நிழலாடும் நினைவுகள்

  • 10

குளிர் காற்று இதமாக மேனியை வருடிச் செல்லும் ரம்மியமான காலைப் பொழுதில் நதிக்கரையில் நடை பயின்று விட்டு வீடு வருகின்றேன். எதேச்சையாக என் கண்கள் நாட்காட்டியை நோட்டமிடுகின்றன. இன்று மே இரண்டாம் திகதி. நான் என் வாழ்க்கை புத்தகத்தின் முக்கியமான ஒரு பக்கத்தை தொலைத்து இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதை நினைக்கையில் என்னையும் மீறி என் கண்கள் குளமாகின்றன. நான்கு வருடங்களுக்கு முன்னால் நான் சென்று விடுகின்றேன்.

அதீக், என் திருமண வாழ்வில் எனக்கு கிடைத்த இரண்டாவது பரிசு. அத்தோடு என் மூன்று பிள்ளைகளிலும் ஒரே ஒரு ஆண் பிள்ளை. ஏனைய இருவரும் பெண் பிள்ளைகள். இவன் ஏனைய இருவரை விடவும் படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரன். இவன் குறும்புகள் பேச்சு என அனைத்தையும் ரசிப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இவ்வாறு காலச் சக்கரம் மின்னல் வேகத்தில் சுழன்றோட அவன் எட்டு வயதை எட்டிப் பிடிக்கும் தருவாயில் இருந்தான்.

அன்று நோன்பு பெருநாள் தினம். வழமை போன்றே இந்த முறையும் என் சகோதர சகோதரிகள் பெருநாள் கொண்டாட என் வீட்டிற்கு வருகை தந்தனர். பெருநாள் கொண்டாட்டம் என் வீட்டிலும் களை கட்டியது எனலாம். சிறுவர்களின் சத்தமோ காதைப் பிளந்து கொண்டு சென்றது. என் மூத்த சகோதரன் என் மகனுக்கு அழகான ஒரு சோடி செருப்பை அன்பளிப்பு செய்தார். அந்த செருப்பு தான் என்னை காலங் காலமாய் கண்ணீர் சிந்த வைக்கும் என்பதை அப்போது யார் அறிவர்.

அந்தச் செருப்பு அதீக்கிற்கு மிகவும் பிடித்து போய் இருந்ததை அவன் செயல்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன். அந்த செருப்பு கண்ணைக் கவரும் நீல நிறத்தில் இருந்ததாலோ என்னவோ அவனுக்கு அதன் மீது கொள்ளை ஆசை. எப்போதும் காலில் அந்த இரண்டு செருப்புகளையும் அணிந்த வண்ணம் தான் இருப்பான்.

ஒரு முறை என் தாய் விளையாட்டாக அவனிடம் அந்த செருப்பைக் கேட்டதற்கு அவன்,

“வாப்பம்மா நான் போட்டு இருக்குற புது சட்டையை வேண்டுமானாலும் தருவேன், ஆனால் பெரியப்பா வாங்கி தந்த செருப்பை மட்டும் நான் யாருக்கும் தர மாட்டேன்”

என்பது என் காதுகளுக்கு கேட்டது. இதனைக் கண்ணுற்ற என் சகோதரனுக்கும் அளவில்லா மகிழ்ச்சி. இவ்வாறு நான்கைந்து நாட்கள் பெருநாள் கொண்டாடி விட்டு அனைவரும் வீடு சென்று விட்டனர்.

என் மகன் இப்போதெல்லாம் தூங்கும் சமயங்களிலும் அந்த செருப்பையும் தன் கட்டிலின் அருகே தான் கழற்றி வைப்பான். அதை யாரும் திருடி விடக் கூடும் என்ற மனப்பயம் அவனுக்குள்.

அன்று திங்கட் கிழமை வழமை போலவே பாடசாலை விட்டு வந்து விளையாடப் போவதாய் கூறி விட்டு என் மகன் சென்றுள்ளான். இவ்வாறு வழக்கமாக விளையாட சென்று விட்டு நான் வேலை முடிந்து வீட்டிற்குள் வருவதற்குள் அவன் வந்து என் வருகையை எதிர் பார்த்து காத்திருப்பான். அன்று நான் வேலை முடிந்து செல்கிறேன் வாசலில் மகனைக் காணவில்லை. பட படப்புடன் மனைவியிடம் கேட்கிறேன், நண்பர்களுடன் விளையாடச் சென்றிருப்பதாய் பதிலளிக்கிறாள்.

கால தாமதம் ஆகியும் மகனைக் காணாததால் அவன் விளையாடும் இடத்திற்கு தேடிச் சென்றோம். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. இன்று நதிப்பக்கம் விளையாடச் சென்றதைக் கண்டதாக அயலவர் ஒருவர் கூறினார். நதிப்பக்கம் என் கால்கள் நகர்கின்றன. அங்கு ஒரே கூட்டம். அதனைக் கண்டதும் கால்கள் பின் வாங்கினாலும் மனதை திடப் படுத்திக் கொண்டு முன்னால் நகர்கிறேன்.

அங்கே என்னைக் கண்டதும் என் மகனின் அருமை நண்பன் அஹமட் ஓடி வந்து என்னிடம்,

“அங்கள் நாங்க ஆத்தோரமா விளாடிட்டு இரிக்கும் போது அதீக்கின் செருப்பு ஆத்துல விழுந்து அடி பட்டு பெய்த்து. செருப்ப எடுக்க அதீக் ஓடினான் அவனும் அடி பட்டு பெய்த்து”

என அழுதவாறே கூறினான். நிலமையைப் புரிந்து கொண்ட நான் தைரியம் இழக்காது மகனைத் தேடும் பணியில் ஈடுபட்டேன்.

ஐந்து மணி நேர போராட்டத்தின் பின் மகனை மீட்டுக் கொண்டு வந்தார்கள் ஜனாஸாவாக.

அப்போதும் அவன் கைகள் அந்த சோடி செருப்பை இறுக பற்றி இருந்ததை நான் கண்டேன். உயிரென இருக்கும் உன்னத உறவின் திடீர் பிரிவால் நான் மயக்கமுற்றேன்.

சிறிது நேரத்தில் கண் விழித்து பார்க்கிறேன் என் அன்பு மகன் வெள்ளைத் துணியால் சுற்றப் பட்டு உறங்கிக் கொண்டிருந்தான். இறைவனின் நாட்டத்தை எண்ணி என்னால் அமைதியாய் அழ மட்டுமே முடிந்தது. இழந்து விட்ட உறவின் நினைவலைகளை நெஞ்சில் சுமந்தவனாய் நிஜ வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.

Mishfa Sadhikeen
SEUSL

குளிர் காற்று இதமாக மேனியை வருடிச் செல்லும் ரம்மியமான காலைப் பொழுதில் நதிக்கரையில் நடை பயின்று விட்டு வீடு வருகின்றேன். எதேச்சையாக என் கண்கள் நாட்காட்டியை நோட்டமிடுகின்றன. இன்று மே இரண்டாம் திகதி. நான்…

குளிர் காற்று இதமாக மேனியை வருடிச் செல்லும் ரம்மியமான காலைப் பொழுதில் நதிக்கரையில் நடை பயின்று விட்டு வீடு வருகின்றேன். எதேச்சையாக என் கண்கள் நாட்காட்டியை நோட்டமிடுகின்றன. இன்று மே இரண்டாம் திகதி. நான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *