Advertisements

இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியாகத் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தகுதியானவராக ரவூப் ஹக்கீம் திகழ்வதை கடந்த கால சம்பவங்கள் சான்று பகிர்கிறது.

ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மாத்திரமல்ல. ஒரு சமூகத்தின் தலைமையாகும். அதனைப் பாதுகாக்கும் தலையாய கடமை எல்லோருக்கும் இருக்கின்ற சூழலில், அந்த வாய்ப்பு கண்டி மக்களை வந்தடைந்திருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தேசியத்திலும், சர்வதேசத்திற்கும் எடுத்துச்சொல்லும் மும்மொழிப்புலமை, ஆளுமைமிக்க துணிச்சல்மிக்க தலைமையாக ரவூப் ஹக்கீம் காணப்படுகிறார்.

பெரும்பான்மைக் கட்சிகளில் எமது பிரதிநிதிகள் அன்றும், இன்றும் இருக்கும் நிலையில், இனவாதச் செயற்பாடுகளினால் பெரும் இழப்பு ஏற்படுத்த ஒரு கூட்டம் கண்டியிலிருந்து தயாரான போது, அதனைத்தடுக்கும் நோக்கில் அமைச்சுப் பதவிகளை தானும் துறந்து, மற்றவர்களையும் துறக்கச்செய்து பெரும் கலவரம் ஏற்படுவதைத் தடுத்தவர். இந்தச்சந்தர்ப்பத்தில் சில நாட்களிலே பெரும்பான்மைக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்த நம்மவர்கள், அவர்களின் கட்சி அழுத்தம் காரணமாக மீண்டும் பதவியேற்றதை நாம் பார்க்கலாம்.

இச்சம்பவம் நமக்காய் அன்று கட்சி அவசியப்பட்டதை இன்றும் உணர்த்தியிருக்கிறது. இனவாதம் பேரினவாதிகளால் ஏற்படும் போது, தங்களின் அரசியல் நலன் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பேரினக்கட்சிகள் மௌனம் காக்கும் போது, அவர்களின் கட்சியிலுள்ள நம்மவர்களால் அன்றும் குரல் கொடுக்க அனுமதியில்லை. இன்றும் உறுதியான நடவடிக்கைகளை கட்சிக்கட்டுப்பாடுகளை மீறிச்செயற்பட முடியாத சூழ்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எவருக்கும் கட்டுப்படாது எம்மவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருவதை நாம் பார்க்கலாம்.

மஹிந்த ஆட்சியில் நீதியமைச்சராக இருந்த போதும், நல்லாட்சியில் நகரத்திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வியமைச்சராக இருந்த போதும், முஸ்லிம் சமூகம் சவால்களை எதிர்நோக்கிய போது ஆட்சியாளர்களைக் கண்டித்து குரலெழுப்பும் தைரியமிக்க தலைமையாக ரவூப் ஹக்கீம் திகழ்ந்ததை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.

கண்டியில் பிறந்தவர் என்ற அடிப்படையில் இனவாதமில்லாது ஏனைய இனத்தவர்களுடனும் சகோதரத்துவத்துடன் பழகக்கூடியவராக ரவூப் ஹக்கீம் இருக்கிறார். தன் இனத்திற்காக மாத்திரமின்றி பாதிக்கப்படும் சமூகங்களுக்காகவும், நபர்களுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார். முக்கிய அமைச்சுகளைப் பொறுப்பேற்று கடந்த காலங்களில் கண்டி உட்பட நாட்டின் நாலாபுறமும் இன, மத வேறுபாடுகளுக்கப்பால் சேவை செய்திருக்கிறார்.

நாட்டின் நலனிலும் அக்கறை கொண்டு தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் கடந்த காலங்களில் தனது பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்ட சந்தர்ப்பத்தில் தேசியவாதியாக ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் கடந்த 52 நாள் போராடியதையும், அதற்காக இன்றைய அரசாங்கத்தால் பழிவாங்கப்படுவதையும் நாம் காணலாம்.

ரவூப் ஹக்கீம் ஆட்சியாளர்களைத் திருப்திபடுத்தி சமூக அநீதிகளைக் கண்டும் காணாதிருப்பதை விரும்பாததன் காரணமாக பல தடவைகள் எதிர்க்கட்சியிலிருந்து வந்திருக்கிறார்.

ஏப்ரல் 21 தாக்குதல் உட்பட தற்போதைய கொரோனா நோய்த்தொற்று போன்ற காரணங்களிலும் முஸ்லிம் சமூகத்தை இக்கட்டிற்குள் மாட்டி விட்டு இனவாதிகள் இனவாதம் பேசியதை நாம் பார்க்கலாம். இவ்வாறான நிலைமைகளிலும் ரவூப் ஹக்கீம் சமூகத்திற்காக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும், சர்வதேசத்திலும் குரல் கொடுத்தது மாத்திரமின்றி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதோடு, அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றுதிரட்டி போராடியதையும் நினைவுபடுத்துகிறேன்.

இன்றைய தேர்தல் சூழ்நிலையில் எல்லோரும் தேர்தல் வெற்றியை நோக்கமாகக் கொண்டு செயற்படும் வேலையில், தற்போதைய அரசாங்கம் முஸ்லிம்கள் மீதான இனவாதத்தை அதிகரிப்பதனூடாக பெரும்பான்மையான சிங்கள வாக்குகளால் ஆட்சியைப்பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் ரவூப் ஹக்கீமைத் தோற்கடிக்க வேண்டுமென்ற சூழ்ச்சிகளும் மேற்கொள்ளப்படுவதை நாம் பார்க்கலாம்.

சிறுபான்மைத் தலைவராக பெரும்பான்மை மக்களோடும் சிநேகபூர்வமாகப் பழகக்கூடியவராக ரவூப் ஹக்கீம் காணப்படுகிறார். இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, இனவாதமற்ற நாட்டைக் கட்டியெழுப்புவற்கு உதவியாக அமையும்.

எனவே, கண்டி மாவட்ட வாக்காளர்கள் இனவாதத்திற்கு அடிபணியாது, இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக அதிகப்படியான வாக்குகளை ரவூப் ஹக்கீமுக்கு அளித்து, மூவின மக்களின் குரலாகவும், ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய, எல்லோருடனும் நேசம் பாராட்டும் ரவூப் ஹக்கீமை வெற்றி பெறச்செய்ய முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

 

எம்.என்.எம்.யஸீர் அறபாத்
ஓட்டமாவடி.

Leave a Reply

%d bloggers like this: