ஏன்ட உம்மாட மேல மட்டும் கைய வெச்சால்

திருப்பு முனை
பாகம் 26

எப்போதுமே பேசிக் கொண்டிருப்பவள் திடீரென மௌனம் காத்தாள் அவன் மனம் உடைந்திருக்கிறான் என்று அர்த்தம். எப்போதுமே பேசாதவன் திடீரென பேசுகிறான் என்றால் அவன் பொறுமை இழந்து விட்டான் என்று அர்த்தம். அது போல் தான் எப்போதுமே எவரையும் எதிர்த்து பேசாத லீனா அன்று பொறுமை இழந்து விட்டாள்.

அதன் விம்பமே அவளை இந்தளவுக்கு பேச வைத்தது. அது அவள் இத்தனை காலம் அவளுக்குள் அடக்கி வைத்த வேதனைகளின் ஓலக் குரல். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட லீனா அழுதாள்.

‘என்ன இருந்தாலும் நான் இப்படி பேசியிருக்க கூடாது’ என்று தனக்குள் நொந்து கொண்டாள். அவளது இதயத் துடிப்பு அவள் காதில் கேட்டது. இதயம் லப் டப் என்று வேகமாக அடித்தது. அவள் உடலில் இனம் புரியாத ஓர் நடுக்க நிலை. உயிரில் ஏதோ ஒரு மயக்க உணர்வு. இவை எல்லாம் அவளது ஆக்ரோஷத்தின் விளைவுகளே! சிறிது நேரம் எங்கும் ஓர் மயான அமைதி. அந்த அமைதி நிலையை மாமி களைத்தாள்.

“லீனா நீ இவ்வளவு சொன்ன பொறகு இனி இத பத்தி பேசி வேலல்ல. இப்ப என்னா ஒனக்கு ஷரீப் ஓட வாழ ஏலா. அவ்வளவு தானே. சரி டிவொர்ஸ்அ எடுத்து தாறேன். ஆனா அதுக்கு பொறகு ஒனக்கும் எனக்கும் எந்த ஒறவும் இல்ல சரியா. ஏன்ட புள்ளகளயும் இனி நா ஒன்னோட பேச உட மாட்டேன். மாமாவும் பேச மாட்டாரு சரியா?”

“ஏன் மாமி ஒங்களுக்கு நா சொல்றது ஒன்டும் வெளங்குதில்ல.”

“இதோட எல்லாம் போதும் இனி ஒன்டும் வெளங்க தேவல்ல.”

திடீரென மர்யம் குறுக்கிட்டு,

“ஓ! இனி நீங்க நெனச்ச மாதிரி சல்லிக்கி மயங்கி ஏன்ட புள்ளட வாழ்க்கய நாசமாக்கிட்டீங்களே. இனி வயிறு நெரன்சி இரிக்குமே. இதுக்கு பொறகு வெளங்குறதுக்கு என்னா இரிக்கி.”

மர்யம் இப்படி சொல்ல, மாமி வயது வித்தியாசம் பாராது மர்யமுக்கு தாரு மாராக திட்டித் தீர்த்தாள். தாய்க்கு இழிச் சொற்களால் மாமி திட்டும் போது மீண்டும் லீனா கொந்தளித்தாள். இப்படி மீண்டும் பூகம்பம் வெடித்து சிதறியது. திடீரென மாமி மர்யமுக்கு அடிக்க கை ஓங்கிக் கொண்டு வரவே லீனா ஓடி சென்று,

“ஏன்ட உம்மாட மேல மட்டும் கைய வெச்சாய். அதுக்கு பொறகு நா கெட்டவள் என்டு சொல்லாத.” என்று வந்த கோபத்திற்கு ஒருமையிலே கத்தினாள் லீனா.

இதை சற்றும் எதிர்ப்பாராத மாமி. லீனாவை பிடித்து,

“என்னடி செய்வாய் சொல்லு. அடிப்பியாடி ஏன்ட புள்ள மாதிரி தானேடி ஒனயவும் பார்த்தேன். எனக்கே அடிக்க வருவியாடி.” என்று கேட்டு கேட்டு லீனாவுக்கு அடித்தாள்.

லீனா அடியை வாங்கிக் கொண்டு அழுதாள். மாமா வந்து மாமியை தடுத்தார். இவை எல்லாம் கனவு போல கண் சிமிட்டும் நேரத்தில் நடந்து முடிந்தது. பின்னர் மாமி மர்யமை பார்த்து,

“எல்லாம் ஒஙலால தான். இவள இங்க இருந்து கூட்டிட்டு பெய்த்து வெச்சி பாக்கேலுமா ஒங்களுக்கு. பாப்பமே எப்படி பார்க்க போறன்டு.”

“இனி ஏன்ட புள்ளய நா தானே பார்க்க வேணும். நா எப்படி சரி அவவ பார்த்து கோறேன். ஆனா இங்க உட்டுட்டு மட்டும் போ மாட்டேன்.”

“ஓ! இங்க வெக்க தேவல்ல. கூட்டி போங்க. ஷரீப்கு பொண் இல்லாமயா பாப்பமே இவளுக்கு யாரு மாப்புள குடுக்குறன்டு.”

“ஆ! ஏன்ட புள்ள கடசி மட்டும் தனியாவே இருந்தாலும் பரவல்ல. ஆனா இப்படி ஒரு வாழ்க்க இனி அவக்கு தேவல்ல. மாப்புளயா இவென்.” என்று ஷரீப்பை பார்த்து முறைத்தவாறே கேட்டாள் மர்யம்.

“ஏன் அவனுக்கு என்னா கொற சம்பாரிச்சி குடுக்கல்லயா?”

“ஓ! மூணு நேரம் சோறு போட்டா அவன் நல்லவன்டு ஆகிடுமா.”

“ஓ! அவன் நல்லவன் தான். அவன மாதிரி ஒரு எக்கவுன்டெர் மாப்புள கெடக்கிறதே கஷ்டம். ஒஙட புள்ளக்கி தான் வாழ தெரியா.” இதைக் கேட்ட லீனாவுக்கு ஏளனமாக சிரிப்பு தான் வந்தது.

“ஷரீப் எக்கவுன்டெர் ஆ.  ஏல் படிக்கவே இல்ல. ஓல் ஓட ஸ்கூல் ல விட்டு நின்னுட்டான். இவனுக்கு எந்த மடையன் எக்கவுன்டெர் ஜொப் குடுத்தான்? கேக்குறவன் கேனயனா இருந்தா எலி கூட எரப்பிலய்ன் ஓட்டுமாம் மாமி.”

“ஓ! எக்கவுன்டெர்தான். அவன்ட சாச்சா ட கணக்கு வழக்கு எல்லாம் இவன் தான் பாக்குற. அதுக்கு டிங்ரி, ஸெர்ட்டிப்பிகட் ஒன்னும் தேவல்ல.”

“நீங்க சொல்றத பார்த்தா எல்லாருக்கும் ஈஸிய எக்கவுன்டெர் ஆகேலுமே. புதிய கண்டுபிடிப்பு.” என்று விட்டு லீனா உதட்டை பிதுங்கி ஒரு பார்வை பார்த்தாள்.

அந்த பார்வையில் அத்தனை வலியும் வெறுப்பும் கலந்திருந்ததை யார் அறிவார்ன? பிறகு மாமி,

“ஒனக்கு வாழ தெரியாது என்றது தான் தாமதம்.”

உடனே மர்யம் குறுக்கிட்டு,

“ஓ! இப்ப இது எல்லாம் சொல்லுவீங்க. சொல்லுவீங்க. அவ்வளவு நல்லம் என்டா ஒஙட மகளுக்கே முடிச்சி வைங்களேன்.”

“அத பத்தி எல்லாம் நீங்க பேச வர வானா. எங்களுக்கு தெரியும் யாருக்கு யார முடிச்சி குடுக்கனும்டு.”

அப்போது லீனாவுக்குள் பொறி தட்டியது.

“ஓ! மாமி உம்மா சொல்றதும் சரி தான். நா டிவொர்ஸ் பண்ணின பொறகு அப்ராக்கே ஷரீப்ப முடிச்சி குடுங்களேன். நீங்க ஒஙட புள்ளயா நெனச்சி தானே நா நல்லா இரிக்கனும்டு ஷரீப்கு எனய முடிச்சி குடுத்தீங்க. உண்மயிலயே நீங்க எனக்கு நலவுக்கு தான் முடிச்சி குடுத்தன்டா அப்ராவயும் அப்படியே அவட எக்ஸாம் முடிய ஷரீப்கே முடிச்சி குடுங்களேன். அப்ப நா நம்புறேன் நீங்க எனக்கு வஞ்சகம் செய்ய இல்லன்டு. அதும் ஒஙட மகள் ஷரீப்போட ஒரே ஒரு மாசம் சரி நிம்மதியா வாழ்ந்தா என்டா நானே ஒத்துக்கோறேன். எனக்கு தான் வாழ தெரியாம போச்சின்டு. அப்படி நடந்தா ஒஸ்கார் அவர்ட் அ நானே வாங்கி தாறேன் சரியா? அப்ப பாக்கலாம் யாருக்கு வாழ தெரியும். யாருக்கு வாழவே தெரியான்னு அதும் நா சுட்டி இவ்வளவு பொறுத்தேன். இதே ஒஙட மகளா இருந்திருந்தா ஷரீப்கு நடக்குறதே வேற. எல்லாரும் எனய போல இளிச்சவாயா இருக்க மாட்டாங்க.”

“என்னடி பேசுறாய்? அவ படிக்கனும். தாத்தி தாத்தி என்டு ஓன்ட பின்னுக்கே இரிப்பாவே அவக்கா இப்படி செய்ய சொல்றாய்?”

“அப்ப ஒஙட புள்ள மாதிரி தான் எனய பார்த்தன்டு சொல்ற நீங்க ஏன் எனக்கு இப்படி பண்ணீங்க. நானும் படிக்கனும்டு சொன்னேன் தானே. அப்ப ஏன்ட பேச்ச கேட்டீங்களா? ஒஙட என்டு வர கொல யோசிக்கிறீங்க எனா? நல்லம் மிச்சம் நல்லம். இப்படியே இரிங்க.”

“ஏன்ட புள்ளன்டு நெனச்சி தான் ஒனக்கும் இவ்வளவு பண்ணினேன்.”

“இல்லவே இல்ல. வாயால தான் ஏன்ட புள்ளன்டு சொல்றீங்களே தவிர உண்மயா இல்ல. உண்மயிலயே அப்படி நெனச்சிருந்தா இப்படி ஒரு அநியாயத்த எனக்கு பண்ணிருக்கவே மாட்டீங்க மாமி.”

“ஓ! ஒனக்கும் ஓன்ட உம்மாக்கும் நா அநியாயத்த தான் பண்ணினேன். ஏன் நா நலவே செய்யல்லயா ஒங்கள்கலுக்கு.”

“நலவு செய்யல்லன்டு நா சொல்லல்ல. நீங்க பண்ணின நலவுகள நா மறக்கவும் மாட்டேன். அதுக்கான கூலிய அல்லாஹ் தருவான். ஆனா இப்படி ஒரு கெடுதலயும் பண்ணிட்டீங்களே. அதுக்கும் கூலி இரிக்கி. நா இந்த ஏழு மாசமா அனுபவிச்ச வலிய நீங்க அனுபவிச்சிருக்க மாட்டீங்க மாமி. எனக்கு சொல்ல தெரியா மாமி. ஆனா அது அப்படி ஒரு வலி ஏன்ட நெலமயில இரிக்கிறவங்களுக்கு அது வெளங்கும். எனய கவுன்ஸிலிங்கு கூட்டிட்டு போங்க. மனசு அந்தளவுக்கு நோகுது. ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று கூறி லீனா மீண்டும் அழுதாள்.

“எனக்கு வேணும் இந்த கத. போதும் லீனா இதோட வாய மூடிக்கோ.”

மாமி கத்தி விட்டு அவ்விடத்தில் இருந்து அகன்றாள். கூடவே மாமாவும் சென்றார். யுத்தம் முடிவடைந்து பின்னர் நிலவும் அமைதி நிலை லீனாவின் வீட்டில் சூழ்ந்தது. ஆனாலும் அவளது நிலைப்பாட்டை புரிந்து கொள்ளத்தான் யாரும் முன் வரவில்லை. இப்படி ஒரு நிலை மாமியின் மகளுக்கு நடந்திருந்தால் அலட்சியம் செய்திருப்பார்களா?

நிச்சயம் இல்லை!

தொடரும்
Noor Shahidha
SEUSL
Badulla.
Author: admin