மரணத்தின் வயதென்ன?

  • 29

தொடர்ந்தேர்ச்சியான மழை. இன்று மாலைதான் சூரியக்கதிர்கள் உலப்பனை மலைத்தொடரை சந்திப்பதற்கு அனுமதியளித்தன மேகங்கள். உலப்பனை தேவதைக்கு பல காதலர்கள். அதில் முதன்மையானவன் இந்த கருமேகங்கள். ஏதோ விதண்டாவாதம் போலும். நகரவே மாட்டான். இல்லாவிட்டால் சூரியக்கதிர்கள் உலப்பனை தேவதையை மேய்ந்துவிடும் என்ற பொறாமையோ! எப்படியோ கருமேகங்கள், சூரியக்கதிர்கள், மழைத்துளிகள், சில்லென்ற குளிர் தென்றல் காற்று, இளம் சூடு வெயில், பறவைகளின் இனிமை கீச்சிடல்கள், அந்த சப்தங்களை பிளந்து வரும் ரம்மியமான பாங்கொலி. இவ்வாறு உலப்பனை தேவதையின் காதலர்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவையனைத்தையும் உண்மையாக காதலிப்பவன் அடியேன் என்று சப்தமாக உரைக்கிறேன். என் சப்தம் பைனஸ் தோட்டம் துவங்கி மலைக்காடுகள் தாண்டி ரயிலிலே மோதி வீட்டுக்கூரைகளில் பட்டுத்தெறித்து ஓடைகளில் சங்கமிக்கட்டும்.

தோல்களைத் தடவிச்செல்லும் கதிரவனின் மாலைநேரக் கதிர்கள் மேனியில் படர, நானும் ருஸ்னி நானாவும் அக்கறையிற்கு அவர் சகோதரரின் திருமண அழைப்பிதழ் அட்டைகள் கொடுக்கச் செல்கின்ற தருணம். சுருங்கச் சொன்னால் ஒரு மலையில் ஏறி இறங்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் நாடிய வீடுகளை தரிசிக்கலாம்.

பயணம் ஆரம்பமாயிற்று. ரயில் பாதையைக் கடந்து மலையில் ஏறத்துவங்கினோம். ஆங்காங்கே நீர் வடிந்தோடிக் கொண்டிருந்தன. சேற்றுக் குழிகள், பாசிபடிந்த கற்கள், இன்னும் நீர் சொட்டிக் கொண்டிருக்கும் மரங்கள், எங்கோ மனித வாடை வருகிறது என்பதை உணர்ந்து தலையை நீட்டிக் கொண்டிருக்கும் அட்டைகள், துரத்தி விளையாடும் அணில்கள், காலத் தவணையின்றி தொடர்ந்தேர்ச்சியாக கனிகள் கொடுக்கும் பல வர்க்க மரங்கள். இவ்வாறு எமக்கு அலாதியான வரவேற்பு. உண்மையில் இது இயற்கையுடனான சங்கமம்.

ரசனை சுரப்பிகள் என் உடம்பில் சுரந்து கொண்டிருக்கையிலே, ருஸ்னி நானா ஒரு வீட்டைக் காண்பித்து “இங்குதான் ஸகீர்கானின் மையத்து வைக்கப்பட்டிருந்தது” என்றார். தீடீரென்ற இச்சொல்லாடல் ஒரு திருப்புமுனையை உண்டுபன்னிற்று. சிந்தனைச் சக்கர ஓட்டம் திசைமாறியது.

“ஸகீர்கான்! என்னாச்சு?” என்றேன்.

“ஸகீர்கான். (ஒரு பெருமூச்சு) எனது வகுப்புத் தோழன். கிரிக்கெட் பிரியன். எப்போதும் அயன் பண்ணிய ஆடையுடன் நேரத்திற்கு வரைவிலக்கணமாய் இருப்பான். அவனிடம் ஒரு சைக்கிளிருந்தது. மிக கவனமாக பாவித்தான். இன்னும் அந்த சைக்கிள் ஊரில் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. அதனைப் பார்க்கும் போது அவனது ஞாபகம்தான் வருகிறது.”

இடையில் ஒரு வீட்டைத்தட்டி அழைப்பிதழைக் கொடுத்தோம். மீண்டும் தொடர்ந்தார். நான் மெளனியானேன்.

“அன்று நோன்பு 28. நோன்பென்றால் மாலைநேரம் கிரிக்கெட் என்பது எமது வழமை. அன்றும் வழமை போல் கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்துக்கொண்டிருந்தோம். நானும் ஸகீர்கானும் தான் பேசி பேசி வந்துக்கொண்டிருந்தோம். ஆனால் அதுதான் அவன் என்னுடன் பேசும் இறுதி உரையாடல் என்பது சத்தியமாக எனக்குத் தெரியாது. அவன் ஒரு கிரிக்கெட் குழுவிற்கு கெப்டனாக இருந்தது. முதல் பந்திலேயே ஆட்டமிளந்தது. அடுத்த கிழமை வெளாநாட்டிற்கு செல்லவிருப்பது. அதற்காக முழுமையான தயார் நிலையில் இருப்பது என்று தன் வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டு மிக குதூகலமாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.”

“அவன் அக்கறையிற்குச் செல்ல நான் எனது வீட்டிற்கு வந்தேன். நான் விளையாடிவிட்டு வந்து உடனே குளிக்க மாட்டேன். களைப்புடன் குளிக்கக் கூடாது என்பார்களே பெரியோர்கள், அதனால்தான். நான் கட்டிலிலே தலையை வைக்க உறக்கம் மேலிட்டுவிட்டது. அண்ணளவாக ஒரு மணிநேரம் உறங்கியிருப்பேன். தாத்தா வந்து “ஸகீர்கான் மெளத்து” என்ற பீதி கலந்த வார்த்தைகளை பதற்றத்துடன் கூறியவாறு என்னை எழுப்பினாள்.”

“நான் இப்போது பேசிவிட்டு வந்த தோழன் மரணித்துவிட்டான் என்று சொன்னால் எனக்கு எப்படியிருக்கும்! “சும்மா போயே தூக்கத்த களக்காம” என்று எரிச்சலுடன் கூறிவிட்டு மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டேன். சில வினாடிகள்தான் கடந்திருக்கும். பஸ்லி ஓடோடி வந்தவனாக “ருஸ்னி ஸகீர்கான் ஆத்துல தாண்டு” என்று நான் கேட்பதற்கு துளியேனும் எண்ணியிராத அந்த வார்த்தைகளை பதற்றத்துடன் தெரிவித்தான்.”

“என் பிறடியில் யாரோ உலக்கையொன்றால் அடித்தது போல் ஒரு ரணம். என் நெஞ்சிலே ஆணையொன்று ஏறிமிறித்தது போல் ஒரு வலி. போட்டிருந்த பெனியனுடன் ஆற்றை நோக்கி ஓடினேன். காலில் செறுப்பு போடவும் மறந்துவிட்டேன்.

‘إنالله وإنا إليه راجعون’

உண்மையில் அந்த இடத்தில் அவனது உயிர் பிரியவேண்டும் என எழுதப்பட்டிருக்கிறது.

சற்று நேரத்திற்கு முன் மிக குதூகலமாக விளையாடிவிட்டு என்னுடன் பேசிக்கொண்டு வந்த ஒரு ஜீவன் இனி இல்லை என்று நினைக்கும் போது என் கண்கள் இன்றும் கசிகிறது. இந்த மரணம் என் வாழ்க்கையின் மிகப்பெறும் படிப்பினையாக இறைவன் ஆக்கியுள்ளான்.

உண்மையில் மரணத்திற்கு வயதில்லை.

‘كل نفس ذائقة الموت’

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்” (ஆலு இம்றான்:185)

நான் நாளை இருப்பேனா?

அடுத்த மணித்தியாலம் இருப்பேனா?

அடுத்த நிமிடம் இருப்பேனா?

அடுத்த செக்கன் இருப்பேனா?

என்பது நிச்சயமாக சத்தியமாக எனக்குத் தெரியாது. எனவே இருக்கும் காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது?

எமது அனைத்து செயற்பாடுகளையும் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி இறைவனுக்காக என்ற தூய்மையான எண்ணத்துடன் செயற்படுத்துங்கள். நீங்கள் வெற்றியாளர்கள்.

SAJIDH WAHAB

தொடர்ந்தேர்ச்சியான மழை. இன்று மாலைதான் சூரியக்கதிர்கள் உலப்பனை மலைத்தொடரை சந்திப்பதற்கு அனுமதியளித்தன மேகங்கள். உலப்பனை தேவதைக்கு பல காதலர்கள். அதில் முதன்மையானவன் இந்த கருமேகங்கள். ஏதோ விதண்டாவாதம் போலும். நகரவே மாட்டான். இல்லாவிட்டால் சூரியக்கதிர்கள்…

தொடர்ந்தேர்ச்சியான மழை. இன்று மாலைதான் சூரியக்கதிர்கள் உலப்பனை மலைத்தொடரை சந்திப்பதற்கு அனுமதியளித்தன மேகங்கள். உலப்பனை தேவதைக்கு பல காதலர்கள். அதில் முதன்மையானவன் இந்த கருமேகங்கள். ஏதோ விதண்டாவாதம் போலும். நகரவே மாட்டான். இல்லாவிட்டால் சூரியக்கதிர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *