வளர்க்க எடுத்த புள்ளகள்கு சொத்துலயே பங்கில்ல.

திருப்பு முனை
பாகம் 16

ஒருநாள் வீட்டிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. லீனா இந்தாங்க. ஊட்ல கோல்.

“ஹலோ. அஸ்ஸலாமு அலைக்கும்.”

“வஅலைக்கும் ஸலாம். என்ன லீனா ஒரு கோல் சரி இல்ல ஏன்?” என்று மாமி கேட்க,

“நா ஊட்டுக்கு கோல் எடுத்து தர சொன்னா அவர் எடுத்து தாரல்ல. அதுக்கு 1008 கத சொல்ற. நா என்னா செய்ய அதுக்கு? யாருக்கும் எனய பத்தி கணக்கு இல்லயே. எல்லாம் ஏன்ட விதி. என்னா லீனா இப்படி பேசுறீங்க?”

“வேற எப்படி பேச சொல்றீங்க மாமி. இப்படி ஒரு வாழ்க்க வாழ்றத விட சாகுறது எவ்ளவோ நல்லம். ச்சே.”

“ஓ ஒனய முடிச்சி குடுத்ததுக்கு இந்த கத தேவ தான் எனக்கு”

“இனி நீங்க பொய்ய சொல்லி தானே எனய குழில தள்ளினீங்க. அது மட்டும் சரியா அப்ப?”

“என்னடி நா பொய்ய சொன்னேன். நீ எனக்கே எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்டியா?”

“நீங்க ஷரீப்ப பத்தி சொன்னது அவ்வளவுமே பொய் தானே மாமி.”

“ஆ! நீ இப்படி சொல்லிட்டாய் எனா? இனி என்னோட பேசாத.”

“சரி உம்மாக்கு phoneஅ குடுங்க நா அவஙலோட பேசனும்.”

தாயுடன் வெகு நேரமாக உரையாடினாள் லீனா.

“மகள் ஒஙலுக்கு ஏலும்டா எனக்கு மருந்துக்கு சல்லி அனுப்புங்க. கைல ஒரு சதமும் இல்ல.”

“சரிம்மா. இவர்ட கேட்டுட்டு அனுப்புறேன். என்ன செய்ய உம்மா. எல்லாம் தலகீழா இரிக்கே.”

சில மணி நேரங்களில் எல்லோரிடமும் பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள் லீனா. ஷரீப் வாசலில் அமர்ந்திருந்தான். அவள் தொலைபேசியை  நீட்டி விட்டு.

“உம்மாக்கு மருந்து செலவுக்கு சல்லி போட சொன்னாங்க”

“ம்ம். எவ்வளவு?”

“தெரியா… சொல்லல்ல.”

“பாப்பம் ஏலும்டா போடுறேன்.”

“ம்ம்.”

அவள் எதிர்ப்பார்த்த பதில் தான்.

“லீனா என்ன இருந்தாலும் ஒஙலுக்கு ஒஙட உம்மாவ பாக்கனும்டு கடம இல்ல. ஒஙலுக்கு தான் தெரியுமே. வளர்க்க எடுத்த புள்ளகள்கு சொத்துலயே பங்கில்ல. அதனால நீங்க இதுவல பெருசா மண்டயில போட்டுக்கோ தேவல்ல. நீங்க ஒஙட உம்மாவ பாக்கல்ல கேக்கல்லன்டு அங்க யாரும் ஒன்டும் சொல்ல போறதும் இல்ல.”

“போதும் நிப்பாட்டுங்க. என்னா சொல்றீங்க. குத்தி காட்றீங்களா. நா வளக்க எடுத்த புள்ள தான். அதுக்காக ஒஙல மாதிரி நன்டி கெட்ட புத்தியோட எனய யாரும் வளக்கல்ல. பெருசா சட்டம் பேசுறீங்களே. இஸ்லாத்துல பெத்த தாய் காபிரா இருந்தாலும் அந்த தாய்ட கடமய பாக்க தான் சொல்லிருக்கி. ஒஙல மாதிரி ஆகல்கு தாய்ப்பாசம் டா என்னான்டு எங்க வெளங்க போகுது? தான் ஒஙட உம்மாவயே மூனாவது மனுசி போல தானே வெச்சிருக்கிறீங்க. கேவலம் தாய்க்கி நீங்க காட்டுற மரியாதயா இது ச்சே ஒரு உம்மாட அரும என்னான்டு அவங்க இல்லாத டைம் தான் வெளங்கும்.

இப்ப சொல்றேன் நல்லா கேட்டுகோங்க. ஏன்ட உம்மாவ கடசி வரக்கும் நானே பாக்குறேன். இவ்வளவு நாள் மாப்புளட பேச்ச மீற கூடாதுனு தான் நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலயாட்டி கொண்டு இருந்தேன். ஒஙல நம்பி இனி வேலல்ல. நீங்க சொன்ன ஒரு வார்த்தகாக தானே நா கெம்பஸ் கு admission போடாம இருந்தேன். இப்ப நா அதயும் போடுவேன். எப்படி இருந்தாலும் முடிக்க முன்னுக்கு நீங்க வாக்கு தந்தீங்க தானே எனய படிக்க உடுறன்டு. இனி யார்ட கதயும் எனக்கு தேவல்ல. யார்ட அன்பும் அக்கறயும் வானா. எல்லாம் நடிப்பு. யாரும் இல்லாட்டியும் பரவல்ல. ஏன்ட படிப்ப யாருக்காகவும் நா உட்டுக்குடுக்க மாட்டேன். இவ்வளவு நாள் நா பட்டது எல்லாமே போதும். இது தான் ஏன்ட முடிவு. இப்ப நா சொன்னத நீங்க யாருக்கு வேணும்னாலும் கோல் பண்ணி சொல்லுங்க. எனக்கு பிரச்சினயே இல்ல.”

லீனா கொந்தளித்து விட்டு அறைக்குள் சென்றாள். ஷரீப்புக்கு தூக்கி வாரிப் போட்டது. லீனாவை இதற்கு முன் அவன் அப்படி ஒரு நிலையில் கண்டதில்லை. உடனே லீனாவுக்கு தெரியாமல் அவள் மாமிக்கு கோல் எடுத்து நடந்ததை கூறினான்.

மாமிக்கும் லீனாவின் நடவடிக்கைகள் வியப்பாக இருந்தது. அவளை பற்றி மாமி நன்கறிவாள். லீனா பொறுமையின் எல்லையை தாண்டி விட்டாள் என்பதை அவளது நடவடிக்கையில் தெரிந்தது. மாமி ஷரீப்புக்கு ஏதேதோ சொல்ல அவன் அவளிடம் வந்து,

“லீனா என்னா கோவமா. சரி மன்னிச்சிடுங்க. நா ஒஙட உம்மாக்கு சல்லி போட்டேன். இனி ஒவ்வொரு மாசமும் நீங்க ஆசப்பட்ட மாதிரி சல்லி அனுப்புறேன். சரியா?”

அவள் ஏதும் பதில் பேசவில்லை. அவளுக்கு தெரியும் இது மாமியின் உத்தி தான் என்று, அவள் அவனது வார்த்தைகளுக்கு மசியவில்லை. ஏனெனில் இது வெறும் நடிப்பு என்று அவள் ஏற்கனவே அறிந்திருந்தாள். லீனாவின் மாற்றம் மாமியின் மனதில் பயத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனால் தான் அன்றே மாமாவுடன் புறப்பட்டு அவளை பார்க்க வந்திருந்தார் மாமி.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla
Author: admin