நிரந்தரப் பிரிவுக்கான முதல் அஸ்த்திவாரம்

அவளோடு சில நொடிகள்
தொடர் :-01

அழகிய ஓர் தருணத்திற்காய் காத்திருந்த பல வருடங்களை ஒட்டு மொத்தமாய் திரட்டி வந்து நின்றது அன்றய நாள். வெள்ளிக்கிழமை அவ்விழா இடம்பெற இருக்கும் செய்தி பல பக்கமும் பரவி இருந்தது. பலரின் எதிர்பார்ப்பும் ஒருத்தியின் கனவும் நிஜமாகி நிறைவேற காத்திருந்த நாளது.

அந்நாளை நோக்கிய வினாடிகள் ஒவ்வொன்றும் நத்தை வேகத்தில் நகரத் தொடங்கின. அன்று செவ்வாய் கிழமை ; தொலைபேசியை இயக்கிக் கொண்டே ஷோபாவில் சாய்ந்தாள் மபாஸா;

“அஸ்ஸலாமு அலைக்கும்” இது மறு முனையில் இருந்த சனாவின் குரல்.

“வஅலைக்குமுஸ்ஸலாம். சொல்லு என்ன?”

“என்ன மெடம் கோபமின்னும் தனியல போல”

“விளங்கினா சரிதான்.” என்று கூறி விட்டு சில வினாடிகள் மௌனம் சாதித்தாள் மபாஸா.

“என்ன சத்தத்தயே காணல்ல?”

“ப்ரைடே நீ இங்க வரலனா. இதுக்குப் பிறகு இனி என்டைக்குமே என்ன கொன்டெக்ட் பன்னிடாத.”

“ஏன்டி நீயும் என்ன புரிஞ்சிக்காம பேசுறா?”

“யாரு நானா உன்ன புரிஞ்சிக்கல்ல.. நீ தான் மத்தவங்கட உணர்வோட விளையாற்றா. ஒன் வீக் ஸ்றீலங்கா வந்துட்டு போறதால உனக்கு என்ன குறஞ்சிடப் போது?” ஆவேசித்தாள் மபாஸா .

“உனக்காக நீ வர சொல்லிருந்தா நான் எப்பயோ வந்திருப்பன். நீ அவளுக்காக வரச் சொல்றிய என்னால எப்புடி வர ஏழும்.”

“ஏன்டி என்ன போல அவளும் ஓ ப்ரன்டு தான் அவளுக்காக வர கூடாதா?”

“இல்ல. வர மாட்டன், அவ அன்னைக்கு பேசின ஒவ்வொரு வார்தையும் இன்னைக்கு வரைக்கும என் காதுல ஒளிச்சிகிட்டே இருக்கு ப்ளீஸ் என்ன கம்பல் பன்னாத”

“இல்ல நீ வந்து தான் ஆகனும். நீ வாரதுனால இன்ஷா அல்லாஹ் உன் கோபத்துக்கு தெளிவு கிடைக்கும்னு நினைக்கன்”

“நீ என்னதான் சொன்னாலும் நான் வர மாட்டன். அவள்ற முகத்த பாக்கயே பிடிக்கல்ல” மபாஸாவின் இரங்கலையும் தான்டி சனா தனது பிடிவாதத்தில் உறுதியாக நின்றாள்.

“இது தான் ஒன்ட முடிவுன்டா பசியாவ ஒன்ட லைப்ல இருந்து தூக்கி எறிஞ்ச மாதி என்னையும் தூக்கி எறிஞ்சிடு. பா(b)ய்”

சனா என்ன சொல்லப் போகிறாள் என்ற  பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்து விட்ட மபாஸா என்ன செய்வதென்று தெரியாமல் தெனறினாள். அவளது உள்ளத்தை அடைத்து பிடித்திருந்த ஒரு பாரத்தை இறக்கி வைக்கவும் முடியாமல் தடுமாறினாள்.

சனாவின் ஞாபகத் துகள்களோ பசியாவையும் மபாஸாவையும் புடைசூழ்ந்து கொள்ள ஆரம்பித்தன.

“பசி பசி எனக்கு மொரட்டுவ யுனிவர்சிடிக்கு வந்திருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் அதே யுனிவர்சிடி தான?” ஆவள் தனியாதவளாய் பசியாவின் அறைக்குள் நுழைந்து கொண்டாள் மபாஸா.

அவளுக்காக காத்திருந்த பசியா அவளின் எதிர்பார்ப்புக்கு மாற்றமான பதிலோடு,

“எனக்கும் மொரட்டுவ தான் சனாக்கு” என இழுத்தாள்.

“சனாக்கு எங்க?”

என்று கேட்டுக் கொண்டே சனாவின் பக்கம் திரும்பினாள். அங்கே தேமித் தேமி அழுது கொண்டிருந்தவளாக சனாவைக் கண்டு திகைத்துப் போனாள். எதுவும் புரியாதவளாக அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு,

“நீ ஏன் அழுதுகிட்டு இருக்கா அழாத இங்க பாரு.”

“என்னயாம்” கேட்டுக் கொண்டே பசியாவைப் பார்த்தாள் அவளுடை கண்களிலும் நீர் சுரக்க ஆரம்பித்தது.

“சனாக்கு பேராதனிய யுனிவர்சிடியாம்”

“என்ன சொல்ற அவளுக்கு மட்டும் ஏன் வேற மூனு பேருக்கும் ஒரே யுனிவர்சிடி கிடைக்கும்னு தான நினச்சிட்டு இருந்தம்?”

“நம்ம என்ன செய்ய ஏழும். அல்லாஹ்ட நாட்டம் நாம பிரியனும்ங்குறதாக்கும்.. அவளுக்கிட்ட எவளவு சொல்லியும் கேக்காம அழுதுகிட்டே இருக்கா பாரு”

இருவருமாக சேர்ந்து அழுது அழுது சோர்ந்தும் கூட அழுகையை நிறுத்தாத சனாவை ஆறுதல் படுத்த முனைந்தும் அவர்களால் முடியாது தோற்றுப் போனார்கள்.

அத்தனை இலகுவில் பிரிந்து விடக்கூடிய நட்பா அது ஆதி தொட்டு வந்த நட்பு பாதியில் தூரமாவதென்றால் யாருக்கும் தான்  தாங்கிக் கொள்ள இயலும். அன்று நட்பென்றால் என்னவென்று  தெரியாத வயதில்  பாலர் பாடசாலையில் குறும்புகளோடும் புன்னகையோடும்  கூடிக் கொண்டவர்கள் அதே குறும்புகள் குறையாது இன்றும் குழாவிக் கொண்டிருப்பவர்கள் தான் இம்மூவரும். தூங்கும் போதே தவிர இவர்கள் பிரிந்திருந்ததாய் இது வரை ஒரு நினைவில்லை காரணம் மூவரது வீடும் அவர்களுக்கு ஏற்றாற் போல் ஒரே தெருவிலேயே அமைந்திருந்தது.

இஸ்டம் போல் நட்பைக் கொண்டாடிக் தீர்த்தார்கள். தடைகள் இருக்கவில்லை  தைரியத்தோடு வளர்ந்தார்கள்  தன்னம்பிக்கையாய் ஒருவருக்கொருவர்  இருந்து கொண்டார்கள். ஒரு நாளும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லை. முக பாவனையில் வெவ்வேறாக இருந்தாலும் மூவருடைய ரசனையும் என்று வேறுபட்டதில்லை. அப்படியாய் தொடர்ந்த இந்த ஆருயிர் நட்பை திடீர் என பிரிவு ஆட்கொள்வதென்றால் யாரால் தான் ஏற்றுக் கொள்ள முடியும். இருந்தாலும் இறைவன் எழுதியதை  மாற்றி எழுதவா முடியும்?

ஒரு சில வாரங்களுக்குப் பிறகு அவர்களுக்கு என்று அமைந்ததை ஏற்றுக் கொண்டு சானா பேராதனியவிலும் மபாஸாவும் பசியாவும் மொரட்டுவ யுனாவர்சிடியிலுமாக தங்களது படிப்பை தொடர்ந்தார்கள். இது தான் அவர்களுடைய நிரந்தரப் பிரிவுக்கான முதல் அஸ்த்திவாரம் முதல் ஒத்திகை என்று அப்போது துளியளவேனும் அவர்கள் நினைத்திருக்கத்தான் மாட்டார்கள்.

தன்னுணர்வை மீறி விரலில் உதிர்ந்த ஓர் சில கண்ணீர் துளியின் தீண்டலில் சுயநினைவிற்குள் மீண்டாள் சனா. எல்லாமே இன்று நடந்தது போல் இருந்தது அவளுக்கு.

இத்தனை வருடங்களில் அவள் கற்பனை கூட பன்னிப்பார்க்காத எத்தனையோ மாற்றங்கள் அவர்களின் வாழ்க்கையில் நடந்து முடிந்திருந்தது.

அன்றெல்லாம் இன்பத்தையும் துன்பத்தையும் தோளோடு தோள் சேர்த்து இணைந்திருந்தே ஏற்று பழகியவர்கள். இன்று இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்க கூட முடியாத தூரம் பங்கெடுக்கவும் விரும்பாத மனக் கசப்புகளோடு அவர்களுக்கிடையில் பெரும் பிரிவொன்று நீளக் கோடிட்டுக் கொண்டே இருந்தது.

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி
Author: admin