அல்லாமா முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களது எளிமையும் பணிவான வாழ்வும்

ஒரு நாள் இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது பள்ளிவாயலுக்கருகாமையில் நின்றவாறு சில மாணவர்களுடன் உரையாடிக்கொண்டு அவர்களது மார்க்க கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த போது, விலையுயர்ந்த ஆடம்பர வாகனம் ஒன்று வந்து நின்றதுடன் அதிலிருந்து சாரதி ஒருவர் இறங்கி “இந்த வாகனம் இன்னார் (பெயர் குறிப்பிடப்பட்ட) உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்” என்று கூறியவாறு அதன் திறப்பை வழங்கினார்.

இமாமவர்கள் அவ்வாகனத்தை பெற்றுக்கொள்ள மறுத்த போது, மீண்டும் மீண்டும் அச்சாரதி கட்டாயப்படுத்தி வேண்டியதன் காரணமாக, அதன் திறப்பை பெற்றுக்கொண்டார். உடனே குறித்த சாரதி வேறோரு வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார். இத்தனைக்கும் இமாமவர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உயர் ரக வாகனத்தை திரும்பிக்கூட பார்க்காது அதன் திறப்பை கையில் புரட்டியவாறு தனது மாணவர்களுடனான உரையாடலை தொடர்ந்தார்.

இவ்வேளையில் திடீரென ஓர் இளைஞன் வந்து இமாமவர்களுக்கு ஸலாம் கூறிய பின் தனக்கு இன்றிரவு திருமணம் இருப்பதால் இமாமவர்களை கலந்துகொள்ளுமாறு வேண்டினார். உடனே இமாமவர்கள் தனக்கு ஏலவே அதிக வேலைகள் இருப்பதால் தனக்கு கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்காது என்று தனது தயவை முன்வைத்தார். இருந்தும் அவ்விளைஞன் இமாமவர்கள் தொடர்ந்து வேண்டிக் கொண்ட போது, இமாமவர்கள் மிருதுவாக, அன்பாக பேசி மீண்டும் தனது நிலையைக் கூறி தயவை வேண்டிக்கொண்டதுடன் “இத்திறப்பை பெற்றுக்கொள்ளுங்கள், இவ்வாகனம் உங்களுக்கான எனது அன்பளிப்பு” என்று கூறியவாறு திறப்பை கையளித்தார்கள்.

இந்நேரத்தில் அவ்விளைஞன் இமாமவர்களுக்கு அன்பளிப்பாக கிடைத்த வாகனத்தை பெற்று, கொண்டுசென்றார். இமாமவர்கள் ஒன்றும் நடக்காதது போன்று மீண்டும் மாணவர்களுடன் தனது கலந்துரையாடலை தொடர்ந்தார்.

இமாமவர்களிடமிருந்து குறித்த மூன்று நிழ்வுகளிலிருந்தும நாம் பெறும் படிப்பினைகள்:

  1. மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களை மதித்து கலந்துரையாடுதல்
  2. ஆடம்பர வாழ்க்கையை விரும்பாமை
  3. தன்னைத் தேடி வருபவர்களை மதித்தல்
  4. நிகழ்வுகளுக்கு அழைக்கப்படும் போது தனது நிலையை மென்மையாக கூறுதல்
  5. இடையில் பல தொந்தரவுகள் ஏற்பட்டாலும் மீண்டும் உரிய விடயத்தை தொடர்தல்
  6. செருக்கின்றி பணிவுடன் நடக்கும் தன்மை
  7. செல்வந்தர்களிடம் வீணாக கேட்டு வாங்கும் அவா, அவர்களை மிதமிஞ்சி புகழ்தல் என்பவை துளியளவும் இல்லாமை

(நுப்ததுன் அன் ஹயாதில் இமாம் இப்னு உஸைமீன்)

அஸ்ஹான் ஹனீபா
Author: admin