நோன்பின் நோக்கமும் பத்ர் யுத்தம் தரும் படிப்பினைகளும்

மிக வேகமாக எம்மை வந்தடைந்த இந்த ரமழான், இன்னும் சில நாட்களில் எம்மை விட்டும் விடை பெறப் போகின்றது. உலகச் சக்கரம் மிக வேகமாக அதன் பாதையில் சுழன்று கொண்டிருக்கிறது. காலங்களுக்கு சொந்தக்காரன் அதை நினைத்த படி இயக்கிக் கொண்டிருக்கின்றான்.

இந்த புண்ணிய ரமழானில் எம்மை கடந்து சென்ற கண்ணியமான நாட்களை பயன்படுத்தினோமா அல்லது வீணாக்கி விட்டோமா என்ற கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்பதை நமக்குள் நாமே கேட்டுக் கொள்வோம்.

எம்மை பன்படுத்தி பக்குவப்படுத்த வந்த இந்த இனிய ரமழானிய நாட்கள் எந்தளவு தூரம் எம்மில் மாற்றங்களை ஏற்படுத்தின. ரமழான் ஆரம்பிக்கும்போது எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலையில் நாம் இருக்கிறோம்? அல்லது ஏதாவது வித்தியாசம் தெரிகின்றதா? என்பது பற்றி நாம் சுய விசாரணை செய்துகொள்ள வேண்டும்!

ஒரு வியாபாரி சிரமப்பட்டு வியாபாரம் செய்வதில் அர்த்தம் வேண்டும். அதற்கு அவருக்கு குறிக்கோள் தேவை. அவ்வாறுதான் ஒரு வைத்தியரிடம் நாம் எமது உடம்பில் இருக்கின்ற நோயை, ஆரோக்கியமற்ற தன்மையை கூறி மாத்திரைகளை எடுத்து வீடு திரும்புகிறோம். வைத்தியர் சொன்னபடி உரிய நேரத்தில் மாத்திரை சாப்பிடுகின்றோம். ஆனால் குறித்த நாட்களில் எதுவும் மாற்றங்கள் தெரியவில்லையெனில் நாம் என்ன செய்ய வேண்டும்? எங்கே பிரச்சினை இருக்கின்றது என்று அலசி ஆராய ஆரம்பித்துவிடுவோம்.

ஒவ்வொரு விடயங்களுக்கும் குறிக்கோள் இருப்பதுபோன்று வணக்கங்களுக்கும் நோக்கங்கள் இருக்கின்றன. அந்த வகையில், வருடாந்தம் நாம் நோட்கின்ற நோன்பிற்கு உயர்ந்த நோக்கம் உண்டு. அதனையே அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قلبكم لعلكم تتقون.

“இறைநம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சமுள்ளவராய்த் திகழக்கூடும்.” (குர்ஆன் 2:183)

நாம் பக்குவப்பட்டு, பயபக்தியுடயவர்களாக மாற்றுவதுதான் நோன்பின் பிரதான நோக்கமாகும். மேற்கண்ட வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

ஆன்மீகப் பக்குவத்தையும் நல்ல பண்பாட்டையும் வளர்க்க சிறந்த சூழல் இன்றியமையாத ஒன்றாகும். “மனிதன் சூழலுக்கு அடிமை என்பார்கள்” சூழல் ஒருவருக்கு எப்படி அமைகின்றதோ, அவ்வாறே அவனுடைய நடை, உடை, பாவனை யாவும் மாற்றம் உண்டாக ஆரம்பித்துவிடும். எனவே ஆன்மீக ரீதியாக எம்மை பக்குவப்படுத்திக் கொள்ள இந்த புனித ரமழான் அரிய வாய்ப்பாகும். இந்த ரமழான் எமக்கு நல்ல சூழலை அமைத்துத் தருகிறது. யாரைக் பார்த்தாலும் நோன்பாளிகள் எங்கு சென்றாலும் உலமாக்களின் அறிவுரைகள் காதில் விழுகின்றன. பள்ளிவாசல்களுக்கு சென்று பார்த்தால், அனைவரும் குர்ஆனும் கையுமாக இருக்கின்றார்கள். இரவு வணக்கங்களில் கூடிய கவனம் செலுத்துகிறார்கள். இதுபோன்ற நல்ல ஈமானிய நிகழ்வுகளை பார்க்கின்ற பொழுது மனிதனின் ஈமான் புத்துணர்வு பெறுகின்றது. மனிதர்களுடைய ஈமான் இறை விசுவாசம், இடத்தை பொருத்து காலத்தைப் பொருத்து கூடும், குறையும். நபிமார்களுடைய ஈமான் இறை விசுவாசம் அதிகரித்துக்கொண்டே செல்லும். வானவர்களுடைய இறை விசுவாசம் உயர் அந்தஸ்தில் அப்படியே இருக்கும். எந்நேரமும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். இதுவே எமது “அகீதா” இஸ்லாமியக் கொள்கையாகும.

நிச்சயமாக இந்த ரமழான் எம்மை சீர்படுத்திக் கொள்ள, எமது வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றியமைக்க நல்ல காலமாகும். ஆன்மீகப் பக்குவத்தை உண்டாக்குவதற்கு சிறந்த சூழல் ஆகும். இந்த சந்தர்ப்பத்தை தவறி விட்டு கைசேதப்படுவதில் அர்த்தமில்லை.

பத்ருப் போர்க் களமும் நாம் படிக்க வேண்டிய பாடமும்.

இப் புண்ணியம் நிறைந்த மாதத்திலேதான் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான வேறுபாட்டை எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற யுத்தம், “பத்ர்” யுத்தமாகும்.

போதியளவு முன்னேற்பாடுகளோ, முன் அனுபவங்களோ இல்லாத நிலையில் நோன்பு நோற்றவர்களாக, நேருக்கு நேராக சுமார் 300 நபித்தோழர்கள், 1000 இறைமறுப்பாளர்களை யுத்த களத்தில் எதிர் கொண்டார்கள். உண்மையில், ஈமானிய பலத்தாலும், ஈகைக் குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று எதிரிகளை சிதறடித்த செய்த நிகழ்ச்சி அதுவாகும்.

வரலாற்றில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை உண்டாக்குவதற்கு காரண, கர்த்தாவாக இருந்த, பத்ர் யுத்தம் பற்றி சிறிது ஆராய்வோம்.

ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் இப் போர் நடைபெற்றது.

அபூ சுப்யான் ஷாம் தேசத்திலிருந்து, பெரும் வர்த்தகப் பொருட்களுடன் மதீனாவை அண்டிய பகுதியால், வருகின்றார் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்த வியாபாரக் குழுவை மடக்கிப் பிடிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்கின்றார்கள். அபூ சுப்யான் உளவு பார்த்ததில் நபி(ஸல்) அவர்கள் தன்னைப் பிடிக்கக் கூடும் என்று அறிந்து மக்காவுக்கு செய்தி அனுப்புகின்றார். இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த மக்காவாசிகள் முஸ்லிம்களைப் பூண்டோடு அழிப்பதற்காகப் படைதிரட்டி வருகின்றனர். அப்போது, அபூ சுப்யான் தந்திரமாக அங்கிருந்து முஸ்லீம்களை எதிர்த்து தாக்க வேண்டும் என்ற நோக்குடன் ஆயிரம் பேர் கொண்ட பெரும் பலசாலியான கூட்டத்தை அபூ ஜஹ்லின் தலைமையின் கீழ் அழைத்துக் கொண்டு வருகிறார்.

முஸ்லிம்கள் ஆயுதக்குழுவுடன் மோதும் நிலை ஏற்பட்டது. இந்தப் போரில் முஸ்லிம்கள் பலத்த வெற்றி பெறுவதுடன், குறைஷிக் கூட்டம் வலு இழக்கச் செய்யப்பட்டது. இது குறித்து அல்லாஹ் குறிப்பிடும் போது,

وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ  ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (3:123)

பத்ரில் கலந்து கொண்ட முஸ்லிம் போராளிகள் குறைவாக இருந்தும், அல்லாஹ் அவர்களுக்கு காபிர்களைக் குறைவாகக் காண்பித்து, முஃமின்களின் தொகையைக் காபிர்களுக்கு அதிகமாகக் காண்பித்தான்.

 اِذْ يُرِيْكَهُمُ اللّٰهُ فِىْ مَنَامِكَ قَلِيْلًا ؕ وَّلَوْ اَرٰٮكَهُمْ كَثِيْرًا لَّـفَشِلْـتُمْ وَلَـتَـنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَلٰـكِنَّ اللّٰهَ سَلَّمَؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏

(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன். (8:43)

وَ اِذْ يُرِيْكُمُوْهُمْ اِذِ الْتَقَيْتُمْ فِىْۤ اَعْيُنِكُمْ قَلِيْلًا وَّيُقَلِّلُكُمْ فِىْۤ اَعْيُنِهِمْ لِيَـقْضِىَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ‏

நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் – இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் – அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன. (8:44)

ஏன் உஸ்மான் ரழி பத்ர் யுத்தத்தில் கலந்து கொள்ள வில்லை?

உஸ்மான் (ரழி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளவில்லை. இதை அன்றைய குழப்பக்காரர்கள் ஒரு பெரும் குறையாக முன்வைத்தனர். பத்ருப் போர் திட்டம் தீட்டி முன்னெடுக்கப்பட்ட ஒரு போர் அல்ல. திடீரென முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்ட போராகும். எனவே, பத்ரில் கலந்து கொள்ளாத எவரும் குறை கூறப்படவில்லை. இவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அவரைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எதிரிகள் இவ்விடயத்தை பூதாகரமாக்கினர்.

பத்ர் போருக்கு உஸ்மான் (ரழி) அவர்கள் செல்ல முற்பட்டார்கள். அந்த வேளையில் நபி (ஸல்) அவர்களது மகளார், உஸ்மான் (ரழி) அவர்களின் மனைவி ருகையா (ரழி) கடினமாக சுகயீனமுற்றிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தான் உஸ்மான் (ரழி) அவர்களை வர வேண்டாம் என்றும் மகளைக் கவனித்துக் கொள்ளுமாறும் கூறினார்கள். அதுமட்டுமன்றி நீர் போரில் பங்குபற்றாவிட்டாலும் பங்குபற்றியதற்கான நற்கூலியும், போர் வெகுமதியின் பங்கும் உனக்கும் உள்ளது என்று ஆறுதல் கூறினார்கள். போரில் வெற்றிவாகை சூடி நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது அவரது மகள் மரணித்திருந்தார்கள்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்களின் உத்தரவின் பெயரில்தான் உஸ்மான் (ரழி) அவர்கள் பத்ர் போரில் பங்குகொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகள் ஏராளம்.

அல்லாஹ்வை நம்பியவர்களுக்கு அவன் உதவி நிச்சயம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ சுபியான் உடைய 80 பேர் கொண்ட வியாபாரக் கூட்டத்தை தான் மடக்கிப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அதற்குள்ளே அபூசுபியான் செய்தி அனுப்பி பெரும் கூட்டத்தையே திரட்டிக் கொண்டு வந்தான் அப்படியிருந்த இருந்தபோதிலும் நபியும் தனது தோழர்களும் கூட்டத்தாருடன் அல்லாஹ்வை மாத்திரம் நம்பி போர் செய்து வெற்றி கொண்டார்கள்.

சிறுபான்மையினர் என்பதற்காக வாடி வதங்கத் தேவையில்லை! அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்ச தேவையில்லை! இதனையே பத்ர் போர்க்களம் எமக்கு கற்றுத் தருகிறது. எமக்கு எண்ணிக்கையில் பிரச்சினை இல்லை. ஆள் பலத்தில் பிரச்சினையில்லை! ஆயுத பலத்தில் பிரச்சினையில்லை! பிரச்சினையே அல்லாஹ்வை அஞ்சாதவர்கள் விடயத்தில் தான். அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது,

وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ  ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (3:123)

தற்போது கூட எமது நாட்டில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் யாவற்றையும் இறைவனிடமே முறையிடப் பழகுவோம். எம்மை பாதுகாப்பதற்கு அவனைத் தவிர வேறு யாருமில்லை!

நாம் இன்னும் ஈமானிய சமூகமாக மாறவில்லை. எவ்வாறு அல்லாஹ்வை அஞ்ச வேண்டுமோ அவ்வாறு இன்னும் நாம் அஞ்சவில்லை! ஈமான் பறிபோய் பர்ழான தொழுகைக்குக் கூட சமூகமளிக்காத சமூகமாக மாறி இருக்கின்றோம். இனி எவ்வாறு எமக்கு அல்லாஹ் உதவி கிடைக்கப் போகின்றது?

பத்ரி யுத்தத்தைப் பற்றி பேசும்போது மார்தட்டி நாவளவில் பேசிக் கொள்கின்றோம். ஆனால் அவர்களுடைய ஈமானிய பலத்தை சிந்தித்துப் பார்க்கத் தவிர விட்டோம்.

அன்று பத்ரில் மழை பொழிந்தது. அல்லாஹ் முஃமின்களுக்கு சிரு தூக்கத்தைக் கொடுத்து, அமைதியை வழங்கினான். அதனூடாக, அவர்களது மனநிலையை அவன் உறுதிப்படுத்தினான்.

إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ. (القرآن 8:11)

(விசுவாசிகளே! உங்கள் மனம் மிகக் கூடுதலான எதிரிகளைக் கண்டு பயப்படாது.) அபயம் பெறுவதற்காக அவனிடமிருந்து உங்களுக்கு சிறிய தூக்கத்தை அவன் போட்டான் என்பதை (நினைத்துப் பார்ப்பீர்களா?) (அல்குர்ஆன் 08:11)

மழை மூலம் தூய்மையாக்கல்

அல்லாஹ்வின் அருளால் அன்று மழை பொழிந்து, முஃமின்களின் முகாம் இறுக்கமடைந்தது. காபிர்களின் தங்குமிடம் சகதியாகி, நிலைத்து நிற்க முடியாமல் போனது. மழை மூலமாக முஃமின்களைத் தூய்மையாக்கி பாதங்களை உறுதிப்படுத்தினான்.

وَاذْكُرُوا إِذْ أَنْتُمْ قَلِيلٌ مُسْتَضْعَفُونَ فِي الْأَرْضِ تَخَافُونَ أَنْ يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُمْ
بِنَصْرِهِ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ. (القرآن 8:26)

நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து, உங்களை எந்த மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கி விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். மேலும், நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 8:26)

وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ (44) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ. (القرآن 8:43,44)

நீங்கள் (இரு படையினரும்) சந்தித்த சமயத்தில் அவர்க(ளுடைய எண்ணிக்கை)களை, உங்கள் கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், உங்க(ளுடைய எண்ணிக்கை)களை அவர்களுடைய கண்களுக்கு அவன் அதிகமாகக் காட்டியதையும் (நினைவு கூருங்கள்.) நடந்தேறப்பட வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக (அல்லாஹ் அவ்வாறு செய்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்) மேலும்,அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் திரும்பக் கொண்டுவரப்படும். (அல்குர்ஆன் 08:43-44)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் – அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் – நீங்கள் வெற்றியடைவீர்கள். (8:45)

அல்லாஹ்வின் விரோதிகள் பெரும் ஆயுத பலத்தோடு படையெடுத்த பொழுது, இறைவனை மாத்திரம் நம்பி அவனது உதவியை தேடிக்கொண்டு களத்தில் நின்று பிடித்தார்கள்.

 اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ‏

(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9)

 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى وَلِتَطْمَٮِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏

உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (8:10)

வானவர்களின் வருகை: அல்லாஹுத்தஆலா, தனது உதவியை நேரடியாக வழங்கினான். வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான். ஆயிரம் வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான்.

إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلَائِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَاضْرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانٍ. (القرآن 8:12)

(நபியே!) உமதிரட்சகன்பால்,நிச்சியமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் விசுவாசம் கொண்டோரை உறுதிப்படுத்துங்கள், (என்று கட்டளையிட்டு) நிராகரிப்போருடைய இதயங்களில் திகிலை நான் போட்டுவிடுவேன். ஆகவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துக்களுக்கு மேல் வெட்டுங்கள்! அவர்களின் (உடலில் உள்ள உறுப்புக்களின்) இணைப்புகளைத் துண்டித்து விடுங்கள் என்று (விசுவாசிகளுக்குக் கூறுமாறு வஹீ மூலம்) அறிவித்ததா (நினைத்துப் பார்ப்பீராக!) (அல்குர்ஆன் 08:12)

பத்ர் களத்தில் வானவர்கள் இறங்கி கடுமையாகத் தாக்கினார்கள். அவர்களின் தாக்குதலால் பலர் மாண்டனர். புறமுதுகு காட்டியும் ஓடினர்.

இந்த இனிய மாதத்தில், பாவமன்னிப்பை விட்டும் நிராசை அடைந்து விடாதீர்கள் !

 قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (39:53)

وَاَنِيْبُوْۤا اِلٰى رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ‏

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (33:54)

பல பாவங்கள் அடியார்கள் செய்த போதிலும் இறைவன் அவைகளை மன்னிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கின்றான். இரக்கமுள்ள இறைவன் பல வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி அடியார்களை அழைக்கின்றான்.

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தின் பரம விரோதிகளாக இருந்தவர்கள் கூட பிற்பட்ட காலங்களில் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாத்தின் நேசர்களாக மாறிய வரலாறை நாம் படித்திருக்கின்றோம். உதாரணத்திற்கு பின்வரும் சம்பவங்களை நோக்குவோம்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பெரும் வீரராக காணப்பட்டார். மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர்களுக்கு அல்லாஹ்வின் வாள் பெயர் சூட்டினார்கள். ஏனெனில் அவர் எந்த இடத்தில் களம் இறங்கினாலும் தோல்வி கண்ட வரலாறு கிடையாது. உண்மையில் இந்த காலித் பின் வலீத் என்ற நபித்தோழர் இஸ்லாத்தில் வாழ்ந்த காலம் இரண்டரை வருடங்கள் ஆகும். ஆனால் சாதித்த சாதனைகள் சாதாரணமானதல்ல பல யுத்தங்களில் இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்ட இவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிவிட்டான்.

ஹின்தா, வஹஷீ இவர்கள் இருவரும் ஹம்ஸா (ரழி) அவர்களை கொலை செய்தவர்கள்.

யார் அந்த ஹம்சா(ரழி)?

ஹம்ஸா (ரழி) அவர்கள் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களின் சிறிய தந்தையாவார். மேலும், செவிலித்தாயிடம் பால் அருந்தியதில் நபிகளாருக்கும் இவருக்கும் பால்குடிச் சகோதர உறவும் இருந்தது. இவர் நபிகளாரின் வயதினை ஒத்தவரும் நபிகளாரின் சிறந்த நண்பரும் கூட. வாலிபப் பருவத்தில் சிறந்த உடல்வாகும் வளப்பு மிகு தோற்றமும் கொண்டு விளங்கிய இத்தகைய சிறப்புத் தன்மைகளை தன்னகத்தே கொண்ட ஹம்ஸாரழியல்லாஹு அன்ஹு உஹதுப் போர்க்களத்தில் போராடி கொலை செய்யப்பட்டார்கள்.

அது மாத்திரமல்ல ஹின்தா என்பவள், ஹம்ஸா (ரழி) அவர்களின் வயிற்றை கிழித்து ஈரலை சப்பித் துப்பினாள், பின்பு, மக்கா வெற்றிக்குப் பின் ஹிந்தாவும் வஹ்ஸியும் இஸ்லாத்தை தழுவி விடுகின்றனர். இருப்பினும் நீங்கள் என் கண்முன் தோன்ற வேண்டாம் என அவர்களை மன்னித்து, விடுகிறார் நபிகளார். இத்தகைய கரடு முரடான ஹின்தா, வஹ்ஷீ இருவரையும் இறைவன் மன்னித்து நேர்வழி காட்டினான்.

இக்ரிமா-இவர் இஸ்லாத்தின் பரம விரோதியான அபூஜஹ்லின் மகன். இவரும் தந்தையைப் போலவே விரோதியாகவே இருந்தார். பத்ருப் போரில் முஸ்லிம்களை எதிர்த்தவர். மக்கா வெற்றியின் போது தப்பி ஓடியவர். இவர் மனைவி அழைத்து வந்து, பெருமானாரிடம் மன்னிப்புப் பெறச் செய்தார். இவரையும் இறைவன் மன்னித்து இஸ்லாத்திற்குள் அரவணைத்துக் கொண்டான்.

இவ்வாறு இன்னும் பலர் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரியாக செயல்பட்டவர்களை அல்லாஹ் அவனது கருணையால், அருளால் மன்னித்தான்.

எனவே எத்துணை எத்துணை குற்றங்களை, பாவங்களை செய்தவர்களையும் இறைவன் மன்னிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கின்றான். அவனது மன்னிப்பிலிருந்து, இரக்கத்திலிருந்து நீங்கள் நிராசை அடையாதீர்கள்!

நன்பர்களே!

பாவங்களிலிருந்து முற்றுமுழுதாக, நீங்கி அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்! இந்த ரமழானில் இறைவன் இவைகளை பிழை பொறுக்க போதுமானவன்.

இந்த ரமழானில், இரண்டு விடயங்களை உங்களுக்குள்ளே சுயவிசாரணை செய்து கொள்ளுங்கள்!

  1. எத்துணை நற்காரியங்களை புதிதாக கொண்டு வந்தீர்கள்?
  2. எத்துணை பாவங்களிலிருந்து தவிர்ந்து கொண்டீர்கள்?

எனவே பாவங்களிலிருந்து தவிர்ந்து உளத்தூய்மையுடன் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

குகைக்குள் மாட்டிக்கொண்ட மூவர் நடந்து கொண்ட விதத்தை இமாம் புகாரி (ரஹ்) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது;

”(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர். அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது. மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை விட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான். மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்து விட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 2215 இப்னு உமர் (ரலி).

நாம் செய்த நல்லமல்களை பற்றி கேட்டால் பல்வேறுபட்ட அமல்களை எடுத்து காண்பிக்கலாம். ஆனால் அவைகளில் எத்தனை அமல்கள் இறைவனுக்கு மாத்திரமே செய்தவையாக இருக்கின்றன என்பது முக்கியமானது.

உண்மையில் சிலர் 30 ஹஜ்ஜுகள், 20 உம்ராக்கள் இன்னும், ஏராளமான தான தர்மங்கள் செய்திருப்பார்கள். சிலவேளைகளில், அவைகள் இறைவனிடம் பாரம் குறைந்ததாக இருக்கலாம். இறைவன் எம்மை பாதுகாப்பானாக!

லய்லதுல் கத்ரின் சிறப்பை பெறுவதற்காக ஆசை, ஆதரவு கொள்கின்ற நாம் பாவங்களிலிருந்து விடுபட்டு, தௌபாவுக்குரிய நிபந்தனைகளை பேணி இறைவனிடம் மன்றாடுவோம். கண்ணீர் வடிப்போம். வல்ல இறைவன் நாம் செய்கின்ற நற்காரியங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்! உளத்தூய்மை மிக்கதாக மாற்ற வேண்டும்!

யா அல்லாஹ்! இந்த ரமழானில் பாவமன்னிப்பு பெற்ற கூட்டத்திலே எம்மை சேர்த்து விடுவாயாக! லைலத்துல் கத்ர் என்றழைக்கப்படுகின்ற அந்த இரவின் சிறப்பை எமக்கு கிட்டச்செய்வாயாக! இந்த ரமழானை இறுதி ரமழானாக, ஆக்கிவிடாதே. இன்னும் பல ரமழான்களை சந்தித்து, உன்னுடைய பொருத்தத்தை பெற்று சுவனம் நுழைய, எமக்கு அருள்புரிவாயாக!

முப்தி யூஸுப் ஹனீபா
தொகுப்பு – அஷ்ஷெய்க். அப்துல் வாஜித்
(இன்ஆமி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *