அந்த இரவு எது ?

அந்த இரவு இந்த இரவுதான் என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஒரு இரவு என்றும், பராஅத் இரவு என்றும், ரமழானில் ஓர் இரவென்றும், ரமழானுடைய 27ஆவது இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான சொல் ரமழானில் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவு என்பதுதான்.

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ۝ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ۝لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ ۝ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ ۝سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ ۝

ரமழான் மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது. மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.(அல்குர்ஆன் 97:1-5)

லைலதுல் கத்ரின் அறிகுறி

ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாவது: உபை பின் கஅப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் “ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்கியவர் லைலத்துல்கத்ர் இரவை அடைந்துகொள்வார்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்கூறிவருவதாகச் சொல்லப்பட்டது. அதற்கு உபை (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக! அது (லைலத்துல்கத்ர்) ரமழானில்தான் உள்ளது (இவ்வாறு சத்தியம் செய்தபோது அன்னார் “அல்லாஹ் நாடினால்” என்று கூறாமல் உறுதியாகவே குறிப்பிட்டார்கள்) அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்றுவணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக்கட்டளையிட்டார்கள். அது ரமழானில் இருபத்தி ஏழாம் இரவேயாகும். அ(து லைலத்துல்கத்ர் என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்” என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 1397, பாகம் 6

உப்பாதா இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்அறிவிக்கின்றார்கள், இறைத்தூதர் நவின்றார்கள், லைலதுல் கத்ரின் அடையாளம்ஒளிவீசும் நிலவுள்ள இரவைப் போன்று தெளிந்த பிரகாசமான அமைதியான இரவு. அதில்சூடோ குளிரோ இருக்காது. உதயக்காலைவரை எரிநட்சத்திரங்கள் எறியப்படுவதில்லை. மேலும், அதன்அறிகுறி அன்றைய காலைச் சூரியன் சந்திரனைப் போன்று ஜுவாலையின்றிக் நேராகக் கிளம்பும். அன்றைய தினச்சூரியனுடன் ஷைத்தானும் கிளம்ப அனுமதி இல்லை. (இமாம் அஹ்மத், மஜ்மஃ அஸ்ஸவாயிது,பாகம் – 04, பக்கம் – 75)

லைலத்துல் கத்ரு இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.

அன்றைய இரவில் நட்சத்திரம் எரிந்துத விழாது. நாய் குரைக்காது. சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும். அன்று சூரியன் உதிக்கும்போது சுடர் அதிகமின்றி பிறையைப் போல் இருக்கும். மேலும் ஷைத்தான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது.

லைலத்துல் கத்ரின் சிறப்பு

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் வானவர்களும் ரூஹும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை நீடிக்கும்! (97:1:5)

குர்ஆனில் ஒன்றைப் பற்றி “மா அத்ராக்க” (உமக்கு எது அறிவித்தது?) என்று கூறப்பட்டால் அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விட்டான் என்று பொருள்; “வமா யுத்ரீக்க” (எது உமக்கு அறிவிக்கும்?) என்று கூறப்பட்டால் அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கவில்லை என்று பொருள்! என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

லைலத்துல் கத்ர் இரவை (ரமழானின்) கடைசி ஏழு நாட்களில் தேடுதல்.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமழானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர் (இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமழானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!’ என்று கூறினார்கள்.

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமழானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!’ என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.

கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல்.

இது பற்றிய ஹதீஸை உபாதா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ரமழான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தம் இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி(ஸல்) அவர்கள் இரண்டு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், ‘நான் இந்தப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது; எனவே, கடைசிப்பத்து நாள்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாள்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன்!’ எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை. நான் என் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, ஸுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் கண்டேன்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(லைலத்துல் கத்ரை) தேடுங்கள்!’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; ‘ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!’ எனக் கூறுவார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! ‘லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

மக்கள் சச்சரவிட்டுக் கொண்டிருந்ததால் லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் நீக்கப்படுதல்.

உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!’ எனக் கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ரமழானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!’

இஃதிகாஃப்

(ரமழானின்) கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பதும் எல்லாப் பள்ளிகளிலும் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதும். ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் மருவாதீர்கள்! இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள்! இவ்வாறே, மக்கள் (நேர்வழியையும் கீழ்ப்படியும் முறையையும் அறிந்து) விழிப்புடனிருப்பதற்காக, அல்லாஹ் தன்னுடைய சான்றுகளை அவர்களுக்குத் தெளிவாக்குகின்றான்! (2:187)

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!’

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!’

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமழானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாஃபிலிருந்து வெளியேறுவார்கள். ‘யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!’ எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன.

இஃதிகாஃப் இருப்பவரின் தலையை மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் வாரலாம்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது தம் தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன்.

இஃதிகாஃப் இருப்பவர் தேவை இருந்தால் தவிர மற்ற நேரங்களில் வீட்டிற்குச் செல்லக் கூடாது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபிகள்(ஸல்) அவர்கள் என்னை அணைப்பார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்’ என்று உமர்(ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்’ என்றார்கள்.

பெண்கள் இஃதிகாஃப் இருப்பது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, ‘இவை என்ன?’ என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?’ என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.

லைலத்துல் கத்ரின் துஆ

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு,

اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’) பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன். மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக! (என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

லைலத்துல் கத்ரின் அமல்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர் பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு),நூல்: புகாரி 35)

லைலதுல் கத்ரு இரவு பற்றி நீங்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்! என்று கேட்டேன். அப்போத அபூ ஸயீத் (ரலியல்லாஹு அன்ஹு), ‘நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) வந்து ‘நீங்கள் தேடக் கூடியது (லைலத்துல் கத்ரு) உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள். உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடுப் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) வந்து, ‘நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள்.ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். ‘யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப் பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாள்களில் ஒற்றையான நாளிலுள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்’ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அக்காலத்தில்) பள்ளிவாசலின் முகடு பேரீச்ச மட்டைகளால் அமைந்திருந்தது. வானத்தில் (மழைக்கான) எந்த அறிகுறியும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் திரண்டு மழை பொழிந்தது. அப்போது எங்களுக்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் நெற்றி மீதும் மூக்கு மீதும் களிமண், தண்ணீரின் அடையாளத்தை கண்டேன். அவர்கள் கண்ட கனவை மெய்ப்பிப்பதாக இது அமைந்தது’ என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பு அபூ ஸலமா ரலியல்லாஹு அன்ஹு புகாரி 813

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுபுஹ் தொழுது விட்டுத் தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு)நூல்: புகாரி 2041

Nafees Naleer
(Irfani)

Leave a Reply

Your email address will not be published.