இது உலக முடிவா?

  • 179

தடம் புரண்ட கடல்
பகுதி 02

இதுவரை கதை:

ஒரு கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக காலி நோக்கி போய்க் கொண்டிருந்தேன், சனநெருக்கடிமிக்க அந்த நாளிலே ஒரு இடத்திலே புகையிரதம் நிறுத்தப்படுகின்றது. திடீர் நிறுத்தத்திற்கான காரணத்தை அறிவதற்காக கீழிறங்கியிருந்த வேளையில் கடல் பக்கமாக ஓர் அலறல் சத்தத்தோடு மக்கள் எம் பக்கத்திற்கு ஓடி வருவதைக் காண்கிறேன்.

அந்த இளைஞனின் கையைப் பிடித்த வண்ணமே ஓடிச் சென்ற நான் ஹ்ம் கெதியாக ரயிலில் ஏறு ஏதோ அபாயம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. என்று சொல்லியவாறு இருவருமே ரயிலில் ஏறினோம்.

எமது கண்களை நமக்கே நம்ப முடியவில்லை 300 மீட்டர்களுக்கு அப்பாலிருந்த கடல் நம்மை நோக்கி மெது மெதுவாக வந்து கொண்டிருந்தது. ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், வீட்டுக் கூரைகளிலும், மரங்களிலும், உயரமான இடங்களிலும் ஏற முயற்சிக்கின்றனர். சிலரின் ஆடை அணிகள் நீரொடு காவிச் செல்லப் படுகிறது. இன்னும் சிலர் மதம் கொண்டெழுந்து வரும் கடலலையிருந்து தப்புவதற்கான ஒரே வழி இந்த ரயிலில் ஏறுவது தான் என்பதை உணர்ந்து நிறுத்தப் பட்டிருந்த புகையிரதத்தில் ஏறிக் கொள்கிறார்கள். ஏற்கனவே சனத்தின் கனம் தாங்காமல் துடித்துக் கொண்டிருந்த ரயில் வண்டி ஊர் மக்களின் படையெடுப்புடன் இன்னும் இன்னும் நிரம்பி வழிகிறது.

முதலில் எனக்கு பக்கத்தில் உற்காந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க அந்த வயோதிபர் தனது மௌனத்தைக் கழைத்துக் கொண்டு முதல் முறையாக என்னோடு கதைத்தார்.

“தம்பி நீர் முஸ்லிம் பையன் போல தெறிகிறீர் ஆமா இங்கே இப்போது என்ன நடக்குது”

என்று ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார். தொடர்ந்து அவர் சொன்னார்.

“நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் எனது ஓய்வுக்குப் பின் முதற்தடவையாக எனது நண்பரொருவரைச் சந்திக்க மாத்தறைக்குச் செல்கின்றேன்.”

“நல்லது ஐயா இந்த இடத்துல வழமையாக கடல் கரைக்கு வருவதை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் இன்று அந்த நிலை கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்.”

என்று அந்த ஐயாவுக்கு தைரிய வார்த்தைகள் கூறிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.

நீரின் மட்டம் புகையிரதத்தின் படிவரையில் வந்து விட்டது. ஏற்கனவே புகையிரதத்தில் வந்தவர்களில் சிலர் பாதுகாப்பு கருதி இறங்கி ஓட முற்பட்டனர். ரயில் பாதைக்கருகே ஒரு ஆழமான கிடங்கு காணப்பட்டது. அவ்வாறு இறங்கி ஓடியவர்கள் கூட ஆபத்தை எதிர் நோக்கினர். இரயில் வண்டியில் சிற்றுண்டி வியாபாரம் செய்து கொண்டிருந்த “சுது அய்யா” என்பவர் தனது காலியான பெட்டியை ஹுட் ட்ரக்கில் போட்டு விட்டு தனது லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு மக்களுக்கு உதவி செய்ய முற்பட்டார். அவர் குடியிருந்த கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்ததால் அந்த கிடங்கின் பக்கம் இறங்க வேண்டாம் என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.

நானிருந்த ரயில் பெட்டிக்கு அடுத்திருந்த பெட்டி கடலலையின் உந்துதலால் தள்ளப்பட்டு கிடங்கின் பக்கம் சரிந்து கிடந்தது. அதிலிருந்த பிரயாணிகளை மீட்கும் பணியில் எமது புகையிரதத்தின் பிரதான பாதுகாவலரான கருனாதிலக்க அவர்கள் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தார். அந்த ரயில் பெட்டியில் அதிகமான உல்லாசப் பிரயாணிகளே இருந்தனர்.

இவையாவையும் பார்த்தவனாய் எனக்குப் பின்னாலுள்ள மூன்றாம் வகுப்புப் பெட்டி பக்கம் சென்றேன். அங்கே சனநெருக்கடியில் மிகவும் பயந்துபோனவர்களாக இருந்த ஒரு குடும்பத்தைக் கண்டேன் அதில் மொத்தமாக ஏழு பேர் மட்டில் இருந்தார்கள். அவர்களில் ஒரு கைக்குழந்தையோடு தாயும் இருந்தாள். 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியும் ஒரு சிறுவனும் கூட இருந்தார்கள். மற்றவர்கள் பெண்பிள்ளைகள் உடனடியாக அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்றி இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு கூட்டி வந்து நிறுத்தி விட்டு சீட்டின் மேல் ஏறி நின்று குழந்தையை ஹுட் ட்ரக்கில் வைத்து பிடித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு நானும் பாதுகாப்பாக ஒரு சீட்டில் ஏறி ஹுட் ட்ரக்கைப் பற்றிப் பிடித்துக் கொண்டு கடல் பக்கத்தைக் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

முதலில் வந்த அலை மெது மெதுவாக குறைந்து சென்றது. இன்னும் ஓரிரண்டு நிமிடங்கள் தான் போயிருக்கும் தென்னமரங்களுக்கு மேலால் கடல் பொங்கி எழுந்து பாரிய சத்தத்தோடு ஆணவம் கொண்ட அலைகள் சீறிப் பாய்ந்து வண்ணம் நம்மை நோக்கி வந்தது. ஒரு பயங்கரமான குண்டு வெடிக்கும் சத்தத்தைப் போன்ற பேரிரைச்சல் எமது காதுகளில் எதிர் ஒலித்தன. மக்களின் அபயக் குரல்கள் இரட்டிப்பாகி என் காதைப் பதம் பார்த்தன.

“புது அம்மோ அபி இவரோ”

என்று கதறி அழுதனர். எம்மை நோக்கி வந்த அந்தப் பேரலை எமது ரயில் வண்டியின் சில பெட்டிகளைத் தூக்கிச் சென்றது. நீரில் மிதக்கும் தீப்பெட்டிகளைப் போல் சிதருண்டது எமது ரயில் வண்டி. சில பெட்டிகள் நீரில் மூழ்கியது. ஏதோ அதிர்ஷ்டவசமாக நானிருந்த பெட்டி அலையோடு அடித்துச் செல்லப் பட்டது. ஒரு கட்டத்தில் அது ஒரு பக்கமாகச் சரிந்து சென்றது. பாதி நீரில் மூழ்கிச் சென்ற புகையிரதப் பெட்டியில் இருந்த மக்கள் மூழ்கிய வண்ணமே அபயம் தேடினர். நான் ஒருவாறு யன்னலினூடாக வெளியேறினேன். ஒல்லியான உடம்பு அப்போது தான் எனக்கு கைகொடுத்தது. வாழ்வில் முதல் தடவையாக எனது ஒல்லியான உடம்பை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். யன்னலினூடாக உள்ளே எட்டிப் பார்த்தேன். நான் முதலில் சொன்ன கைக்குழந்தையோடிருந்த தாய் தனது பிள்ளையை என்னிடம் தருவதற்கு எத்தனித்தார் ஆனால் நான் யன்னலினூடாக கைகளை விட்டு எடுக்கத் தயாராகும் போது அதிலிருந்த ஏனையவர்கள் எனது கையைப் பற்றிப் பிடித்து,

“எம்மையும் காப்பாற்றுங்கள், எம்மையும் காப்பாற்றுங்கள்.”

என்று அழுது புலம்பினர். அவர்கள் என்னை இழுக்கும் இழுவையில் இழுபட்டுப் போய் மீண்டும் யன்னலினூடாக போய் நீரில் வீழும் அபாயம் தோன்றியதால் என் கையை சட்டென்று விடுவித்துக் கொண்டேன்.

இதுதான் எமது கடைசி நேரம் என்பதை மனதில் நிலைநிறுத்தியவனாய் கலிமாவை மொழிந்து கொண்டு ரயிலில் உள்ளவர்களுக்கும் உரத்து சொன்னேன்.

“இப்போது நாங்கள் அனைவரும் மௌத்தாகப் போகிறோம் அனைவரும் கலிமா சொல்லிக் கொள்ளுங்கள்.”

என்று ரயில் பெட்டி நீரோடு அடித்துச் செல்லப் படுகிறது. சுற்றி வரப் பார்த்தேன். பார்க்கும் இடமெல்லாம் கடல் தன் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருந்தன. சிலர் உடைந்து போன வீடுகளில் தொங்கியிருந்தனர், இன்னும் சிலர் மரங்களில் ஏறியிருந்தனர். இப்போது ரயில் பெட்டி மீண்டும் முன்பிருந்த நிலைக்கு திரும்புகிறது உடனடியாக அதன் கூரைப்பகுதிக்கு தாவுகிறேன். அவ்வாறே அடித்துச் செல்லப்பட்ட பெட்டி ஒரு வீட்டை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து நின்றது.

அப்போது நான் மாத்திரம் ரயில் பெட்டியின் மேலே இருந்தேன். எனது வீட்டு ஞாபகம் அடிக்கடி வந்து போனது இது உலக முடிவா? எந்த அறிகுறியும் இல்லாமலே வந்து சேர்ந்த பேரழிவா? என்று என் மனதை பலவாறு கேள்வி கேட்க வைத்தன. எனது மனைவி மக்களை, தாய் தந்தையரை நினைத்து அழுது புலம்பினேன். அதோ நமக்கு தெரிந்த ஒருவர் நீரில் அடிபட்டு வருகிறார் யார் அவர்? ஆமாம் கருனாதிலக்க அவர்கள் இந்த புகையிரதத்தின் ஹெட் காட் வந்த வேகத்திலேயே நானிருந்த பெட்டியை தத்திப் பிடித்து ஏறிக் கொண்டார். இருவரும் முகத்திற்கு முகம் பார்த்துக் கொண்டிருந்தோம் இருவரிடையேயும் மௌனம் நிலவியது.

அவ்வாறே சிறிது நேரம் நாம் கண்டு கொண்டிருந்த உலகத்தில் நீரைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அப்போது திடீர் திருப்பம் அதோ கடல் விடைபெற்று செல்கிறது இந்த சிறு நேரத்தில் எத்தனை பேரின் உயிரை மாய்த்தாய் எத்தனை எத்தனை உடைமைகளை அழித்தொழித்தாய், எத்தனை பிள்ளைகளை அநாதையாக்கினாய் இப்போது ஒன்றும் அறியாதவனாய் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறாய் என்று என் உள்மனது உருத்திக் கொண்டிருந்தது. இதுதான் தப்பியோடுவதற்கு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து மெல்லக் கீழிறங்கி ரயில் பெட்டியின் உள்ளே போய் பார்த்தேன். பலர் தமது உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.

அங்கே ஒரு ஆசனத்திலே அந்த அமெரிக்காவிலிருந்து வந்திருந்த மூதாட்டியின் உயிர் பிரியும் தருவாயில் இருந்தது. தன் அன்னையை மடியில் கிடத்தி அழுது கொண்டிருந்தாள் அவளின் மகள்,

“இங்கே தொடர்ந்து தங்கியிருப்பது அவ்வளவு சௌகரியம் இல்லை சகோதரியே, வாருங்கள் இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு ஓடலாம்.”

என்று நான் சொல்லி அந்தப் பெண்ணைப் பார்த்து அழைத்த போது,

“இல்லை அண்ணா நீங்கள் முந்துங்கள். நான் எனது அம்மாவின் இறுதி மூச்சையும் பார்த்து விட்டு வருகிறேன்.”

என்று அழுத வண்ணமே சொன்னாள். அந்தப் பெண்மணி தன் மகனைப் பார்ப்பதற்காக பல்லாயிரம் மைல்களைக் கடந்து, கடல் கடந்து ஓரிரு மைல்களின் இடைவெளியில் தன் உயிரை விடும் அந்த அன்னையை நினைத்து மனம் வருந்தியவனாய் முன்னுள்ள வெற்று வெளியினூடு ஓடத் தொடங்கினேன்.

ஊரிலுள்ள வீடுகள் உடைந்து போய் அதற்காக ஊடுறுவிச் செல்ல ஒரு ஒற்றையடிப் பாதையைக் காட்டி நின்றது. அறிமுகமில்லாத இடம் என்ற போதும் அந்தப் பாதை வழியே பாதுகாப்புத் தேடி ஓடினேன். அவ்வாறு ஓடும் பாதைகளிலிருந்த பலரின் பிணங்களுக்கு மேலாலே கால் வைத்து ஓட வேண்டிய நிலையேற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் ஓடினேன்.

சிலரின் வாயிலிருந்து நுரை கக்கிக் கொண்டிருந்தது. சிலர் தமது கையிலிருந்த கைபேசியுடனேயே உயிரை விட்டிருந்த காட்சியைக் கண்ட போது ஒரு வேதனை வந்து மனதை உருக்கியது. இறுதி நேரத்தில் தனது சொந்த பந்தங்களை நினைத்து அவர்களோடு பேசுவதற்காக அழைப்பு எடுத்திருப்பார்கள் ஆனால் அந்த தருணத்தில் எல்லா வலைப்பின்னலும் முடக்கப்பட்டு விட்டிருந்தன. ஆனால் சீற்றம் கொண்டு எழுந்து வந்த அந்த அலைப்பின்னலிலே இவர்கள் சிக்கி தமது உயிரை விட்டிருந்தனர். பரிதாபகரமான ஒரு சம்பவம் நடந்தேறிய சுவடுகள் எங்கும் காணக் கிடைத்தது. பார்க்கும் இடமெல்லாம் பிணங்கள் ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவரும் ஒரே குவியலில் விழுந்து கிடந்தனர். அபயம் தேடி நாங்கள் அனைவரும் ஓடிக்கொண்டிருந்தோம்.

நான் காப்பாற்றிக் கொண்டு வந்த பிள்ளைகள் யார்? எவ்வாறு நாங்கள் வீடு போய்ச் சேர்ந்தோம் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

தொடரும்.
கலைமணாளன்

தடம் புரண்ட கடல் பகுதி 02 இதுவரை கதை: ஒரு கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக காலி நோக்கி போய்க் கொண்டிருந்தேன், சனநெருக்கடிமிக்க அந்த நாளிலே ஒரு இடத்திலே புகையிரதம் நிறுத்தப்படுகின்றது. திடீர் நிறுத்தத்திற்கான…

தடம் புரண்ட கடல் பகுதி 02 இதுவரை கதை: ஒரு கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக காலி நோக்கி போய்க் கொண்டிருந்தேன், சனநெருக்கடிமிக்க அந்த நாளிலே ஒரு இடத்திலே புகையிரதம் நிறுத்தப்படுகின்றது. திடீர் நிறுத்தத்திற்கான…

3 thoughts on “இது உலக முடிவா?

  1. Hey are using WordPress for your blog platform?
    I’m new to the blog world but I’m trying to get started and create
    my own. Do you require any html coding expertise to
    make your own blog? Any help would be really appreciated!

  2. I pay a visit daily some web pages and sites to read content, except this web site presents
    feature based posts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *