ரமழான் அமல்களின் பருவ காலமாகும். சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.
நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புனித ரமழான் எம்மை வந்தடைந்தடைந்திருக்கின்றது. எவ்வாறு ஒரு விருந்தாளி எம் வீட்டை நோக்கி வருகின்ற பொழுது மகிழ்ச்சியாக இருக்குமோ, அதைவிட பன்மடங்கு ரமழான் என்கின்ற விருந்தாளி வந்தடைந்தபோது ஒருவித குதூகலம், சந்தோசம் எம்மில் தென்பட்டது. ஆனால் ரமழானில் சிலநாட்கள் எம்மை அறியாமலே உருண்டோடிவிட்டன. சென்ற நாட்களை பயன்மிக்கதாக அமைத்துக்கொண்டோமா இல்லையா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது.
வருடாந்தம் ரமழான் மாதத்தை சந்திக்கின்றோம். சிலநேரம் இந்த ரமழான் எமது வாழ்நாளின் இறுதி ரமழானாகக் கூட இருக்கலாம். சிலர் சென்ற வருடம் எம்முடன் ஒன்றாக தொழுதார்கள். உணவு உண்டார்கள். சமூகப் பணி்களில ஈடுபட்டார்கள். இருப்பினும், இந்த புனிதமிகு ரமழானை அவர்களுக்கு அடையக் கிடைக்கவில்லை! வருகின்ற வருடம் நாமும் எங்கு இருப்போம் என்பது எமக்குத் தெரியாது. இறைவன் இது போன்ற நல்ல பல ரமழான்களை வாழ்க்கையில் சந்தித்து நற்காரியங்கள் புரிந்த, நல்லடியார்களாக இறைவனை சந்திக்க துணை புரிவானாக!
சகோதரர்களே! இன்னும் சில ரமழானிய நாட்கள்தான் எம்முடன் தங்கி இருக்கப் போகின்றன. இப்போது எஞ்சி இருக்கின்ற நாட்களை நாம் எந்தளவு தூரம் நல்லமல் செய்ய சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது பற்றி குறுகிய நேரத்திற்குள் சுருக்கமாக பார்ப்போம்.
பொதுவாக மனிதனிடம் உள்ள இயல்பு என்னவெனில், சந்தர்ப்பங்களை பயன்படுத்த தவறி விட்டு கைசேதப்படுவதாகும். சென்ற காலத்தை நினைத்து கவலைப்படுவது வழமையாகிவிட்டது. இதை உண்மைப்படுத்தும் விதமாக அல்லாஹ் அல்குர்ஆனில் மனிதனுடைய கடைசி நிலையில் மனிதன் அல்லாஹ்விடத்தில் அவகாசம் கேட்பதை இவ்வாறு கூறுகின்றான்.
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். (63:10)
وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَاؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் – நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (63:11)
மேற்படி இந்த ஆயத்தை பார்க்கும் பொழுது காலமே ஒரு சந்தர்ப்பமாகும். நல்லமல் புரிந்து தானதர்மங்கள் கொடுத்து அல்லாஹ்வை நெருங்குவதற்கு இனிய சந்தர்ப்பமாகும்.
இறுதி நேரத்தில் கூட அடியான் நல்லமல் புரிவதற்கு இறைவனிடம் சந்தர்ப்பம் கேட்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.
மனிதன் இறுதித் தருவாயில் மாத்திரமல்ல மறுமையில் கூட அவன் கழித்த பயனற்ற நாட்களை யோசித்து கைசேதப்படுவான். இறைவன் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.
اَنْ تَقُوْلَ نَفْسٌ يّٰحَسْرَتٰى عَلٰى مَا فَرَّطْتُّ فِىْ جَنْۢبِ اللّٰهِ وَاِنْ كُنْتُ لَمِنَ السّٰخِرِيْنَۙ
“அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்; (39:56)
اَوْ تَقُوْلَ لَوْ اَنَّ اللّٰهَ هَدٰٮنِىْ لَكُنْتُ مِنَ الْمُتَّقِيْنَۙ
அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் – பயபக்தியுடையவர்களில் – ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; (39:57)
اَوْ تَقُوْلَ حِيْنَ تَرَى الْعَذَابَ لَوْ اَنَّ لِىْ كَرَّةً فَاَكُوْنَ مِنَ الْمُحْسِنِيْنَ
அல்லது: வேதனையைக் கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்; (39:58)
بَلٰى قَدْ جَآءَتْكَ اٰيٰتِىْ فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكٰفِرِيْنَ
(பதில் கூறப்படும்:) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.”
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அடியார்கள் நழுவிப்போன சந்தர்ப்பத்தை நினைத்து வேதனை செய்யப்படும்போது பின்வருமாறு கூறுவார்கள்.
يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். (39:66)
وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (33:67)
رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيْرًا
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்). (33:68)
இந்த ஆயத்துக்களை படித்துப் பார்க்கின்ற பொழுது மனிதன் வாழ்வில், சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டு காரணங்கள் கூறி கடந்த காலத்தை நினைத்து கைசேதப்படுகின்ற நிகழ்வு நாளை மறுமையில் நடக்கப்போகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
எனவே, இப்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பு மிக அருமையானது.
நன்மைகளை சம்பாதித்துக் கொள்வதற்காக தரப்பட்டுள்ள இனிய நாட்கள் இந்த ரமழானுடைய நாட்கள். நானும் நீங்களும் முறையாக இந்த நாட்களை பயன்படுத்த தவறி விட்டால் நிச்சயமாக நாமும் கைசேதப்பட வேண்டிய ஏற்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
நாளை மறுமையில் நாமெல்லாம் கேள்வி கணக்கிற்காக ஒன்று சேர்க்கப்பட இருக்கின்றோம்.
وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖؕ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا
ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் – திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான். (17:13)
اِقْرَاْ كِتٰبَك َؕ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًا ؕ
“நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம். (17:14)
ஒவ்வொருவரின் அமலை பொருத்து அவர்களுக்குரிய செயலேடுகளை நீங்களே படித்துப் பாருங்கள். அங்கே நாம் பிடித்த நோன்பு, தொழுத தராவீஹ் , தொழுகையில் சலாம் கொடுத்த பின் செய்யப்பட்ட உரையாடல்கள். மற்றவர்களைப் பற்றி முதுகுக்குப் பின்னாலிருந்து பேசிய புறம், தீய எண்ணங்கள் யாவும் கண்முன்னே காட்டப்படும் அப்போதுதான் நாம் வாழ்ந்த வாழ்க்கையில் என்ன செய்தோம் எனத் தெரியவரும்.
செய்கின்ற அமல்கள் எண்ணப் படமாட்டாது. நிறுவையில் வைத்து நிறுக்கப்படும்.
ரமழான் வந்துவிட்டால் நேரம் காலம் எடுத்து நல்லமல்கள் செய்கின்றோம். பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணக்கம் புரிதல், குர்ஆன் ஓதுதல் திக்ர் செய்தல் போன்ற பல்வேறுபட்ட இபாதத்துகளில் எங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றோம்.
ஆம், இவ்வாறான அமல்களில் மனத்தூய்மை காணப்படுகின்றதா என ஒரு கணம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனத்தூய்மை பேணப்படாத வணக்கங்கள் அல்லாஹ்வின் பார்வையில் செல்லாக்காசாக மாறிவிடும்.
நாம் இரவு வணக்கத்தில் ஈடுபட்டு கொண்டு மற்றவர்களை தரக் குறைவாக பார்ப்பது, எமது அமலை வீணடித்து விடும். அதனால் மற்றவர்களை அல்லது பாவத்தில் ஈடுபடுபவர்களை இரண்டாம் கண்கொண்டு பார்ப்பதற்கு ஒரு நாளும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை இறைவன் அல்குர்ஆனில்
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّۚ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِؕ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ ۚ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (49:11)
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا ؕ اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ ؕ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (49:12)
காலம் முழுக்க பாவம் செய்த மனிதன் தராவிஹ் தொழுகைக்காக வேண்டி அல்லாஹ்வின் ஆதரவை எதிர்பார்த்து சமூகமளித்து இருக்கின்ற போது அவரைப் தாழ்வாகக் கருதுவது ஒரு முஃமினுடைய பண்பாக இருக்க மாட்டாது. யாருக்கும் தரம் பிரிப்பதற்கு எந்த அதிகாரமோ, உரிமையோ கிடையாது.
ஒருவேளை பாவத்தில் ஈடுபட்ட மனிதன் அல்லாஹ்விடத்தில் தௌபா செய்து, மீண்டு இறைவனின் நல்லடியார்களில் ஒருவராக மாறலாம். இதைத்தான் மேலே கூறிய அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
ஆகவே மற்றவர்களுடைய குறைகளை அலசுவதை, விட்டுவிட்டு என்னிடம் என்ன குறை இருக்கின்றது. நான் எந்தளவு பாவம் செய்துள்ளேன், நான் செய்த வணக்கங்கள் யாவும் ஒப்புக்கொள்ளப்பட்டனவா..? இல்லையா…? இதை வைத்து இறைவன் எனக்கு சுவர்க்கம் கொடுத்து விடுவானோ.? என்று சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
நான் அடிக்கடி கூறுகின்ற வாக்கியம்தான் “நாம் எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல! வாழ்ந்த காலத்தில் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியமாகும்.”
நபித்தோழர்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இவ்வாக்கியத்தின் அர்த்தத்தை நன்கு புரியலாம்.
வரலாற்றில் அல்லாஹ்வின் வாள் எனப்பெயர் சூட்டப்பட்ட ஹாலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இஸ்லாத்தில் வாழ்ந்த காலம் மூன்று வருடங்களாகும். மக்கா பெற்றுக்கொள்ளப்பட்ட பிறகுதான் இஸ்லாத்தை ஏற்றார்கள். பத்ர், ஹன்தக், தபூக் போன்ற யுத்தங்களில் எதிரியாக செயல்பட்டவர். ஆனால் அல்லாஹ் நேர்வழி காட்டிவிட்டான். அவ்வாறே இக்ரிமா (ரழி), ஹின்தா ரழி போன்றோர்களின் வரலாற்றையும் படித்துப் பாருங்கள்! இவர்கள் இஸ்லாத்தில் நீண்ட காலம் வாழா விட்டாலும் இஸ்லாத்தில் இருந்த காலத்தில் அளப்பரிய சேவைகள் செய்துவிட்டு அல்லாஹ்வுடைய பொருத்தத்துடன் இந்த மண்ணை விட்டும் மறைந்து விட்டார்கள்.
எனவே ரமழானில் நாம் செய்கின்ற அமல்களுக்கு பாரம், கனம் இருக்கவேண்டும்! ஏனெனில் மறுமையில் அமல்கள் கணக்கிடப்பட படமாட்டாது! மாறாக அவைகள் நிறுக்கப்படும்!
30 நாள், நாம் தொழுத தராவீஹை விட, பாவம் புரிந்த மனிதருடைய இரண்டு ரக்அத்துகள் இறைவனிடத்தில் பாரமாக இருக்கலாம்.
எமது வணக்கங்களை மனத்தூய்மையுள்ளதாக மாற்றுவோம். அப்போதுதான் இறைவன் அவைகளை ஏற்றுக் கொள்வான். அதற்கான பூரண கூலிகளை வழங்குவான். இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நன்மைகளை சம்பாதித்துக் கொள்ள நாம் முயற்சி எடுக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாவது;
عن عبدالله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم؛؛
اغْتَنِمْ خَمْسًا قبلَ خَمْسٍ : شَبابَكَ قبلَ هِرَمِكَ ، وصِحَّتَكَ قبلَ سَقَمِكَ ، وغِناكَ قبلَ فَقْرِكَ ، وفَرَاغَكَ قبلَ شُغْلِكَ ، وحَياتَكَ قبلَ مَوتك
أخرجه الحاكم في المستدرك -7846/4/77
ஐந்து விடயங்கள் வருவதற்கு முன்னால் ஐந்து விடயங்களை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்! உனது வயோதிபத்திற்கு முன்னால் உனது வாலிபத்தையும், உனக்கு நோய் வருவதற்கு முன்னால் ஆரோக்கியத்தையும் உனக்கு ஏழ்மை நிலை வருவதற்கு முன்னால் உனது செல்வத்தையும் உனது வேலை சோழிகள் வருவதற்கு முன்னால் உனது ஓய்வு நேரத்தையும் உனது, மரணத்திற்கு முன்னால் உனது வாழ்நாளையும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வீராக!
மேற்படி நபிமொழியின் பிரகாரம் எமது வாழ்வில் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களை அவசரமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்!
இந்த ரமழானில் கிடைத்திருக்கின்ற எமது ஓய்வு நேரங்கள் மிகவும் பெறுமதியானது. ஓய்வு நேரங்களை வீணடித்து விட்டு இறுதித் தருவாயில் மனிதன் அவகாசம் கேட்பான்.
இப்போது உடம்பில் தேக ஆரோக்கியம் இருக்கின்றது. இந்த ஆரோக்கியம் பாவம் செய்வதற்கல்ல! நோயில் நாம் பீடிக்கப்பட்டு விட்டால், இன்னும் ஒருவருடைய உதவி எமக்கு தேவைப்படும்! அக் கட்டங்களில் மனைவி பிள்ளை குட்டிகள் யாவரும் எனக்கு வேறு வேலை இருக்கின்றது என்று கூறினால் எவ்வளவு மனம் வருத்தமாக இருக்கும். அனைத்து வேலைகளையும் சுயமாக செய்கின்ற காலத்தின் பெறுமதி அப்போதுதான் விளங்கும்.
அவ்வாறுதான் கரத்தில் செல்வம் இருக்கின்றது. வங்கியில் பணம் சேமிப்பாக இருக்கின்றது. அதை எடுத்துக்கொண்டு தர்மம் புரிய வருகையில் ஒப்படைப்பதற்கு சக்தி அற்று போய் விடுவோம். அல்லது பயனற்ற முறையில் வீணாக அல்லி இறைத்து விட்டு இறுதித் தருவாயில் ஒரு நோன்பு பிடிப்பதற்கும் இரண்டு ரக்அத் தொழுவதற்கும் தானதர்மங்கள் கொடுப்பதற்கும் அவகாசம் கேட்க வேண்டிய நிலைமை ஒவ்வொருவருக்கும் உண்டாகும்.
சென்ற வருடம் செல்வச் செழிப்போடு இருந்தேன். ஸக்காத் கொடுப்பதற்கும் தகுதி பெற்று இருந்தேன். ஆனால் இந்த வருடம் ஸகாத் பெற வேண்டிய பட்டியலில் இருக்கின்றேன். செல்வம் வரும், போகும். இருக்கின்ற நேரத்தில் நாம் கொடுக்க பழகிக்கொள்ளவேண்டும். அப்போதுதான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியவர்களாக நாம் மதிக்கப்படுவோம்.
ரமழானில் சிலர் இப்தார் செய்வதற்குக் கூட வசதியற்றவர்களாக இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களை நாம் தேடி உதவிக்கரம் நீட்ட வேண்டும்!
நாம் யாரும் வறுமையின் உச்சகட்டத்தை காணவில்லை! இறைவன் மரணம் வரைக்கும் வறுமையின் வாடையைக் கூட நுகறாமல் இருப்பதற்கு அருள் செய்ய வேண்டும். சோமாலியா நாட்டில் மக்கள் வறுமையில் வாடுவதை பார்க்க முடியாது அப்படிப் பார்த்தவர்கள் நிச்சயமாக கண்கள் கண்ணீர் வடிக்கும்.
ஒரு முறை ஸவ்தி அரேபியாவின் ஷேக் ஒருவர் நேரலை கேள்வி, பதில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது பொறுமை நாடான சோமாலியாவில் இருந்து ஒரு சகோதரர் தொடர்பு கொண்டு பின்வருமாறு வினா ஒன்றை எழுப்பினார்.
“இப்தார் செய்கின்ற போது உட்கொண்ட உணவை வைத்து அடுத்த நாளுக்குரிய நோன்பை நிய்யத்து வைத்து விடலாமா?”
இந்த கேள்வியை செவிமடுத்த ஷெய்க் அவர்கள் அழுதுவிட்டார்கள்.
நண்பர்களே! இவ்வாறு ஸஹர் செய்வதற்கு உணவு இல்லாத நிலையில் தற்பொழுது கூட சோமாலியாவில் வாழும் மக்கள் வறுமையில் உச்சகட்டத்தில் உள்ளார்கள். அவர்களுடைய பசி பட்டினிக்கு இன்னும் சரியான தீர்வு கிடைக்கவில்லை!
இந்த நாட்டில் சுதந்திரமாக நோன்பு பிடிக்கும் நாம் தாராளமாக நல்ல பல உணவுகளை உட்கொள்கிறோம். இறைவனுக்கே புகழனைத்தும். உண்மையில் நாம் இவ்வாறான வறுமையை கண்டது கிடையாது. அன்பு நபியின் அழகிய பிரார்த்தனைகளில் ஒன்றுதான்.
اللهم إنا نعوذ بك من الكفر والفقر
யா அல்லாஹ்! நாங்கள் உன்னிடம் இறை நிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறோம்! எனவேதான் உனக்கு வறுமை வருவதற்கு முன்னால், செல்வத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு தானதர்மங்கள் செய்யுங்கள் என அல்லாஹ்வின் தூதர் வழிகாட்டினார்கள்.
வசதி படைத்தவர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பணத்திற்கு வருடாந்தம் கணக்குப் பார்த்து ஸக்காத்தை உரியவர்களுக்கு வழங்கிவிட வேண்டும்! அல்லது பள்ளிவாயல்களில் இயங்கும் கூட்டு ஸக்காத் குழுவினருடன் இணைந்து கொடுக்க வேண்டும்!
ஸக்காத் பணத்தை பதுக்கி வைப்பது ஏனைய சொத்து, செல்வங்களையும் பாழாக்கிவிடக்கூடியதாகும். இந்நிலையிலிருந்து இறைவன் எம்மை பாதுகாக்க வேண்டும்.
சகோதரர்களே. நாம் இருக்கும் இந்தப் புனித நாட்களிலும் மேற்கூறிய ஐந்தையும் சந்தர்ப்பமாக பயன்படுத்தி அல்லாஹ்வுடைய அருளையும் பொருத்தத்தையும் அடைந்துகொள்ள முயற்சிப்போம்.
ரமழான் நோன்பு எம்மில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன?
ரமழான் என்னைவிட்டு பிரியும்போது என்மேல் எத்தகைய மாற்றம் உருவாக வேண்டும். ரமழானுக்கு முன்னாள் நாம் எப்படி இருந்தோமோ அதே நிலையில் நிறைவுறும் போதும் இருப்போமாக இருந்தால் நாம் சரியாக ரமழானை பயன்படுத்தவில்லை என்றுதான் அர்த்தம்.
அருமை நபித்தோழர் உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் தனது சகோதரியின் வீட்டுக்குள் நுழையும்போது இஸ்லாத்தின் பரம விரோதியாக செயல்பட்டது மாத்திரமல்ல! அல்லாஹ்வின் தூதருடைய கழுத்தை எடுத்து வருவதற்காக துணிவு கொண்டு, நுழைகிறார். ஆனால், அல்லாஹ்வின் நியதி ஏற்பாடு உள்ளே நுழைந்த உமர் தனது சகோதரியின் குர்ஆனிய ஓசையை செவிமடுக்கின்றார். குர்ஆனிய வசனங்கள் அவரை அதிர வைத்துவிட்டன. வீட்டிலிருந்து பெரும் மாற்றத்துடன் வெளியேறினார்.
இங்கே உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் வீட்டினுள் நுழைந்து குர்ஆனை செவிமடுத்ததன் பின்னர் அண்ணாரின் நிலை ஒன்றாக இருக்கவில்லை. முற்று முழுதாகவே அவர்கள் மாறிவிட்டார்கள். அந்தக் குர்ஆன் அவர்களில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. நாம் ரமழானை அடைந்திருக்கிறோம். இந்த மாதம் குர்ஆனிய மாதமாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகும் . எனவே ரமழான் எம்மை விட்டு பிரியும் போதும் எம்மில் பல மாற்றங்களை அது ஏற்படுத்த வேண்டும்.
ரமழான் 27ஆவது இரவில் மாத்திரம் பாவமன்னிப்புக் கூறிவிட்டால் போதுமா?
பொதுவாகவே ரமழான் காலத்தில் 27ஆவது இரவில் பள்ளிவாயல்கள் நிரம்பிவிடும். ஆனால் மறுநாள் இரவிலே அல்லாஹ்வின் இல்லங்கள் ஓய்ந்து விடுகின்றன.
லய்லதுல் கத்ரின் சிறப்பை பெறுவதற்காக ரமழானின் இறுதிப் பத்தில் “இஃதிகாப்” பள்ளியில் தரித்திருப்பது பெருமானாரின் பெரும் வழிகாட்டலாகும். அவைகளை பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
அன்பு வாலிபர்கள்! அன்னியப் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு பெற்றோர்களை துன்புறுத்திக் கொண்டு இருபத்தேழாம் இரவில் மாத்திரம் பள்ளியினுள் நுழைந்து நாடகம் நடிக்காதீர்கள்!
அல்லாஹ்வை இவ்விடயத்தில் பயந்து கொள்ளுங்கள். இரவில் தவ்பா செய்வது போன்று பாசாங்கு செய்துவிட்டு, மறுநாள் காலையில் பாவம் செய்ய ஆரம்பித்து விடுக்கின்றனர். தவ்பா செய்வதற்கு முன்பு பாவங்களிலிருந்து முற்று முழுதாக தவிர்ந்து கொள்ளுங்கள்! பின்பு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்! இறைவன் நிச்சயமாக நம் அனைவரையும் மன்னிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கின்றான்.
சமூகத்தில் பரந்து காணப்படும் பல பாவங்கள் உள்ளன.
விபச்சாரம்:
இது பல்வேறு பரிமாணங்களில் தலைதூக்கியுள்ளது. இப் பெரும் பாவத்திற்கு தவ்பா செய்து விட்டு பள்ளியினுள் வாருங்கள்!
பெற்றோர்களுக்கு தனது பிள்ளை குட்டிகள் வீட்டினுள் செய்கின்ற பாவத்தை தடுப்பதற்கே துணிவு இல்லாத ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மறைக்கப்பட வேண்டிய மானங்கள் இன்று சீர் குலைக்க படுகின்றன.
வட்டி:
அல்லாஹ் எச்சரித்த பெரும்பாவங்களில் வட்டியும் ஒன்றாகும்.
அல்லாஹ் குர்ஆனில் யுத்தம் பிரகடனத்திற்கு தயாராகும்படி கூறுமளவுக்கு பெரும் பாவமாகும். ஆனால் சமூகத்தில் பலர் இப் பாவத்தில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். பாவமென்று கூட, புரியப்படாதளவுக்கு ஈடுபடுகின்றனர்.
வாரிசுரிமை சொத்து:
மீண்டும் இஸ்லாமிய சமூகத்தில் கண்டுகொள்ளப்படாத ஒரு பாவம்தான் வாரிசுரிமை சொத்தில் அநியாயம் புரிதல்.
பெற்றோர்களே! குடும்பத் தலைவர்களை! இஸ்லாத்தில் பாகப்பிரிவினை சட்டங்களில் தவறிழைத்துவிடாதீர்கள்! அனந்தரச் சொத்துக்கள் பங்கு பிரிக்கும் விடயமாக நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் அல்குர்ஆனில் வாரிசுரிமை சொத்துக்களை பிரிக்கும் விடயத்தை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளான்.
لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ ؕ نَصِيْبًا مَّفْرُوْضًا
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே, (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (4:7)
அல்லாஹ் இந்த வசனத்தில் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். அதேபோல பெண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே என்று குறிப்பிடுகிறான்.
மார்க்கத்தில் பல்வேறுபட்ட சட்டப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இந்த அனந்தரச் சொத்து விடயமாக உலமாக்கள் ஏகோபித்த கருத்தை கொண்டுள்ளனர்.
யாரிடத்திலும் கருத்து வேறுபாடுகள் கிடையாது! அவ்வளவு தெளிவாக குர்ஆன் பேசியிருக்கின்றது. சொத்துப் பங்கீடு செய்வதில் மனித மனம் விரும்பும் கருத்துக்கு எவ்வித மதிப்பும் இல்லை!
குடும்பத் தலைவன் மரணித்து விட்டால் நினைத்தபடி சொத்துக்களை பங்கு போட்டு விட முடியாது! குடும்பச் சொத்துகளில் நேர்மையான பங்கீடு செய்யவில்லையெனில் அது மிகவும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி தலைமுறையாகப் பகைமையை வளர்த்துவிடும். எனவே இப் பாகப்பிரிவினை விடயமாக மோசடி செய்யாதீர்கள்! இவைகளைப் படித்து விளங்கி செயற்படுவதற்கு இறைவன் துணை புரிவானாக.
யா அல்லாஹ்! பாவத்தை விட்டுத் தவிர்ந்து உனது மன்னிப்பையும் அருளையும், பெற்ற கூட்டத்திலே எம்மை சேர்த்தருள்வாயாக!
மரணத்திற்கு முன்னால் உண்மையான தவ்பாவை தந்தருள்வாயாக!
இந்த ரமழானை எமது வாழ்நாளில் இறுதி ரமழானாக ஆக்கிவிடாதே! மென்மேலும் பல ரமழான்களை, சந்தித்து மனத்தூய்மையான நிலையில் உன்னை சந்திப்பதற்கு எம் அனைவருக்கும் அருள் செய்வாயாக!