முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதற்கு மக்கள் சாட்சியாக வரும் நாள் எப்போது?

  • 25

அல்-குர்ஆன் அடிப்படையில் ஒரு சமாதான உலகைக் கட்டியெழுப்ப விழைகிறது. பிற சமூகங்களுடன் இணங்கி, சகிப்புடன் வாழ்வதே குர்ஆனிய சிந்தனையின் அடிப்படை. அது பரஸ்பரம் உதவி ஒத்தாசைகள் புரிந்து வாழும் சர்வதேச நாகரிகங்களைக் காண விரும்புகிறது. அற்புத மறை அல்குர்ஆன் உலகின் வரலாற்று ஓட்டத்தையே மாற்றி மாபெரும் சமூகப் புரட்சியைச் சாதித்தது.

உயிர்த் துடிப்புள்ள அந்த நூல் பிற மதங்களோடும், நாகரிகங்களோடும் கலந்து உரசி உறவாடியது. ஆக்கபூர்வமான அந்த உறவுகளை காத்திரமாக கட்டியெழுப்பும் பணிக்கான அடிப்படைகளாக சகவாழ்வையும், சகிப்புத்தன்மையையும் மனித உள்ளங்களில் அது விதைத்தது. சகவாழ்வு வேராக இருக்கும் காலமெல்லாம் சமூக உறவுகள் சாய்வதில்லை.

இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம்களுடன் மோதல்களை தவிர்த்து இணக்கமாக வாழும் பிற சமூகங்களுடன் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு அல்-குர்ஆன் முஸ்லிம்களை பணிக்கிறது. அதற்கும் அப்பால் நலன் சார் விடயங்களிலும், நன்மை பயக்கும் செயல்களிலும் பரஸ்பரம் ஒத்துழைக்குமாறு மனித குலத்தை அது அழைக்கிறது.

உதவுதல், ஒத்துழைத்தல், நீதியுடன் உறவாடல், விட்டுக் கொடுத்தல் என்பன சகவாழ்வுக்காக அல்குர்ஆன் தந்த விழுமியங்கள். இவ்வடிப்படைகள் தவிர, மனித சமத்துவம், கருத்துச் சுதந்திரம், தங்கி வாழல், சார்ந்திருத்தல், கலந்து வாழல், சமூகநீதி என இன்னும் பல உயர்ந்த விழுமியங்களையும் சகவாழ்வின் வேர்களாக குர்ஆனிய சிந்தனை முன்வைக்கின்றது.

அல்-குர்ஆன் முன்வைக்கும் பிற மதங்களுடனான உறவுகள் பற்றிய உண்மையான சகவாழ்வு சிந்தனையை மறைக்கும் திரைகளாக தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்வுகளும் மோதல்களும் அமைந்து விட்டன. நவீன காலத்தில் எதிரிகளால் பரப்பப்பட்ட இஸ்லாம் பற்றிய பீதியும் திரைக்கு மேல் திரையாக படிந்துள்ளது.

எனவே சகிப்புத்தன்மைக்கும் சகவாழ்வுக்குமான இஸ்லாமிய அடிப்படைகளை அந்தத் திரைகளை தாண்டி அல்-குர்ஆனை வாசிக்கும் போது தான் பல்லின சமூகத்தில் சகவாழ்வு என்பது குர்ஆனிய சிந்தனை ஊன்றிய விதை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

அதற்கு ஒரு சாட்சியாக தோமஸ் ஆர்னோல்டு எழுதும் வரலாற்று சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். ‘இஸ்லாமியப் படை அபூ உபைதாவின் தலைமையில் ஷாம் தேசத்தின் ஜோர்தான் சமவெளியில் உள்ள ‘பஹ்ல்’ என்ற இடத்தில் தங்கியிருந்த போது அப்பிரதேசத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அரேபியர்களை விழித்து பின்வருமாறு கடிதமொன்றை எழுதினார்கள்:

முஸ்லிம்களே! பைஸாந்தியர்களை விட உங்களையே நாம் விரும்புகின்றோம். அவர்கள் எமது மதத்தை சேர்ந்தோராக இருப்பினும் சரியே. காரணம் நீங்கள் எங்களுடன் விசுவாசமாக நடக்கின்றீர்கள். எம்மோடு நீங்கள் மிகவும் இரக்கமாக இருக்கின்றீகள். எமக்கு அநீதி இழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்கின்றீர்கள். எங்கள் மீதான ரோமர்களது ஆட்சியை விட உங்களது ஆட்சி மிகவுமே சிறந்தது.

இது அன்று அல்குர்ஆனிய சிந்தனையை உள்வாங்கிய முஸ்லிம்களின் சகவாழ்வால் வந்த விளைவாகும். இந்த சம்பவத்தை எழுதும் வரலாற்றாசிரியர் ஒரு தீவிர இஸ்லாம் விமர்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சமூகம் பூமிப் பந்தில் பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ வாழ நேரிடலாம். அது உலகின் எந்தப் பிராந்தியத்திலும் வாழலாம். ஆனால் அங்கே சகவாழ்வு உறவுகளின் உயிராக காணப்படும்.

அவ்வாறே இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணி வாழ்வது அதன் மீதான மார்க்கக் கடமை போன்றே பிறசமூகங்களுடன் இணங்கி, சமாதானமாக வாழ்வதும், தாம் வாழ்கின்ற நாட்டிற்கு தம்மாலான பங்களிப்பை ஆற்றுவதும் அவர்கள் மீது உள்ள மார்கக் கடமை என்றும் அது ஆழ்ந்து நம்பும்.

உள்ளங்களில் விதைக்கப்பட்டுள்ள இந்த குர்ஆனிய சிந்தனை சில போது தூசி படிந்து மறைந்து காணப்படலாம். ஆனால் அது ஒரு போதும் சாவதில்லை. திரைகளைக் கிழித்துக் கொண்டு மீண்டும் சகவாழ்வு மலர்ந்து மனிதம் வாழும் என்ற நம்பிக்கை இறை விசுவாசிகளின் மூச்சாகவே உள்ளது.

பன்மைத்துவ சமூக அமைப்பை கொண்ட இலங்கை மண்ணில் தனித்துவத்தை இழந்து விடாமல் பிற சமூகங்களுடன் இணங்கி வாழ்தல் எனும் வாழ்வியல் சமன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்று வகையான பிக்ஹில் முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்துவது அவசியம்.

சிறுபான்மை முஸ்லிம்களுக்கான வாழ்வியல் ஒழுங்கு

பன்மைத்துவ சமூக அமைப்பில் முஸ்லிம் அல்லாதவர்களோடு இணங்கி வாழ்வதற்கான சிறுபான்மை வாழ்வொழுங்கில் கூடிய கவனம் செலுத்துவது அவசியம். இன்றைய இஸ்லாமிய சிந்தனைப் பரப்பில் இது சிறுபான்மைக்கான வாழ்வொழுங்கு எனும் தனிப்பகுதியாக வளர்ந்திருக்கிறது.

உலமாக்களும், புத்திஜுவிகளும், துறை சார்ந்தோரும், நிபுணர்களும் கூட்டாக இணைந்து இலங்கை சூழலை அடியொற்றி இத்தகையதோர் வாழ்வியல் ஒழுங்கு முறையை பிக்ஹுல் அகல்லிய்யாவை வகுக்க வேண்டும். இது பாரம்பரிய பிக்ஹிலிருந்து முற்றிலும் விலகிய ஒரு பிக்ஹ் அல்ல, மாறாக அதன் ஒரு பகுதியாகவும் கிளையாகவுமே அமையும்.

பிக்ஹுல் அவ்லவிய்யாத்

இலங்கை வாழ் முஸ்லிம்களின் சமூக தேவைகளில் முதன்மைப்படுத்த வேண்டியது எது என்பதில் அதி கூடிய கவனத்தை குவிப்பதே இந்த பகுதியாகும். முதன்மை படுத்தல் பிக்ஹு (பிக்ஹுல் அவ்லவிய்யாத்) என்பது நவீன காலத்தில் வளர்ந்து வரும் ஒரு கலையாகும். அதன் பொருள் ஒவ்வொன்றுக்கும் அதற்கேயரிய பெறுமானத்தை கொடுத்து, கால அடிப்படையில் முற்படுத்த வேண்டியதை முதன்மைபடுத்தி நடைமுறைப் படுத்துவதை குறிக்கின்றது.

மேலும் இஸ்லாம் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் உள்ள விடயங்களின் தராதரங்களை கவனத்திற் கொண்டு, அனைத்தையும் ஒப்பீடு செய்து மிகப் பயனுள்ளதை முற்படுத்துமாறு வேண்டுகிறது. அனைத்து விவகாரங்களுக்கு மத்தியிலும் சமநிலை பேணுமாறும் வழிகாட்டுகிறது.

பிக்ஹுல் இக்திலாஃப்

கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பாகும். வித்தியாசமான சிந்தனைப் பிரிவுகள் இருப்பதும் தவிர்க்க முடியாத ஒரு விடயமே. இருப்பினும் பொதுத் தளத்தில் இணைந்து செயலாற்றுவதற்கும், கருத்து வேற்றுமைகளை பண்பாட்டுடன் அணுகுவதற்குமுரிய இஸ்லாமிய பிக்ஹு கலையை பிக்ஹுல் இக்திலாஃப் என அடையாளப்படுத்தலாம்.

பல்லின சமூகத்தல் சகவாழ்வுடன் இணங்கி வாழ்வதற்கு மேற்கூறிய மூன்று விடயங்களிலும் கவனம் செலுத்துவதும் அவசயம்.

இதன் மூலம் கருத்தில் உள்ள மோதல்கள், தனிமனிதர்களுக்கிடையிலான மோதல்களாகவும் குழுக்களுக்கிடையிலான மோதல்களாகவும் மாறும் அபாயத்தை கண்டிப்பாக தடுக்கலாம்.

இந்த அடிப்படையில் இலங்கை முஸ்லிமிகளின் எதிர்கால நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டால் நிச்சயமாக சமாதான சகவாழ்வு மொட்டு விரித்து மலரும். அப்போதுதான் நாட்டில் வாழும் ஏனைய சகோதர சமூகங்கள், முஸ்லிம்கள் சமாதானத்தின் தூதுவர்கள் என்பதற்கு சாட்சி பகர்வார்கள்.

மேலும் முஸ்லிம்கள் உரிமைகள், சலுகைகள் என்ற அரசியல் போராட்டத்தில் மூழ்கி அழிகின்றவர்கள் அல்ல என்றும் அவர்களுக்கு என தனியான வாழ்வு முறை உள்ளது என்றும் அதனை தம்மால் இயன்றவரை அவர்கள் வாழும் நாடு, சூழல், இடம், என்பவற்றுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவார்கள் என்றும் அடுத்த சமூகத்திற்கு பயனுள்ளவர்களாகவே இருப்பார்கள் என்றும் தீவிரவாதமோ வன்முறையோ பயங்கரவாதமோ அவர்கள் புறத்தால் தோன்ற மாட்டாது என்ற உத்தரவாதமும் மக்கள் சாட்சியாக வந்து சேரும்.

முஹம்மத் பகீஹுத்தீன்

அல்-குர்ஆன் அடிப்படையில் ஒரு சமாதான உலகைக் கட்டியெழுப்ப விழைகிறது. பிற சமூகங்களுடன் இணங்கி, சகிப்புடன் வாழ்வதே குர்ஆனிய சிந்தனையின் அடிப்படை. அது பரஸ்பரம் உதவி ஒத்தாசைகள் புரிந்து வாழும் சர்வதேச நாகரிகங்களைக் காண விரும்புகிறது.…

அல்-குர்ஆன் அடிப்படையில் ஒரு சமாதான உலகைக் கட்டியெழுப்ப விழைகிறது. பிற சமூகங்களுடன் இணங்கி, சகிப்புடன் வாழ்வதே குர்ஆனிய சிந்தனையின் அடிப்படை. அது பரஸ்பரம் உதவி ஒத்தாசைகள் புரிந்து வாழும் சர்வதேச நாகரிகங்களைக் காண விரும்புகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *