நீங்க ஒஙட ​ரெஸ்பெக்ட்அ பத்தி யோசிக்கிறீங்க. இங்க ஏன்ட வாழ்க்கயே போச்சி.

திருப்பு முனை
பாகம் 27

மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு வாசலில் அமர்ந்திருந்தனர். லீனா டீ ஊற்றி கொண்டு வந்து கொடுத்தாள். எல்லோர் முகமும் ஒவ்வொரு பக்கம் தொங்கிக் கொண்டிருந்தது.

சிறிது நேர இடைவெளிக்கு பின்னர் மாமி லீனாவை அழைத்து,

“லீனா அப்ப நீங்க வர வானா. நாங்க உம்மாவ மட்டும் கூட்டிட்டு போறோம். ஏதோ கோவத்துல ராவ் ஒவ்வொன்டு பேசி பட்டுட்டு அதுவல மனசுல வெச்சிக்கோ வானா.” என்று அவள் தலையை தடவி கூறினார்.

“நீங்க என்னா சொன்னாலும் நா கேக்குறேன். ஆனா எனக்கு இவரோட வாழ ஏலா please எனய கூட்டி போங்க”

“லீனா இது வாழ்க்க. நெனச்ச மாதிரி தூக்கி வீச ஏலா யோசி”

“நா நல்லா யோசிச்சி தான் இந்த முடிவ எடுத்தேன். please எனயவும் கூட்டி போங்க. நானும் வாறேன்.”

“நீ வந்தா ஷரீப்”

“எனக்கு இப்படி ஒரு மாப்புளயே வானா கொஞ்சம் சரி ஈவு எரக்கமில்ல.”

“அப்ப நீ போறன்டு முடிவா தான் இரிக்கிறாய்.”

“ஓ.”

உடனே மாமா குறுக்கிட்டு,

“லீனா நீ அங்க வந்தா நாங்க எப்படி இந்த சமூகத்துல மொகம் காட்ற”

“மாமா நீங்க ஒஙட ரெஸ்பெக்ட் அ பத்தி யோசிக்கிறீங்க. இங்க ஏன்ட வாழ்க்கயே போச்சி. அது ஒங்களுக்கு வெளங்குதில்லயே.”

“லீனா நீ நல்லா யோசிச்சி முடிவெடு. ஆனா நீ ஊட்டுக்கு வந்தா நாங்க அங்க இரிக்க மாட்டோம். எஙல மறந்துட்டா சரி.”

“அப்படி சொல்லாதீங்க மாமா வேணும்டா நா எங்க சரி போறேன். நீங்க இரிங்க.”

“பாப்பம். நீ யோசிச்சி வை. நாங்க வாப்பம்மாவ பார்த்துட்டு வாறோம்.” என்று கூறி விட்டு மாமாவும் மாமியும் ஷரீப்பும் சென்று விட்டனர்.

லீனா தனது சாமான்களை தயார் படுத்தும் போது தான் அதை கண்டாள். அது தான் சலீமா தாத்தாவின் கைப்பேசி. அல்லாஹ்வே இத குடுக்க மறந்துட்டேனே. நல்ல நேரம் கண்டது. என்று நினைத்து கொண்டு சலீமாவுக்கு அழைப்பு எடுத்து வீட்டுக்கு வர சொன்னாள். சிறிது நேரத்தில் சலீமாவும் வரவே கைப்பேசியை அவளிடம் கையளித்து விட்டு இரவு நடந்த விடயங்களை கூறினாள்.

“நீங்க போங்க தங்கச்சி. ஒங்களுக்கான வாழ்க்கய அல்லாஹ்வே ஒஙட கண்ணுக்கு காட்டி தருவான். ஒஙட மனசுக்கு எல்லாம் நலவாவே நடக்கும். நீங்க நல்லா இரிப்பீங்க தங்கச்சி. ஏன்ட துஆ ஒங்களுக்கு எப்பவும் இரிக்கும். போனாலும் எனக்கு கோல் எடுத்து பேசுங்க. பேசாம மட்டும் இரிக்க வானா. எனக்கு சரி கவல நீங்க போறது. என்னா தான் செய்ய தங்கச்சி எல்லாம் நலவுக்கு தான்.”

லீனாவுக்கும் சலீமாவை எண்ணி கவலையாக இருந்தது.தனது இக்கட்டான சூழ்நிலையில் அவளுக்கு உதவிக்கரம் நீட்டிய சலீமாவுக்காக மனதார பிராத்தித்தாள். அந்த நன்றிக்காக லீனா சலீமாவுக்கு ஒரு சிறு அன்பளிப்பை வழங்கினாள். பின்னர் சலீமா லீனாவிடமும் மர்யமிடமும் கண்ணீருடன் விடை பெற்றுச் சென்றாள். அவள் சென்றதும் லீனா அறைக்குள் சென்று ஆடைகளை ஆயத்தமாக்கினாள்.

அப்போது அவள் மனத் திரையில்,

திருமணத்திற்கு முன் அவள் அவளது ஆடைகளை பெட்டியில் அடுக்கியது. திருமணம் குறித்து பல இன்பக் கனவுகளில் மூழ்கிப் போனது.

மருதாணியில் S❤L போட்டு விட சொன்னது. ஷரீப்பின் சிந்தனையில் மூழ்கி தன்னையும் மறந்து போனது. வீடு முழுக்க SL.Com என்று கிறுக்கி ஏச்சு வாங்கியது. எல்லாம் நிழலாடியது. அவள் அவற்றை நினைத்து நினைத்து மீண்டும் கதறி அழுதாள்.

“எப்படி எல்லாம் ஆசப்பட்டேன். ஆனா ஏன்ட வாழ்கயே இப்படி வீணாகிட்டே பாரு அல்லாஹ்” என்று கூறிக் கூறி லீனா அழுதாள்.

அப்போது அவள் இருந்த மனநிலையைக் விவரிக்க இங்கு வார்த்தைகளே இல்லை. பிறகு மீண்டும் கண்களை துடைத்து விட்டு ஆயத்தமாக்கினாள். போனவர்கள் பல மணி நேரம் சென்றும் வரவில்லை. லீனா அவர்களது வருகைக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவர்கள் வந்தனர்.

வந்ததும் மாமி,

“என்ன லீனா யோசிச்சி பார்த்தியா?”

“ம்ம்” என்றாள் மெதுவாக.

“என்ன முடிவு அப்ப”

“அதே முடிவு தான்”

“ஏன் லீனா இப்படி புடிவாதம் புடிக்கிறாய்? சரி ஒனய கெம்பஸ் கு அனுப்புறோம். அப்ப நீ எஙலோட வர படாது. சரியா?”

“எனக்கு ஏலா. எனக்கு இதுக்கு மேல இவரோட வாழ ஏலா. எனய கூட்டி போங்க. please”

“என்னா ஷரீப் இவ இப்படி பேசுறா நாங்க என்னா செய்ய”

ஷரீப் எதுவும் பேசாது மௌனம் காத்தான். பிறகு மாமா அவளருகில் வந்து,

“லீனா ஓன்ட மனச யாரோ கொலப்பி உட்டு அதான் நீ இப்படி இருக்கிறாய் இன்னம் ஒனக்கு ஒன்டும் கெட்டு போகல்ல யோசி நீ வரத்தான் வேணுமா?”

“மாமா இது ஏன்ட தனிப்பட்ட முடிவு. இதுக்கு மேல எனய வற்புறுத்தாதீங்க. நீங்க எத்துன முற யோசிச்சி சொல்ல சொன்னாலும் ஏன்ட பதில் இது தான்.”

“லீனா நீ வாசப்படிய தாண்டினா நீ தான் கஷ்டப்படுவாய். அப்பறவ் ஒனக்கு யாரும் இரிக்க மாட்டாங்க. ஒனய யாரும் பாரமெடுத்து பார்க்கவும் மாட்டாங்க. நீ தான் வாழ்க்க பூரா கண்ணீர் வடிச்சிட்டு இரிக்க வரும். யோசி லீனா.”

“நா கஷ்டப்பட்டாலும் எனய பார்க்க கேக்க யாரும் இல்லாட்டியும் பரவல்ல எனக்கு இங்க இரிக்க ஏலா. நா மனுசர விட படைச்சவன நம்புறேன். அவன் எனய கர சேர்ப்பான்.”

“ஏன்ட பேச்சிக்கி அவ்வளவு தான் மதிப்பு எனா லீனா. நல்லம் எஙல எல்லாம் தல குனிய வெச்சிட்டு நீ மட்டும் நல்லா இரி” என்று கூறி விட்டு மாமா அறைக்குள் நுழைந்தார்.

‘யாருக்குமே ஏன்ட நெலம வெளங்குதில்லயே.’ என்று மனதில் எண்ணினாள் லீனா. பிறகு மாமாவும் மாமியும் வெகு நேரம் கதைத்து விட்டு மர்யமிடம் வந்த மாமா,

“ஒஙலுக்கும் ஒஙட புள்ளய கூட்டி போக தானே வேணும். சரி நீங்க ரெண்டு பேரும் பஸ் புடிச்சி போங்க. நாங்க வர மாட்டோம்.” என்றார்.

இதை கேட்ட மர்யம் அழுது விட்டாள்.

“எப்படி ஆம்புள தொன சரி இல்லாம நாங்க ரெண்டு பேரும் மட்டும் போற.”

“அதான் ஒங்களுக்கு போக தானே வேணும் போங்க. எப்படி சரி போங்க.” என்ற மாமாவை பார்த்து,

“மாமாவா இது இப்படி பேசுறாரு. ச்சே” என்று லீனா எண்ணினாள்.

பார்த்தீர்களா? பணம் எப்படி எல்லாம் பேச வைக்கிறது. பிரமாதம்!

தொடரும்
Noor Shahidha
SEUSL
Badulla

Author: admin