வாழ்க்கன்டா சந்தோசமும் உண்மயும் இரிக்கனும் அது இல்லாட்டி வேல இல்ல

திருப்பு முனை
பாகம் 25

அன்று வியாழக் கிழமை. மர்யம் லீனாவை அழைத்து,

“லீனா நா சனிக்கெழம ஊட்டுக்கு போகனும். நீங்களும் எல்லாதயும் ரெடி பண்ணி வைங்க.”

“சரி உம்மா நா ஏற்கனவே எல்லாத்தயும் ரெடி பண்ணி தான் வெச்சிரிக்கேன்.”

“அது நல்லம் லீனா நெனவ் காட்டுங்க ஷரீப்கு”

“ம் சரிம்மா”

சிறிது நேரத்தில் ஷரீப் வந்தான். அப்போது லீனா,

“உம்மாக்கு சனிக்கெழம ஊட்டுக்கு போகனுமாம். உம்மாவோட நானும் போகனும்.”

“நா இரிக்க கொல நீங்க எப்படி போவீங்க?”

“ஏன் அன்டக்கி மாமி தானே சொன்னாங்க? உம்மா வர கொல எனக்கும் வந்துட்டு போக சொல்லி.”

“இந்த முற உம்மா மட்டும் போகட்டும். அடுத்த முற நா ஒஙல கூட்டி போறேன்.”

“ஏலா எனக்கு உம்மாவோட போகனும்.”

“அரப்படிக்க வானா லீனா. சொல்றத கேளுங்க.”

“நீங்க சொல்றத இனி எனக்கு கேக்க ஏலா அல்லாஹ்காக எனய உட்டுடுங்க please”

என்று கூறி விட்டு லீனா குசினிக்குள் சென்றாள். மறுகணம் ஷரீப் மாமிக்கு கோல் எடுத்து நடந்ததை கூறினான்.

“சரி போன்அ லீனாக்கு குடுங்க நா பேசுறேன்.”

“ம்ம். சரி மாமி.”

என்று ஷரீப் அவளுக்கு போனை நீட்டினான்.

“லீனா மாமி பேசுற”

கைத்தொலைபேசியை வாங்கி காதில் வைத்தாள்.

“லீனா நீங்க இப்ப வர வானா. உம்மா மொதல்ல வரட்டும். நீங்க பொறகு வாங்க.”

“ஏலா மாமி. இவர் கூட்டி வர மாட்டாரு நா இப்பயே வாறேன்.”

“ம்ம்.” மாமி சற்று சிந்தித்து விட்டு,

“சரி லீனா அப்ப உம்மாவோட வாங்க. ஆனா ரெண்டு நாள் தான் நிக்கனும்.”

“பாப்பம் சரி உம்மாவ கூட்டி போக யாரு வருவ மாமி?”

“நானும் மாமாவும் தான் வருவோம்.”

“சரி வாங்களேன்.”

சிறிது நேரத்தில் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அவர்கள் வருகையை எதிர்பார்த்து இருந்தாள் லீனா. மறுநாள் மாமியும் மாமாவும் வந்தனர். எல்லோரும் வாசலில் இருந்து கதைத்து கொண்டிருக்கும்போது திடீரென மாமி,

“லீனா ஷரீப் ஒஙல கூட்டி வருவதாம். இங்க அவர்க்கு இப்ப கொஞ்சம் வேல இரிக்காமே. அதுகள முடிச்சிட்டு ஒஙல கூட்டி வருவ சரியா.”

லீனாவுக்கு கோபம் பொங்கியது.

“அவ்வளவு பெருசா கிழிக்கிறத்துக்கு அங்க ஒரு வேலயும் அவர்க்கு இல்ல.”

“இது என்னா பேசுற பேச்சி” லீனா மாமி லீனாவை உருக்கினாள்.

“எனக்கு யார்ட கதயும் தேவல்ல. எனக்கு ஊட்டுக்கு போகனும் அவ்வளவு தான்.”

“சரியான புடிவாதம் ஒனக்கு நீ வந்தா ஷரீப்கு யாரு ஆக்கி குடுக்குற”

“ஏன் நா இல்லன்டா என்னா இவர்க்கு கொறயவா போகுது. அவர்க்கு தான் சாத்து செய்ய ஆள் இரிக்கே.”

“என்னடி பேசுறாய்?”

“ஏன் எங்களுக்கு எல்லாம் கோவம் வர படாதா நாங்களும் மனுசன் தானே எத்துன நாளக்கி அடங்கி போக சொல்றீங்க? இதுக்கு மேல எனக்கு இவரோட வாழ ஏலா.”

“ஏன் ஒனக்கு வாழ ஏலா. நல்லா தின்டு குடிச்சிட்டு ஒனக்கு என்டு ஒரு தனி ஊட்ல தானே இரிக்கிறாய் அப்ப ஏன் ஒனக்கு இரிக்கேலா?”

“தின்டு குடிச்சா எல்லாம் சரியா? இந்த சாப்பாட்டுக்கோ ஊட்டுக்கோ மயங்குற ஆள் நானில்ல சரியா மாமி. வாழ்க்கன்டா சந்தோசமும் உண்மயும் இரிக்கனும் அது இல்லாட்டி வேல இல்ல.”

“நீ என்ன தான் சொல்ல வாறாய் அத சொல்லு மொதல்ல”

“நீங்க முழுக்க முழுக்க பொய்ய மட்டும் சொல்லி தான் எனய முடிச்சி குடுத்திருக்கீங்க மாமி.”

என்றாள் பல்லை கடித்துக் கொண்டே,

“என்னடி நா பொய்ய சொன்னேன்?”

“கேளுங்க சொல்றேன். ஷரீப் Accounter என்டீங்க. அவனே சம்பாரிச்சி இந்த ஊட்ட கட்டினன்டிங்க. இப்பிடி எல்லாமே பொய் பொய் பொய். இதெல்லாம் பச்ச பொய்.”

“என்னா பேசுறாய் லீனா?”

“உண்மய தான் பேசுறேன். ஒஙல மாதிரி பொய்ய உண்மயாக்கி கதக்கிற ஆள் நானில்ல. இந்த ஊடு ஷரீப் கட்டினதும் இல்ல. அவன்ட ஊடும் இல்ல. இது ஷரீப்ட சாச்சா சாச்சிட ஊடு.”

“ஓ இது அவங்கட ஊடு தான். ஆனா ஷரீப்கு தான் சொந்தம் இது. அவங்கட புள்ள மாதிரி நெனச்சி தான் ஊட்டயே அவனுக்கு குடுத்திருக்காங்க.”

“அப்ப இத இப்ப தான் சொல்லனும்னு தோணுதா? அது சரி ஷரீப்ட உம்மா வாப்பா இரிக்ககொல எதுக்கு சாச்சா சாச்சி இந்த ஊட்ட குடுக்கனும். எனக்கு மாமியா இரிக்க வேண்டியது யாரோ? நா மாமின்டு சொல்லிட்டு இருக்கிறது இன்னம் யாரோ? அதெப்படி சாச்சா சாச்சி கி மாமா மாமி மொறய்ல எனக்கு கூப்புட சொல்றீங்க.”

“லீனா இதெல்லாம் முடிஞ்ச கத அது இப்ப தேவல்ல. இப்பட கதய மட்டும் சொல்லு.”

“இது எங்க முடிஞ்ச கத பழய கதட தொடர் கத தானே இது. இந்த கதய எனக்கு உட ஏலா. உடவும் மாட்டேன். அப்படியே உடுறதா இருந்தா நீங்க எல்லாரும் சேர்ந்து தொடங்கின கதக்கி நா தான் Full stop வெச்சி முடிப்பேன்.”

என்று திடமாக கூறிய லீனாவை பார்த்து மாமிக்கு திக்கென்றது.

“சரி நீ இப்ப என்ன தான் சொல்ல வாறாய்?”

“எனக்கு இவரோட வாழ ஏலா. எனக்கு divorce தான் வேணும்.”

“ஓ அப்படியா வாழா வெட்டியா இரிக்க போறியா.”

“இப்படி இரிக்கிறதுக்கு பதிலா அப்படி இரிக்கிறது எவ்வளவோ மேல்”

“ஒனக்கு என்ன பைத்தியமாடி புடிச்சிரிக்கி”

“எனக்கு பைத்தியம் இல்ல மாமி. போக போக வெளங்கும் யார்க்கு பைத்தியம் என்டு.”

“இப்படி எல்லாம் பேசுற. நீ நல்லா இரிப்பியாடி. நாசமா போனவளே.” மாமியின் இந்த வார்த்தையால் பொங்கி எழுந்தாள் லீனா.

“பொத்துங்க மாமி வாய. பொய்ய சொல்லி எனய முடிச்சு குடுத்தீங்களே. அது மட்டும் சரியா? ஏன்ட வாழ்க்கய நாசமாக்கின ஒஙல நா வாழ்க்கயிலயே மன்னிக்க மாட்டேன். நீங்க அனுபவிப்பீங்க. ஒவ்வொரு நாளும் அனுபவிப்பீங்க. நெனச்சி நெனச்சி அனுபவிப்பீங்க. தெரிஞ்சி தெரிஞ்சி எனய குழிலயே தள்ளினீங்களே. இந்த பாவம் ஒஙல சும்மா உடாது. சகராத் வரக்கும் ஒஙல தொரத்தும். ஒங்களுக்கும் மகள் ஒன்டு இரிக்கி என்டத மட்டும் மறந்துடாதீங்க. நா வடிச்ச கண்ணீர்ட வலி என்னான்னு அப்ப வெளங்கும்.”

என்று பல்லை கடித்தவாறே லீனா ஆவேசமாக கத்தினாள். அவள் கண்களில் கோபம் அனலாய் எரிந்தது. அப்படி ஒரு கோபத்தில் அவளை அவர்கள் இதற்கு முன் கண்டதே இல்லை. மாமா இது லீனாவா என்று நினைத்து வாயடைத்துப் போய் நின்றார்.

“ஏய்! பாருங்கவா இவள்ட வாழ்க்கய நா நாசமாக்கிட்டேனாம். இவள முடிச்சி குடுத்ததுக்கு எனக்கு இந்த கத தேவ தான்.”

“லீனா ஒரு நிமுசம் எனக்கே ஹார்ட் நின்டு போன மாதிரி இரிக்கி. நீயா இப்படி பேசுறாய். ஏன்ட பொண்டாட்டிக்கே எதிர்த்து பேசிட்டாய் எனா” எனக்கு நம்பவே ஏலா மாமா அவளை கடிந்து கொண்டார்.

“ஓ நா தான் பேசுறேன் மாமா. மாமி மாமி என்டு குட்டி போட்ட பூன மாதிரி சுத்தி வந்தேனே. இப்படி பண்ணிட்டீங்களே. ஒஙட மனசுல வஞ்சகம் தான் இரிக்கி என்டு எனக்கு வெளங்காம பெய்த்துட்டு.”

“லீனா போதும் இதோட நிப்பாட்டு.” மாமி கத்தினாள்.

தொடரும்.
Noor Shahidha
SEUSL
Badulla
Author: admin