பொய் ஹஸரத் இவர் தான் வீல் பேசியே தந்தாரு

திருப்பு முனை
பாகம் 29

நேரம் 3.45 அப்போது தான் இவர்கள் வீட்டை வந்தடைந்தனர். வந்ததும் அவளுக்கு அழுது அழுது உடல் சோர்ந்திருந்தது. எனவே முகம் கை கால் கழுவி விட்டு கட்டிலில் சாய்ந்தவள் அப்படியே தூங்கி விட்டாள்.

பிறகு அப்ரா தனியார் வகுப்பு முடிந்து வந்து லீனாவை மெதுவாக தட்டவே அப்போது தான் லீனாவும் எழுந்தாள்.

“எப்ப வந்தீங்க தாத்தி?” என்றாள் ரகசியமாக.

“இப்ப கொஞ்சத்துல தான்.”

“ம்ம் எல்லாம் எடுத்து கொண்டா வந்தீங்க.”

“ம்ம்”

“அது நல்லம். இத விட நல்ல வாழ்க்க ஒங்களுக்கு கெடக்கும். இதயே யோசிச்சிட்டு இரிக்காம இதுவல மறந்துட்டு புதுசா பொறந்து வாங்க. எனக்கும் ஷரீப்ப காட்டேலா. ஆள்ட டைப் நல்லமில்ல தாத்தி.”

“ம்ம்”

“எனக்கும் தம்பிமார்க்கும் உம்மா ஒஙலோட இனி பேச வானான்ட. அதான் களவுல வந்தேன் ஒஙலோட பேச. நா பொறகு வந்து பேசுறேன் தாத்தி. எனக்கு ஒஙலோட கோவமில்ல.”

“தெரியும் அப்ரா அவங்க பேச வானான்டதுக்கு எங்கட பாசம் ஒன்டும் கொறயாதே எனா.”

“ம்ம் அது தான் தாத்தி போறேன்”

“ம்ம்”

லீனாவுக்கு மனதில் ஏதோ ஒரு வலி. ஆனாலும் அவள் அதை வெளிக் காட்டவில்லை. வீடே வெறுச் சோடிக் கிடந்தது.

மறுநாள் மாமா தனது குடும்பத்தினருடன் வேறாக கூலிக்கு வீடெடுத்து சென்று விட்டார்.

லீனாவுக்கு தனிமை கொடுமையானது. ஏனெனில் முன்பு எல்லாரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்து வாழ்ந்த நாட்களின் சுவடுகள் அவளை ஒவ்வொரு நொடியும் ரணப்படுத்தியது. அது மட்டுமின்றி அவளது அறையில் அவள் கிறுக்கி வைத்த குறியீடுகள் அவள் எதை மறக்க நினைக்கிறாளோ அதையே அவளுக்கு ஞாபகம் ஊட்டியது. இதனால் சில சந்தர்ப்பங்களில் அவளுக்கு அவள் மனதை தேற்ற முடியாமல் அவதிப்படுவாள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் நடந்தது எல்லாம் கனவு என்று கூறி அவளை அவளே ஆறுதல் படுத்திக் கொள்வாள்.

இப்படி அவள் மனம் அவளை ரணப்படுத்தி சித்திரவதை செய்யும் போதெல்லாம் அவள் மனதை துவண்டு போக விடாமல் இறுக பற்றிப் பிடித்து கொள்வாள். இறைவனிடம் கையேந்தி பிராத்திப்பாள்.

சில நேரங்களில் திடீரென கத்தி அழுவாள். கதறுவாள். மீண்டும் தன்னை சமாதானப் படுத்திக் கொள்வாள். இவை எல்லாம் அவளது மனக் காயங்களின் ஊமை வலிகளே.

மூன்று மாதம் கழிந்தது. ஷரீப் விவாகரத்து தருவதாக எந்த தகவலும் இல்லை. எனவே லீனாவே வழக்கு போட நினைத்தாள்.

ருஸ்னி மாமா வந்தார். அவருடன் காதி நீதிமன்றத்துக்கு சென்று லீனா வழக்கு பதிவு செய்து விட்டு வந்தாள். காதியார் ஒரு திகதியை குறித்து காட்டி விசாரணைக்காக வர சொன்னார்.

குறித்த திகதியும் வந்தது. அவள் ருஸ்னி மாமாவுடனும் சித்தியுடனும் காதி நீதிமன்றம் சென்றாள். இதுவரை காதி நீதிமன்றத்தை கண்டிராத லீனா முதன் முதலாக அதை கண்டு உள்ளூர பயந்தாள். அவளுக்குள் உதறல் எடுத்தது. அங்கே நிறைய பேர் அமர்ந்திருந்தனர். அவனும் வந்திருந்தான் மாமாவுடன்.

அவர்களுக்கான விசாரணை நேரம் வரவே இருவரும் முன் சென்றனர். வழக்கு பதிவு செய்தவள் லீனா என்பதால் முதல் விசாரணை அவளிடம் நடந்தது. அருகில் இருந்தவர் அவளிடம் சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டார். பின்னர் காதியார் லீனாவை பார்த்து.

“முடிச்சி எத்துன மாசம்?”

“பத்தாகுது.”

“ம். பிரிஞ்சி வந்து எத்துன மாசம்?”

“மூணு”

“ம்ம் மூணு மாசத்துக்கு செலவுக்கு தந்ததா.”

“இல்ல”

“புள்ளகள் இரிக்கா”

“இல்ல”

“ம்ம். சேர்ந்து வாழுறீங்களா”

“ஏலா ஹஸரத்.”

“ம்ம்.”

பிறகு காதியார் ஷரீப்பை பார்த்து,

“ஒஙட பொண்டாட்டி நீங்க குடும்ப வாழ்க்கக்கி தகுதி இல்லன்டும். நீங்க ஏற்கனவே முடிச்சி உட்டும் ஒஙட register copy ல இது தான் ஒஙட 1st life என்டும் போட்டிரிக்கிறீங்க. அதனால நீங்க திருமண சட்டத்துக்கு மோசடி செய்து இருக்கீங்க. ஒஙட பொண்டாட்டிக்கு அவட உரிமகள குடுக்குற இல்லன்டும் வழக்கு போட்டிருக்காங்க. இத பத்தி ஒஙட கருத்து என்னா.”

ஷரீப் சத்தியப் பிரமாணம் செய்து விட்டு,

“இல்ல ஹஸரத் இவ நா சொல்றது ஒன்டும் கேக்குறல்ல. எனக்கு தெரியாம தான் ஊட்டுக்கே வந்தா.”

“பொய் ஹஸரத். இவர் தான் வீல் பேசியே தந்தாரு.”

காதியார் லீனாவை பார்த்து விட்டு,

“நீங்க யாரோட வந்தீங்க”

“மாமாவோட”

“அவர்க்கு வர சொல்லுங்க”

“ம்ம்.” என்றாள் சாந்தமாக.

பின்னர் ஷரீப்பை பார்த்து,

“நீங்க யாரோட வந்தீங்க. வர சொல்லுங்க வந்தவர.”

இரு தரப்பில் இருந்தும் வந்தவர்கள் வரவே அவர்களை கண்ட காதியார் அதிர்ச்சி அடைந்தார்.

தொடரும்.
Noor Shahidha
SEUSL
Badulla
Author: admin