ஒங்க கஷ்டம் எல்லாம் முடிஞ்சதும் திருப்பி தாங்க

ஊமைக் காதல் நாடகம்
காட்சி:01

களம்: நுவரெலியா தம்ரோ தோட்டம்
கதாபாத்திரங்கள்:
இனியா (கதாநாயகி)
ராதன் (கதாநாயகன்)
செல்லம்மா (ராதனின் தாய்)
கெளரி (ராதனின் சகோதரி)
கெளதமி (இனியாவின் நண்பி)
கீதா (வகுப்பாசிரியை)
சிவா (தோட்டத்தில் வேலை செய்யும் வேலைக்காரன்)
சுமதி (தோட்டத்தில் வேலை செய்யும் வேலைக்காரி)
அஷோக் (தோட்ட உரிமையாளரின் மகன்)

வாழ்வின் வசந்தம் வீசும் காலம் எப்பொழுதும் ஒரு முறை தான் ஒவ்வொரு மனிதனுக்கும் வரும். அது போல தான் “இனியாவின்” வாழ்விலும் ஒரு வசந்தம் வந்தது. இனியா பிறப்பில் இருந்தே செல்வச் செழிப்புடன் வளர்ந்து வரும் ஒரு அழகிய குயில். இளகிய உள்ளமும் கூட. மறுபுறத்தில் “ராதன்” குணத்தில் மன்னன் பணத்தில் ஏழை. இவர்கள் இருவரிடையே மலர்ந்த காதல் வியாதி தான் “ஊமைக் காதல்”.

(பச்சைப் பசேல் என பரவிக் கிடக்கும் அந்தத் தேயிலை செடிகளுக்கு மத்தியில் வெள்ளப் பட்டாம் பூச்சிகள் போல இந்தப் பிள்ளைகள். இலேசாக வெளிவந்த வெயிலில் அங்கே.)

இனியா – ஹேய்! கெளதமி இந்த இடமெல்லாம் ரொம்ப அழகா இருக்குள்ள? இங்கயே ஒரு வீட்டக் கட்டி வாழனும் போல இருக்கு.

கீதா – அதுக்கென்ன இனியா நீங்க நெனச்சா இங்கயே இருந்துடலாம். ஒங்க அப்பா கிட்ட சொல்லி இங்க மாப்பிள்ள பாத்துட்டா போச்சு இல்லயா கெளதமி?

இனியா – அட போங்க மிஸ்.

கெளதமி – சரியா சொன்னிங்க மிஸ். இவளுக்கு இப்படி தேயிலக் காட்டுல வாழத்தான் அவா. நாம என்னமோ வயல் நடுவுல வாழ்ந்து கழிக்கிற மாறி.

இனியா – அடியே கெளதமி வண்டில இருக்குடி ஒனக்கான கவனிப்பு. நீ என்னயே கலாய்ச்சிட்ட.

கீதா  – அட என்ன என்ன கவனிப்போ? கெளதமி நீங்க கொஞ்சம் ஜாக்கிரதை.

கெளதமி – ஹா! ஹா! நாங்க பாக்காத கவனிப்பா? அட போங்க மிஸ்.

இனியா – இங்க ஒடம்பு ரொம்ப கலைப்பா இருக்கு. மொகத்த கொஞ்சம் கழுவிக்க எடம் கெடக்கிமா?

சிவா – ஆமா கண்ணு நெறய யெடம் இருக்கு. அதோ அந்த வீட்டுக்கு போங்க! அங்க கழுவிக்கலாம்.

இனியா – ஐய்யோ! அந்த உச்சத்துக்கு நான் மட்டும் எப்புடி போறது? கெளதமி என்னடி பண்ணுறது?

கெளதமி – அந்த மனுசன் வேற போயிட்டாறே! அதோ அந்த அக்கா கிட்ட போய் கேக்கலா.

கெளதமி – அக்கா நாம வெளில இருந்து வந்திருக்கோம். மொகத்த கொஞ்சம் கழுவிக்கனும். அதோ அந்த வீட்டுக்கு போங்கன்னு ஒரு ஆளு சொன்னாரு. கொஞ்சம் வழி காட்ட முடியுமா?

சுமதி  – அதுக்கென்ன வாங்கம்மா. இதுக்கு இம்புட்டு தயங்கனுமா?

இனியா – அதில்ல அக்கா புது யெடம். அது தா கொஞ்சம் தயக்கமா இருக்கு.

சுமதி – ராதா! ராதா! செல்லம்மா! செல்லம்மா! இந்தா ஏதோ ஒரு ஸ்கூல்ல இருந்து வந்த புள்ளைங்க மொகம் கழுவிக்கனுமாம் கூட்டி வந்திருக்கேன்.

ராதன் – யேன்டி கத்துர. என்னோட கோவத்த கெளறாத!

செல்லம்மா – சும்மா இருடா! யாரும்மா? வாங்கம்மா அந்தா அங்க இருக்குற யெடத்துல போய் கழுவிக்கம்மா.

இனியா – அம்மா நான். கெளதமி சொல்லேன்டி.

கெளரி – ஓஹோ புரிஞ்சிடிச்சு எல்லாமே அந்த பக்கம் இருக்கு. நீங்க போங்க அக்கா.

செல்லம்மா – அண்ணா எங்கடி? உள்ள தானே இருக்கா?

கெளரி – ஆமாம்மா. அவன் உள்ள தா இருக்கா. ஏதோ யோசிச்சிட்டு இருக்கான்.

(இனியா அவசர அவசரமாக தனது தேவைகளை முடித்துக் கொண்டு முகத்தைக் கழுவிக் கொண்டிருக்கையில்.)

செல்லம்மா – யேம்பா இப்படி யோசிக்கிற? ஆண்டவ இருக்கான் அவன் பாத்துப்பான். விடுப்பா!

ராதன் – இன்னும் எத்தன வருஷத்துக்கும்மா இந்த அட்டப் பொதயல்ல ரெத்தத்த தொலச்சி வேல பாக்குறது?

கெளரி – அது நம்ம தல விதி அண்ணா! நீ இப்படி யோசிக்கும் போது எங்களுக்கு ஏக்கமா இருக்கு.

ராதன் – போல் கடக்கார அண்ணா சொல்றாரு வெளிநாடு போற வாய்ப்பு இருக்காம்! ஒனக்கு இங்கிலீஸ் வேற தெரியும். நீ யேதாச்சும் செய்யலாமேன்னு? நா எப்படி காலெடுத்து வெக்கிறது?

கெளரி – ஹய்ய். வெளிநாடு அண்ணா அண்ணா போ அண்ணா. நெறய சாமான் வாங்கலாம். எனக்கு ஸ்கூல்கு சப்பாத்து வாங்கலாம்.

ராதன் – அடிங்க இவள. அவ்வளவு பெரிய காசுக்கு நா எங்க போறது? நீ பணம் இருந்தா கொடு!

(கெளரி கலங்கிய கண்களுடன் ஊமையாகி நின்றால்.)

செல்லம்மா – அப்பா ராதா அவள யேன்டா அடிக்கிற? ஆண்டவன் விட்ட விதி விடுப்பா!

அஷோக் – ராதா டேய் ராதா வெளில வா.

செல்லம்மா – ஐய்யா வந்திருக்காரு போல! சொல்லுங்க ஐய்யா! என்ன விஷயம்?

அஷோக் – வேற என்ன இன்னும் ஆறு மாசம் தான் ஒனக்கு தவண! ஓம் புருஷ வாங்கின கடனயெல்லாம் வட்டியும், மொதலுமா கட்டிறனும் புரிதா? ஓம் புள்ள என்ன ஏம்மேல குதிக்கிறான்?

ராதன் – அப்பா வந்து கடன் கேக்கும் போது கொடுக்காம விட்டிருக்கனும்! வெந்த புண்ணுல வேல பாச்சுற போல வந்து வந்து கேக்குறது!

அஷோக் – வெந்த புண்ணும், வேகாத புண்ணும்! இங்க பாரு செல்வி ஒன்னோட மொகத்துக்காக ஓம் புள்ளய விட்டுட்டு போறேன்!

செல்லம்மா – ஐய்யா அவன மன்னிச்சிடுங்க.

அஷோக் – சரி சரி காசு வந்துடனும்.

ராதன் – கடவுளே எனக்கு கொஞ்சம் காசயாச்சிம் கண்ணுல காட்ட மாட்டியா?

(இனியா நடந்தவை யாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டவள் கண்களில் நீர் சிந்திய படியே எதையோ தேடுகிறாள். அருகில் ஒரு கடதாசித் துண்டு கிடைத்தது.)

இனியா – அடடா இந்த கடுதாசில சுத்தி வெச்சிறலாம். வேற என்ன பண்ணுறது? என்னோட முகவரிய எழுதிவிடலாம்.

இனியா பாரதி
இல, 18/2 மஸகெலியா முதலாவது லயன் தோட்டம்,
மஸ்கெலியா.

இதுல என்னோட தங்கச் சங்கிலிய வெச்சிட்டு போறேன். ஒங்க கஷ்டம் எல்லாம் கேக்கும் போது ரொம்ப கண்ணீர் வருது. ஒங்க கஷ்டம் எல்லா முடிஞ்சதுக்கு அப்பறமா இத தந்தா போதும். நீங்க தருவிங்கன்னு எதிர்பாக்கிறேன்.

(தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கீழே கிடந்த ஒரு கடதாசித் துண்டில் சுத்தி விட்டு தன்னிடம் இருந்த பேனையால் இதனை எழுதிவிட்டு இனியா என தனது பெயரை எழுதிவிடுகிறாள்.)

கெளதமி – வா போகலாம். வண்டில கவனமா ஏறிக்க. ஆமா இவ்வளவு நேரமா என்னடி பண்ணுன? கீதா மிஸ் ரொம்ப பேசிட்டா!

இனியா :- அடியே ரொம்ப பாவமா இருக்குடி அந்த வீட்டு நெலமய பாத்தா. ராதன் ரொம்ப கவல படுறாருபா. கவல தாங்க முடியாம என்னோட தங்க சங்கிலிய கலட்டி வெச்சிட்டு வந்துட்டேன். அவரோட கஷ்டம் எல்லாம் தீர்ந்த பெறகு அவரே வருவாரு!

கெளரி – அடிப்பாவி என்ன காரியம் பண்ணுன இனியா? ஆமா, திரும்ப வருவாரு இப்படி நம்பி கிட்டே கெட! வா திரும்ப போகலா!

இனியா – அந்த தாடி வெச்ச வெள்ள மொகம். என்னக்கா இருந்தாலும் என்னத் தேடி வருவான். கோவக்கார பையனாக்கும் ஆனாலும் ஆம்பல. அவரோட கடனயெல்லாம் அடிச்சி முடிஞ்சதுக்கு அப்பறமா பணக்காரனகி கண்டிப்பா என்ன தேடி வருவாரு.

கெளதமி – மாடு மாடு மாட்டுப் பொண்ணு. யாருன்னே தெரியாது. தாடி வெச்ச வெள்ளப் பையனாம்.

இனியா – தாடி வெச்ச வெள்ளப் பையன் கோவக்காரனாக்கும்.

(அவனை நினைத்த படியே வீட்டை நோக்கி பயணம் செய்கிறாள்.)


(இதற்கிடையில் ராதன் தனது உடலை சுத்தம் செய்து கொள்ள வெளியில் சென்றுவிட்டு மீண்டும் உள்ளே நுழைகையில்)

ராதன் – அட என்ன இது ஜன்னல் கட்டுல பிரிச்சு பாத்துடலா. அட தங்கச் சங்கிலி.

இனியா, மஸ்கெலியா தோட்டம். ஒங்க கஷ்டம் எல்லாம் முடிஞ்சதும் திருப்பி தாங்க.

அடக் கடவுளே யாருன்னு கூட தெரியாத ஒரு மனசு எனக்காக இதப் பண்ணிருக்கு. எப்படி இவள நான் தேடுவ? மெலிஞ்ச வெள்ளப் பொண்ணு..ரெட்டி ஜட பின்னிட்டு. இருந்த கோவத்துல மொகத்த கூட பாக்காம போயிட்டனே. மெலிஞ்ச பொண்ணு. வெள்ளப் பொண்ணு. இந்த ஒலகத்துலயே நல்ல மனசுக்காரி. இவள முழுசா பாக்காம போயிட்டனே?

(நாளு முழுவதும் இப்படியாக இருவரும் இருவரையும் நினைத்த படியே காதலை தொடங்கி விட ஆரம்பித்து விட்டனர். இனியாவின் ஒரு இழப்பினால் ராதனின் வாழ்வில் ஒரு பொற்காலம் தொடங்கி விட்டது. இருவரிடையே அறியாமல் தொடங்கி விட்ட பாசம் மணித்தியாலப் பொழுதுகளிலேயே காதலாக மாறியது. இனியும் இக்கதையில் என்ன சுவாரஸ்யங்கள் நடக்கவிருக்கிறது என்பதை அடுத்தடுத்த தொடர்களில் பார்க்கலாம்.)

ஊமைக் காதல் தொடரும்.
Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka
Author: admin