சரித்திரமாகும் ஓர் ஆளுமையின் சாதனைப் பயணம்

  • 31

அறிமுகம்: இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சமய, மரபு சார்ந்த அறிவாக்க மீள் எழுச்சிக்கு மிகப் பெரும் பங்களிப்பை ஆற்றியவர், கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி. தான் சார்ந்த சமூகத்தின் வரலாறு, கல்வி, கலாசாரம், சமய நல்லிணக்க வாழ்வு, பண்பாட்டு வளர்ச்சி என்பவற்றிற்காக தனது நீண்ட கால வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். தெளிந்த, நவீனத்துவமான நிர்மாணத்திறன் மிக்க சிந்தனையுடன் அறிவுணர்வும் சமயப் பின்னணியுமுடைய சமூக மேம்பாட்டை தனது உயர் இலட்சியமாகக் கொண்டிருந்தார்.

இலங்கை வரலாற்றில் நீட்சிபெற்று வந்த பன்முக, சன்மார்க்க ஆளுமை வெற்றிடத்தை பல்துறைப் பங்களிப்பினூடாக நிரப்பிய அவர், இன்னொரு சுக்ரிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய வெற்றிடத்தையும் விட்டுச் சென்றுள்ளார். கலாநிதி சுக்ரி அவர்கள் 80 வயதில் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரது இழப்பு ஒரு தந்தையை இழந்த தனயனின் சோகத்திற்கு நிகரானது.

முற்போக்கான சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளை முன்வைத்து, கல்வி மறுமலர்ச்சியை பாரம்பரிய சமய மரபோடு ஒன்றித்த சமூக சிந்தனையாளர்களின் மூலம் அத்தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பதை அவர் நன்கு உணர்ந்து, அதற்கான செயற் திட்டங்களை வகுத்துச் செயற்பட்டார். மரபு சார் அனுஷ்டான, பழமைத்துவப் போக்கைக் கொண்ட ஒரு மௌலவி மாதிரியான பின்னணியில் செயற்படக் கூடியவராக அல்லாமல், இஸ்லாத்தில் ஆழமான, ஆன்மிக பக்தி உள்ள, அதேவேளை நவீனத்துவத்திலும் பரிச்சியமுள்ளவராகக் காணப்பட்டார். இது, இலங்கை முஸ்லிம் புலமைத்துவ சமூகத்திலிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டும் தனித்துவப் பண்பியல் அடையாளமாக சிலாகிக்கலாம்.

உலகளாவிய இஸ்லாமிய சிந்தனையின் நவீனத்துவ பரிமாணங்களை கற்றறிந்து, அவற்றை ஒருங்கிணைப்பதில் கலாநிதி சுக்ரி அவர்கள் ஆற்றிய பங்களிப்பு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய சமய சிந்தனை மரபிலும் செல்வாக்குச் செலுத்தும் தகைமை பெற்றிருந்தது. அவரது ஆசான் பேராசிரியர் இமாம் மற்றும் அல்லாமா இக்பால், அபுல் ஹஸன் அலி நத்வி, இப்னு கல்தூன், ஷாஹ் வலியுள்ளாஹ் திஹ்லவி, மாலிக் பின் நபி ஆகியோரின் சிந்தனைகளினால் அவர் பெரிதும் கவரப்பட்டிருந்தார். இச்சிந்தனையாளர்களின் தாக்கத்தினாலும், தனது சுய சிந்தனையாலும், அனுபவத்தாலும் இலங்கை முஸ்லிம்களுக்கான புதியதொரு நோக்கை அவர் உருவாக்கினார். சர்வதேசிய முஸ்லிம்களின் இன்ப – துன்ப விவாகரங்களைக் கூர்ந்து அவதானித்து எழுதியதோடு, உரைகளையும் ஆற்றினார். பொஸ்னியப் பிரச்சினைகளின் போது, அவர் ஆற்றிய உரை மிக முக்கிய அவதானத்தைப் பெற்றது.

1999களில் ஒரு யூத வணிகனால் மலேசியா – இந்தநேசியாவில் பொருளாதாரம் சரிவு நிலை கண்டபோது, அது தொடர்பான அவரது அவதானத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகளாவிய முஸ்லிம் உம்மத் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பாக அவதானித்துக் கருத்துக்களை வழங்கினார். இறுக்கமான பாரம்பரியக் கட்டுக் கோப்புடன் காணப்படும் இஸ்லாமியக் குடும்ப அமைப்பைக் குறிவைக்கும் ஜி மாநாடுகளின் பின்னால் உள்ள சதிகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். The Muslim World League Journal, Islamic Studies, Journal of the Archaeological Survey Department, An Nahdah, Hamdard Islamicus போன்ற அவரது கட்டுரைகள் சர்வதேசிய ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதோடு, சர்வதேசிய ஆய்வரங்கங்களில் அவரது கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. காயல்பட்டணம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி வெளியிட்ட சிறப்பு மலரில் அவரது கட்டுரை இடம்பெற்றது. காஞ்சி அப்துர் ரவூப் பாகவி, செய்யித் முஹம்மத் மதனி போன்றோர் பறகஹதெனிய மாநாட்டிற்கு வருகை தந்தபோது கலாநிதி சுக்ரி அவர்களை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று நளீமியாக் கலாபிடம் சென்று சந்தித்தனர். அவரது சில நூல்கள் இந்தியாவிலும் வெளியிடப்பட்டன.

புகயாமாவின் The End Of History என்ற நூலில் அவதானம் செலுத்தினார். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியோடு, வரலாறு தனது பணியயை நிறைவு செய்யவில்லை. நாகரிகங்களுக்கிடையிலான ஒரு புதிய போராட்டம் ஆரம்பமாகிறது. அது மேற்கின் நாகரிகத்திற்கும் இஸ்லாமிய நாகரிகத்திற்குமிடையிலான மோதலாக இருக்கப் போகிறது என்று சமுவெல் ஹன்டிங்டன் எழுதிய Clash of Civilization பற்றி தனது கவனத்தை செலுத்தினார்.

உலகில் கிறிஸ்தவ, யூத மதங்களுக்கும் – முஸ்லிம்களுக்குமிடையில் உரையாடல்கள் மேற்கொள்ளப்படுவது போன்று பௌத்தம், ஹிந்து மதம், சீக்கிய மதம் போன்ற மதங்களுடன் முஸ்லிம்கள் உரையாடல்களை மேற்கொள்வதற்கு எத்தகைய முயற்சிகளும் இதுவரை நடைபெறவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ஜாமிய்யா நளீமிய்யாவில் இதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

சன்மார்க்கக் கல்வியையும், உலகியற் கல்வியையும் சமநிலையில் வளர்ப்பதற்காக ஆக்கபூர்வமான உழைப்புக்களில் பங்குகொண்டார். அன்று, இலங்கையில் பாரம்பரியமாக மரபுக்குள், உயிரோற்றமற்றதாகக் காணப்பட்டு வந்த மத்ரசாக் கல்வித் திட்டத்தில், முற்போக்கான மறுமலர்ச்சித் திட்டத்தையும் மரபுவாத சிந்தனையின் செல்நெறியில் நவீனத்துவமிக்க புதிய போக்கின் தேவைப்பாட்டையும் அவர் நன்கு உணர்ந்து, நளீமிய்யாக் கலாபீடத்தின் பாடத்திட்டத்தை ஆன்மிக – உலகியல் ஆகிய இரண்டும் இணைந்த, பிரிக்க முடியாத வகையில் வடிவமைத்தார்.

இஸ்லாமியக் கலைக் கற்கையில் நவீனத்துவப் பரிமாணங்களை உட்புகுத்தி, இஸ்லாமிய கற்கைத் துறை சார்ந்தோரிடம் புதிய ஒரு நோக்கை ஏற்படுத்தினார். 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கலாநிதி சுக்ரி அவர்கள் ஜாமிஆ நளீமிய்யாவில் பணிப்பாளராகப் பதவியேற்றார். உலகின் புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களுக்குச் சென்று ஜாமிஆவை அறிமுகப்படுத்தி, அதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

அன்று மதுரசாவில் கற்றவர்கள் மிம்பரில் உரையாற்ற மட்டும்தான் தகுதிபெற்றவர்கள் என்ற மந்தப் போக்கை மாற்றி, ஓர் உலமாவினால் அரச நிருவாகத் துறைகளிலும் பணியாற்ற முடியும் என்ற உந்துதலை ஏற்படுத்தினார். மரபு சார்ந்த மதுரசாக் கல்வித் திட்டத்தில் கலாநிதி சுக்ரி அவர்கள் ஏற்படுத்திய இப்புதிய திட்டங்கள், அன்றைய சூழலில் ஒரு மிகப் பெரிய புரட்சி எனலாம். இலங்கை முஸ்லிம் உம்மத்தின் சன்மார்க்கக் கல்வித் துறையில் நவீனத்துவமிக்க, முற்போக்கான முன்னேற்றத்தில் அவரின் வகிபாகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

அவரை நோக்கி வந்த விமர்சனங்களுக்கு அஞ்சாது, அவற்றைத் துணிவாக எதிர்கொண்டார். ஜாமிய்யா நளிமிய்யாவையும் அதன் கல்வித் திட்டத்தையும் விமர்சித்தவர்களுக்கு அவர் பதில் அளித்தார். இஸ்லாமிய கல்வி நிலையங்களின் பணியும் பொறுப்பும் காத்திரமானது, புனிதம் மிக்கது, சமுதாயத்தை இஸ்லாமிய வழியில் நெறிப்படுத்தி, சிந்தனைத் தெளிவை வழங்கி, அறிவின் அடிப்படையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் கொண்ட புத்திஜீவிகளை உருவாக்கும் நோக்கோடுதான் அது ஆரம்பிக்கப்பட்டது” என்று அதன் நோக்கத்தை மிகத் தெளிவாக முன்வைத்தார். “அது சர்வதேச அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட ஓர் இஸ்லாமியக் கலாசாரப் பல்கலைக்கழகமாக உயர்ச்சி அடைந்துள்ளது. அதன் வளர்ச்சியில் பூரிப்படையும் புனித உள்ளங்கள் ஆயிரமாயிரம். ஆனால், அதன் வளர்ச்சியையும் ஆக்கப் பணிகளையும் கண்டு மனம் தாளா மனி உள்ளங்களும் ஆங்காங்கு உள்ளன” என்று விமர்சகர்களைக் கண்டித்தார்.

“ஜாமியா நளீமியா ஓர் இஸ்லாமிய அறிவுக்கூடம். அது எந்த ஒரு கொள்கையினதும் பிரசாரக் களமன்று. அதன் பணி அறிவுப் பணியாகும். மாணவர்களுக்கு இஸ்லாமியக் கலைகள் பற்றி விரிவான அறிவை வழங்கி, நவீன கலைகள் பற்றிய பரிச்சியத்தையும் அளித்து, சமூகத்தில் இஸ்லாமிய புத்திஜீவிகளைப் பணிபுரிய ஆயத்தப்படுத்தும் ஒரு மகத்தான அறிவுப் பணியே அதன் இலட்சியமாகும். ஜாமிய்யா எவரிலும் எத்தகைய கருத்தையும் திணிக்க என்றும் முயன்றதில்லை. அதன் பட்டதாரிகள், விரிவுரையாளர்கள் அனைவருக்கும் சுதந்திரமான சிந்தனைக்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றது. இதுவே இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் ஆகும்.” என்று எழுதினார்.

ஜாமிஆ நளீமிய்யாவில் மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி, அவற்றை வளர்த்து விருத்தியடையச் செய்யும் ஒரு கல்வித் திட்டத்தையும், கல்விச் சூழலையும் உருவாக்கினார். தனது மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை, படைப்பாற்றல், பகுப்பாய்வுத் திறன், விமர்சின நோக்கு ஆகியவற்றிற்குக் களம் அமைத்துக் கொடுத்தார்.

இன்றுள்ள பல கலாநிதிகள் தமது தாய் மொழியில் சரியாகப் பேசவும், பிழைகளின்றி எழுதவும் தெரியாதுள்ளனர். ஆனால், கலாநிதி சுக்ரி அவர்கள், தமிழ் மொழிப் புலமை மட்டுமல்லாது, அதன் குறியீடுகள் தொடர்பான அறிவும் பெற்றிருந்தார். இவை, அவரது எழுத்தில் துலங்குகிறதை அவரை ஆழமாக வாசித்தவர்களால் கண்டு கொள்ள முடியும். அத்தோடு, ஆங்கிலம், அரபு, சிங்களம், பாரசிகம் போன்ற இன்னும் பல மொழிகளை அறிந்திருந்தார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கற்றுத் தேர்ந்தாலும், தனது சமூகத்தின் முன்னோக்கிய நகர்வுக்காக தான் பெற்ற அறிவையும் அனுபவங்களையும் வழங்குவதற்கு விசாலமான மனது வேண்டும். கலாநிதி சுக்ரி அவர்களின் பணிகளை மதிப்பீடு செய்யும் எவரும் அந்த விசாலமான மனதின் விலாசங்களைக் கண்டுகொள்வர். பல கலாநிதிகள் குறித்த துறைக்குள் மட்டுமே துலங்கினர். ஆன்மிகம் தெரிந்தவர்களுக்கு நவீனத்துவம் தெரியாமல் போனது. நவீனத்துவம் தெரிந்த பலருக்கு இஸ்லாம் தெரியாமல் போனது. ஷரீஆத் துறை சார்ந்த கலாநிதிகள் பலர் கை வைக்காத, இதுவரை நினைத்துக் கூடப் பார்க்காத பக்கங்களை அவர் சாதரணமாகப் புரட்டி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். புலமை சார்ந்த பலர் அவரிடம் நிறையக் கற்க வேண்டியுள்ளது. கலாநிதி சுக்ரி அவர்கள் ஒரு முஸ்லிம் தலைமை கொண்டிருக்க வேண்டிய ஒரு பெரிய வெற்றிடத்தை அடக்கமாக நிரப்பினார். எனினும், மேலோட்டமாக அவரை அணுகியவர்களால், அவரைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது.

ஜனனமும் கல்வியும்: கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி மாத்தறை நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1940 ஜூன் 24 ஆம் திகதி வணிகப் பின்னணி கொண்ட ஆசாரமான குடும்பத்தில் முஹம்மத் அலி அவர்களுக்கும் ஆயிஷா பீபீ அவர்களுக்கும் பிறந்தார். 1970 ஆம் ஆண்டு Dr.S.M ஸலாஹுத்தீன் அவர்களின் புதல்வி நூருள் புஷ்ராவை மணம் முடித்தார். சுக்ரி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். இருவர் ஆண்கள்.ஒருவர் பெண்.

சிறுவயதில் பாரம்பரிய அரபுக் கல்விக்காக மாலை நேர அல்குர்ஆன் மத்ரசாவிற்குச் சென்று, ஷாவே ஆலிமிடம் கற்றுள்ளார். பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், புலமைப் பரிசில் பெற்று உயர் கல்விக்காக எடின்பரோ பல்கலைக்கழகம் சென்றார். அவரது கல்விப் பயணம் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“நான் ஆரம்பக் கல்வியை சென் தோமஸில் கற்றேன். அது ஒரு கிறிஸ்தவப் பாடசாலை. எனவே ஒழுக்கக் கட்டுப்பாடு அங்கு நிறையவே இருந்தது. அடுத்து அங்கு பல மொழி சார்ந்தோரும் கல்வி கற்றனர். எல்லோரையும் இணைக்கும் மொழியாக அங்கு ஆங்கிலம் காணப்பட்டது. பிறகு மொழிமாற்றக் கொள்கை காரணமாக சிங்கள மொழியாக்கப்பட்ட பின்னர், ஆங்கில மொழி மூலம் கற்க தர்கா நகர் அல் ஹம்றாவிற்குச் சேன்றேன்.

அது அன்று இலங்கையில் இருந்த மிகப் பிரபல்யமான பாடசாலை. அங்கு விடுதி வசதிகள் எல்லாம் காணப்பட்டது. நான் ஆங்கில மொழி மூலம் கற்க கம்பளை ஸாஹிராவுக்குப் போக இருந்து, பின்னர் அல் ஹம்ராவிற்குச் சென்றேன். அங்கு 1956 வரையில் கற்றேன். அங்குதான் SSC (Senior School Certificate) எழுதினேன். பின்னர் HSC (Higher School Certificate) கற்பதற்காக கொழும்பு ஸாஹிராவுக்கு வந்தேன். ஸாஹிரா மூலம்தான் 1960இல் இலங்கைப் பல்கலைக்கழகப் பிரவேசம் பெற்றேன்.

சென்தோமஸ் கல்லூரியில் நான் படிக்கின்ற காலத்தில்தான் தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் எனக்கு நிறைய ஈடுபாடு ஏற்பட்டது. அங்கு கந்தையா மாஸ்டர் என்று ஒரு மாஸ்டர் இருந்தார். அவர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் வாசிக்கத் தூண்டினார். அல் ஹம்ராவிற்கு வந்ததன் பின்னர் எனது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள அது ஒரு களமாக அமைந்தது. அங்கு விவாத மன்றங்கள் நடைபெற்றன. மாணவர் மன்றங்கள் இடம் பெற்றன. விடுதியில் கூட விவாத அரங்குகள் நடந்தன.”

“பின்னர், ஸாஹிரா வாழ்வு எனக்கு ஒரு பெரும் களமாக அமைந்தது. முஹம்மத் சமீம், எம்.எம், மஹ்ரூப், பேராசிரியர் சிவத்தம்பி போன்றோர் அங்கு ஆசிரியர்களாக இருந்தார்கள். அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ்தான் அதிபராக இருந்தார். நான், எஸ்.எச்.எம். ஜெமீல், கலாநிதி அமீர் அலி போன்றோர் எல்லாம் ஒன்றாகப் படித்தவர்கள்.

அக்காலம் ஸாஹிராவின் பொற்காலமாக இருந்தது. அக்காலத்தில் ஸாஹிராவிற்கும் ஏனைய கல்லூரிகளுக்குமிடையில் விவாதப் போட்டிகள் இடம் பெறும். பேராசிரியர் சிவத்தம்பி அதற்காகப் பயிற்றுவித்து எம்மை அழைத்துச் செல்வார். ஸாஹிராவில் ஒரு சிறந்த நூல் நிலையம் இருந்தது. அதில் சிவத்தம்பி அவர்கள் எம்மை வாசிக்கத் தூண்டுவார்.

பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பின் பேராசியர் இமாமிடம் இக்பால் பற்றி நிறையப் படித்தேன். எடின்பரோ பல்கலைக்கழகம் சென்ற பின்னரும் அங்கு பாகிஸ்தானிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டு, இக்பால் பற்றி நிறைய அறிந்து கொண்டேன். பேராசிரியர் இமாம் அவர்களிடம் மூன்று வருடங்கள் முழு நேர மாணவனாகப் பயிலும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர் என்னிலே மிகவும் அன்பு வைத்திருந்தார். அறபு மொழியில் சிறப்பாக புலமை பெற வேண்டும் என்பதற்காக அவர் சில நேரங்களில் மாலை வரை – இரவு நேரங்கள் வரை வகுப்புக்களை நடாத்தினார். உண்மையில் எனது பட்டப்படிப்பு வாழ்வு ஒரு பட்டப் படிப் பாக மட்டு மல்லாது ஓர் ஆய்வாகவும் அமைந்தது” என்று குறிப்பிடுகின்றார்.

“எனக்கு உருவாக்குவது பற்றி நம்பிக்கையில்லை. வழிகாட்டுவது பற்றியும் அதனைப் பின்பற்றுவது பற்றியுமே நான் நம்பியுள்ளேன்” என்று பலருக்கு அவர் ஆதர்ஷன புருஷராக திகழ்ந்தார். அவர் ஆளுமைகளை நெறிப்படுத்திய ஓர் ஆளுமை; மிகவும் நிதானமான சிந்தனையாளர்; தெளிவான பார்வையுள்ளவர்.

சவால்கள் நிறைந்த ஒரு நீண்ட பயணத்தை அவர்; மேற்கொண்டார். அதில் மகிழ்ச்சியும் மன நிறைவும் கண்டார். இதை அவரே குறிப்பிட்டார். நளீம் ஹாஜியாரை, கலாநிதி சுக்ரி அவர்கள் சந்தித்தது அவரது வரலாற்றில் மட்டுமல்ல இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலும் ஒரு திருப்பு முனையானது. தனது வீரியமான எழுத்தாலும் உரையாக்கத்தாலும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உறக்கத்தை கலைத்து, தட்டி எழச் செய்தார்.

உலகில் எங்காவது புத்தகக் கண்காட்சி நடைபெற்றால் அதற்குச் சென்று நூல்களை கொள்வனவு செய்து வந்து, நளீமிய்யா நூலகத்தில் சேகரித்தார். வாசிப்பையும் எழுத்தையும் ஒரு தவமாகச் செய்தார். அதுவே அவரது அடையாளமாக துலங்குகிறது. எழுத்தாலும் சொற்பொழிவுகளாலும் தனது சமூகத்தை அறிவூட்டி அறிவுறுத்தினார்.

இலக்கிய ஈர்ப்பு: சங்க இலக்கியமும் ஜாஹிலிய கால இலக்கியமும் தொடர்பாக ஒப்பீடு செய்தார். அதன் ஒற்றுமை மாதிரி பற்றி ஆய்வு செய்தார். ஆரம்பகாலத்தில் இலக்கியக் கட்டுரைகளையும் எழுதினார். தமிழ் மொழி பாண்டித்தியம் அவரிடம் நிறைவாக உள்ளது. மாணவப் பருவத்திலேயே சிறந்த பேச்சாளர். சங்க இலக்கியங்களிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது.

முஸ்லிம்களில் இவர் தமிழ் மொழி இலக்கியம் தொடர்பான ஆளுமை என்ற பெயர் பல்கலைக்கழகத்தில் இவருக்கு அப்போது இருந்தது. அதை: “இலக்கிய ஈடுபாடு இக்காலப் பகுதி பேராதனை பல்கலைக்கழகத்திலே இலக்கியத்தில் ஒரு பொற்காலமாக இருந்தது. பேராசிரியர் சரச்சந்திர அங்கு மனமே நாடகத்தை அரங்கேற்றினார். பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் வித்தியானந்தன் போன்றோர் தமிழ்த் துறையில் இருந்தனர். அங்கு முற்போக்கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம் என இலக்கியத்தில் இரு முகாம்கள் காணப்பட்டன.

மௌனகுரு, செங்கை ஆழியான், நான் – எல்லோரும் ஒன்றாகக் கற்றோம். மௌனகுரு போன்றவர்கள் முற்போக்கு முகாம். நாம் அதற்கு மாற்றமாக நற்போக்கு முகாமில் இருந்தோம். பேராசிரியர் கைலாசபதி எம்மைத் தூண்டி விடுவார். இன்னொருவரின் கருத்து வித்தியாசம் என்பதற்காக அவரை நாம் வெறுக்கக் கூடாது என்று அவர் சொல்வார்.

நான் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டிய காலத்தில் எனது முதலாவது சிறு கதை கலைப் பூங்கா என்ற போராதனைப் பல்கலைக்கழக சஞ்சிகையில் வெளியானது. பின்னர் ஸுபைர் இளங்கீரன் கவனத்திற்குரியர் என்றொரு பகுதியில் என்னைப் பற்றி எழுதியிருந்தார். அதில் கலாநிதி சுக்ரி இலக்கியத் துறையில் ஈடுபட்டிருந்தால், பெரும் இலக்கியவாதியாக இருந்திருப்பார் என்று எழுதியிருந்தார்” என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி சுக்ரியின் சிறப்புத் துறை சூஃபித்துவம். அபூதாலிப் அல் மக்கீ என்ற சூபியின் “கூத் துல் குலூப்” என்ற நூலை ஆய்வு செய்து, அதில் கலாநிதிப் பட்டம் பெற்றார். அதனால் அவரிடம் சூபித்துவ, ஆன்மிகத் தாக்கமும் அதிகமாகக் காணப்பட்டது. எனினும், அவர் மிகவும் குறைந்த அளவுதான் சூஃபித்துவம் பற்றி எழுதியுள்ளார். அவரது சில சூபித்துவக் கருத்துக்களுக்கு விமர்சனங்களும் எழுந்தன.

அறிஞர்கள் மீது அன்பு: “அடுத்து பேராசிரியர் இமாம் அவர்கள் என்னில் வளர்த்த ஓர் உணர்வுதான், ஸலபுஸ் ஸாலிஹீன்களை, அறிஞர்களை மதிக்க வேண்டும் என்ற உயரிய பண்பாடு. இஸ்லாமியப் பாரம்பரியங்களுக்கு பங்களிப்பு செய்தவர்களை நாம் மதிக்க வேண்டும். அவர்களது குறைகளைப் பொருட்படுத்தக் கூடாது. அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும் என அவர் அடிக்கடி சொல்வார்” என்று சுட்டிக்காட்டும் கலாநிதி அவர்கள் கல்வியியலாளர்களை மதிக்கும் பக்குவம் பெற்று விளங்கினார். திறமையான தனது மாணவர்களையும் அவர் அதிகமாக நேசித்தார். மாணவர்களும் அவரை அதிகமாக நேசிப்பதை அவதானித்துள்ளேன்.

“சித்திலெப்பை தொடர்பான ஆவணப் படப் பிடிப்பிற்காக நளீமிய்யா அலுவலகத்தில் அவரை சந்தித்த போது, சித்திலெப்பை இலங்கை முஸ்லிம்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார்” என்று அவரை சிலாகித்தார் என்று பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.அனஸ் அவர்கள் என்னிடம் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். சமூக முன்னேற்றத்திற்கான போராட்ட உணர்வு கொண்டவராக சித்திலெப்பையை அவர் அதில் அடையாளம் கண்டு கொண்டதை புலப்படுத்தியுள்ளார்.அதேபோல், புரட்சிக் கமால் மீதும் ஈர்ப்பு அவருக்கிருந்துள்ளது. ஒரு தடவை கொழும்பில் ஓர் இலக்கிய மாநாட்டிற்குப் புரட்சிக் கமால் வந்து விட்டு, வெளியேறிய போது, மேடையிலிருந்து அவதானித்த சுக்ரி அவர்கள் இறங்கி, ஓடிச் சென்று அவரை சந்தித்ததை பேராசிரியர் அனஸ் அவர்கள் அவதானித்து, ஆச்சரியப்பட்டுள்ளார்.

மேற்கத்திய சிந்தனைகளையும் கீழைத்தேய சிந்தனைகளையும் கற்கின்ற வாய்ப்பைப் பெற்று, அதைப் பரிசீலித்து, நல்லதை மனம் கொள்கின்ற ஓர் அறிவுப் பக்குவம் அவருக்கு இருந்தது. ஆன்மீக பின்னணியை அதிகமாக கொண்டவர், தத்துவம், விஞ்ஞானம் போன்றவற்றிலும் மேற்கின் முன்னேற்றகரமான கருத்துக்களை உள்வாங்கி, நவீன கல்வியில் பரிச்சியம் ஏற்பட வேண்டும் என்று எழுத்திலும் உரைகளிலும் வெளிப்படுத்தினார். மேற்கு சார்பு நிலைப் போக்கை அவர் என்றும் கடைப்பிடிக்கவில்லை. அவர் ஒரு விரிவுரையாளர். விரிவுரைகளில் என்ன சொன்னார் என்று உலகிற்கு தெரியாது. அவை தொகுக்கப்பட்டப்படவில்லை. அது துரதிஷ்டமே. அவரது எழுத்து, சொற்பொழிவு என்பனவற்றால் மட்டும் அவரைத் தீர்மானிக்க முடியாது. சிந்தனை, விரிவுரை, நடை, உடை, நட்பு, போக்கு என்பனவற்றால் விரிவாக அவதானிக்கபட வேண்டிய ஒருவர் அவர். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் போதுமான அளவு சமூகத்தால் அவர் கொண்டாடப்படவில்லை என்ற ஆதங்கம் அவரை நேசித்த அனைவருக்குமுள்ளது.

எழுத்துத் துறை : சன்மார்க்கத் துறை சார்ந்த மிக முக்கிய, குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாக அவர் விளங்கினார். சீரிய சிந்தனையும், ஆற்றொழுக்கான தமிழ் எழுத்து நடையும், எல்லோரையும் கவரும் நாவன்மையும் ஒருங்கே சேரப் பெற்றவர். பாடசாலைக் கல்விக்கான இஸ்லாம் பாடப் பரப்பு சார்ந்த புத்தகங்கள் வடிவமைப்பதில் அவரது வகிபாகம் முக்கியமானது.

இஸ்லாமிய சிந்தனை என்ற முத்திங்கள் இதழில் அவர் தீட்டும் ஆசிரியர் தலையங்கங்கள் பற்றி தனியாகப் பேசப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம் சமூகம் பற்றிய ஓர் ஆழமான பார்வை அவரிடமிருந்தது. ஒரு மிகப்பெரிய கட்டுரையில் சொல்ல வேண்டிய விடயங்களை தனது ஆசிரியர் தலையங்கத்தில் மிக இரத்தினச் சுருக்கமாக தீட்டினார். உலக அறிஞர்களை ஆவலோடு ஆராய்ந்தார். அவர்களில் பலரை தமிழ் உலகிற்கு பெருமையோடு அறிமுகப்படுத்தினார்.

காலாண்டு சஞ்சிகையான இஸ்லாமிய சிந்தனைகள் விற்காமல் அனைத்தும் தேங்கிக் கிடந்தாலும், அதன் தரத்தைக் குறைக்க மாட்டேன் என்று, அதை ஓர் ஆய்வுத் தரம் குன்றாத சஞ்சிகையாக வெளியிட்டு வந்தார். பேராசியர் அல்லாமா உவைசுக்குப் பின்னர் சகோதர தமிழின மக்களாலும் தாய்மொழிப் புலமைக்காக கௌரவமாக மதிக்கப்பட்ட ஒருவராக திகழ்ந்தார்.

“இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு புலமைச் சொத்தாகத் திகழ்ந்த கலாநிதி சுக்ரி அவர்களை நான் ஒரு மௌனப் புரட்சியாளராகவே பார்க்கின்றேன். தான் வாழ்ந்த காலத்தில் மாறும் உலகம் பற்றிய சிந்தனை அவர் உள்ளத்தை ஆட்சி அளித்தது. ‘இஸ்லாமியப் பண்பாட்டை நவீன யுகத்திற்கு அறிமுகப்படுத்துவதிலும் இஸ்லாமிய உலகைப் பாதித்து வரும் சிந்தனைச் சிக்கல்களில் விடுதலை பெருவதற்கான அறிவு ரீதியான பணிகளை மேற்கொள்வதிலும் சுக்ரி வழங்கி வரும் சேவைகள் மகத்தானவையாகும்’ என பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் அவரைப் பாராட்டிய விழாவில் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் கலாநிதி சுக்ரி தொடர்பாக ஆழ்ந்த அவதானத்தைச் செலுத்தியுள்ளார். அவரை ஒரு போராசிரியராகவே அவர் மதிக்கின்றார். கலாநிதி சுக்ரி போன்றே பேராசியரியர் அனஸ் அவர்களும் தனது துறைகளுக்கு வெளியே விரிந்த வாசிப்பை நேசிப்பவர். ஆழமான தமிழறிவும் மொழிப் புலமையும் உள்ளவர். இருவரது ஆக்கங்களையும் நான் ரசித்து, ருசிப்பவன். பேராசிரியர் அனஸ் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மட்டுமல்ல, சர்வதேச முஸ்லிம்களின் வரலாற்றிலும் கவனக் குவிப்பை மேற்கொண்டு வருகின்றார். சமகாலத்தில் முஸ்லிம் உலகு எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான அவதானமுடையவர். குறிப்பாக இலங்கை முஸ்லிம்களைச் சூழ்ந்துள்ள இனவாதம் பற்றி அவதானத்துடன் எச்சரித்துவருகின்றவர். அதேவேளை, இன நல்லுறவைக் கட்டி எழுப்பும் பணியில் காத்திரமான வகிபாகம் அவருக்குண்டு. தான் சார்ந்த சமூக அக்கறையும் இஸ்லாமிய அறிஞர்களை மதிக்கும் பக்குவமும் வரலாற்றை ஆவணவாக்கலில் உள்ள ஆர்வமும் இவர்கள் இருவரிடமும் அவதானிக்கக் கூடிய ஒத்த பண்புக் கூறுகளாகும்.

கலாநிதி சுக்ரி எழுதுவதில் மிகை ஆர்வம் காட்டினார். கற்பித்தல் செயற்பாடுகளால் தனது கல்விச் செல்வத்தை பரவச் செய்வதில் அவர் அயராது உழைத்தார். கலாநிதி சுக்ரி போன்ற தொலைநோக்கும் அறிவாற்றலும் உள்ள ஒருவரின் அறிவையும் சேவையையும் ஓரளவு தான் சமூகத்தால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

நூல்கள்: இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை மீள எழுதுவதில் அவரது வகிபாகம் தவிர்க்க முடியாததாக இருந்தது. தொல் பொருள் ஆய்விலும் அவரது புலமை பெறப்பட்டது. Muslims of Sri Lanka – Avenue to Antiquity என்று அவர் பல்வேறு உள்நாட்டு – வெளிநாட்டு ஆய்வாளர்களைப் பயன்படுத்தி (Edit) தொகுத்த நூலாக்கம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆவணவாக்கலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. அது மிகவும் மெச்சத்தக்க அவரது முக்கிய ஒரு பணி. அந்த நூலில் மிகவும் உறுதியான, முக்கிய தகவல்களை வழங்கி, முஸ்லிம் சமூகத்துக்கு வரலாறு இல்லை என்ற குறையை இதன் மூலம் அவர் நீக்கினார்.

நூல்களை எழுதியதோடு, நூல்களையும் அவற்றை எழுதியவர்களையும் அவர் மிகவும் நேசித்தார். அகிலன், ஜானகிராமன் போன்ற நாவலாசியர்களைப் படித்துள்ளார் என்பதற்கு அவர்களது எழுத்தின் சாயல் இவரில் வெளிப்பட்டுள்ளமை சான்றாக உள்ளது. ஈராக், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் சின்னபின்னமாக்கப்பட்டு, பல்லாண்டுகால பழமைவாய்ந்த நூல்கள் அழிக்கப்பட்டபோது, அவர் மனவேதனையால் துடித்தார். இதை புத்தகம் பேசுகிறது என்று இஸ்லாமிக் புக் ஹவ்ஸ் ஏற்பாடு செய்த நிகழ்விலும் வெளிப்படுத்தினார். இஸ்லாமிய அறிவுப் பொக்கிஷங்கள், நூலகங்கள் அழிக்கப்பட்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பல்கலைத்துறை சார்ந்த பல நூல்களை எழுதினார். இஸ்லாத்தின் மூலாதாரங்கள் தொடர்பாக முக்கியத்தவம் கொடுத்து எழுதியுள்ளார். அல்குர்ஆன் கலைகள் தொடர்பாக அல்குர்ஆனும் அதன் வாழ்வியலும், ஹதீஸ் இலக்கியம் தொடர்பாக ஹதீஸ் அதன் வரலாறும் முக்கியத்துவமும் என்ற முக்கிய நூல்களை ஆய்வு ரீதியாக எழுதியுள்ளார். தஃவாவும் நவ யுகத்தின் சவாலும் என்ற தலைப்பில் அறிஞர் அபுல் ஹஸன் நத்வி அவர்களின் நூலை மொழிபெயர்த்துள்ளார். அத்தோடு, பின்வரும் முக்கிய நூல்கள் சிலவற்றையும் படைத்துள்ளார்.

• மதமும் அறிவியலும்
• நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும்
• இஸ்லாமும் மனித உரிமைகளும்
• இஸ்லாமியப் பண்பாட்டு நிலையங்கள்
• Muslims of Sri Lanka – Avenue to Antiquityஎஅ

• இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள்
• மாலிக்பின் நபி சிந்தனைகளும் கருத்துக்களும்அவரது அறிவாக்கம் சார்ந்த பணிக்காக பலராலும் பாராட்டப்பட்டுள்ளார்.

Dr. M.A.M. Shukri’s Contribution to Islamic Culture and Philosophy என்ற Prof. Daya Edirisinghe அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார். Prof.S.H. Hasbullah அவர்கள் DR. SHUKRI WRITES FOR ALL: A REVIEW OF SELECTED WRITINGS என்று எழுதியுள்ளார்.

Dr M.Z.M Nafeel அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். I heard about the deepest loss and bereavement of the demise of Dr M.A.M Shukry, Ex-HoD, Department of Arabic & Islamic Studies,University of Peradeniya.

Dr Shukry is a source of inspiration for the younger generation, while I too have been inspired by him very much in my academic achievements. May Allah forgive him, accept his good deeds & reward him the highest place in the hereafter.

“M.A.M. Shukry அவர்கள் நளீமியாவிற்குச் செல்லாமல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவர் தொடர்ந்து இருந்திருந்தால், இன்னொரு பிரமாண்டமான சுக்ரியை நாம் கண்டு இருக்கலாம்” என்று பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் குறிப்பிடுகின்றார். மருதமுனையில் அவரைப் பாராட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள், அவரது உரை முழுதும் பேராசியர் சுக்ரி என்றே விழித்துப் பேசினார். அதைப் பேராசியர் சுக்ரி அவர்கள் இரசித்துக் கொண்டிருந்தார் என்று பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் என்னிடம் குறிப்பிட்டார்.

சுக்ரி பணிவும் அடக்கமும் உடைய, அன்பான மனிதர் என பேராசிரியர். எம்.ஏ.நுஃமான் அவர்கள் பாராட்டுகின்றார்.

பேராசிரியர். சி.மௌனகுரு அவர்கள் குறிப்பிடும் போது, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1961 தொடக்கம் 1965 வரை எனது ஒரு மாணாக்கராகவும் நெருக்கமான நண்பராகவும் இருந்த நண்பர் கலாநிதி சுக்ரி காலமான செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன். சுக்ரி அன்று தமிழிலே ஒரு மிகச்சிறந்த பேச்சாளன். அவரது தமிழ் எழுத்துகள் அனைவரையும் ஆகர்சித்தன.

சுக்ரியையும் வாருங்கள் தமிழ் பயில்வோம் என இழுத்தேன். பேராசிரியர் வித்தியானந்தன் சுக்ரியின் திறமைகளால் ஈர்க்கப்பட்டவர். பேராசிரியர் உவைஸுக்குப் பின்னர் இன்னொருவரை உருவாக்க அவர் எண்ணியிருந்திருக்கக்கூடும். அவர் சுக்க்ரியை தமிழ் சிறப்பு பாடம் பயில வா என இழுத்தார். மறுபுறம் கலாநிதி இமாம் அரபுமொழி பயில வா என இழுத்தார். தமிழ் மொழியா? அரபு மொழியா? பேராசிரியர் இமாம் வென்றுவிட்டார்.

சுக்ரி விரும்பியிருந்தால் பல்கலைக்ழக விரிவுரையாளராகி, சுலபமாக பேராசிரியரும் ஆகி இருக்கலாம். கலாநிதி இமாம் அவரை வென்றது போல, நளீம் ஹாஜியாரும் அவரை வென்று விட்டார். பேருவளை நளீமியாவின் பணிப்பாளரானார். சுக்ரியை காணும் போதெல்லாம் நீங்கள் தமிழ் சிறப்பு செய்ய வந்திருந்தால், இருவரும் இன்னும் மூன்று வருடங்கள் அருகருகே இருந்திருப்போம்.”

“சிறந்ததொரு ஆய்வாளராகவும், பன்மொழிப் புலமை கொண்டவராகவும் நடுநிலை நின்று பிரச்சினைகளை அணுகுபவராகவும் இருப்பதால் முஸ்லிம் சமூகத்தால் மட்டுமன்றி இலங்கையர் சமூகத்தில் அவர் பிரபல்யம் பெற்றுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள அறபுமொழிக் கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருவதும் இலங்கையின் புதைபொருள் ஆய்வாளர் சங்கத்தில் அவர் ஓர் உறுப்பினராக இருந்து செயற்படுவதும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை விஞ்ஞான ரீதியாக நிறுவப் பெரும் துணையாகலாம்.

சிறந்த குணப்பண்புகள் பலவற்றை கலாநிதி சுக்ரி கொண்டுள்ளார். விருந்தோம்பும் பண்பு, அறிஞர்களை மட்டுமன்றி கல்வி தேடும் மாணவர்களையும் மதிக்கின்ற பண்பு போன்றன அவரிடம் உண்டு. அவர் எந்த தஃவா இயக்கத்தையும் சார்ந்திராத போதும் தனது எழுத்துக்கள் மூலமும் பேச்சுக்கள், வானொலி உரையாடல்கள் மூலம் தஃவாப் பணியைச் செய்து வருவதும் சுட்டிக் காட்டத்தக்கது” என்று கலாநிதியின் மாணவரும் முன்னாள் முதுநிலை விரிவுரையாளரும் எனது ஆசானுமான எம்.ஐ.எம். அமீன் B.A (Hons.) M.A Cey. அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தடவை அவர் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார். அவர் மீண்டும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வர நாட்டம் கொண்டார் என்பதை இதன் மூலம் அனுமானிக்க முடிகிறது. எனினும், அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. மீண்டும் அவர் தனது பணியை நளீமிய்யாவில் தொடர்ந்தார். பல்கலைக்கழக சூழலுக்கும் அதன் கல்வி மரபிற்கும் விரிவுரையாற்றும் தகமைக்கும் உரித்தான ஒருவர் அவர் என்பதில் சந்தேகமில்லை. எனினும், அல்லாஹ்வின் நாட்டம் வேறுவிதமாக இருந்துள்ளது.

தனது சொற்பொழிவுகளிலும் எழுத்திலும் அதிகமாக பொஸ்னிய அறிஞரான அலி இஸ்ஸத் பெகோவிச் எழுதிய Islam Between East And West என்ற நூலைப் பாராட்டுவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் இரண்டாம் ஆண்டு மாணவனாக கற்ற காலத்தில் அல் இன்ஷிராஹ் வெளியீட்டு நிகழ்வில் “இஸ்லாமிய மயமாக்கலை நோக்கி” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ந்த்தினார். பல்கலைக்கழகங்களின் பணி என்ன? என்று கேள்வி எழுப்பி, பேராசிரியர் டொய்ன் பீயினுடைய “நாகரிகங்களின் சக்கரங்கள் சுழல்வதற்குக் காரணமானவர்கள் சிந்திக்கும் ஒரு சிறு வர்க்கமே” என்ற கருத்தை அதில் எடுத்துக்காட்டி, எங்களை சமூக மாற்றத்திற்காக சிந்திகத் தூண்டிய நினைவுகள் இன்னும் என்னை விட்டு அகலவில்லை. நான் அவரது மாணவன் அல்லன். எனினும், அவரது மாணவர்கள் பலரிடம் கற்றுள்ளேன்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவர் தனது விரிவுரைப் பணியிலும் துறையிலும் உச்சகட்டம் அடையும் நேரம் நளீம் ஹாஜியார் அவரை வேறு ஒரு பணிக்காக அழைத்துச் சென்றுவிட்டார். தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றியிருந்தால், அவர் தேசிய மட்டத்தில் அவரது சாதனையை இன்னும் விசாலித்திருக்கலாம். எனினும், அவர் ஏற்றுக்கொண்ட பணியில் அவரது வகிபாகம் முக்கிய புள்ளியைத் தொட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவர் விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலப்பிரிவில் விஜயவர்தன மண்டபத்தில் விரிவுரையாளர்களுக்கான அறையில் அவர் தங்கியிருந்த போது, நடந்த நிகழ்வொன்றை அவரது சிந்தனைப் பேழையில் குறிப்பிட்டிருந்தார். “காலை 6 மணி அளவில் தொலைபேசி மணி அடித்தது. அறிஞர் அஸீஸின் கம்பீரமான குரல் ஒலித்தது. நான் கிழக்காபிரிக்கப் பயணம் பற்றிய கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு சொல் சம்பந்தமாக சந்தேகம் தோன்றியுள்ளது. விளக்கைக் குறிக்க தமிழில் பயன்படுத்தப்படும் சொல் குத்துவிளக்கா அல்லது கொத்துவிளக்கா? உங்களுக்கும் இச்சொல் பற்றித் தெளிவு இல்லாவிட்டால் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, அல்லது பேராசிரியர் வித்தியானந்தன் போன்றோரில் விசாரித்து, எனக்கு இதை அறிவியுங்கள் என்றார்.

தமிழில் ஒரு சொல்லை பிரயோகிக்க முன்னர் அதன் சரியான கருத்து பிரயோகம் பற்றிய தெளிவில்லாமல் அதனைக் கையாளத் தயங்கி, அந்த அதிகாலைப் பொழுதில் அதுபற்றி அலட்டிக் கொண்ட அஸீஸிடம் நான் கற்ற முக்கிய பாடங்களில் ஒன்றுதான் ஒரு சொல்லை பிரயோகிக்க முன்னர் அதன் சரியான கருத்துப் பற்றிய தெளிவு அவசியம் என்பதாகும். சொற்களை நயத்தல், அதன் ஆழமான கருத்துக்களை விளங்கள் ஒரு சிறந்த ஓவியன் பொருத்தமான நிறங்களைக் கையாண்டு அழகிய படைப்பு ஒன்றை உருவாக்குதல் போன்று, ஒரு கருத்தைப் புலப்படுத்த பொருத்தமான வார்த்தைகளை கையாண்டு எழுத்தையும் பேச்சையும் அழகுபடுத்தல் வேண்டும் என்ற உயர்ந்த பாடத்தை அறிஞர் அஸீஸிடம் நான் கற்றுக் கொண்டேன். அன்று முதல் சொற்கள், அவற்றில் பொதிந்துள்ள அழகு, அர்த்தபுஷ்டி, வளம் ஆகியன எனது கவனத்தை ஈர்த்தன. (இஸ்லாமிய சிந்தனை ஜூலை – செப்டம்பர் 2000 பார்க்க பக்: 48)

1996 களில் ஸலபிய்யாவில் நான் கற்றுக் கொண்டிருந்த காலத்தில், “வஹீ ஏன் அவசியம்?” என்ற அவரது சொற்பொழிவு ஒலி நாடா மூலம் நான் அவர்பால் ஈர்க்கப்பட்டேன். அது வஹியின் அவசியத்தை தர்க்க ரீதியாகவும் ஆன்மிக வழியிலும் நிருவிய அற்புதமான ஓர் உரை. அன்றிலிருந்து அவரது கட்டுரைகள் நூல்கள், அனைத்தையும் சேகரித்தேன். இஸ்லாமிய சிந்தனை என்ற காலாண்டு சஞ்சிகையை பைன்ட் பண்ணிப் பாதுகாத்து வருகின்றேன்.

தான் சார்ந்த சமூகத்திற்கு மட்டுமல்லாது, இலங்கை தேசத்திற்கும் தனது அறிவு ஆளுமையால் பாரிய பல்துறைப் பங்களிப்பைச் செய்தார். சமூகத்தின் அவதானத்திற்கும் அன்பிற்கும் உரியவராக மாறினார். அதனால், அவரது இழப்பு மிகப் பெரிய சோக அலையை உண்டு பண்ணியுள்ளது.

எம்.ஏ.ஹபீழ் ஸலபி

அறிமுகம்: இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சமய, மரபு சார்ந்த அறிவாக்க மீள் எழுச்சிக்கு மிகப் பெரும் பங்களிப்பை ஆற்றியவர், கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி. தான் சார்ந்த சமூகத்தின் வரலாறு, கல்வி, கலாசாரம், சமய நல்லிணக்க வாழ்வு,…

அறிமுகம்: இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சமய, மரபு சார்ந்த அறிவாக்க மீள் எழுச்சிக்கு மிகப் பெரும் பங்களிப்பை ஆற்றியவர், கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி. தான் சார்ந்த சமூகத்தின் வரலாறு, கல்வி, கலாசாரம், சமய நல்லிணக்க வாழ்வு,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *