
மனிதாபிமானத்தை விதைப்போம்.
-
by admin
- 7
சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு இஸ்லாம் வலியுறுத்தும் மனிதாபிமானத்தை விதைப்போம்.
இஸ்லாத்தில் கறுப்பர், வெள்ளையர் என்ற வேறுபாடு கிடையாது. கறுப்பு நிற பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அத்தனை ஆயிரக்கணக்கான ஸஹாபாக்களுக்கு மத்தியில் முஅத்தினாக நியமித்து கௌரவித்த மார்க்கம் புனித இஸ்லாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலம் முழுவதும் முஅத்தினாக இருந்து உயரிய பணியாற்றிய பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நபியவர்கள் பல விடுத்தம் விழித்துக்கூறி அழைத்து கௌரவித்திருக்கிறார்கள்.
இஸ்லாத்தில் சாதி, இனம், பிரதேசம், நாடு போன்ற வேறுபாடுகளில்லை என்பதை ஒவ்வொரு ஐங்காலத் தொழுகைகளும் வருடாந்த ஹஜ்ஜும் உணர்த்திநிற்கின்றன.
படைத்த இரட்சகனான அல்லாஹ்வும் “உங்களில் அல்லாஹ்விடம் கண்ணியமானவர் உங்களில் அதிகம் அவனை பயப்படுபவர் (அதிகம் தக்வா உடையவர்)” எனும் அழகிய வார்த்தையின் மூலம் அனைத்து வேறுபாடுகளுக்கும் முற்றுப்புள்ளியிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
வெறும் கறுப்பு, வெள்ளைத் தோலுக்காக நிறத்தை வைத்து கௌரவம் பாராட்டி பெருமையடிப்பது இனவெறியின் வெளிப்பாடன்றி மனிதத்தின் அடையாளமல்ல. மனிதன் மனிதனை மிதித்து அடக்கியொடுக்கி அராஜகம் செய்து உதிரத்தை ஓட்டி உயிரைப் போக்கி என்ன தான் பயன் காணப் போகின்றானோ தெரியவில்லை.
ஒரே பெற்றோரிலிருந்து உருவாக்கப்பட்ட மனித சமூகம் ஆளுக்காள் கொலைசெய்து காட்டேரிகளாக வாழ முனைவது தான் ஆச்சரியமாகும். மிருகங்கள் தனது இனத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டவை என்பதை அறிந்த மனிதன் அவற்றை விட தரம் தாழ்ந்த நிலையில் செயற்படுவது இன்னும் மனிதன் மனித இயல்புக்கு வரவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
நவீன மனிதன் மிருகங்கள், பறவைகள் போன்ற அனைத்து ஜீவன்களுக்கும் இரக்கம் காட்டி உருகி உருகி கவனிப்பதுடன் தொழில்நுட்பம் விஞ்ஞானம் ஆகியவற்றில் முன்னேறி பல அடைவுகளை அடைந்தும் சக மனிதனை மதித்து, இரக்கம் காட்டி மனித உணர்வுடன் அனுகி அவனுக்கு உதவும் அழகிய பண்பை இழந்து உணர்வற்ற ஜடமாக அரக்கத்துடன் நடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான்.
தற்போதைய யுகத்தினரில் ஒரு சிலரைத் தவிர பலரிடத்தில் பெரியோருக்கு மரியாதை செய்தல், பெற்றோருக்கு வழிப்படுதல், சிறாருக்கு இரக்கம் காட்டுதல், நலிவடைந்தோருக்கு உதவுதல் போன்றவை அரிதாகி வருவதை காண முடிகிறது.
பாசங்கள், பண்புகள், மரியாதை, ஒழுக்கங்கள் என்பவை சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு ஊட்டப்படுவது அவசியம். அத்துடன் மதங்கள் தாண்டிய மனிதாபிமானமும் உணர்த்தப்படுவதும் காலத்தின் தேவையாகும். இல்லாவிடின் ஒழுக்க சீர்கேடான தலைமுறையினரை நாமே விதைப்பதற்கு காரணமாக அமைந்துவிடுவோம்.
மனிதனை சமமாக பார்க்கும் இஸ்லாமிய மார்க்கம் கிடைக்கப்பெற்றதையிட்டு அல்லாஹ்வை போற்றிப் புகழ்கிறேன்.
மனிதமுடன்
Azhan Haneefa
சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு இஸ்லாம் வலியுறுத்தும் மனிதாபிமானத்தை விதைப்போம். இஸ்லாத்தில் கறுப்பர், வெள்ளையர் என்ற வேறுபாடு கிடையாது. கறுப்பு நிற பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அத்தனை ஆயிரக்கணக்கான ஸஹாபாக்களுக்கு மத்தியில் முஅத்தினாக…
சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு இஸ்லாம் வலியுறுத்தும் மனிதாபிமானத்தை விதைப்போம். இஸ்லாத்தில் கறுப்பர், வெள்ளையர் என்ற வேறுபாடு கிடையாது. கறுப்பு நிற பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அத்தனை ஆயிரக்கணக்கான ஸஹாபாக்களுக்கு மத்தியில் முஅத்தினாக…