சாந்தி வீட்டுத் தொலைபேசி

  • 12

“ஐயோ! தொலஞ்சது போ. நாய்ட வாய்ல கம்ப விட்டுடேனே. இனி கடிக்காம விடாது போல. பெயருலயாலும் சாந்தம் இருக்கட்டும் என்டு இவ அப்பன் சாந்தின்னு வெச்சிருக்கான் போல. எனக்கில்ல தெரியுது இவ சந்திரமுகின்னு”

“பொவ்,  பொவ், பொவ்” என ஒலி எழுப்பியவளாய் சாந்தி தன் இரு கரங்களையும் ஊன்றி சிறு பிள்ளை போல் தவல்ந்து சூரியாவை நோக்கிச் சென்றாள்.

“என்னடி நாய் மாறி கொரக்கிற எங்க சரி தல அடி பட்டுடிச்சா என்ன?”

“நீ மைன்ட் வோய்ஸ் என்டு நினச்சி மென்டலாட்டம் தனியா பொலம்பிகிட்டு இருந்தது கேட்டுடுச்சி. என்னயப் பார்த்தா நாய் மாறியா தெரிஞ்சது ஒனக்கு. அதான் நாய் எப்டின்னு கொரச்சி காட்டினேன். எனக்கு இந்த வீட்டுல பேச கூட உரிம இல்லாம போச்சே. ஐயோ! என்னய நாயி பேயின்னு சொல்ரத கேக்க யாரும் இல்லையா?” என கூறிக் கொண்டே தன் ஆயுதமான கண்ணீர் ஊற்றைப் பெருக்கெடுக்கச்செய்தாள்.

சூரியன் தன் கடமையைச் சரியாகச் செய்து மக்களை இயங்க வைக்கும் ஒவ்வொரு விடியலும் சாந்தி மற்றும் சூரியாவின் வேடிக்கையான சண்டையைப் புசிக்காமல் மாலைப் பொழுதை அடைந்ததில்லை.

திசை மாறும் சாந்தியின் நாவின் திறன் மற்றோர் செவியில் குருதி பொங்கிடச் செய்யும். சாந்தியின் வாய்க்கு இரையான கணவன் சூரியா. சாந்தியிடம் தானே தினம் தோறும் வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொள்வான். இளமைத் துடிப்புடன் இருவரும் யார் பெரியவர் என்ற போட்டிக்குள் வாழ்ந்தனர். தமக்கே தெரியாத தூவானத் துகல்களாய் காதல் ஒளியும் மெல்ல படர்ந்திருந்தது.

“சாந்தி. கொஞ்சம் தல வலிக்கிற மாறி இருக்கு. இன்னக்கி ஹொஸ்பிடல்க்கு போகல்ல. நல்ல சுக்கு காப்பி ஒன்னு போட்டுத் தாரியா?” என தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தான் சூரியா.

“பெரிய டாக்டருன்னு தான் பேரு. ஒரு சின்ன தல வலியக் கூட தாங்க முடியுறதில்ல. நீங்க எத்தன பேருக்கு மருந்து கொடுத்தாலும் என்னோட காபிக்கு தா உங்க தல வலி நிக்கும். கொஞ்சம் தலய புடிச்சி விடட்டா.” என கேட்டவள் அவன் அருகில் அமர்ந்து தலையைப் பிடித்து விட்டாள் சாந்தி.

துடுக்காக பேசினாலும் அன்பானவள் தன் மனைவி என சூரியாவின் மனதிற்குள் ஒரு இன்பம். அது அவள் மீது கொண்ட காதலாய் அவனது விழி வழியே பாய்ந்து சாந்தியைப் பற்றிப் பிடித்தது. இருவர் கண்களும் கலந்தது சிறு நொடி. அவளது அன்பான அரவனைப்பும் கோப்பிக் குடிநீரும் அவனது தலை வலியை விரட்ட சூரியாவின் கண்கள் சற்று துயில்ந்து கொண்டிருந்தது.

கணவனின் துயில் நீங்காது இருக்க சூரியாவின் கையடக்கத் தொலைபேசியைத் தற்காலிகமாக செயழிலக்கச் செய்து அவன் அருகிலேயே வைத்தாள் சாந்தி. கணவன் சற்று தூங்கட்டும் என எண்ணியவள் பூனை போல பதுங்கி மெல்லென அவள் பஞ்சுப் பாதங்கள் நகர்த்தி சமையலறைக்குள் சென்று தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.

சில மணித் துளிகளிலேயே அறைக்குள் இருந்த வீட்டுத் தொலைபேசி அலறியது. கணவனின் துயில் கலைந்து விடுமோ என தொலைபேசி அலறிய திசை நோக்கி ஓடி வந்தாள் சாந்தி. சூரியாவின் அருகே மேசை மீது இருந்து தொலைபேசி அலறி அவனது தூக்கத்தையும் விட்டியது.

எடுப்பதா? விடுவதா? என மனம் முடிவு செய்வதற்கு முன்பே தூக்க மயக்கத்தில் கைகள் ரிசீவரை எடுக்க உதடுகள் “ஹெலோ” என்றது. மறு பக்கமிருந்து யார் என்ன கூறினார்களோ! ரிசீவரைக் கூட சரியாக வைக்காமல் வைத்தியசாலையை நோக்கி விரைந்தான்.

தன் கணவனின் நடவடிக்கைகளைப் பார்த்திருந்த சாந்தி குழப்பமடைந்தாள். சூரியா மீண்டும் வீட்டிற்கு வரும் வரை காத்திருந்தாள். இவளது காத்திருப்பு எது வரை என அவளே அறிந்திருக்கவில்லை.

செவ்வொளி மெல்லக் கரைந்து மஞ்சள் காட்சிகளும் மறைந்து இருளும் மெல்ல பாரை விழுங்கிக் கொண்டிருந்தது. காலையின் கடைசி நிமிடங்களிலேயே வீட்டை விட்டுப் புரப்பட்ட கணவன் இன்னும் வீடு திரும்பவில்லையே என சாந்தி பதறினாள்.

நித்தமும் சண்டை போட்டாலும் அதிலிருந்த இன்பம் அவனைக் காணாத தருணத்தில் துன்பமாய் உருப் பெற்றது. அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் பாய்ந்தன.

“காலைலயே தல வலின்னு சொன்னாரே. என்னாச்சோ? யாரு கோல் பண்ணாங்களோ? ஹொஸ்பிடல்கு போனா எப்பயும் அஞ்சி மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவாரே. இப்போ மணி எட்டாகுதே. டேய் சூரியா எங்கடா போன” என மனதிற்குள் புலம்பிக் கொண்டாள்.

கடிகார முள் சுழலும் போது மெல்ல அவள் தலையும் சுற்றியது. கணவன் அவசரத்தில் கையடக்கத் தொலை பேசியையும் வீட்டிலேயே விட்டுச் சென்றிருந்தான். வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கத்தையும் அறிந்து வைத்திருக்கவில்லை சாந்தி. சொகுசான நீண்ட கதிரை மேல் அமர்ந்தவளாய் வழி தோறும் விழி வைத்து விழி வழியே நீர் ஊற்றிக் காத்திருந்தாள். நேரம் பத்தைத் தாண்டியது. தன் கணவனைக் காணா அவளுள்ளம் உருகியது. கவலை அதிகரிக்க அச்சம் மெல்ல மெல்ல அவளுக்குள் உதயமாகியது. சாந்தி தொலைபேசி ஊடாகத் தன் தந்தையை தொடர்பு கொண்டாள்.

“ஹெலோ! அப்பாவா? அப்பா இவரு காலைலயே கெளம்பிப் போனவரு. அப்போ தல வலின்னு வேற சொன்னாரு. இன்னும் அவரு வீட்டுக்கு வரல. இவரு இப்படி இருந்ததே இல்ல. போன வேற வீட்டுலயே விட்டுப் போய்ட்டாரு. எனக்கு ரொம்ப பயமாறுக்குப்பா.” என சிறு குழந்தை போல் அழுதாள்.

கண்ணூடாய்க் கண்ணீரைக் காணாமலே தொலைபேசி வழியே கேட்ட குரலால் தன் மகளின் கண்ணீரை உணர்ந்தான் வடிவேலு. “சாந்திம்மா! மாப்புள எதாலும் வேலயா இருப்பாரு போல. நீ கவலப் படாம இரு. இதோ நானே ஹொஸ்பிடல்க்கு போய் பார்த்துட்டு வந்துடுறேன். நீ ஏதும் யோசிக்காம இரு கண்ணு.” என ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்.

சில நொடிகளில் வைத்தியசாலை நோக்கிச் சென்ற வடிவேலு அதிர்ச்சியில் திகைத்து நின்றான். என்றுமே இல்லாத மக்கள் கூட்டம் வைத்திய சாலையில் இருந்தனர். அதிலும் சில வெளி நாட்டவர்களையும் காணக் கூடியதாக அமைந்தது.

வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்ட வடிவேலுவை காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். “என்ன இந்த நேரம். உனக்கும் பிரச்சனயா என்ன? செக் பண்ணிக்கவா வந்த? இல்ல. என்ன விஷயம்.  நிவ்ஸ் எல்லாம் பாக்குறல்லயா? இப்படி வந்து நிக்கிற? ஒரு மாஸ்க் கூட போடாம” என ஆயிரம் கேள்விக் கணைகள் தொடுத்து விசாரித்துக் கொண்டிருந்தனர் காவல் துறை அதிகாரிகள்.

காலையிலிருந்து மின்சாரம் தடைப் பட்டிருந்தமையால் வடிவேலுவினால் தொலைக் சாட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்திகளை அறிய முடியவில்லை. இதே நேரம் சாந்தி சூரியாவையே நினைத்துக் கொண்டிருந்ததால் அவளும் தொலைக்காட்சிப் பக்கம் நாடவில்லை. இவர்கள் தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்திருந்தாலோ. அல்லது வானொலியில் கேட்டிருந்தாலோ நாட்டில் புதிய வகை நோயினால் மக்கள் பாதிக்கப் பட்டு வருவதை அறிந்திருக்கலாம்.

“சார் அப்படி ஒன்னுமில்ல. என்னோட மருமக புள்ள இங்க தா டாக்டரா இருக்காரு. அவர பாக்கத் தான் வந்தேன்.” என காவல் அதிகாரிகளிடம் தாழ்மையாகப் பதிலுறைத்தார் வடிவேலு.

வைத்தியசாலைக்குள் இருந்த சூரியாவின் கண்களில் வடிவேலு புலப்பட்டார். “சார் அவர அங்கயே நிக்க சொல்லுங்க” என சத்தமாகக் கூறிய சூரியா, ஒரு விசித்திரமான தோற்றத்துடன் வடிவேலுவின் முன் வந்தான்.

“என்ன மாப்புள என்ன நடக்குதிங்க. என்ன ட்ரெஸ் இது. புள்லா கவர் பண்ணிருக்கு. மாஸ்க்கு, கையொர எல்லாம் போட்டிருக்கீங்க. ஏதாலும் பிரச்சினஹலா? எனக்கு எதுவும் புரியல. அங்க சாந்தி உங்கள இன்னும் காணும்டு பயந்து போய் இருக்கா. அதால தான் நான் இங்க வந்தேன். ஆனா இங்க எல்லாம் வித்தியாசமா இருக்கு.” என தன் கேள்விக் கணைகளுடன் தான் வந்த காரணத்தையும் கூறி முடித்தான் வடிவேலு.

“இதுக்கு தான் கொஞ்சம் நிவ்ஸ் பார்க்க சொல்லுது. வெளியில உலகமே பத்திகிட்டு எறிஞ்சாலும் கெனத்து தவலயாட்டம் இருங்க. உங்க பொண்ணு என்னோட போன வேற ஓப் பண்ணி வச்சிட்டா லேன் லைன்க்கு தகவல் சொன்னதால தா என்னால இங்க வர முடிஞ்சது. இல்லன்னா இங்க என்ன ஆகிருக்கும்டு சொல்ல தெரில. படிச்சாலும் முட்டாலாவே இருக்கா அவ.” என சற்று கோபத்துடன் முகவுறையை நீக்காமலேயே கூறினான் சூரியா.

சூரியாவின் கோபத்தை குறைக்கும் வகையில் வடிவேலு “இல்ல மாப்புள நீங்க தல வலின்னு சொன்னதால நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்னு  போன ஓப் பண்ணிடா போல. இப்படி ஒன்னு வரும்னு அவளுக்கு தெரியாதே. இப்ப வேற பதறிகிட்டு எனக்கு கோல் பண்ணினா. அழுதுட்டு இருக்கா. சாந்தி உங்க மேல உசிரயே வச்சிருக்கா.”  என அமைதியாகக் கூறினான்.

ஒரு வித அவசரத்துடன் பதிலளித்தான் சூரியா “சரி மாமா. நடந்தது நடந்து போச்சி. ஆனா இப்போ வந்திருக்குற கொரோனா அதாவது கொவிட் நைட்டீன் என்டு சொல்லப் படுற இந்த வைரஸ் அவசரமா பரவி பலரையும் கொன்னுகிட்டு இருக்கு. சரியான மருந்து வேற இல்ல. அதால நீங்களும் சரி சாந்தியும் சரி வீட்டுலயே கவனமா இருங்க. நான் வீட்டுக்கு வந்துடுவேன். எனக்கு எதுமில்லன்னு சாந்தி கிட்ட சொல்லுங்க. எல்லாம் சொல்லி அவளுக்கு புரிய வைங்க.” என சற்று கோபம் மறைந்து அறிவுரையென சில கூறி மீண்டும் வைத்தியசாலைக்குள் விரைந்தான்.

ஒரு வகை வைரஸாய் கண்ணுக்கே தெரியாமல் இருக்கும் கொரோனா பலரது உயிரையும் உண்டு உலகிலே தன் ஆட்சியை நிறுத்திக் கொண்டிருக்கையில் வைத்தியர்கள் அதற்கு எதிரியாய் நின்று மக்களின் கேடயமென இரவு, பகல் பாராது தம் கடமையைச் செய்து வந்தனர். அவ் வினியதும் மகத்தானதுமான பணியை சூரியாவும் சரியாகச் செய்து வந்தான்.

சாந்தியின் காத்திருப்பு நீண்டது. தொலைபேசியே துணையென அதனருகிலேயே அமர்ந்து சூரியாவின் குரல் கேட்கக் காத்திருந்தாள். மணித் துளிகள் நாட்களாகி மாதத்தைத் தொட்டது. இதற்கிடையில் சாந்தியின் நா புளிப்புச் சுவை தேடியது. அவளது கருவில் சிறு உயிர் அவளுக்குத் துணையாய் இருப்பதை உணர்ந்தாள். ஊரடங்குச் சட்டம் ஊரையும் நாட்டையும் ஏன் உலகின் பல பகுதிகளையுமே முடக்கியது.

சூரியாவுடன் தொலைபேசியில் கூட பேசுவதற்கு முடியாமல் தவித்துப் போய் இருந்தாள் சாந்தி. தன் வயிற்றில் கையை வைத்துக் கொண்டு “செல்லம் அப்பா வந்துடுவாரு சரியா? நீ எனக்குள்ள வந்தத நான் யாருகிட்டயும் சொல்லல. முதல்ல என்னோட செல்லப் புருசன்ட தான் சொல்லுவேன். நீ என்னோட இருக்கன்னு தெரியாம அப்பா என்ன மட்டுமே நெனச்சிட்டு இருப்பாரு.” என தனிமையில் கருவின் சிசுவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

தனிமையில் சாந்தி துவண்டு போய்விடக் கூடாதென கடவுள் கொடுத்த வரமாய் தனிக்கு துணையாய் ஆனது அவளது கருவின் சிசு. வாழ்கை முழுவதும் தன் குழந்தை மட்டுமே துணையாகப் போகிறது என ஆனாலும் அவள் அறிந்திருக்கவில்லை. அவளது வீட்டுத் தொலைபேசி அலறியது கணவனின் அழைப்பை எதிர் பார்த்திருந்தவள் உடனே தொலைபேசியை எடுத்ததும் “ஹெலோ! யாரு சூரியாவா. எப்படிருக்கீங்க? நல்லாருக்கீங்கல்ல? டைம்கு சாப்பிட்டீங்கலா? எப்போ வரப்போறீங்க? ஐ மிஸ் யூ டா.” என ஆவலுடன் ஒரு மூச்சாய் பேசி முடித்தாள்.

சாந்தியின் குரலைக் கேட்டிருந்த சூரியாவின் கண்களில் மழையாய் கண்ணீர் கொட்டியது. “ஆமாம்மா நான் நல்லாருக்கேன். நீ கவனமா இரு. தனியா வேற இருக்க. என்னால வர முடிஞ்சா வந்துடுவேன். இல்லன்னாலும் நீ எப்பயும் சந்தோஷமா இருக்கனும்.” என ஏதோ ஒன்றை மறைமுகமாக கூற முயன்றான் சூரியா.

சூரியாவின் மறைமுகத் தொனியை சாந்தி அறியவில்லை. அவள் சந்தோஷமாக “என்னங்க நீங்க கவலப் படாதீங்க. எனக்கு தொனயாத்தான் உங்க புள்ள என் வய்த்துல வளருதுங்க” என தான் கர்ப்பவதியாகியதை தெரிவித்தாள்.

சூரியா சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பதற்குப் பதிலாக தன் வாயை மூடிக் கொண்டு அழுதான். தாங்க முடியாத துயர் அவனை அறியாமல் தரையில் இடிந்து போய் இருந்தான். மறு புறம் மீண்டும் சாந்தி “என்னங்க எதும் பேசமாட்டிங்கிறீங்க?” என வினவ தன் வேதனையை சாந்தி அறிய வேண்டாமென எண்ணியவன் தொலைபேசியைத் துண்டித்தான்.

வைத்தியம் செய்த நோய்கே தானும் கொஞ்சம் கொஞ்சமாக இரையாகிக் கொண்டிருப்பதையும்; ஆபத்தான நிலையில் தான் இருப்பதையும்; தான் இறந்து போகும் வாய்ப்பே அதிகம் என்பதையும்; மற்றோரைக் கவனித்துக் கொண்டிருக்கையில் தன்னை மறந்ததையும் மனைவியிடம் எப்படி கூறுவான் சூரியா. கண்ணீரே பதிலானது அனைத்திற்கும்.

சூரியாவின் மரணத்தை நோக்கிய பயணத்திலும் பலரின் மரண வாசலை மூடிக் கொண்டிருக்கிறான். தன் மனைவியை மீண்டும் சந்திப்பானா? பிறக்காத குழந்தை முகம் பார்க்க அவனது ஜீவன் காத்திருக்குமா? என்ற வினாவின் விடையாய் அவனைத் தாக்கிய கொரோனாவின் கொடூரம் அவனுக்குள்.

அவனது மனம் மீண்டும் சாந்தியின் குரல் தேட சாந்தி வீட்டின் தொலைபேசி அழுகிறது. “ஹெலோ என்னங்க” என கபடமற்ற அன்பின் குரலாய் சாந்தி கேற்க. என்ன நினைத்ததோ சூரியாவின் மனம்

“சாந்தி எனக்காக ஒன்னு பண்ணுவியா?  நம்ம கொழந்த அது ஆணோ, பொண்ணோ எதுவா இருந்தாலும் என்னப் போல டாக்டராக்குறியா? சொரி இல்ல ஒரு நல்ல டாக்டராக்குறியா?”

என பேசிக் கொண்டிருக்கையிலேயே அவன் உயிரை கடவுள் எடுத்துக் கொள்கிறான்.

தன் மனைவியின் நலன் கருதி தான் இறந்தால் கூட சாந்திக்கு தகவல் கூற வேண்டாம். என முதலிலேயே  கூறியிருந்தமையால் அவனது சடலம் அங்கேயே மின்சாரத்தில் எறிக்கப்பட்டது. எதயும் அறியாத சாந்தி தொலைபேசி எதார்த்தமாக துண்டிக்கப் பட்டதென எண்ணினாள்.

கணவனின் குரல் கேட்க வீட்டுத் தொலைபேசியையே கன்னத்தில் கை வைத்தவளாய்ப் பார்த்திருந்தாள். காத்திருப்பின் இன்பத்தை தனிமையில் சுவைத்தவளாய் தினம் தோறும் தன் கணவன் மீண்டும் வருவான் என்ற நம்பிக்கையில் நாளும் காத்திருக்கிறாள். இன்று போல் மீண்டும் ஒரு நோயை உலகம் சுவைக்காமல் தடுக்க சூரியாவின் வாரிசாய் சாந்தி வயிற்றில் ஒரு வைத்தியர் வளர்கிறான்.

“உயிர் நீத்தாலும் பிறர் நலன் காத்திட துடிக்கும் நல்ல உள்ளங்கள் ஏதோ ஒரு வகையில் நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.”

Rafeeul
Seusl

“ஐயோ! தொலஞ்சது போ. நாய்ட வாய்ல கம்ப விட்டுடேனே. இனி கடிக்காம விடாது போல. பெயருலயாலும் சாந்தம் இருக்கட்டும் என்டு இவ அப்பன் சாந்தின்னு வெச்சிருக்கான் போல. எனக்கில்ல தெரியுது இவ சந்திரமுகின்னு” “பொவ், …

“ஐயோ! தொலஞ்சது போ. நாய்ட வாய்ல கம்ப விட்டுடேனே. இனி கடிக்காம விடாது போல. பெயருலயாலும் சாந்தம் இருக்கட்டும் என்டு இவ அப்பன் சாந்தின்னு வெச்சிருக்கான் போல. எனக்கில்ல தெரியுது இவ சந்திரமுகின்னு” “பொவ், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *