ரமழானுக்குப் பிரியா விடை கூறுகையில் பாவங்களுக்கு பிரியா விடை கூறி விட்டோமா?

ஒவ்வொரு வருடமும் ரமழானை நாம் சந்திக்கின்றோம். அதில் கற்றவைகள் பல, அவைகளை எமது அன்றாட வாழ்வில் தொடராக அமுல்படுத்துவது முக்கியம் வாய்ந்ததாகும். உலகளாவிய முஸ்லிம்கள் ஒருமாத காலம் நோன்பு நோற்று இரவு காலங்களில் நின்று வணங்கி இறை பொருத்தத்தை பெறுவதற்காக எடுத்துக்கொண்ட சிரமத்தை இறைவன் பொருந்திக்கொள்வானாக!

நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்லமல்களுக்கு பின்னா் இஸ்திக்பார் பாவமன்னிப்பு தேட வேண்டும்! இது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இனிய வழிகாட்டலாகும். எனவே தற்போது ரமழானின் கடைசிப் பத்தில் இறுதித் தருவாயில் இருந்து கொண்டிருக்கின்றோம். எம்மால் நடந்த பல தவறுகளுக்கு நாம் ரமழான் விடை பெறுவதற்கு முன்னால் கட்டாயம் இறைவனிடம் கூறி, பாவமன்னிப்புத் தேட வேண்டும்!

அடுத்த வருடம் ரமழான் மலரும்போது நானும் நீங்களும் உயிருடன் மண்ணுக்கு மேல் இருப்போமா அல்லது மண்ணறைகளில் உறங்குவோமா என்பது எமக்கு மறைக்கப்பட்ட உண்மையாகும்.

குர்ஆனிய மாதத்தில் நாம் படித்தவகைகள் என்ன?

ரமழானை நாம் அடைந்த பின்பு ஒவ்வொருவரின் கரத்திலும் விஷேடமாக புனிதமிகு அல்குர்ஆன் தவழ்ந்தது. தொழுகையிலும் அல்குர்ஆனை பாராயணம் செய்தோம். இரவு பகலாக மக்கள் அல்குர்ஆனை ஓதுவதற்கு காலம், நேரம் கொடுத்தனர். ஆனால் அல்குர்ஆனுக்கும், எமக்கும் இடையிலான தொடர்பு வெறுமனே அல்குர்ஆனை நாவினால் ஓதுவதற்கு மாத்திரமா? அல்லது, கியாமுல்லைலில் அல்குர்ஆனை பூர்த்தியாக ஓதி முடித்து விட்டால் போதுமாகிவிடுமா? அல்லது, வானொலியில் முழுக் குர்ஆனையும் செவிமடுத்துவிட்டால் போதுமாகிவிடுமா?

நண்பர்களே!
அல்குர்ஆன் வெறுமனே நாவளவில் மாத்திரம் ஓதுவதற்கு தரப்பட்ட ஒரு வேத நூல் அல்ல! அதற்கு மாறாக, குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து வாழ்வில் செயலில் அதைக் கொண்டுவர வேண்டும் என்பதற்குத்தான். எமது வாழ்வினில் புனித அல்குர்ஆனின் அதாவது, ஒவ்வொரு வசனமும் பரிணமிக்க வேண்டும். அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடத்தில் தனது கணவராகிய அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை பற்றி வினவப்பட்டபோது “நபியவர்களது வாழ்வே குர் ஆனாகத்தான் இருந்தது“ என பதிலளித்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்வை மிக உன்னிப்பாக நோட்டமிட்டவர்கள். கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் நபியவர்களுடன் வாழ்ந்தார்கள். அவை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்வு குர்ஆனிய வாழ்வாக தான் அமைந்தது.

உண்மையில் இந்த அல்குர்ஆன் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம், ஆன்மீக, ளெலகீக வாழ்வு மட்டுமின்றி, குழந்தை வளர்ப்பு, திருமண வாழ்வு, விவாகரத்து முறை, வாலிபர்களுக்கான புணரமைப்பு, அண்டை வீட்டார், மாற்று மதத்தாருடனான வாழ்வியல் உறவு, அவர்களது உரிமைகளும், அவர்களுடன் பேணப்பட வேண்டிய ஒழுக்கப் பண்பாட்டுகள் என இன்னும் பல விவரங்களை பற்றியும் பேசியுள்ளது.

இந்த புனிதம் வாய்ந்த மாதத்திலே இறங்கிய அல்குர்ஆன் எல்லா வகையிலும் சிறப்புப் பெறுகின்றது. இந்த அல்குர்ஆனுடைய தனித்துவத்தை பற்றி குறுகிய நேரத்தில் விரிவாக பேசுவது என்பது அசாத்தியமாதாகும். என்றாலும் குர்ஆனிய மாதத்திலே இருக்கின்றோம் இந்த மாதம் விடைபெறப் போகின்றது. எம்மை விட்டு பிரியப் போகின்றது. இத்தருணத்தில் இந்த அல்குர்ஆன் உடைய சில முக்கிய செய்திகளை பின்வருமாறு சுருக்கமாக ஆராய்வோம்.

இறைவேதத்தை பொருத்தவரையில் முழுமையாகவே முஃஜிஸாவாகும். அல்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றுதான் இறைவன் ஒவ்வொரு சூராக்களையும் வெவ்வேறு விதமாக ஆரம்பித்துள்ளான். சில நேரங்களில் அல் ஹுறூபுல் முகத்தஆ என்று அழைக்கப்படக்கூடிய அரபு எழுத்துக்களை கொண்டு ஆரம்பித்துள்ளான். இன்னும் சில நேரங்களில் அவனது புகழை கொண்டு ஆரம்பித்துள்ளான். இன்னும் சில நேரங்களில் சிலருக்கு நாசம் உண்டாகட்டும், கைசேதம்தான் என்று இரண்டு சூராக்களை ஆரம்பித்துள்ளான்.

மக்களின் மானத்திலும், பணத்திலும் கைவைத்தவர்கள் அல்குர்ஆனின் சாபத்தை சந்திக்க நேரிடும். மக்களுடைய மானத்தில் கைவைத்தவர்கள் மற்றும் மக்களின் சொத்துக்களை நியாயமின்றி உண்டு பிழைப்பவர்கள் பற்றியும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இவர்களுடைய விடயத்தில் அல்குர்ஆன் கூறுவது என்னவென்றால்

 وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ‏

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (104:1l)

மற்றுமொரு இடத்திலே இறைவன் மனிதனது சொத்து செல்வங்களில் கள்ளத்தனமாக விளையாடிவனைப்பற்றி கூறும்போது

 وَيْلٌ لِّلْمُطَفِّفِيْن‏

அளவு நிறுவையில் (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். (83:1)

الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَ.

அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். (83:2)

 وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَؕ‏

ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். (83:3)

மேற் கூறப்பட்ட வசனங்களில் இறைவன் திருடர்களுக்கு நாசம் உண்டாகட்டும் அல்லது சூறையாட கூடியவர்களுக்கு நாசம் உண்டாகட்டும் என ஏன் கூறவில்லை. அளவு நிறுவையில் மோசடி செய்து வியாபாரம் செய்பவனும் ஒருவித திருடன் தான் அவனுக்கு மொத்தமாக பொருட்களை சூறையாட முடியாது. ஆனால் அவன் நிறுவையில் மோசடி செய்து சிறிது சிறிதாகத் தான் அவன் திருட்டு செயலில் ஈடுபடுகின்றான் என தப்ஸீர் கலை அறிஞர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறான செயலுக்கே அல்குர்ஆன் சபிக்கிறது என்றால் திருடுபவன் மற்றும் சூறயாடுபவன் விடயத்தில் இறைவனின் “கோபம், வேதனை” எவ்வளவு பிரமாண்டமானதாக இருக்கும்?

மற்றவர்கள் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைத்த பணத்தை சூறையாடுவது அல்லது அபகரிப்பது சாதாரணமான பாவமல்ல. இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

 وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَـكَالًا مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான். (5:38)

 فَمَنْ تَابَ مِنْۢ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ يَتُوْبُ عَلَيْهِؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (5:39)

இவ்வசனத்தின் ஊடாக இறைவன் இஸ்லாமிய சட்டத்தை நிறுவுகின்றான். எனவே, இறைவனின் சட்டம் நியாயமானது அதில் யாருக்கும் குறைகாண முடியாது. மற்றவர்களுடைய பணத்தை எவ்வித அனுமதியும் இன்றி அணுவளவு கூட தொட முடியாது. அவ்வாறு இருக்கும் பொழுது ஒருவன் திருடி விட்டால் அவனது கைகள் வெட்டப்பட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மற்றவர்களை மதிக்கின்றது. மற்றவர்களின் பணம் சொத்து செல்வம் அனைத்துமே பாதுகாக்கப்பட வேண்டியவை. இவ்வாறுதான் பிறருடைய அனந்தர சொத்தில் கை வைப்பதும் பாரதூரமான குற்றமாகும்.

இது இறைவன் குர்ஆனில் நேரடியாக கூறிய சட்டமாகும். இவைகளெல்லாம் குர்ஆனில் இடம்பெறுகின்ற சட்டங்கள் மாத்திரமல்ல. நாம் ரமலானில் தராவீஹ் தொழுகையில் இந்த ஆயத்துக்களை செவிமடுத்திருப்போம். ஆனால் அவைகளின் கருத்துக்கள் புலப்படாததால் அவைஎம்மில் ஆழ்ந்த தாக்கத்தை உண்டுபன்னுவதில்லை.

மரணம் வரைக்கும் எனக்கு அல்குர்ஆனின் கருத்து விளங்கவில்லை தெரியவில்லை என காரணம் சொல்லிவிட்டு காலம் கழிப்பது ஒரு இறை விசுவாசியின் பண்பாக இருக்க முடியாது. இந்த குர்ஆனிய மாதத்திலே, நாம் குர்ஆனை விளங்குவது அதை தேடுவது அதை அலசி ஆராய்வது போன்ற விடயங்களில் செயல்படாவிட்டால் எப்போது செயல்படப் போகிறோம். பல ரமழான்களை சந்தித்திருக்கிறோம். எம்மை கடந்து சென்ற அனைத்து ரமழான்களும் எவ்வகையான மாற்றங்களை உருவாக்கின? நாம் எவ்வளவு ஆர்வத்துடன் படித்துள்ளோம்? என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம்.

மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டிய கடனை உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் தனது பணத்தை பதுக்கி, அநியாயம் செய்பவர்களும் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்! கடனை பற்றிய பாடம் தனியான தலைப்பாகும். கடன் வாங்கும்போது முழுப் பணிவுடன் தாழ்மையாக கேட்பார்கள். குறித்த காலம் முடிவடைந்தவுடன் கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரிடம் முழு பணிவுடன் தாழ்மையாக கேட்க வேண்டிய நிலைமை உண்டாகின்றது. கடன் விவகாரம் இஸ்லாத்தில் ஆழமாக பேசப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்களில் பொடுபோக்கு செய்துவிட்டு ரமழானில் குர்ஆன் ஓதி நின்று வணங்கி என்ன அர்த்தம் இருக்கப் போகின்றது.

அனாதைகளின் சொத்துக்களில் அநியாயம் செய்யாதீர்கள்!

அநாதைக் குழந்தைகளின் சொத்துக்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு அவர்களுக்கு உரிய காலத்தில் அவைகள் ஒப்படைக்கப்பட வேண்டும். அவைகளில், குறைபாடு செய்து திருட்டுத்தனமாக சாப்பிடுபவர்களை அல் குர் ஆன் மிக வன்மையாக கண்டிக்கின்றது. நயவஞ்சகர்களின் பண்பாடு, செய்த நல்லமல்களை பாழாக்கிவிடும்.

ரமழானில், இந்நயவஞ்சகர்கள் அன்று இருந்தது போன்று இன்றும் எம்முடன் மறைந்து இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்களது பண்புகள் தோற்றங்கள் பல்வேறு பட்டதாக காணப்படுகிறது. இருப்பினும் நயவஞ்சகர்களின் நடவடிக்கைகளில், ஏன் முக்கியமாக திகழும் ஒரு சிலவற்றை அல்லாஹ்வின் தூதர் பின்வருமாறு அடையாளப்படுத்தினார்.

عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان رواه البخاري.

‘நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்’ என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’.(அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூல்:புகாரி)

‘நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்;. பேசினால் பொய் பேசுவான்;. ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்;. விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்’ என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல்: புகாரி)

இத்தகைய பண்புகளுடன் நோன்பு நோற்கத்தான் செய்கின்றார்கள். சமூகத்தில் அதிகமான வியாபாரிகளுடைய நிலைமை இதுவாகத்தான் இருக்கின்றது .

இந்த ரமழானிலாவது நயவஞ்சகத்தனம் மாற்றமடைந்து அல்லாஹ்வின் உண்மையான இறை விசுவாசிகளாக மாற முயற்சிக்க வேண்டும்.

இன்று நாம் பிற மதத்தவர்களோடு ஒன்றாக வியாபாரத்தில் ஈடுபடுகின்றோம் இன்று உலக நடைமுறையில் காசோலை பரிமாற்றம் அதிகரித்துவிட்டது. எமது சமூகத்தில் இருக்கும் நயவஞ்சகர்களை நம்பி நம்பிக்கைக்காக இக் காசோலையை பரிமாற்றம் செய்ய முடியாதுள்ளது. அதிலும் விசேடமாக எமது முஸ்லிம் பெயர் தாங்கிகள் மோசடி செய்கின்றார்கள். ஒரு சில நயவஞ்சகர்கள் செய்கின்ற செயற்பாடுகளினால் பிற மதத்தவர்கள் கூட எமது காசோலையை நம்புவதற்கு மறுத்துவிடுகிறார்கள்.

எமது பெயரில் இருக்கும் காசோலையை ஏற்கத் தயார் இல்லை என்றால் எம்மிடம் இருக்கும் நாம் சொல்லும் மார்க்கத்தை எப்படி ஏற்கப் போகிறார்கள்.?

நயவஞ்சகர்கள் செய்யும் வேலையால் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஒதுக்கி விடுகிறார்கள். இந்த ரமழான் எமக்கு இவ்வாறான தீய குணங்களிலிருந்து விலகுவதற்கு சிறந்த சந்தர்ப்பமாகும். அடியார்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை தீர்த்துவிட்ட பின்பே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்..! அப்போதுதான் அல்லாஹ் இந்த ரமழானில் எம்மை மன்னிக்கப் போதுமானவன்.

எனவே இவ்வளவு நாட்களும் நாம் பகல் முழுவதும் பசித்திருந்து இரவு காலங்களில் வணக்கங்களில் ஈடுபட்டு அமல் செய்திருக்கின்றோம். இந்த அமல்களை முன்வைத்து இறைவனிடம் எமது பிழைபொறுக்க தேடுவோம். நிச்சயமாக எமது பிரச்சினைகளுக்கு, கஷ்டங்களுக்கு நிரந்தர தீர்வை அவன் தருவான் என்பதில் ஐயமில்லை. எப்போது எமது குற்றங்கள் தவறுகள் அடியார்களுடன் சம்பந்தப்பட்டு இருக்கின்றதோ அவைகளை அவர்களிடம் சென்று அதை தீர்த்துக் கொண்ட பின்புதான் இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். அல்லாஹ் இந்த ரமழானில் அவன் பொருந்திய அடியார்களாக எங்களை ஆக்கியருள்வானாக.

முப்தி யூஸுப் ஹனிபா
தொகுப்பு- அஷ்ஷெய்க். ஐயூப் அப்துல் வாஜித்
(இன்ஆமி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *