பாருங்க உம்மா சல்லி இல்லாட்டி எஙல யாரும் மதிக்கிறாங்களே இல்ல

திருப்பு முனை
பாகம் 24

லீனாவின் முழுக் கதையையும் கேட்ட மர்யம் அவளை வாரி அணைத்து அழுதாள்.

“இவ்வளவு நடந்தும் எப்படிம்மா இதுவல தாங்கிட்டு இருக்கிறாய். எனக்கே இதுவல கேக்க கொல மேல் கூசுது. பாரு அல்லாஹ் ஏன்ட புள்ளட நெலமய. இதுகள யார்ட சொல்லி அழ லீனா. வாப்பா இருந்திருந்தா ஒஙல இப்படி ஒரு நெலமயில உட்டிருக்க மாட்டாரு. இத்துன காலம் நானே ஒஙல வளர்க்க எடுத்த புள்ள என்டு பிரிச்சி பாத்ததில்ல. அப்படி ஒரு வார்த்தய சொல்ல அவன் யாரு? இப்படி எல்லாம் அடிபட்டு ஒதபட்டு நீங்க வாழனுமா லீனா. நா போக கொல ஒஙலயும் கூட்டிட்டே பெய்த்துடுவேன். இதுக்கு மேல ஒஙல இங்க வெச்சா ஒஙட மையத்த தான் பார்க்க வரும். கவல படாதீங்க லீனா. ஒஙல நா உட்டுட்டு போ மாட்டேன். இவனுங்க உருப்படுவான்வளா?”

“லீனா முடிச்ச இந்த ஏழு மாசத்துக்கு நீங்க வடிச்ச ஒவ்வொரு கண்ணீர் துளியும் இவன்களுக்கு இடியா வந்து உழும். ஒங்களுக்கு இப்படி ஒரு அநியாயத்த
பண்ணினதுக்கு அல்லாஹ் சும்மா உட மாட்டான் லீனா. இந்த கண்ணீர் அவங்களுக்கு முடிவ கட்டும் கவலபட வானா மகள் அவன்கள் அனுபவிப்பான்வள்.”

“வாழ்க்க என்டா விளாட்டா லீனா? எவ்வளவு ஆசயோட கனவுகளோட முடிச்சிங்க. ஒஙட வலி என்னான்டு எனக்கு சொல்ல தெரியா? அத அனுபவிச்சவங்களுக்கு தான் வெளங்கும். ஆனா இதுக்கு எல்லாருமே பதில் சொல்லனும் லீனா.”

“அல்லாஹ்வ மறந்து தான் இப்படி ஆடுறாங்க உம்மா. எல்லாத்துக்கும் அல்லாஹ் போதுமானவன். நீங்க எப்படி சரி எனய கூட்டி போங்க உம்மா. எனக்கு இங்க இரிக்கவே ஏலா. எனக்கு பயம் உம்மா நா எனக்கே ஏதாவது செய்வேனோ என்டு?”

“ச்சீ! நீங்க இப்படி பேசாதிங்க லீனா. ஒங்களுக்கு ஒன்டும் ஆகாது. நா இரிக்கிறேன் லீனா ஒங்களுக்கு.”

“தெரியும் உம்மா. நீங்க இதுவல இப்ப யோசிச்சிட்டு இரிக்க வானா. நீங்க வந்துட்டீங்க தானே நா இப்ப சந்தோசமா தான் இரிக்கிறேன்மா. இதுகள யோசிச்சி ஒங்களுக்கு ஏதும் ஆகினா. அப்பறவ் நா தனிச்சிடுவேன் உம்மா.”

“இப்படி சொல்லாதீங்க லீனா. நா இதுவல யோசிக்க மாட்டேன் சரியா?”

“சரி! பாருங்க உம்மா சல்லி இல்லாட்டி எஙல யாரும் மதிக்கிறாங்களே இல்ல எனா? கேக்க பார்க்க யாரும் இல்லன்னு தானே இப்படி எல்லாம் செய்றாங்க.”

“ம்ம். சல்லிக்கி தான் இந்த ஒலகம் மகள்.” என்றாள் ஒரு பெரு மூச்சுடன்.

இப்படியே தாயும் மகளும் வெகு காலத்துக்கு பின்னர் மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு வாரம் கழிந்தது. சலீமா வந்திருந்தாள். சலீமாவோடு வாசலில் மர்யம் பேசிக் கொண்டிருந்தாள். பின்னர் குசினிக்குள் வந்த சலீமா லீனாவை பார்த்து,

“பாவம் தங்கச்சி ஒஙட உம்மா. ஒஙல நெனச்சி தான் சரி கவல படுறாங்க.”

சலீமா இப்படி சொன்னதும் லீனாவுக்கு ஆத்திரமாக இருந்தது. உடனே வாசலுக்கு சென்று,

“உம்மா ஏன் இன்னம் இதுவலயே யோசிச்சிட்டே இரிக்கிறீங்களா? அல்லாஹ் இதோட காப்பாத்தினானே என்டு நெனச்சி சந்தோசப்படுங்க உம்மா. நீங்க இப்படி இரிக்க கொல எனக்கு இன்னம் கவல.”

“என்ன செய்ய லீனா? ஒஙல நெனச்சி ஏன்ட வயிறு பத்துது. எப்படி மகள் இவ்வளவு நடந்தும் ஒன்டும் நடக்காத மாதிரி இரிக்கிறீங்க?”

“உம்மா நா தான் சொன்னேனே. நா இப்ப சந்தோசமா தான் இரிக்கிறேன். நீங்க தனிய வாசல்ல இரிக்காம வாங்க குசினிக்கி.” என்று தாயை உள்ளே அழைத்து சென்றாள் லீனா.

“வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைத்து விட்டு தாயிடம் தஞ்சம் அடையும் போது தான் மகளைப் பெற்ற ஒவ்வொரு தாய்க்கும் தாய்மையின் வலி புரியும்.”

அந்த வலிகளை வார்த்தையால் சொல்ல இயலாது. அதை அனுபவிக்கும் உள்ளத்துக்கே அந்த ரணம் என்னவென்று புரியும்.

அது போல தான் மர்யமும் லீனாவை எண்ணி வேதனைப் பட்டாள்.

தாய் கவலைப்படாமல் இருக்க லீனாவும் அவளோடு சிரித்து பேசி சந்தோசமாக இருப்பது போல காட்டி கொண்டாள். லீனா தனக்காக தான் இப்படி வெளியே சிரித்து மகிழ்கிறாள் என்பதை தாய் அறியாமல் இல்லை. ஆனாலும் மர்யம் எதையும் வெளிக் காட்டவில்லை. லீனாவை காணும் ஒவ்வொரு நொடியும் மர்யம் உள்ளுக்குள் நொந்து போனாள். அவள் மனதால் படும் வேதனையை உணர இறைவனை தவிர வேறு யாரும் அங்கு இல்லை.

தொடரும்.
Noor Shahidha
SEUSL
Badulla
Author: admin