தன் வாழ்விலும் வளர்பிறை

வெளியே மணியடிக்கும் சத்தம் கேட்டது. வீட்டினுள் இருந்த சுஹா ஓடோடிச் சென்று வாசலில் நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சுஹா மிகவும் சுறுசுறுப்பானவள். ஆனால் அவளது ஏழ்மை அவளது சுறுசுறுப்பை குறைத்துவிட்டதோ என்னவோ. இந்த நோன்பு காலங்களில் மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனாவால் அவளது கல்வி நடவடிக்கைகளும் தான் முடக்கி விட்டது. ஆசையுடன் பாடசாலைக்குச் சென்றவள் தற்போது பாடசாலைக்கு செல்ல முடியாது மனதால் முடங்கி விட்டாள்.

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆசிரியர்கள் அன்றாடம் வாட்ஸ்-அப் குழுமத்தில் மாணவர்களுக்கு பயிற்சிகள் செயலட்டைகளை வழங்கி வந்தது வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால் சுஹாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. செய்வதறியாது திகைத்தாள். காரணம் அவள் பெற்றோர்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கவில்லை.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எவ்வாரேனும் சித்தி பெற்று நகர்புற பாடசாலை ஒன்றுக்கு சென்று சிறப்பாக கல்வி கற்று ஒரு நல்ல வைத்தியராக வர வேண்டும் என்பதனை அவள் தனது இலட்சியமாகக் கொண்டிருந்தாள்.

அவளது பெருங்கனவு இவ்வாறு இருக்க சுஹாவின் பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். கொரோனாவின் ஆட்டத்தில் அவர்களது குடும்ப ஓட்டமும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் அசைந்தது.

சுஹா அவர்களது ஓரே பிள்ளை. அவள் எதிர் வீட்டு மரியத்தோடு அன்றாடம் விளையாடுவாள். சுஹா மிகவும் இனிமையான குரல் கொண்டவள். அழகாக ஓதுவாள்.

மர்யம் சற்று வசதியான குடும்பத்தில் பிறந்தவள். மர்யம் நல்ல குணம் படைத்தவள். உதவும் பண்புடையவள். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தி நகர்ப்புற பாடசாலைக்கு செல்பவள்.

மர்யமும் சுஹா போலவே தன் தாய்க்கு சகல விதத்திலும் உதவி ஒத்தாசையாக இருப்பவள். மிகவும் இரக்க குணம் கொண்டவள்.

அந்தப் பாதை வழியே தினம் மீன் வியாபாரி, பழ வியாபாரி மரக்கறி வியாபாரி என இவ்வாறு பல வியாபாரிகள் செல்வது வழக்கம்.

அன்று சுஹா பாதையில் செல்வோரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அன்றாடம் எதிர் வீட்டிலிருக்கும் மர்யம் தரம் 6 இல் கல்வி கற்பவள். அவள் மிகவும் அழகானவள் சுறுசுறுப்பானவள். இரக்க குணம் கொண்டவள். தன் வீட்டிற்கு பொருட்கள் வாங்கும் போது சுஹா வீட்டிற்கும் சில பொருட்களை வாங்கி அன்பளிப்புச் செய்வாள்.

ஒரு நாள் மர்யம், “சுஹா சுஹா” என கதறியடித்துக் கொண்டு ஓடோடி வந்தாள்.

மர்யத்தின் குரல் கேட்ட சுஹா ஓடிச் சென்று பார்த்தாள். மர்யம் மிகவும் சந்தோஷமாக ஏதோ சொல்ல வருவது புரிந்தது.

‘மர்யம் வாங்கோ இரியுங்கோ” என்று கதிரையைக் காட்டினாள்.

“சுஹா சுஹா ஒரு குட் நியூஸ்” என்றாள் மர்யம்.

“என்ன செய்தி மர்யம் சொல்லுங்கோ” என்றால் சுஹா மிகவும் ஆர்வத்துடன்.

“சுஹா ஒங்களுக்கு ஞாபகமா? நீங்கள் சூரத்துல் பாத்திஹா ஓதினதை நான் வீடீயோ செய்து கிராஅத் போட்டிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினது? அதில ஒங்களுக்கு முதலாம் இடம் கிடைச்சிருக்கு! என எனக்கு இன்டக்கி தகவல் வந்தீக்கி, முதலாம் இடத்துக்கு என்ன பரிசு தெரியுமா?” என்றாள் மர்யம்.

“அப்படியா?” என ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள் சுஹா.

“ஆமாம்” என்றவள்.

“முதலாம் பரிசு ஒரு ஸ்மார்ட்போன்”

“உண்மையாகவா! சந்தோஷமா ஈக்கி” சுஹாவின் குரல்.

“இன்றோ நாளையோ உங்கள் பரிசை வீட்டுக்கு கொண்டு வந்து தாராங்கலாம். இப்ப சந்தோஷம் தானே? உங்களுக்கு படிக்கிற விஷயத்த இப்போ கவனிச்சு செய்ய ஏலும்” என்றாள் மர்யம்.

“உண்ம தான், ஜஸாகல்லாஹு ஹைரா மர்யம்” என்றாள் சுஹா கண்ணீர் மல்க.

அத்தோடு மர்யம் கொண்டு வந்த அரிசி மரக்கறி உணவு வகைகளையும் அன்போடு சுஹாவின் தாயாரிடம் கொடுத்தாள்.

“சுஹா சுஹா, இது ஒங்களுக்கு பெருநாள் சட்ட ஒங்களுக்கு அளவா இருக்காண்டு பாருங்க. எங்கட வாப்பா போன மாசம் வாங்கி வந்த சட்டைத் துணி. எங்கட உம்மா ஒங்களுக்கு தச்சி தந்தாங்க. நல்லா இருக்கா? அளவா இருக்கா?” என்று கேட்டு சந்தோஷத்தை அள்ளி இறைத்தாள் மர்யம்.

சுஹாவின் தாயின் கண்களில் இருந்து மகிழ்ச்சியின் அடையாளம் வழிந்தோடியது. சுஹாவின் தாயார் அவரது துஆப்பிரார்த்தனைகள் கொஞ்சம் கொஞ்சமாக அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்டு வருவதாக உணர்ந்தாள்.

சுஹா தன்னுடைய கல்வி விடயம் மற்றும் பெருநாள் என இரட்டிப்பு விடயங்களும் வெற்றி பெற்றதாக எண்ணி உள்ளத்தில் ஆனந்தக் கூத்தாடினாள்.

இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக,

 “அல்ஹம்துலில்லாஹ்!” என உள்ளத்தாலும் நாவாலும் மிகவும் விருப்போடு உவப்போடு உச்சரித்து உவகையடைந்தாள்.

தன் வாழ்விலும் வளர்பிறை வருவதாகக் கண்டு மனம் மகிழ்ந்தாள்.

முற்றும்.

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
SLPS 2
அதிபர்
எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயம்
பஸ்யால

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *