எனய கொன்டே போட்டாலும் கேக்க யாரும் வர மாட்டாங்க சாச்சி

திருப்பு முனை
பாகம் 21

வீட்டுக்கு வந்த லீனா கட்டிலில் சாய்ந்து கொண்டு யோசனையில் இருந்தாள். அன்றிரவு முழுக்க அவள் உறங்கவில்லை.

ஒரு வாரமாக அவள் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை. அவளது மௌனம் ஷரீப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

அவள் என்ன முடிவோடு இருக்கிறாள் என்பதும் கேள்விக் குறியாகவே இருந்தது. ஆனாலும் அவளது வேதனை என்ன என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை.

இதனால் அவளை வீட்டுக்கு கூட்டி செல்லவும் அவன் தயங்கினான். அன்று மாமி கோல் எடுத்திருந்தாள்.

“லீனா நீங்க இந்த முற லீவுக்கு ஊட்டுக்கு வர வானா நா உம்மாவ அங்க அனுப்புறேன். சரியா.”

“ம்ம்” என்றாள்.

“சரி நடந்ததுகள நெனச்சி கவலபட தேவல்ல. ஏதோ கோவத்துல தானே அடிச்சிட்ட”

“மாமி எனக்கு இவர் அடிச்சது கூட கணக்கில்ல. ஆனா எவனோ ஒருத்தன் ஏன்ட மேல கைய வைக்ககாம் இவர் வேடிக்க பாத்துட்டு தானே இருந்தாரு. அது தான் வலிக்குது. இதே ஒஙட புள்ளக்கி எவனும் கைய வெச்சா பாத்துட்டு சும்மாவா இரிப்பீங்க”

“இல்லயே”

“அப்ப ஏன் எனக்கு மட்டும் அடங்கி போ சொல்றீங்க. நானும் மனுசன் தான். ஒஙலோட பேசவே எனக்கு புடிக்கல்ல. வைங்க போன்அ”

“லீனா நா சொல்றத….”

மாமி சொல்லும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது. மாமி பல முறை கோல் எடுத்தும் அவள் பேசவில்லை.

“லீனா மாமி ஒஙலோட பேசனுமாம். பேசுங்க.”

“ஏன்ட நெலம புரியாத யாரோடயும் எனக்கு பேச வேண்டிய தேவ இல்ல”

ஷரீப்பின் வற்புறுத்தலும் தோற்று போனது. ஷரீப் வெளியே சென்றதும் சித்திக்கு கோல் எடுத்து நடந்ததை கூறி அழுதாள்.

“எனய கொன்டே போட்டாலும் கேக்க யாரும் வர மாட்டாங்க சாச்சி”

“ச்சீ. லீனா இப்படி பேசாதிங்க. நாங்க இரிக்கிறோம் ஒங்களுக்கு. இப்படி ஒன்டு நடந்த கதயே இப்ப தான் எனக்கே தெரியும். அவன் நல்லாவா இரிப்பான். ஒஙட மேல கை வெச்சதுக்கு? வெட்கம் கெட்டவன் ஊரான் பொம்புள மேல கை வைக்கிற நாய்”

சித்தி கோவம் தீர திட்டி தீர்த்தார்.

“சாச்சி நா தந்த number அந்த விஷயம் என்னாச்சு?”

“அத விசாரிச்சு பாத்தாச்சு நீங்க சொன்னது எல்லாம் உண்ம தான்”

“யாரு போன விசாரிக்க? நா அன்டக்கி அவகளோட பேசினேன். அப்ப தான் சொன்னாங்க. யாரோ மாமா ஒன்டு வந்தன்டு”

“ருஸ்னி மாமா தான் ஒனக்காக கஷ்டப்பட்டு மொத பொண்டாட்டிட ஊட தேடி அவோட பேசின. அப்பறவ் மொத divorce குடுத்த காதியார கண்டு பேசினதாம். நீங்க சொன்னது அப்படியே தான் அச்சு அசலா அவவும் சொல்லி இரிக்கிறா. காதியார் ஒஙல ஒடனே ஊட்டுக்கு கூட்டி போக சொன்னதாம். நீங்க லீவுக்கு வருவீங்கன்டு தான் நாங்களும் பாத்துட்டு இரிக்கிறோம். நீங்க மாப்புளய உட்டுட்டு வர ஏலான்டு சொன்னன்டு சொன்னதே. அதான் நானும் நெனச்சேன். இப்ப பிரச்சின இல்லாம நீங்க சந்தோசமா இரிக்கிறன்டு.”

“நா ஊட்டுக்கு கூட்டி போக தான் சொன்னேன். இப்ப உம்மாவ இங்க அனுப்புறதாம் லீவுக்கு.”

“அப்படியா யாரு சொன்ன. உம்மா சொகமில்லாம இருக்கிறாங்க எப்படி அவங்கலால பயணம் வெக்க ஏலும்?”

“தெரியா மாமி தான் சொன்னதே அதும் நா இவர உட்டு வர ஏலான்ட ஒரு கதயவே கதக்கல்ல.”

“இப்ப தானே எல்லாம் வெளங்குது. அந்த குடும்பம் ஒரு கிருமினல் குடும்பமாம் என்டு காதியார் சொல்லி இரிக்கிறாரு.”

“ம்ம். இப்ப சரி உண்ம தெரிதே அது போதும்.”

சித்தியுடன் பல மணி நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள்.

‘அல்ஹம்துலில்லாஹ். உண்மய காட்டி தந்தியே அல்லாஹ் அது போதும்.’

அந்தியில் சலீமா வரவே லீனா நடந்ததை கூறினாள். சலீமாவுக்கும் ஷரீப்பின் மீது கோபம் வந்தது.

“இவனெல்லாம் ஒரு ஆம்புளயா தங்கச்சி. இப்படி இரிக்கிறான். இதே ஏன்ட மாப்புளயா இருந்தா அவன்ட கைய கலட்டிட்டு தான் மறுவேல.”

“ம்ம் அது தான் தாத்தா”

“இவ்வளவு நடந்துட்டு நீங்க யோசிச்சி. எல்லாதோடயும் பேசி ஒரு முடிவு எடுங்க தங்கச்சி”

தொடரும்.
Noor Shahidha
SEUSL
Badulla
Author: admin