சிற்றரசர்களின் விடுதி அம்பலாந்துவ

அமைவிடம்

இலங்கைத் திருநாட்டின் ,மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தின் வடபகுதியில் எமது கிராமமாகிய அம்பலந்துவைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் பாணந்துறைப் பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட சுமார் 1280 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் 60 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு சிறிய கிராமமாகும். எமது கிராமம் ஒரு அரச பாடசாலை, இரண்டு பள்ளிவாசல்கள், பதிவு செய்யப்பட்ட ஆண் பெண் இருபாலாருக்குமான ஒரு மத்ரஸா, மக்தப் வகுப்பு, அஹதிய்யா பாடசாலை என அனைத்து வளங்களையும் கொண்ட ஒரு கிராமமாக காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு சிறப்புமிகுந்த ஓர் இடமாக முன்னேறுவதற்கு, எமது முன்னோர்கள் செய்த தியாகமே இதற்கு மூலகாரணம் எனலாம். அதனுடைய பிரதிபலிப்பே இன்றைய முன்னேற்றத்திற்கு ஓர் மைல்கல் எனலாம்.

ஆரம்ப குடியேற்றம்

எமது ஊரின் வரலாறானது பல நூற்றாண்டுகள் முன் தொடங்கிய வரலாறாகவும் காணப்படுகின்றது. மேற்கத்தேயவர்களின் வருகைக்கு முன்பே முஸ்லிம்கள் வர்த்தகம் மற்றும் தமது மதத்தைப் பரப்புதல் போன்ற காரணங்களுக்காக ஆசிய நாடுகளுக்கு பிரயாணஞ் செய்துள்ளனர். போர்த்துக் கேயரின் வருகையின் பின்னர் கோட்டை மன்னனுக்கு உதவி செய்த நன்றிக்கடனுக்காக கோட்டையை விட்டு முஸ்லிம்களை விரட்டியடிக்க கோரினான். இதற்கு மன்னன் புவனேகபாகு தயங்கிய போதும் அவர்களின் வற்புருத்தலிற்கமைய வெளியேறுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டான். இதனால் முஸ்லிம்கள் பல பகுதிகளில் குடியேறினர். அதிலும் அளுத்கமை, களுத்துறை, மாத்தறை போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் கணிசமானவர்கள் வாழ்ந்துள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. களுத்துறைப் பகுதியை நோக்கி குடியேறியவர்கள் களுத்துறையின் வட பகுதியான பாணந்துறையிலும் குடியேற்றங்களை அமைத்தனர். இவ்வாறு வந்தவர்களுள் சிலர் இலங்கையின் பெரிய ஏரியான பொல்கொட வாவியைச் சென்றடையும் சிறு ஏரிகளாலும் வயல் நிலங்களினாலும் சூழப்பட்ட ஒரு எழில் மிகுந்த சிறியதொரு தீவில் குடியேறினர். இத் தீவின் ஆரம்ப குடியேற்றமாக ஒரு குடும்பம் குடியேறியதாகவும் அல்லது நான்கு சகோதரர்கள் குடியேறியதாகவும், அவர்களுடைய பரம்பரையே தற்போது வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்ற போதும் தகுந்த ஆதாரங்கள் கிடைக்காததனால் ஆரம்பகுடி பற்றிய ஒரு சரியான தீர்மானத்திற்கு வர முடியாத நிலமையே காணப்படுகிறது எனலாம்.

‘அம்பலந்துவை’ நாமம் வந்த விதம்

எமது கிராம குடியேற்றம் ஏற்பட முன்னரும் பின்னரும் எந்தவிதமான பெயரும் இருக்கவில்லை. வெறும் காடாகக் காணப்பட்ட நிலத்தை விவசாய நிலமாக மாற்றினார்கள். அன்றைய காலப்பகுதியில் மன்னராட்சி நிலவின. அதே போல் பாணந்துறைப் பிரதேசத்தையும் ஆட்சிக்குட்படுத்தி சிற்றரசனொருவன் ஆட்சி செய்து வந்தான். இச்சிற்றரசன் தனது பிரயாணங்களை கரையோரப் பகுதிகளினூடாக மேற்கொள்வது வழக்கம். இவ்வாறு பயணிக்கையில் எழில் நிறைந்த அழகுச் செழுமை மிக்க கரையோரத்தைக் கண்டான். அந்தக் கரையோரத்தில் இழைப்பாற எவ்விதமான வசதிகளும் காணப்படவில்லை. இவ்விடம் அவனது மனதைக் கொள்ளை கொண்டதனால் தனது இளைப்பாறும் இடமாக அதை பழக்கத்தில் கொண்டான். எனவே அவ்விடத்தில் சத்திரம் ஒன்றை அமைத்தான். எனவே அதில் அச்சிற்றரசன் மாத்திரமின்றி அதனூடாக பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் அவ் இடம் நிழல் கொடுத்தது.

இப்பிரதேசம் அழகிய தீவு என்பதனால் சிங்களச் சொல் “தூவ” என்பதையும் சத்திரம் காணப்பட்டதால் அதன் சிங்களச் சொல்லான “அம்பலம்” என்பதையும் இணைத்து “அம்பலந் தூவ” என்று அழைக்கப்பட்டு பின்னர் “அம்பலந்துவை” என மாற்றமடைந்தது.

அன்றைய காலகட்டத்தில் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரிக்கப்பட்டதனடிப்படையில் அம்பலந்துவைக் கிராமம் ஹீனகஹ குருந்து வத்தை, தவடக வத்தை , அமபகஹ வத்தை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் அரசாங்க பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சனத்தொகை மற்றும் வர்த்தகம்

சனத்தொகையினை எடுத்துக் கொண்டால் இக்கிராமத்தின் ஆரம்ப குடியேற்றமாக ஒருவர் அல்லது ஒரு குடும்பம் வந்திருக்கலாம் என அதிகமானவர்களின் கருத்தாகும். இக் குடும்பத்தின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என சந்ததியினர் விருத்தியடைந்து கிராமத்தின் சனத்தொகை அதிகரித்தது. சந்ததியினரின் விருத்திக்கு ஏற்ப நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அயல் ஊரான “பெக்கேகம” மற்றும் “கட்டஸ்ஸ” ஆகிய பகுதிகளில் வாழும் சிங்கள மக்களின் நிலங்களே இந்த அம்பலந்துவைத் தீவாகும். அதிலும் “டாவிட் பீரிஸ்” என்பவருக்கு சொந்தமான நிலப்பகுதியே அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அம்பலந்துவை மக்கள் “பண்டமாற்று” முறைமையைப் பயன்படுத்தியும், பின்னர் “பணப்பரிமாற்ற” முறையின் மூலமும் கொள்வனவு செய்தார்கள்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சுமார் 180 குடும்பங்களே எமது பூர்விகளாகக் காணப்பட்டன. அதே ஆண்டில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஓரிரு குடும்பங்கள் அகதிகளாகக் குடியேறி, அதைத் தொடர்ந்து 325 குடும்பத்தினர் குடியேறினர். இவ்வாறு குடியேறியவர்களுடன் எமது கிராம மக்கள் சகோதரனைப் போல ஆதரித்தனர். இவ் அகதிகளுக்கு கிராம மக்கள் மாத்திரமன்றி தொட்டவத்தை, சரிக்கமுல்லை மக்களும் அப்பகுதியிலுள்ள தனவந்தர்களும் பல உதவிகளைச் செய்தனர்.

அம்பலந்துவை கிராமத்தின் கிழக்குப் பகுதி பொல்கொட வாவியினாலும் மற்றொரு பகுதி பெரும்பாண்மையினராக வாழும் கிராமமாகவும் (தொட்டவத்தை) மற்ற இரு பகுதிகளும் சிங்கள மக்கள் வாழும் (பெக்கேகம, கட்டஸ்ஸ) ஊர்களாலும் சூழப்பட்டுள்ளது. எமது மக்கள் அயல் முஸ்லிம்களுடனும் சிங்கள மக்களுடனும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் பழகின்றனர்.

எமது மக்கள் ஆரம்பத்தில் விவசாயத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினர். பின்னர் சனத்தொகை விருத்திக்கு ஏற்ப கொத்தன் வேலையையும் செய்தனர். ஆரம்ப காலங்களில் கட்டிடத் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பிற்பட்ட காலத்தில் இத்துறையிலுல் மாத்திரமல்லாமல் பல்வேறு துறைகளிலும் ஈடுபட ஆரம்பித்தார்கள். சிலர் மார்க்கக் கல்வியிலும் சிலர் அரச தொழில்களின் பாலும் தங்களுடைய தொழில்களை அமைத்துக் கொண்டார்கள்.

எமது அம்பலந்துவையில் முதலாவது அரச தொழிலாக பஸ் நடத்துனராக நான்கு பேர் கடமையாற்றினார்கள். உலகக் கல்வியின்பால் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களுள் முதலாமவர் “மஹம்மத் ஹாஸிம் ” என்பவராவார். இவரால் ஊரிற்கு செய்யப்பட்ட சேவைகளோ பல. அவரைப் போல் இன்னும் பலர் பல சேவைகைளச் செய்துள்ளனர்.

அந்தவகையில் வைத்தியத் துறையை எடுத்துக் கொண்டால், அப்துல் கபூர் என்பவர் நாட்டு வைத்தியத்துறையில் தேர்ச்சி பெற்றவராகக் காணப்பட்டார். அதே நேரம் எமது கிராமத்திற்கு வாரத்திற்கு ஒரு நாள் வருகை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் வைத்திய சேவையைப் பெறுவதில் நமது முன்னோர்கள் பல சிரமங்களையும் எதிர் கொண்டனர். இச் சிரமத்தை நமது சந்ததியும் பெறக்கூடாது எனக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடனும் அரசின் உதவியுடனும் மருந்தகம் அமைக்கப்பட்டது.

உட்கட்டமைப்பு

முன்னைய காலப்பகுதியில் அம்பலந்துவைக் கிராமமானது எவ்வித அடிப்படை வசதிகளையும் கொண்டிருக்கவில்லை. போக்குவரத்தை எடுத்துக் கொண்டால் ஆரம்பகால பயணங்கள் எல்லாமே கால்நடையாகவே அமைந்தாலும் சில வழிகள் பயணங்களை மேற்கொள்ள உதவுவனவாகவும் அமைந்திருந்தாலும் அவை கடினமாகக் காணப்பட்டன. பிற்பட்ட காலங்களில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்களினால் பாதைகள் அமைக்கப்பட்டன. இப்போது மக்கள் எவ்வித சிரமுமின்றி தமது நடவடிக்கைகளைச் செய்ய பாதைகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன எனலாம். மேலும் எமது ஊரின் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட A.A மஃரூப் அவர்களின் மூலம் இலங்கை போக்குவரத்து சபை மூலம் பஸ் சேவையும் ஆரம்பிக்கப்பட்டது. அதே போல் மின்சாரம் மற்றும் நீர் வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டு மக்களின் அனைத்து வசதிகளையும் சிறப்பாகச் செய்து கொடுக்கப்பட்டன. அதன் மூலம் எமது கிராம மக்கள் இன்றும் அவ் வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

குர்ஆன் மத்ரஸா

எமது கிராமத்தில் மஸ்ஜிதுல் ஹைராத் மற்றும் தக்வா மஸ்ஜித் என இரு பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. இரண்டு பள்ளிவாசல்களிலும் குர்ஆன் மத்ரஸாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதுடன் “தாருல் குர்ஆன் அல்கரீம் ன” மூலம் சுமார் 10 ஹாபிழ்களை உருவாக்கிய பெருமை இம் மத்ரஸாவையே சாரும். தொடர்ந்தும் மக்தப் வகுப்புகள் மற்றும் பல மத்ரஸாக்கள் இடம்பெற்று வருகின்றன.

கல்வித் துறை

ஒரு சமூகத்தின் மேம்பாடு கல்வித் துறையில் தான் தங்கியுள்ளது. அந்தவகையில் எமது கிராமத்தின் கல்வியை எடுத்துக் கொண்டால், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் 1941 ஆம் ஆண்டு மஸ்ஜித் பாடசாலையாக மாற்றம் பெற்று, அந்த நேரத்தில் 45 மாணவர்களைக் கொண்டிருந்தார்கள்.

பாடசாலையின் ஆரம்பம் முதல் அம்பலந்துவை மஸ்ஜித் பாடசாலை, அம்பலந்துவை அரச பாடசாலை, அம்பலந்துவை முஸ்லிம் வித்தியாலயம் என ஊருடைய பெயரைக் கொண்டிருந்த பெயர் 2014 ஆம் ஆண்டு “இல்மா முஸ்லிம் வித்தியாலயம்” என்று மாற்றப்பட்டு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆரம்ப காலங்களை விட கல்வியில் முன்னேற்றமடைந்து செல்லும் ஒரு சூழ்நிலை உருவாகியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளதைக் காணலாம். அதுமாத்திரமின்றி எமது ஊரில் எந்த ஒரு விடயத்திற்கும் வெளியூர்களைச் சேர்ந்தவர்களை நாட வேண்டிய அவசியம் இல்லாதளவு அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் எமது ஊரிலே இருக்கிறார்கள்.

எமது பாடசாலை அதிபர் அம்பலந்துவையைச் சேர்ந்தவர். எமது பள்ளிவாயல்களினதும் இமாம்கள் மற்றும் முஅத்தின்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது அம்பலந்துவை வரலாற்றில் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். அதுமாத்திரமின்றி அஹதிய்யாப் பாடசாலை மற்றும் பாலர் பாடசாலைகள் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

அண்மைக்காலமாக எமது ஊரிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கும் கல்வியற் கல்லூரிகளுக்கும் செல்லும் வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதுமாத்திரமன்றி தற்காலத்தில் இராணுவத் துறையிலும், மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும் எமது ஊரினர் தமது ஊக்கத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இச் சாதனைகள் எமது ஊரின் பெருமையை வலுச்சேர்க்கும் விடயமாகக் காணப்படுவது எமது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்படக் கூடிய விடயமாகும். மேலும் எமது ஊரில் பல கல்வி மகான்கள் உருவாக இறைவன் அருள்பாளிப்பானாக!

உசாத்துணை நூல் :- Arshad, CM and Sheeras, MAM, (2016), History of ambalanduwa, A one printers-Galle

சாறா இஸ்மத்
அம்பலந்துவை
Tags: