குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய சேலை

  • 18

அவளோடு சில நொடிகள்
தொடர் :- 04

மறந்து போகத் துடிக்கும் ஒன்றை மீண்டும் நினைவு படுத்தும் படி பசியாவின் கட்டிலில் பரந்து கிடந்தது அந்த சேலை. அதனருகில் எத்தனையோ சிந்தனைகளை தனக்குள் புகுத்திக் கொண்டவளாக அமைதியாய் உறங்கிக் கிடந்தாள் பசியா. அழுது கொண்டிருந்த ராவியா (உம்மா) அவளருகில் மெது மெதுவாக நகர்ந்து வந்து,

“மகள் மகள்”

பசியாவுடைய தலையை வருடி விட்ட படி அவளை எழுப்பத் தொடங்கினாள்.

கவலைகள் மனதை அடைத்துப் பிடித்துக் கொள்ளும் இறுக்கமான நேரங்களில் அவள் இரவல் வாங்கிக் கொள்வதெல்லாம் இந்த தூக்கத்தைத்தான்.

தாயின் குரல் கேட்டு தன் தூக்க கலக்கத்தில் இருந்து தெளிந்து தன்னை சுதாகரித்துக் கொண்டவளாய் கட்டிலை விட்டு இறங்கினாள்.

தனக்கு முன் நின்றவர்களின் முகங்களை குட்டி போட்ட பூனை போல் மாறி மாறிப் பார்த்தாள். அவர்களின் முகங்களில் காட்சியளித்த கவலையின் வடிவத்தை உணர்ந்து கொண்டாள். காரணமான அந்த புடவையின் பக்கம் தன் பார்வையை திருப்பியெடுத்தாள்.

தானே எல்லோருக்கும் மீண்டும் அந்த கசப்பான சம்பவங்களை நினைவு படுத்தி விட்டேனே என்று வருத்தம் தேங்கிய உள்ளத்தோடு மீண்டும் அவளுடைய அலுமாரிக்குள் அதை பத்திரப்படுத்தினாள்.

ஒரு சேலை ஒரு கும்பத்தையே கவலைக்குள்ளாக்குமா?

ஆம் உடுத்துப் பார்க்க முன் கலைத்தெறியப்பட்ட கனவொன்று அந்த சாரிக்குள் கதையாக மடிக்கப் பட்டு கிடந்தது கொண்டவன் கரம் பற்றும் முன்னமே விதி எழுதிய வலி பூண்ட அந்த நிலையைத்தான் யாராலும் அத்தனை இலகுவில் மறந்து விட முடியுமா.

வாப்பாவின் அருகில் நெருங்கி வந்தவள்

“சோரி வாப்பா சோரி ஹஸீனா உம்மா என்ன மன்னிச்சிக்கங்க ப்ளீஸ். என்னால எப்புடி இதெல்லாம் மறக்க ஏழும்?”

அவளுடைய கண்களும் கண்ணீரை வரவழைத்துக் கொண்டன.

“ப்ளீஸ் ஹஸீனா மன்னிச்சிக்க. உன்ன கஸ்டப்படுத்தனும்னு நான் நினைக்கல்ல.”

“பரவால்ல விடு. உன்ல எனக்கு கோபம் இல்ல.”

பசியாவை யாரும் எதுவும் சொல்ல வில்லை. அவள் செய்ததில் ஒன்றும் தவறுமில்லை. அவர்கள் தங்களையே தேற்றிக் கொண்டார்கள்.

“சரிடா ஏன் இன்னம் சாப்புடல்ல?” அவளுடைய தலையை தடவிக் கொடுத்தார் நஸீம். கண்களைத் துடைத்தவளாக,

“இப்ப பசிக்கல்ல வாப்பா லேட்டாவி சாப்புர்றன்”

பசியாவின் முகத்தில் பசி வேரூன்றி இருந்ததை உணர்ந்து கொண்டார் நஸீம். அவளால் தான் ஒரு போதும் பசியை தாங்க முடியாதே எது இல்லாமல் போனாலும் டைமுக்கு சாப்பாடு இருந்தால் போதும் அவளுக்கு. ஆனால் இப்போது அந்த பசியை கூட மறைத்து நிற்கும் அளவுக்கு மனதளவில் நொந்து போய் கிடந்தாள்.

“பசிக்காம என்ன ஏமா ரெண்டு மூனு நாளா ஒரு மாதியா இருக்கிங்களாம். வாப்பா வேல விசயமா திரிஞ்சதால ஒன்டயும் கவணிக்காம விட்டுடன்”

“அப்புடி ஒன்டுமில்ல வாப்பா. நான் நல்லாத் தான் இருக்கன்.”

“புடவையெல்லாம் எடுத்து போட்டுகிட்டு முகத்த ஒரு மாதியா வெச்சிகிட்டு எப்பயோ நடந்தது நடந்து முடிஞ்சி எல்லாருக்கும் ஆறுதல் சொல்ற புள்ளயே இப்புடி பழசெல்லாம் யோசிச்சிகிட்டு இருந்தா இருக்குற எல்லாரும் உடஞ்சி பெய்த்துருவாங்கம்மா. இன்ஷா அல்லாஹ் காலப்போக்குல எல்லாமே சரியாவிடும். எதப்பத்தியும் யோசிக்காம வாங்க வந்து சாப்புட்டுடு ரெஸ்ட் எடுங்க.”

தந்தையின் வார்த்தைக்கு மறுபேச்சின்றி பொம்மைபோல் தலையசைத்து ஹஸீனாவுடன் சென்றாள் பசியா. இப்போதாவது இந்த கல்யாணத்தைப் பற்றி வாப்பா தன்னிடம் கேட்கமாட்டாரா என்று தனக்குள்ளேயே ஏங்கிக் கொண்டிருந்தாள் பசியா.

எங்கே தான் இந்த கல்யாணத்தில் சம்மதமா எனக் கேட்டால் அவள் இல்லை என்று சொல்லி மழுப்பி விடுவாளோ என்ற பயம் நஸீமின் உள்ளத்திற்குள் ஊடுருவிக் கொண்டே இருந்தது.

பலத்த சோதனைக்கு ஆளான ஹஸீனாவின் கலைந்து போன கனவு பசியாவை மட்டுமல்ல அந்த வீட்டையே ஒரு குளுக்கு குளுக்கி போட்டிருந்தது. ஹஸீனாவிற்கும் பசியாவிற்கும் திருமணம் முடிக்கும் வயது நெருங்கி விட்டது.

இருபத்தி நான்கு வயதை அடைந்திருந்த அவர்கள் இருவரும் நஸீமினதும் ராவியா உம்மாவினதும் மனதில் பெரும் போராட்டமானார்கள்.

ஹஸீனா மீள முடியா பழியில் அகப்பட்டிருந்தாள். அவளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒவ்வொரு தடவையும் பசியா தோற்றுக் கொண்டே இருந்தாள்.

இரண்டு வருடங்களுக்கு முதல், ஹஸீனாவின் திருமணத்திற்கு ஒரு நாளைக்கு முன்னர் ஹஸீனாவிற்கு பேசி நிச்சயிக்கப் பட்டிருந்த அவளுடைய மாமாவின் மகனை மரணம் ஆட்கொண்டது.

திருமண வீடே மயான வீடாகி பாவமும் பழியும் ஹஸீனாவின் தலையிலேயே வந்து வீழ்ந்தது. அவள் மீது அவன் கொண்டிருந்த அளவு கடந்த அன்பே அவனை மரணத்தின் வாயிலுக்குள் நுழைய வைத்தது என ஊரும் உறவும் வார்த்தைகளை கோர்க்க ஆரம்பித்தன.

அதிலிருந்து எழ முடியாமல் விழுந்தவள் விழுந்தவள் தான் இன்றும் அதை விட்டு மீள அவளால் மிடியவில்லை. அந்த திருமணத்திற்காக கடை கடையாய் ஏறி அவளுக்கு நிச்சயிக்கப் பட்டிருந்தவனால் பார்த்துப் பார்த்து ஆசையாய் ஹஸீனாவிற்கென்று எடுக்கப்பட்ட சேலை தான் பசியாவின் அறையில் அவர்களின் வேதனையை புதுப்பித்து நின்றது.

பிறந்ததில் இருந்து கூடவே ஒட்டிக் கொண்டு வரும் அவளை இதே நிலைமையில் விட்டு விட்டு தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பசியாவின் மனம் இடம் கொடுக்கவில்லை .

திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரும் ஆளுக்கு ஆள் திருமணத்தை வற்புறுத்திக் கொண்டிருந்தார்களே தவிர தாங்களாக அதற்கு ஒப்புக் கொண்டிருக்கவில்லை.

அவர்கள் இருவரினதும் எதிர்கால விடியலுக்காய் காத்திருந்த அந்த குடும்பத்திற்கு தேடாமல் வந்த வரம் தான் கியாஸ்.

முதலில் கியாஸை ஹஸீனாவிற்கே பேசி வந்தார்கள்  அவள் ஒப்புக் கொள்ளாததால் பசியாவையே கியாஸிற்கு பேசி முடிக்க ஆளோசித்தார்கள். பேசிய படி இன்று பெண் பார்க்கும் படலமும் நடந்தேற காத்திருக்கிறது.

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி

அவளோடு சில நொடிகள் தொடர் :- 04 மறந்து போகத் துடிக்கும் ஒன்றை மீண்டும் நினைவு படுத்தும் படி பசியாவின் கட்டிலில் பரந்து கிடந்தது அந்த சேலை. அதனருகில் எத்தனையோ சிந்தனைகளை தனக்குள் புகுத்திக்…

அவளோடு சில நொடிகள் தொடர் :- 04 மறந்து போகத் துடிக்கும் ஒன்றை மீண்டும் நினைவு படுத்தும் படி பசியாவின் கட்டிலில் பரந்து கிடந்தது அந்த சேலை. அதனருகில் எத்தனையோ சிந்தனைகளை தனக்குள் புகுத்திக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *