போவாதீங்க லீனா

திருப்பு முனை
பாகம் 28

மாமாவின் அலட்சியம் லீனாவை சங்கடப்படுத்தியது. பிறகு மாமா சித்திக்கு கோல் எடுத்து.

“இங்க பாருங்க லீனா ஊட்டுக்கு வரனும்டு புடியா இரிக்கிறா ஷரீப் ஓட வாழ ஏலாதாம் அவக்கு. நீங்க கொஞ்சம் சொல்லுங்க அவக்கு நாங்க சொன்னா ஒன்டும் வெளங்குதில்ல.”

“நா என்னத்த சொல்ல. அவக்கு ஊட்டுக்கு போகனும்டா கூட்டி போங்க. இனி வாழ்ந்து தான் அவ என்னத்த கண்டா.”

“என்ன நீங்க இப்படி பேசுறீங்க.”

“மறுகா அவக்கு விருப்பமில்லாட்டி என்னத்துக்கு அவ பொய்யா ஒரு வாழ்க்கய வாழனும்? நேரத்த வீணடிக்காம ஊட்டுக்கு கூட்டி போங்க. மத்தத பொறகு பேச ஏலும்.”

சித்தியின் இந்த பதில் மாமாவை திக்கு முக்காட வைத்தது. இனியும் இதை பற்றி பேசி அர்த்தமில்லை என்று மாமா புரிந்து கொண்டார். பிறகு மாமா லீனாவிடம் வந்து,

“எல்லாம் ரெடி பண்ணிட்டியா ரெடி பண்ணி வை ஊட்டுக்கு கூட்டி போறேன். ஆனா இன்டயோட ஒனக்கும் எங்களுக்கும் உள்ள ஒறவு முடிஞ்சி சரியா.” லீனா பதில் ஏதும் பேசாது ஆயத்தமானாள்.

சிறிது நேரத்தில் வீல் வந்தது. லீனா தனது எல்லா சாமான்களையும் ஏற்றினாள். ‘தனது வாழ்க்கை இப்படி ஆனதே என்று நினைத்து அழுவதா, இல்லை இந்த ஜெயில் வாழ்க்கையில் இருந்து விடைப் பெற்று செல்கிறோமே என்று மகிழ்வதா’ என்று அவளுக்கு புரியவில்லை.

“லீனா நா இனிமே நீங்க சொன்ன மாதிரி ரோஸிய மறந்துட்டு ஒஙட ஊர்லயே ஒரு ஊட பார்த்து வந்திரிக்கிறேன். போவாதீங்க லீனா.”

என்று ஷரீப் தன்னை தடுக்க மாட்டானா என நினைத்து ஷரீப்பை பார்த்தாள். அவனோ இவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

‘எரக்கம் என்டு ஒன்டு ஏன்ட மேல இருந்தா தானே அவன் வந்து எனய தடுத்திருப்பான். அவன்ட உலகமே ரோஸியா இரிக்க கொல எப்படி ஏன்ட மேல பாசம் வரும்?’

என லீனா தனக்குள் கூறி கொண்டு வீலில் ஏறினாள்.

மாமாவும் மாமியும் ஷரீப்பிடம் பயணம் சொல்லி விட்டு வந்து வீலில் ஏறினர். வீலும் Start ஆனது.பயணமும் ஆரம்பமானது. அவள் மனம் கனத்தது. கண்கள் குளமாகின.

“யா அல்லாஹ்! இப்படி ஒரு நெலமய எந்த புள்ளக்கும் குடுத்துடாத ரஹ்மானே! நா மோடயாகின மாதிரி இனி யாரும் இப்படி மோடயாகிட படாது.” கண்ணீருடன் இறைவனை பிராத்தித்தாள் லீனா.

இந்த ஏழு மாதத்தில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் அவள் நினைவலைகளில் முட்டி மோதின.

கல்யாணம் பேசியது. இடையில் வந்த பிரச்சனைகள். ஹனாவின் வார்த்தைகளில் மறைந்திருந்த ஆணித்தரமான உண்மைகள். திருமணத்திற்கு பிறகு லீனாவின் குடும்பத்தினர் பலருடைய வீட்டுக்கு கூட செல்லாமல் ரோஸியின் குடும்பத்தினர் வீடுகளுக்கு மட்டும் சென்றது. திடீரென ஊரை மயக்க முடிவான உம்றா பயணம். அந்த பயணங்களில் ரோஸிக்கும் ஷரீப்புக்கும் இடையிலான அணுகுமுறைகள். அவள் வீட்டுக்குள் இவன் போட்ட சகிக்க முடியாத கூத்துக்கள். இப்படி பல விடயங்கள் அவள் நினைவில் வந்து போயின. அப்போது அவள் மனம் வேதனையில் புழுவாய்த் துடித்தது.

உங்களிடம் கூறவே மறந்த ஒரு விடயம் இருக்கிறது. என்ன தெரியுமா?

ரோஸி லீனாவையும் சேர்த்து உம்றாவுக்கு கூட்டி சென்றதற்கான காரணம் ரோஸிக்கு ஷரீப்பை பிரிந்து இருக்க முடியாததால் தான் அதே நிலையில் தான் ஷரீப்பும். மற்றபடி நன்மையை நாடி லீனாவுக்கு நலவு செய்வதற்காக அல்ல. அப்படி நன்மையை எதிர்ப்பார்க்கும் மனநிலை இருந்திருந்தால் இப்படி அநாச்சாரங்கள் நடக்கவே வாய்ப்பில்லை. ரோஸிக்கும் ஷரீப்பிற்கும் இடையிலான தொடர்பு லீனா மூலமே நிம்மதியாக தொடர முடிந்தது. ஏற்கனவே ஷரீப்பின் முதல் வாழ்க்கை பிரிவதற்கு ரோஸி தான் காரணம் என்று சாரா கூறிச் சென்றிருந்தாள். இது ஊர் அறிந்த உண்மை என்றாலும் லீனா அறியாத உண்மை. காலம் கடந்து அதை அறிந்து கொண்டாள் லீனா.

எனவே லீனா ஷரீப்பின் மனைவி என்பதால் அவளையும் சேர்த்து கூட்டிச் சென்றால் பிறர் சந்தேகம் தம் மீது விழாது என்று அறிந்தே இவ்வளவும் நடந்தது.

தொடரும்.
SEUSL
Badulla
Author: admin