மரணம் உலகில் ஏற்படும்
மிகப்பெரும் சோதனையல்லவே
அது உலக வாழ்வின் நியதியே

நீ வாழும்போதே
அல்லாஹ் பற்றிய பயம்
உன் உள்ளத்தில் மரணிப்பதுவே
மிகப்பெரும் சோதனை

மரணம் அது பிரிவுமல்லவே
நிச்சயமாய் மறுமையில்
நாம் ஒன்று கூடுவோமல்லவா

உண்மையான பிரிவு
எம்மில் ஒருவர் சுவனத்திலும்
மற்றவர் நரகிலும் இருப்பதுவே

மையவாடியினுள் நுழைந்து
மனிதனைப் பார்.
நேற்று உன்னிடத்தில் நின்றவர்
இன்று மண்ணறையில் மண்ணாகியுள்ளார்.

இங்கு துன்பமும் நிரந்தரமில்லை
இன்பமும் நிரந்தரமில்லை
ஆறடியின் ஆழத்தினுள் ஆதரவேதுமின்றி

ஆரம்ப மனிதர் முதல்
ஆயுள் நிறைய வாழ்ந்தவர்களும்
ஆண்டாண்டு காலமாக ஆண்டவர்களும்
மாண்டுவிட்டனரல்லவா

எகிப்திய மன்னர்களும்
பாரசீக அரசர்களும்
ரோமாபுரி ராஜாக்களும்
புதையுண்டு கிடக்கின்றனரல்லவா.

சரித்திரம் படைத்தோரும்
சாதனைகள் பல கண்டோரும்
சலனமே இல்லாமல்
சயனித்தும் விட்டனரே.

மன்னர்களும் மாவீரர்களும்
மண்ணறைகளின் பிடியில்
மடிந்து போய்விட்டனரே.

பணத்திலும் பதவியிலும்
மயங்கியிருக்கும்
நீ நூறாண்டுகள் வாழ்ந்தாலும்
மண்குழியினுள்
மண்டியிட்டுத்தானே ஆகவேண்டும்.

உயிருள்ள உன்னிடம் உறுதியாய் கேள்
உன் உயிர் பிரியும் நேரம்
உயர் கலிமாவைச் சொல்ல
உனக்கு இறைவன் உதவுவானா.

உணர்வுள்ள நீ உணர்ந்து கொள்வாய்.
கேள்விக்கான பதிலை
உன் அமல்களினால் தெரிந்து கொள்வாய்.

பாஹிர் சுபைர்
(அரபுக் கவிதையின் கருத்தை மையப்படுத்தி மாற்றத்துடன் எழுதப்பட்டது)

Leave a Reply

%d bloggers like this: