நா கெம்பஸ் போற முடிவுல தான் இரிக்கிறேன்

திருப்பு முனை
பாகம் 17

மணி இரவு 7.30 இருக்கும். கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தவளுக்கு அதிர்ச்சி. முன்னால் மாமாவும் மாமியும் நின்றிருந்தனர். ஸலாத்துடன் அவர்களை வரவேற்றாள் லீனா. அவர்களுக்கு வந்த களைப்புக்கு லீனா டீயுடன் சிற்றுண்டியும் சேர்த்து வழங்கினாள். சிறிது நேரம் சுகம் விசாரித்து உரையாடி விட்டு திடீரென மாமி.

“என்ன லீனா திரும்ப புதுசா கெம்பஸ் கத எல்லாம் கதக்கிறீங்களாம்?”

“ஓ! கதச்சேன். முடிக்க முன்னுக்கு அதுக்கு எல்லாம் ok சொன்ன சுட்டி தானே நானும் முடிக்க ஒத்துக் கொண்டேன். நா பழய கதய தான் சொல்றேன். இப்ப புதுசு புதுசா ஒவ்வொரு கத சொல்றது இவர் தான்.”

“இப்ப நீ என்ன தான் சொல்ல வாறாய்?”

“எனக்கு படிக்கனும்.”

“இதுக்கு ஷரீப் விருப்ப படனுமே. ஓன்ட இஷ்டத்துக்கு முடிவு எடுக்க ஏல!”

“இந்த நிமிசம் வரக்கும் நா அடுத்தவங்கட இஷ்டத்துக்கு தான் வாழ்ந்துட்டு வாறேன். இனி சரி ஏன்ட இஷ்டத்துக்கு நா வாழனும்டு நெனக்கிறேன். ஒஙலுக்கு நெனவிரிக்கா, அன்டக்கி ஒரு பிரச்சினயில இவர்ட போன்ல என்னமோ இரிக்கி. எனக்கிட்ட அத மறைக்கிறார் என்டு சொன்னேன். அப்ப திடீர்ன்னு இவர்ட போன் காணாம பெய்த்துட்டு, எங்க போன் என்டு கேட்டா யாரோ ஹஸரத் ஒன்டுக்கு போன்அ குடுத்தார் என்டாரு. ஏன்டா அந்த ஹஸரத்ட போன் ஒடஞ்சாம். அதுக்கு இவர்ட போன்அ வித்தாராம். அடுத்தவங்களுக்கு ஒரு புடி சோறயே குடுக்க யோசிக்குற இவர் எப்படி இவர்கு உசுறா இருந்த போன்அ தானம் பண்ணுவாரு?

அப்பவே நா சொன்னேன் இவர் பொய் சொல்றார் என்டு. நீங்க யாரும் அத நம்பல்ல. ஆனா அதே போன்அ அதே கவரோட போன கெழம நா கண்டேன். இப்ப கேளுங்க இவர்ட அதுக்கும் ஒரு கத சொல்வாரு.”

உடனே மாமா அவனை அழைத்து கேட்டார்.

“இல்ல. அது நா அப்பவே வித்துட்டேனே.”

“பொய் சொல்லாதீங்க. ஒஙல்ட தான் அந்த போன் இரிக்கி” லீனா பொங்கினாள்.

“லீனா பேசாம இரிங்க.” மாமா அதட்டினார்.

“ஷரீப் நா சொல்றது ஒன்டும் ஒஙலுக்கு வெளங்குதில்லயா? என்னா நடக்குது. இது ஒஙட 2nd life. எல்லாத்துட பார்வயும் ஒஙட மேல தான் இரிக்கி. நீங்க எப்படி வாழ போறீங்கன்டு பாக்க ஒரு கூட்டமே இரிக்கி. அத மனசுல வெச்சி நடங்க.”

அவன் மௌனம் காத்தான். பிறகு மீண்டும் சமாதானம் செய்து வைத்தார் மாமா. ஆனாலும் அந்த சமாதானம் அவளுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஏனெனில் ஷரீப்பின் சுயரூபம் தான் இப்போது லீனாவுக்கு நன்றாக தெரியுமே. அவளுக்கும் புத்திமதி கூறினார் மாமா. மாமியுடன் அவள் பெரிதாக எதுவும் பேசவில்லை. மறுநாள் மாமாவும் மாமியும் விடை பெற்றனர்.

வேண்டா வெறுப்பாக வாழ்க்கையை கடத்தி கொண்டிருந்தாள் லீனா. சித்தியிடம் இருந்தும் ஒரு தகவலும் இல்லை. வெளியில் என்ன நடக்கிறது என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

************************

அவள் எதிர்ப்பாராத ஒரு நாள் சலீமா வந்தாள். அவளை கண்டதும் சூரியனை கண்ட சூரிய காந்தி பூவாய் உள்ளம் மகிழ்ந்தாள்.

“ஏன் தாத்தா இவ்வளவு நாள் நீங்க வரவே இல்ல. நா பாத்துட்டு இருந்தேன் தெரிமா?”

“இல்ல தங்கச்சி. நா தாத்தா ஊட்ல இருந்தேன். அவக்கு புள்ள கெடச்சி. ஒதவிக்கி நா பெய்த்து இருந்தேன்.”

“அப்படியா தாத்தா. அதான் நானும் பாத்தேன் ஒஙல காணமேன்டு.”

“இப்ப பிரச்சின எல்லாம் முடிஞ்சா தங்கச்சி.”

“அத ஏன் கேக்குறீங்க தாத்தா. அது அதே கத தான். திருந்தாத ஜெம்மங்கள திருத்த ஏலாதே ம்ஹூம்.”

“அல்லாஹ் தான் ஒஙலுக்கு ஒரு வழிய காட்டனும் தங்கச்சி. ஒஙலுக்கு சொல்ல மறந்துட்டு. ஒஙட யார் யாரோ கோல் எடுத்து இருந்தாங்க. நா அங்க தானே இருந்தேன். அதான் வந்து தர ஏலாம போச்சி.”

“அல்லாஹ் ஓவா தாத்தா.”

“ஓ தங்கச்சி. இந்தாங்க போன்அ வெச்சி கோங்க. எனக்கு இப்ப அவசரமில்ல. ஒஙட வேல எல்லாம் முடிஞ்சி கோல் தாங்க. நா வாறேன் போன்அ எடுக்க.”

“சரி தாத்தா. நா சொல்றேன். அதோட தாத்தா நா கெம்பஸ் போற முடிவுல தான் இரிக்கிறேன்.”

“மாஷா அல்லாஹ்! பாருங்க தங்கச்சி அல்லாஹ் தான் ஒஙட மொகம் பாத்து இரிக்கிறான். படிங்க தங்கச்சி. படிச்சா யாருக்கும் கொறயாது. எப்படி சரி பெய்த்து படிங்க நாங்க எல்லாம் படிக்காம தான் இவ்வளவு கஸ்டபடுறோம். நீங்க சரி படிச்சி முன்னேறுங்க.”

“சரி தாத்தா. துஆ செய்ங்க. closing date முடிஞ்சிருக்க படாதுன்னு.”

“கட்டாயம் தங்கச்சி. அல்லாஹ் ஒஙல கையுட மாட்டான். பொறுமயா இரிங்க. படிப்பு கை கொடுக்கும் ஒஙலுக்கு.”

“அதுன்டா உண்ம தான் தாத்தா. அல்ஹம்துலில்லாஹ்.”

Noor Shahidha.
SEUSL.
Badulla
Author: admin