பஸ்குவில் தொடங்கி முபராஹ்வில் முடிந்த விவாகரத்து

திருப்பு முனை
பாகம் 31

சிலர் இப்படி தான் அவர்கள் செய்த தவறை மூடி மறைத்து விட்டு நம் மீது வீண் பழி சுமத்திய பிறகு அவர்கள் நல்லவர் வேஷம் போடுவார்கள். அந்த சமயத்தில் நாம் உடைந்து போகாமல் நிதானமாக இருக்க வேண்டும். சுமத்திய பழி தற்காலிகமானது. ஆனால் அவர்கள் சுமக்கப் போகும் பாவத்தின் எடை நிரந்தரமானது. எனவே நீ தவறு செய்யவில்லை எனில் தைரியமாக இரு. இறைவன் பார்த்து கொள்வான்.

லீனா வீட்டுக்கு வந்த செய்தி கேள்விப்பட்டு அவளது நண்பிகள், அயலார் என பலரும் அவளை பார்க்க வந்தனர்.

வந்தவர்களது ஆறுதல் வார்த்தைகள் அவளது நொந்து போன இதயத்துக்கு அமிர்தமாய் இருந்தது.

ஒவ்வொரு ஆறுதல் வார்த்தைகளாலும் அவள் தன்னை தேற்றிக் கொண்டே இருந்தாள். இதை அவளுக்கு இறைவன் கொடுத்த பேரருளாகவே அவள் கருதினாள். அப்போது தான் அவளுக்கு ஒரு செய்தி எட்டியது.

யார் தனக்கு மென்டல் என்ற பட்டத்தை வாய்க் கூசாமல் சொல்லி அவளை நிலை குலைய வைத்தாரோ! அவரின் மகளை அவர் கவுன்ஸிலிங்கு அழைத்து சென்று வந்த செய்தி அவளுக்கு கிடைத்தது. அதை கேள்விப்பட்டவள் ஆக்ரோஷப்பட்டு கத்தினாள்.

“கவுன்ஸிலிக்கு கூட்டி போங்கன்டு சொன்ன ஒரு வார்த்தக்காக எனக்கு மென்டல் என்டு ஒரு பட்டம் தந்தாரே அப்ப அவர்ட மகள கவுன்ஸிலிங்கே கூட்டி பெய்த்துட்டு வந்திரிக்கிறாரே. அப்ப அவக்கு என்னான்டு பட்டம் சொல்ற. பதில் சொல்லுங்க உம்மா. பெருசா எனக்கு பட்டம் சொல்ல வந்தாங்களே மொதல்ல ஷரீப்ப மெடிகல்கு போட்டு எடுக்கனும். ஆம்புளயா அவென்?” ச்சே. என்று பல்லை கடித்தவாறே கேட்டாள் லீனா.

“லீனா பேசாம இரிங்க சத்தம் போட வானா.”

“பாத்தீங்களா உம்மா எனக்கு சொல்லி ரெண்டு கெழம சரி போகல்ல அதே அடிய அல்லாஹ் அவங்களுக்கு குடுத்தான் தானே. இப்படி தான் உம்மா எனக்கு சொன்ன ஒவ்வொரு கதகளுக்குமான அடி அவங்களுக்கு உழும். எப்படி எல்லாம் கத கட்டினாங்க. ஏன்ட நடத்தய கற்ப எல்லாம் கேவலப்படுத்தி பேசின பேச்சுகளுக்கும் அல்லாஹ்வே போதுமானவன். அதுக்கான பதிலடியயும் அவங்க வாங்குவாங்க.”

“லீனா அல்லாஹ் கிட்ட பாரத்த சாட்டுங்க அவன் பார்த்து கோவான்.”

“எனக்கு அவங்கட முடிவ பாக்கனும் உம்மா. ஏன்ட வலி அவங்களுக்கு வெளங்கனும் உம்மா.”

“பொறுமயா இரிங்க லீனா. எப்பயும் அவங்கட பக்கம் மட்டும் காத்து வீசாது. ஒஙட பக்கமும் அடிக்கும். அது வரக்கும் பொறுமயா இரிங்க.”

சிறிது நேர இடைவெளியில் லீனா பொறுமை அடைந்தாள். இப்படியே நாட்களும் ஓடின.

மறு விசாரணைக்கான வழக்கு நாளும் நெருங்கியது. அன்று ஞாயிற்றுகிழமை லீனாவுக்கு காதியிரிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. அதாவது அவளுடைய இரண்டாவது தவணை வழக்கு எதிர்வரும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் (கோர்ட்டில்) போடப்பட்டிருந்தது. ஆனால் காதியார் அவளுக்கு வரும் புதன்கிழமைக்கு காதி காரியாலயம் வர சொல்லவே அழைப்பு எடுத்திருந்தார். ஏன்? எதற்கு என்றெல்லாம் அவளுக்கு தெரியாது.

தனது வழக்கு குறித்து விசாரிக்க தான் வர சொன்னார் என அவள் நினைத்து கொண்டாள். அவளது எண்ணம் பிழைக்கும் என அவள் நினைத்தாளா? இல்லை.

குறித்த நாளும் வரவே சித்தியுடனும் ருஸ்னி மாமாவுடனும் காதி காரியாலயம் சென்றாள். அவனும் வந்திருந்தான்.அவள் எதிர்ப்பார்த்தது தான். அவளை கண்டவுடன் காதியார் உள்ளே வர கட்டளை இடவே அவளும் அறைக்குள் சென்றாள். பிறகு அவனையும் வரவழைத்தவர் லீனாவை பார்த்து,

“சொல்லுங்க என்ன முடிவுல இருக்கீங்க.”

“டிவோர்ஸ்தான்.”

பிறகு ஷரீப்பை பார்த்து,

“அப்போ நீங்க”

“நானும் அதே முடிவு தான்.”

“ம்ம். சரி அப்ப ரெண்டு பேரும் கேக்குறதால நா டிவோர்ஸ்தாறேன் என்றவர்.

ஷரீப்பை பார்த்து,

“சரி நீங்க ஜெபிட லெட்டர், இத்தா பணம் கொண்டு வந்தீங்க தானே?

“ஓ ஹஸரத் கொணந்தேன்.”

‘அதெப்படி விசாரிக்க வர சொன்னா இத்தா பணம் கொண்டு வர ஏலும். ஏற்கனவே தெரிஞ்சி இருந்தா தானே அத எடுத்து வந்திருக்கனும்.’ என்று லீனா உள்ளுக்குள் கேட்டு கொண்டாள்.

“நீங்க” என்று லீனாவிடம் கேட்க அவள் அதிசயமாக அவரை பார்த்து விட்டு,

“ஹஸரத் நீங்க லெட்டர்அ கோர்ட் கு தானே கொண்டு வர சொன்னீங்க.”

“ஓ ஆனா இப்ப அத எடுத்து வாங்க. இன்டயோட விஷயத்த முடிக்கனும்.”

என்று காதியார் சொல்லும் போதே லீனாவுக்கு என்ன நடந்திருக்கும் என்பது தெளிவானது.

‘ஆம். வழக்கை விசாரணை இன்றி முடித்து தர வேண்டி ஷரீப் மற்றும் ரோஸி மாமாவிடம் கூற மாமா இரகசியமாக காதியாரை சந்தித்து கதைத்து பண கொடுக்கல் வாங்கல் எல்லாம் நடந்த பிறகு தான் இந்த புதிய திட்டம் நடந்துள்ளது.’ என்பதை லீனா அறியாமல் இல்லை..

விசாரித்தால் உண்மை தெரிந்து விடும், மாதாமாதம் பணம் கட்ட வேண்டும் என்பதால் தானே இப்படி கூட்டாக நடிக்கிறார்கள். அவனின் ஹராமான பணம் லீனாவுக்கு தேவையும் இல்லை. ஆனால் அவளுக்கு வேண்டியது நீதி ஒன்று மட்டுமே கிடைக்குமா?

**********

பிறகு அவள் அந்த கடிதத்தை கொண்டு வந்து காதியாரிடம் கொடுத்தாள். பிறகு காதியார் மாமாவையும் ருஸ்னி மாமாவையும் சித்தியையும் பார்த்து,

“நீங்கள்கள் சொல்லுங்க. இப்ப என்னா செய்ற”

உடனே மாமா,

“அதான் ஹஸரத் இவங்களுக்கு divorce தானே வேணுமாம். அப்ப நாங்க அப்படியே செய்வோம்” என்றார்.

ருஸ்னி மாமாவும் சித்தியும் இந்த கருத்தை ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.

“சரி அப்ப இத்தா பணத்த தாங்க” என்று ஷரீப்பிடம் கேட்க,

அவன் சொல்லி வைத்தாற் போல் 18000.00 ரூபாவை காதியாரிடம் நீட்டினான். அதைப் பெற்றுக் கொண்ட லீனா,

‘யா ரப்பே! இப்படி ஒரு சல்லிக்காக தானே ஏன்ட வாழ்க்கய நாசமாக்கினாங்க..அதே சல்லியால நா அவங்களுக்கு பதிலடி குடுக்கனும். ஏலும்டா அதுகள் சப்பி தின்னட்டும்.’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

பின்னர் காதியார் லீனாவை பார்த்து,

“சரி அப்ப நீங்க எனக்கு லெட்டர் ஒன்டு எழுதி தாங்க. நீங்க ஏற்கனவே போட்ட FD (பஸ்கு விவாகரத்து) வழக்க வாபஸ் வாங்கி இப்ப புதுசா MD (முபரஹ் விவாகரத்து) வழக்கு முறைல இத தீர்த்து வெக்க சொல்லி எழுதி தாங்க” என்றார்.

லீனாவும் அவர் சொன்னது போல் அந்த கடிதத்தை எழுதி கொடுத்தாள். பிறகு இருவரும் காதியார் கொடுத்த பத்திரத்தில் கையொப்பம் இட்டனர். பிறகு இஸ்லாமிய முறைப்படி துஆக்கள் ஓதல்களின் பின்னர். பகல் 1.47 க்கு லீனாவுக்கு விவாகரத்து கிடைத்தது.

‘ஒரு பெண் தன்னால் முடிந்தளவு போராடுவாள். உயிர் உருக கதறி அழுவாள். ஆனால் என்றாவது ஒருநாள் அவள் அவளது எல்லையை அடைந்து உன்னை விட்டு சென்றால், நீ எத்தனை பிரபஞ்சம் கடந்து கெஞ்சினாலும் அவள் மீண்டும் உனக்கு கிடைக்கவே மாட்டாள்.’

முற்றும்
Noor Shahidha
SEUSL
Badulla
Author: admin