ஷரீப் நானாக்கு முந்தில இருந்து எஙட உம்மாட மேல தான் கண்

  • 103

திருப்பு முனை
பாகம் 20

லீனா யோசிக்க தொடங்கினாள். அவளால் சாரா கூறியதை ஏற்க முடியாமல் இருந்தது.

“நா ரோஸி ஆன்டிய எவ்வளவு நம்பினேன். கடசில ஏன்ட வாழ்க்ககே எமனா வந்துட்டாவே ச்சீ”

அந்த ரோஸி வேறு யாரும் இல்லை. ஷரீப்பின் தந்தையின் சகோதரனின் மனைவி. அவனது சித்தி. இதுவா இஸ்லாம் காட்டிய உறவு? அஜ்னபி மஹ்ரமி எல்லை பேணப்பட்டால் சித்தி முறையில் இருப்பவள் கள்ளக்காதலியாக தேவையும் இல்லை. மகன் முறையில் இருப்பவன் கள்ளக் காதலனாகவும் தேவை இல்லை. அப்போது தான் அவளுக்கு பல விடயங்களின் உண்மை நிலை புரிந்தது.

அதுக்கு தான் இவர் வாப்பம்மா ஊட்டுல நிக்காம ஒரே அங்க போற. அதுக்காக தான் இவர உட்டு பிரிஞ்சி போக ஏலாத கவலக்கி தான் அவ பேருக்கு எனயயும் சேர்த்து உம்றாக்கு கூட்டி போனாளோ. சல்லி சல்லி என்டு துன்யா ஹவா புடிச்சவ உம்றா கூட்டி போறன்டு சொல்லும் போதே புதுனம். இதுக்கு தான் இப்படி நாடகம் போட்டாளோ.

ரோஸியோடு ஷரீப் கொஞ்சி விளையாடியது செல்ல சண்டைகள் போட்டது இரட்டை பொருளில் இருவரும் பேசிக் கொண்டது எல்லாம் லீனாவின் கண் முன் நிழலாடின. அவளுக்குள் கோபத் தீ சுவாலையிட்டு எரிந்து கொண்டிருந்தது. தனக்கான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தாள்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் சிங்கள புதுவருடமும் வந்தது. அவளை விடுமுறைக்காக தாய் வீட்டுக்கு அழைத்து செல்வதாக ஷரீப் ஏற்கனவே ஒரு முறை வாக்களித்திருந்தான். அதற்கான ஆயத்தங்களில் அவளும் இருந்தாள். ஒரு நாள் திடீரென வீட்டுக்கு வந்த ஷரீப்.

“லீனா அவசரமா ரெடியாகுங்க. வாப்பம்மாக்கு வருத்தம் பாக்க போகனும்.”

அவளும் அவசரமாக ஆயத்தமாகி அவனுடன் சென்றாள். இரண்டு நாட்களில் வாப்பம்மா குணமடைந்தார். அப்போது லீனா ரோஸியின் மூத்த மகளோடு உரையாடிக் கொண்டிருந்தாள். திடீரென அவளிடம்,

“நீங்க ஒரு நாள் எனக்கிட்ட ஏதோ கதயொன்டு சொல்லனும்டு சொன்னீங்க தானே. என்னா அது.”

“ஓ. நா அன்டக்கி hospital போக கொல சொல்ல வந்த கதயவா கேக்குறீங்க தாத்தா.”

“ஓ. அது தான் மா”

“நா ஒஙட மாப்புளய பத்தி தப்பா சொல்றேன்டு கோவிக்க வானா தாத்தா.”

“ச்சீ நா கோவிக்க மாட்டேன் சொல்லுங்க மா.”

“ஷரீப் நானாக்கு முந்தில இருந்து எஙட உம்மாட மேல தான் கண். எஙட உம்மாக்கும் எஙல விட அவர் தான் பெருசு. நீங்க அவர இங்க கூட்டி வர வானா தாத்தா. நீங்க சொல்லி வைங்க.”

“ம்ஹூம். எனக்கும் எல்லாம் இப்ப இப்ப தான் வெளங்குது. நா சொல்லி அவர் கேப்பாருன்டு நீங்க நம்புறீங்களா?”

“இல்ல எனா தாத்தா”

“ம்ம். சரி எனக்கு இந்த கதகள் தெரியும் என்டு நீங்க யார்டயும் காட்டி கொள்ள வானா சரியா?”

“சரி தாத்தா நா யார்டயும் சொல்ல மாட்டேன் நம்புங்க”

இவர்களது பேச்சை ஒட்டு கேட்க ரோஸி ஆன்டியும் வாசலில் வந்தமர்ந்தாள்.

“என்ன ரெண்டு பேரும் குசுகுசு”

“இல்ல சும்மா பேசிட்டு இருந்தோம் உம்மா”

“லீனா லீவுக்கு ஊட்டுக்கு போறீங்க போல”

“ஓ போறேன்”

“நல்லம். மிச்ச நாள் நிக்காம வந்துடுங்க. ஷரீப்புக்கும் இங்க நெரய வேல இருக்கே.”

“அதுக்கு எல்லாம் நா பழில்லயே ஆன்டி. எனக்கு எவ்வளவு நாள் நிக்கனுமோ அவ்வளவு நாளக்கி நா நின்டுட்டு தான் வருவேன்.”

லீனாவின் இந்த வெடுக்கென்ற பேச்சு ரோஸிக்கு வியப்பாக இருந்தது. பிறகு அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு,

“ஷரீப் இங்க வந்து பாருடா. ஓன்ட பொண்டாட்டிட வாய.”

அவனும் வந்தான்.

“ஏன் என்னா சொல்றா?”

லீனா கூறியதை அவனிடம் கூறி விட்டு.

“இப்படி பேசுறவள கூட்டிட்டே போகாதடா”

“அத சொல்றதுக்கு மொதல்ல நீங்க யாரு”

“லீனா யாருக்கிட்ட வந்து என்னடி பேசுறாய்?” என்றான் ஷரீப்.

“ஏன் தலயில தூக்கி வெச்சி ஆடுறதுக்கு இவள் யாரு?”

“என்னடி சொன்னாய்” என்று பளார் என்று ஒரு அறை விழுந்தது. அவள் அழுது கொண்டே,

“இவக்கு ஒன்டு சொன்னா ஒங்களுக்கு ஏன்வா கோவம் போகுது. சொல்லுங்க.” அவன் எதுவும் பேசவில்லை.

“தெரியாம அடிச்சிட்டேன். Sorry லீனா.” என்றவனை பார்த்து,

“ஒஙட Sorry ஒன்டும் எனக்கு தேவல்ல. சொல்ல வேண்டியவங்களுக்கு அதுகள சொல்லுங்க. இதுக்கெல்லாம் நா இனி மயங்க மாட்டேன். பிறகு ரோஸியை பார்த்து முறைத்தவாறே,

“ஏன் ஆன்டி ஒஙட life ல நா எப்ப சரி வந்து தல போட்டேனா இல்லயே. எதுக்கு ஏன்ட life ல மூக்க நொலக்கிறீங்க. ஒஙலால தான் இவர் இப்படி இரிக்கிறாரு. இத்துன புள்ளய பெத்தும் இன்னம் ஆட்டம் கொறயலயா. வெட்கமில்ல.”

“லீனா!” ஷரீப் கத்தினான்.

“என்னடி சொன்னாய் நா என்னா ஓன்ட மாப்புளய வெச்சிட்டா இரிக்கிறேன்.”

“யாருக்கு தெரியும்.”

“ஷரீப் பாருடா இவ சொல்ற கதய.”

“எனக்கு எல்லா கதயும் தெரியும் ஆன்டி”

“என்னா தெரியும்?”

“சொல்ல வேண்டியவங்களுக்கு அதுகள சொல்றேன்.”

ரோஸிக்கு நறுக்கென்றது. பிறகு ரோஸியின் கணவன் அவ்விடம் வரவே, ரோஸி லீனா கூறியவற்றை சொன்னாள். உடனே அவர் லீனாவின் அருகில் வந்து, சொல்லு ஒனக்கு என்னா தெரியும். லீனா எதுவும் பதில் பேசவில்லை. பிறகு அவன் லீனாவை அடித்து துன்புறுத்தினான். அத்தனையையும் ஷரீப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

‘கட்டின பொண்டாட்டிட மேல எவனோ ஒருத்தன் கை வைக்கிறான். இவன் என்னடா என்டா அத வேடிக்க பாக்குறான். ச்சே. இவன் எல்லாம் ஒரு மனுஷனா.’ லீனா மனதுக்குள் பொருமினாள்.

“ஏன்ட பொண்டாட்டி எப்படி இருந்தா ஒனக்கு என்னடி?”

“என்னதுக்கு ஏன்ட வாழ்க்கயில அப்ப அவ குறுக்காகனும். அதுக்கு பதில் சொல்லுங்க.”

சிறிது நேரம் மயான அமைதி.

“லீனா நா ஒஙட மேல கைய வச்சதுக்கு மன்னிச்சுடுங்க. இதுவல ஊட்ல எல்லாம் சொல்ல தேவல்ல. மனுஷனுக்கு கோவம் போனா அப்படி தானே. இதுவல பெருசு படுத்தாதீங்க. ஷரீப் நீ இனிமேல் இங்க வராத. லீனாவ சந்தோசமா பாத்துக்கோ.”

லீனா பொறுமையாக இருந்தாள். அதற்கு மேலும் அவள் அங்கிருக்க விருப்பப் படவில்லை. ஷரீப்பை பார்த்து, ஊட்டுக்கு போகனும்.

“ம்ம் வாங்க போவோம்.”

அங்கிருந்தவர்களிடம் விடை பெற்றவள் இறுதியாக ரோஸியின் அருகில் வந்தாள்.

“லீனா மன்னிச்சுடுங்க.”

“ஒங்களுக்கும் பொம்புள புள்ளகள் இரிக்கி ஆன்டி. ஏன்ட இந்த கண்ணீர் ஒங்கள ஒரு நாளும் சும்மா உடாது. ஒஙட முடிவ நா பாக்கனும். நா இத ஜென்மத்துக்கும் மன்னிக்க மாட்டேன். நீங்க அனுபவிப்பீங்க. அத நா கண்ணால பாப்பேன்.” என்று லீனா பல்லை கடித்தவாறே கூறி விட்டு புறப்பட்டாள்.

ரோஸிக்கு மெய் சிலிர்த்தது. லீனா செல்லும் பாதையையே பார்த்து கொண்டிருந்தாள்.

Noor Shahidha.
SEUSL.
Badulla

திருப்பு முனை பாகம் 20 லீனா யோசிக்க தொடங்கினாள். அவளால் சாரா கூறியதை ஏற்க முடியாமல் இருந்தது. “நா ரோஸி ஆன்டிய எவ்வளவு நம்பினேன். கடசில ஏன்ட வாழ்க்ககே எமனா வந்துட்டாவே ச்சீ” அந்த…

திருப்பு முனை பாகம் 20 லீனா யோசிக்க தொடங்கினாள். அவளால் சாரா கூறியதை ஏற்க முடியாமல் இருந்தது. “நா ரோஸி ஆன்டிய எவ்வளவு நம்பினேன். கடசில ஏன்ட வாழ்க்ககே எமனா வந்துட்டாவே ச்சீ” அந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *