவனை நம்புவார்கள்.

உங்களுடைய இறைவன் (உங்களுக்கு) அருள்புரிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக வருத்தப்பட்டு (‘இனி ஒருபோதும் அப்பாவத்தின் பக்கம் செல்ல மாட்டேன்’ என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் மன்னிப்பைத் தேடி, அதிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்தால் (அப்பாவத்தை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், கருணையுடையவனுமாக இருக்கின்றான்என்றுநீர்கூறும்.(6:54)

நபிமொழிகள்

என் சகோதரரே, பாவங்களில் விழுந்துவிட்டால் அல்லாஹ்வின் கருணை மீது நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். மன்னிப்பின் வாசல் சூரியன் மேற்கில் உதிக்கின்ற காலம் வரும் வரை, அதாவது மறுமை ஏற்படும் வரை திறந்தே இருக்கின்றது.

நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் பகலில் பாவம் செய்தவரின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ள இரவு வரை தனது கரத்தை விரிக்கிறான். மேலும் இரவில் பாவம் செய்தவரின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ள பகல் வரை தனது கரத்தை விரிக்கிறான். இது சூரியன் மேற்கில் உதிக்கும் வரை நடக்கும். (ஸஹீஹ் முஸ்லிம் 2759)

தவறுகள், பாவங்கள் செய்வது மனித இயற்கைதான். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதில் யாருமே தவறு செய்யாமல் இருக்க முடியாது. பாவங்களால் அல்லது மறதியால் அவனுக்கு மாறுசெய்துவிடுவோம். அனைவருக்கும் இந்த நிலை இருக்கிறது. குறைபாடு இல்லாமல் இருக்கமாட்டோம். ஆகவேதான் நபியவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை விட்டுவிட்டு வேறு மக்களைக் கொண்டு வருவான். அவர்கள் பாவம் செய்த நிலையில் அவனிடம் பிரார்த்திப்பார்கள், மன்னிப்புக் கேட்பார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 6621)

மேலும் கூறினார்கள்: ஆதமின் மகன் ஒவ்வொருவரும் பாவம் செய்யக்கூடியவர்களே. அவர்களில் சிறந்தவர்கள் யாரெனில் பாவம் செய்ததை எண்ணி வருந்தி மன்னிப்புத் தேடுகிறவர்கள் ஆவர். (திர்மிதீ2499 அல்பானீ ஹசன்)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் “அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி(நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்)” என்று கூறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.(ஸஹீஹுல் புகாரீ 6307)

நபியவர்கள் மேலும் கூறியுள்ளார்கள்: தனது அடியானின் தொண்டையில் கர்கர் என்று மரண மூச்சிழுப்பு ஏற்படுவதற்கு முன்பு வரை அல்லாஹ் அவனுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். (திர்மிதி 3537)

பாவமன்னிப்பு குறித்த ஹதீஸ் குத்சீ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, “(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?” என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், “கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், “(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.

அப்போது அல்லாஹ்வின் கருணையைப் பொழியும் வானவர்களும் அல்லாஹ்வின் தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, “நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, “நீ தூரப் போ!” என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்தரவிட்டான். பிறகு, “அவ்விரண்டுக்கு மிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்ல விருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.

இதை அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரீ 3470)

ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில், “அம்மனிதர் நல்லோர்களின் ஊருக்கு ஒரு சாண் அளவு நெருக்கமாக இருந்தான். எனவே அவனை அந்த மக்களைச் சேர்ந்தவனாகக் கணக்கிடப்பட்டது” என்றும், அவனது நெஞ்சு அதை நோக்கியதாக இருந்தது என்றும் உள்ளது. (2716)

ஒருவன் ஒரு தீய செயலைச் செய்தவுடன் வானவர் அதை எழுதுவதில்லை. ஒரு மணி நேரம் வரை காத்திருக்கின்றார். ஏனெனில் அம்மனிதர் தவ்பா செய்கின்றானா இல்லையா என்று எதிர்பார்க்கின்றார். அவன் தவ்பா செய்யாவிடின் அந்தத் தீய செயலை எழுதுகின்றார்.

அறிவுக்கடல் இமாம் கஸ்ஸாலி [ரஹ் ] அவர்கள் கூறுகின்றார்கள்: ‘தவ்பா ‘ என்னும் பாவமீட்சி என்பது இறைவழியில் அடி எடுத்து வைக்கும் ஓர் இறையடியானுக்கு முதன்மையானதாகவும் நம்முடைய ஆதிபிதா ஆதம் [அலை] அவர்களைப் பின்பற்றும் நர்செயலாகவும் அமைந்துள்ளது. ஆதம் [அலை] அவர்கள் துவக்கத்தில் ஒரு தவற்றைச் செய்து விட்டுப் பின்னர் அதை எண்ணி வருந்தி பாவமீட்சி தேடிக் கொண்டார்கள். அல்லாஹூ தஆலாவும் அவர்களின் பிழையினை மன்னித்து தவ்பாவையும் ஏற்றுக் கொண்டான்.

ஆனால் ஷைத்தான் பாவம் செய்துவிட்டு பின்னர் பாவமீட்சி தேடாதிருந்த காரணத்தால் நரகநெருப்பிற்குரியவன் ஆனான்.

ஆதம் [அலை] அவர்கள் தாம் செய்து விட்ட பிழையை கை சேதம் வருத்தம் என்னும் நெருப்பால் கருத்து அதைத் தூய்மை செய்து கொண்ட காரணத்தால் நரக நெருப்பில் இருந்து காக்க பெற்றார்கள்.

எனவே நீ பாவம் செய்துவிடின் அவர்களைப் போன்று பாவமன்னிப்புக் கோரி பிழை பொறுக்கத் தேடிகொள்வாயாயின் அவர்களைப் பின்பற்றியதன் காரணமாக அவர்களின் வழி வந்தோனாக ஆகி விடுகின்றாய். அவ்வாறின்றி தவறு செய்வதில் அவர்களை பின்பற்றி பாவமீட்சி தேடுவதில் அவர்களைப் பின்பற்றாதிருப்பாயாயின் , நீ ஷைத்தானின் வழித்தோன்றலாய் ஆகிவிடுவாய்.

மனமுருகி பாவமன்னிப்புத் தேடுதல் என்பது வெறும் நாவால் மன்னிப்புக் கேட்பதுடன் முடிந்துவிடாது. அதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. ஒரு மனிதன் முதலில் தனது பாவத்தை விட்டு நேர்வழிக்கு வர வேண்டும். தனது கடந்த காலப் பாவத்தை எண்ணி வருந்த வேண்டும். இனி மறுபடியும் அதைச் செய்யக் கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். தனது பாவத்தால் மக்களின் உரிமைகள் பாழாக்கப்பட்டிருந்தால் அதற்கு ஈடு செய்ய வேண்டும். ஒருவரின் சொத்தைப் பறித்திருந்தால் அதைத் திரும்ப தர வேண்டும். இவை அனைத்தையும் அவர் தமக்கு மரண வேதனை வருவதற்கு முன்பே செய்துவிட வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதனைப் பாவமென அறிந்து) பின்பு வருத்தப்பட்டு அதிவிரைவில் (அதைவிட்டு) விலகிவிடுகின்றார்களோ, அத்தகையவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்துவிடுகின்றான். அல்லாஹ்தான் நன்கறிந்தவனும் தீர்க்கமான அறிவுடையவனுமாக இருக்கின்றான்.

எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் நெருங்கிவிட்டபோது, ‘இதோ! நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்” என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் அல்லாஹ்வை(யும் அவனுடைய இஸ்லாமிய மதத்தையும்) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகின்றார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பே கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்குத் துன்புறுத்துகின்ற வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (4:17-18)

கலப்பற்ற பாவமன்னிப்புக் கோரலில் ஐந்து நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். அவை:

  1. மனத்தூய்மையாக அல்லாஹ்வின் திருப்தியையும் அவனது நற்கூலியையும், அவனது தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.
  2. வருந்துதல்: செய்த பாவத்தைக் குறித்த கவலையும் இனி அதை எக்காலத்திலும் செய்யக் கூடாது என்ற விருப்பமும் இருக்க வேண்டும்.
  3. பாவத்தை விடுதல்: உடனே பாவத்தைக் கைவிட வேண்டும். அந்தப் பாவம் அல்லாஹ்வுக்கு எதிரானதாகவோ அவன் தடைசெய்ததாகவோ இருந்தால் அதை நிறுத்திட வேண்டும். அப்பாவம் கடமையான ஒன்றை விட்டுவிட்டதின் காரணத்தால் ஏற்பட்டதாக இருந்தால், உடனே அதை நிறைவேற்ற வேண்டும். மேலும் அந்தப் பாவம் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு (உதாரணம் மனிதர்களுக்கு)ச் செய்த தீங்காக இருந்தால், அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுடன், பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்.
  4. உறுதிப்பாடு: எதிர்காலத்தில் அதைத் திரும்பவும் செய்யக் கூடாது என்று உறுதிகொள்ள வேண்டும்.
  5. பாவமன்னிப்புக் கோருதல் அது ஏற்றுக்கொள்ளப்படும் நேரத்திற்குள் கேட்டாக வேண்டும். மரணத்திற்கு முன்பு அல்லது சூரியன் மேற்கில் உதிப்பதற்கு முன்பு கேட்டாக வேண்டும்.
NAFEES NALEER (IRFANI)
Editor of Veyooham Media Center.
News Reporter Tele Tamil Media Unit .

 

குர்ஆன் பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் நேசிக்கிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தைவிட்டு) வருந்தி மீளுகிறவர்களை விரும்புகின்றான்; சுத்தமாக இருப்பவர்களையும் விரும்புகின்றான்.(2.222) பாவமன்னிப்புக் கேட்பது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் மீதும் கடமையாக உள்ளது. அல்லாஹ் கூறுகிறான்:…

குர்ஆன் பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் நேசிக்கிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தைவிட்டு) வருந்தி மீளுகிறவர்களை விரும்புகின்றான்; சுத்தமாக இருப்பவர்களையும் விரும்புகின்றான்.(2.222) பாவமன்னிப்புக் கேட்பது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் மீதும் கடமையாக உள்ளது. அல்லாஹ் கூறுகிறான்:…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *