பிள்ளைகளே! தந்தைகளே! இது உங்களுக்குத்தான்

  • 10

சற்று சிந்திப்போமா.  மார்க்கம் எமது உயிர். பண்பாடும் ஒழுக்கமும் எமது மூச்சு.

உயிரான மார்க்க விடயங்களும், மூச்சான உயர் பண்பாடும் ஒழுக்கமும் படிப்படியாக எம்மிடம் அழிந்து வருவதை அவதானித்தோமா.

நபிகளாரின் நற்போதனைகள் அகன்று நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் பேச்சும் செயலும் வேரூன்றி வருகின்றதே. உண்மை உதிர்ந்து கற்பனை முளைக்க ஆரம்பித்து விட்டதே. விழித்துக் கொள்வோம்.

நம் பிள்ளைகள் தலைமுடி வெட்டும் முறையை அவதானித்தீர்களா. அதில் பல முறைகள் தடுக்கப்பட்டவைகள் என்பதை உணர்ந்தீர்களா?

மார்க்க வரையறையைப் பேணி நேர்த்தியாக வெட்டப்பட வேண்டிய முடியை நினைத்தவாறு வெட்டுகின்றனரே. நபிகளாரின் வழிமுறையை கவனித்தீர்களா!

நபியவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல்விட்டு விடுவதைத் தடை செய்தார்கள் – நூல் : புகாரி

முழங்காலுக்கு மேலேறிய அல்லது தொப்புளுக்குக் கீழிறங்கிய ஆடைகளைக் கவனிக்கவில்லையா? அவ்ரத்தை வெளிக்காட்டும் அந்த ஆடை ஹராமல்லவா?

அப்படியான ஆடைகள் அணிவது கூடாதென்பது ஒருபுறம். மற்றொரு புறம் அதை அணிந்து வெளியில் நடமாடுவது. அந்த ஆடைகளுடனான அவ்ரத் வெளியான புகைப்படங்களை பதிவிடுவது. பகிர்வது பிறரையும் தூண்டிவிடும் செயலல்லவா!

இன்று பேச்சில் கண்ணியம் செத்து விட்டது. பெரியோருக்கான மரியாதை மடிந்து விட்டது. சிறியோர் மீதான அன்பு அணைந்துவிட்டது. பெண்களின் புகைப்படங்கள் பேஸ் புக் வரை வந்துவிட்டன. புகை, போதை மலிந்து விட்டது. உள்ளங்கள் இறுகிவிட்டன. நற்பண்புகள் பல மலையேறி விட்டன. அசிங்கங்கள் பல அரங்கேறுகின்றன.

உலக வாழ்வு ஜெயித்து வருகின்றது. மறுமைக்கான முயற்சி தோற்று வருகின்றது.

பெற்றோர்களே! குறிப்பாக தந்தைகளே! தந்தை எனும் சொல் உயர்வானது. அதன் பணியும் பரந்து விரிந்தது. கீழே வரும் வாசகத்தை கவனியுங்கள்:

“தந்தை என்ற சொல்லுக்கு குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று அர்த்தமாகாது. அது எல்லோராலும் முடியுமான விடயம். தந்தை என்ற வார்த்தைக்கு குழந்தைகளை கவனித்துக் காக்கவும், சீரான முறையில் அவர்களை வளர்த்தெடுக்கவும் திறன் பெற்றவர் என்றுதான் அர்த்தமாகும்.” (மெல்கம் எக்ஸ்)

நபிகளாரின் கீழ்வரும் வாசகத்தை சுவாசியுங்கள்:

ஒரு ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவர், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவார் – நூல்: புகாரி.

பிள்ளைக்கு மார்க்கத்தை, நல்ல கல்வியை, பண்பாட்டை, ஒழுக்கத்தை வழங்குங்கள். தந்தையாக உலகிலும் மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். இல்லையேல் தோற்று விடுவீர்கள். இங்கு மட்டுமல்ல மறுமையிலும் கூட உங்கள் தோல்வி தொடரலாம். அதுதான் உண்மையான வெற்றியும் தோல்வியும்.

பாஹிர் சுபைர்

சற்று சிந்திப்போமா.  மார்க்கம் எமது உயிர். பண்பாடும் ஒழுக்கமும் எமது மூச்சு. உயிரான மார்க்க விடயங்களும், மூச்சான உயர் பண்பாடும் ஒழுக்கமும் படிப்படியாக எம்மிடம் அழிந்து வருவதை அவதானித்தோமா. நபிகளாரின் நற்போதனைகள் அகன்று நடிகர்கள்,…

சற்று சிந்திப்போமா.  மார்க்கம் எமது உயிர். பண்பாடும் ஒழுக்கமும் எமது மூச்சு. உயிரான மார்க்க விடயங்களும், மூச்சான உயர் பண்பாடும் ஒழுக்கமும் படிப்படியாக எம்மிடம் அழிந்து வருவதை அவதானித்தோமா. நபிகளாரின் நற்போதனைகள் அகன்று நடிகர்கள்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *